Published:Updated:

ஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்!

ஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்!

ஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்!

ஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்!

Published:Updated:

வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ஆர்பிஐ 
கூட்டத்தில் முக்கிய வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்படலாம்.

##~##

திடீர் திடீரென பெய்யும் மழை, புயல் கரையைக் கடக்கும் என்கிற எச்சரிக்கை வேறு. மப்ளருக்குள் தலையைப் புதைத்துகொண்டபடி காட்சி அளித்தார் ஷேர்லக். சூடான டீ தந்து அவரை வரவேற்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதலில் சந்தையின் இன்றைய நிலை பற்றி சொல்லிவிடுகிறேன். ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வைத்து ட்ரேடர்களும், எஃப்ஐஐ-களும் பெரிய அளவில் முதலீட்டைக் கொண்டுவந்து இறக்க, அன்றைக்கு ஒருதினம் மட்டுமே சந்தை பெரிதாக உயர்ந்தது. அடடா, இனி சந்தை ஏற்றமாக இருந்துவிடுமோ என பலரும் ஆசையோடு பார்க்க, அடுத்தநாள் தொடங்கி ஒரே இறக்கம்தான். அமெரிக்காவிலும், நம் நாட்டிலும் வந்த மோசமான செய்திகள் சந்தையை கீழ்நோக்கி இழுத்துவிட்டது.

அடுத்த வாரம் ட்ரேடர்கள் சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டிய வாரம். பணவீக்க விகிதம் 11.24 சதவிகிதத்தை எட்டியதைத் தொடர்ந்து, வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் முக்கிய வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்படலாம்.  அன்றுதான் அமெரிக்காவில் வட்டி விகித கூட்டமும் நடக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகளைப் பொறுத்து அன்று சந்தையில் பல மாற்றங்கள் இருக்கும். எனவே, எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்'' என்றார்.  

''எஃப்ஐஐ-களின் ஆதிக்கம் இப்போது அதிகமாக இருப்பதுபோல படுகிறதே?'' என்றோம்.

''இந்திய பங்குச் சந்தையின் போக்கை எஃப்ஐஐ-கள் நிர்ணயிப்பதுபோல, பல பங்குகளில் விலை ஏற்றத்தை அவர்களே நிர்ணயிக்கிறார்கள். சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், எல் அண்டு டி, கோல் இந்தியா பங்குகள் 2013-ல் பெரிய அளவில் உயரவில்லை. இந்தப் பங்குகளில் எஃப்ஐஐ-களின் முதலீடு குறைந்துபோனதும் இதற்கு ஒரு காரணம். அதேநேரத்தில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ பங்குகளில் எஃப்ஐஐ முதலீடு அதிகமாக உள்ளதால், அவற்றின் விலை உயர்ந்திருக்கிறது என எஃப்ஐஐ-கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் எஃப்ஐஐ-கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களின் டார்லிங் பங்காக இருந்த ரிலையன்ஸ் கடந்த ஐந்தாண்டுகளாக அந்தத் தகுதியை இழந்து வருகிறது'' என்றார்.

''கோல் இந்தியா நிறுவனத்துக்கு இது போதாதக் காலம் போலிருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''உண்மைதான். இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்குமுன் நடத்திய இ-ஏலத்தில் வணிக நியதிகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு 1,773 கோடி ரூபாயை அபராதம் விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காம்பெட்டிஷன் கமிஷன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்போவதாக கோல் இந்தியா அறிவித்துள்ளது.

ஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்!

கோல் இந்தியா பற்றிய இன்னும் இரு நெகட்டிவ் செய்திகளும் இருக்கிறது. கோல் இந்தியா, நடப்பு 2013-14-ம் ஆண்டுக்கான உற்பத்தி இலக்கை எட்டாது. ஏறக்குறைய 70 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.  

பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக கோல் இந்தியாவின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தொழிற்சங்கங்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரவே, அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அதிக டிவிடெண்ட் தரலாமா என இப்போது யோசித்து வருகிறது மத்திய அரசாங்கம்'' என்றார்.  

''கப்பல் கம்பெனிகளின் பங்குகள் சமீபகாலமாக நல்ல லாபம் தர ஆரம்பித்திருக்கிறதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''செப்டம்பர் மாதம் முதல் இந்திய கப்பல் துறை நிறுவனப் பங்குகளான மெர்கேடர் லைன்ஸ், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, வருண் ஷிப்பிங் போன்றவற்றின் விலை சுமார் 50 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், சீனாவின் இறக்குமதி அதிகரித்திருப்பது; இரண்டாவது காரணம், சர்வதேச அளவில் கப்பல் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்திய கப்பல் துறை நிறுவனப் பங்குகளின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்'' என்றார்.

''ரிலையன்ஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறதே ஏர்டெல்?'' என்று கேட்டோம்.

''ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்கிற பெயரில் 4ஜி சர்வீஸைத் தருவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு நீண்ட தூரத்துக்கான ஆப்டிக் கேபிள் நெட்வொர்க் தேவை. பார்தி ஏர்டெல்லிடம் அந்த நெட்வொர்க் இருப்பதால், அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது ரிலையன்ஸ். இருபெரும் நிறுவனங்கள் இணைந்து இப்படிப்பட்ட கூட்டு முயற்சியில் இறங்குவது ஆரோக்கியமான விஷயம்தான்'' என்றவருக்கு, இன்னும் ஒரு கப் டீ தந்தோம். அதைக் குடித்தவர் அடுத்த செய்திக்குத் தாவினார்.

''பங்குச் சந்தை முதலீட்டை எப்படியாவது முழுமையாக நெறிபடுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது செபி. அந்தவகையில் இன்சைடர் ட்ரேடிங்கில் யார் ஈடுபட்டாலும் அவர்களைத் தண்டிக்கும்விதமாக விதிமுறைகளை கடுமையாக்க உள்ளது. இன்சைடர் ட்ரேடிங்கில் ஈடுபட்டால் அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளைக்கூட தண்டிக்கலாம் என ஏற்கெனவே அமைக்கப்பட்ட  19 உறுப்பினர்கள் கொண்ட குழு செபிக்கு பரிந்துரை செய்துள்ளது. தற்போது இன்சைடர் ட்ரேடிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டல் 10 ஆண்டு சிறை அல்லது ரூ.25 கோடி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது'' என்றார்.  

''என்எஸ்இஎல் விவகாரத்தில் என்ன புது டெவலப்மென்ட்?'' என்றோம்.

''இந்தப் பிரச்னையில் மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இதுவரையில் சுமார் ரூ.4,040 கோடி மதிப்புள்ள 212 சொத்துகளை முடக்கி வைத்திருக்கிறார்கள். மேலும், 327 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.172 கோடியை முடக்கி உள்ளனர். ரூ.250 கோடி மதிப்புள்ள பங்குகளும் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காலத்தில் யாரை நம்ப முடிகிறது? பத்மபூஷன் விருது பெற்றவர் முன்னாள் பில்லியர்ட் உலக சாம்பியன் ஆன மைக்கேல் பெரேரா க்யூநெட் என்கிற பிரமிடு  நிறுவனத்தை ஆரம்பித்து, 425 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டாராம். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கப் போகிறார்களாம்'' என்றவர். கிளம்பத் தயாரானார்.  

''ஷேர் டிப்ஸ்..?'' என்று இழுத்தோம்.

''தற்போதைய நிலையில் ஆயில் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான ஐஓசி, ஐபிசிஎல்., ஹெச்பிசிஎல் போன்றவற்றின் விலை கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பங்குகளின் மீது ஒரு கண் வைக்கலாம்'' என்றவர் சட்டென கிளம்பிச் சென்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism