Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

'நம்ம கஃபே’ கலக்கும் கோவை மாணவர்கள்... கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடம்!

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

'நம்ம கஃபே’ கலக்கும் கோவை மாணவர்கள்... கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடம்!

Published:Updated:
##~##

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் கூட்டாகச் சேர்ந்து 'நம்ம கஃபே’ என்கிற பெயரில் ஒரு கஃபே-யை  அதே கல்லூரியில் நடத்துகின்றனர். இந்த கஃபே-யின் நிர்வாகிகளில்  ஒருவரான ஜனகவிஷ்ணுவுடன்  பேசினோம்.

''எங்களுடைய  கல்லூரியில் எல்இஇடி (League for Entrepreneurial Empowerment and Development) என்று ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. இதில் மூன்று ஆண்டுகளிலும் படிக்கும் மாணவர்கள் 40 பேர் சேர்ந்து இந்த கஃபே-யை நடத்தி வருகிறோம். இதில், நான்குவகையான வேலைகளைப் பார்க்கிறோம். ஃபைனான்ஸ், ப்ரொடக்ஷன், அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் மார்க்கெட்டிங்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நான்குவிதமான வேலைகளின் மூலம் பிசினஸின் அடிப்படை விஷயங்கள் என்ன, என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கவேண்டி இருக்கும், அந்தச் சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது போன்ற விஷயங்களை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். படித்துமுடித்து வேலைக்கோ அல்லது சொந்தமாக தொழில் தொடங்கியோ கற்றுக்கொள்வதைவிட படிக்கும்போதே நாங்கள் நாற்பது பேரும் பிசினஸ் பற்றி தெரிந்துகொள்வது பெருமையாக இருக்கிறது'' என்றார் ஜனகவிஷ்ணு.

இந்த கஃபே எப்படி ஆரம்பமானது தெரியுமா? சென்ற வருடம்தான் இந்த கல்லூரி மாணவர்களில் சிலர் ஒன்றுசேர்த்து எதாவது ஒரு பிசினஸ் செய்யவேண்டும் என்று நினைத்து, பல ஐடியாக்களை கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லப்போக, மாணவர்கள் பலரும் வருகிற இடம் என்பதால் கஃபே நடத்துவது  சரியான பிசினஸ் ஐடியா என்று எல்லோரும் முடிவெடுக்க, அதற்கு அனுமதி தந்தது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாலேயே இது நடத்தப்படுவதால், இடத்துக்கான வாடகை மற்றும் கரன்ட் பில்லை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

இந்த கஃபே-வுக்கு பல பெயர்களை பரிசீலிக்க, கடைசியில் 'நம்ம  கஃபே’ என்று வைத்தால், எல்லோரும் நெருக்கமாக உணர்வார்கள் என்று நினைத்து அந்தப் பெயரை வைத்தார்களாம்.

தொடக்கத்தில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 5,000 ரூபாயை முதலீடு செய்தார்கள்.  கஃபே தொடங்கிய சமயம், வெளியிலிருந்து உணவை வாங்கிக்கொண்டுவந்து விற்க, அது கட்டுப்படியாகவில்லை. தவிர, எவ்வளவு தேவை என்பதை சரியாக கணிக்கவும் முடியவில்லை. இதனால், சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

''இந்த எதிர்ப்பை நாங்கள் ஒரு ஸ்பிரிட்டாக எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தோம். நாம் ஆரம்பித்த இந்த கஃபே-வை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தினம்தினம் யோசித்தோம். மாணவர்கள் விரும்பும் வகையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தோம். வெஸ்டர்ன் மற்றும் இந்திய உணவு வகைகளை இங்கேயே தயாரித்து வழங்க ஏற்பாடு செய்தோம். இதற்கென்றே ஒரு செஃப்-ஐ வேலைக்கு அமர்த்தினோம். கேஷியர் மற்றும் கஃபே-யை சுத்தம்செய்ய என இரண்டு வேலைக்குமட்டும் தனியாக ஆட்களை அமர்த்தினோம். வெளியிலிருந்து தேவையான வற்றை வாங்குவது, டாக்குமென்டை கவனித்துக் கொள்வது இவற்றையெல்லாம் நாங்களே செய்துவந்தோம்'' என்றார் ஜனகவிஷ்ணு.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

மது ப்ரியா கூறும்போது ''எங்கள் கல்லூரியில் கேன்டீன் மற்றும் மெஸ் இருக்கிறது. அதைத் தாண்டி மாணவர்கள் எங்கள் கஃபே-யில் வந்து சாப்பிடவேண்டுமெனில், அவர்கள் விரும்பும்வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தோம். அதில், முதன்மையானது மியூசிக். கஃபே-யில் எப்போதும் ரம்மியமான இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். அடுத்து, தரமான, நல்ல உணவு தந்தோம். எங்கள் கல்லூரிக்குள்

நான்வெஜ்-க்கு அனுமதி கிடையாது. அதனால் வெஜ் மட்டுமே. வெஜ் பிரியாணி 30 ரூபாய்க்கும் மஷ்ரூம் பிரியாணி 35 ரூபாய்க்கும் விற்கிறோம்'' என்றார்.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

''எங்களது ஸ்பெஷல் என்று சொன்னால் தோசையும் பிரியாணியும்தான். வெளியில் விற்பதைவிட 10 - 15% விலை குறைவாகவே விற்றதால் ஒருநாள் விற்பனை 10,000 ரூபாய்க்குமேல் தாண்டியது. ஒரு மாதத்துக்கான வருமானம் தோராயமாக நாங்கள் செய்த மொத்த முதலீட்டின் அளவுக்கு வந்தது. மாதாமாதம் எங்களின் வரவுசெலவு கணக்கினை கல்லூரி நிர்வாகத்திடம் காட்டுவோம்'' என்றார் லேகா வினோதினி.

''வரும் லாபத்தை அப்படியே சேர்த்து வைப்பது, ஸ்டாக் தீர்ந்துவிட்டால் வாங்குவது, வேலையாட்களுக்கு சம்பளம் தருவது, மாணவர்கள் ப்ராஜெக்ட், பேப்பர் ப்ரஸன்டேஷன் போன்ற வற்றுக்குப் பயன்படுத்துவோம்.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

இறுதியாண்டு மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே செல்லும்போது அன்றைய தினத்தில் உள்ள லாபத்தைக் கணக்கு பார்த்து அவர்களின் பங்கினைத் தந்துவிடுவோம். அதேபோல, புதிதாக இணையும் பார்ட்னர்கள் ஆரம்பத்தில் 5,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். எங்கள் நோக்கம் லாபம் அல்ல; கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பிசினஸை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்'' என்று சொன்ன ஜனகவிஷ்ணு, அவர்களது அடுத்த எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் சொன்னார்.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

''நம்ம கஃபே-யின் கிளைகளை வேறு இடங்களில் ஆரம்பிக்கப் போகிறாராம். ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் கஃபே-யைத் தொடங்க விரும்பினால், தாராளமாக எங்களைத் தொடர்புகொள்ளலாம். கஃபே நடத்துவதற்கான பிசினஸ் ப்ளானை வழங்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் தாரக மந்திரம் ‘one plate many smiles’ என்பதுதான்'' என்று உற்சாகமாக பேசி முடித்தார் ஜனகவிஷ்ணு.

- ந.ஆஷிகா,
படங்கள்:     ர.சதானந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism