Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

Published:Updated:
##~##

நிறைய நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்றால், நீங்கள் இன்றிருப்பதைவிட அதிகத் தகுதி கொண்டவராக இருக்கவேண்டும்.

பண வரவை அதிகரிக்க சில அத்தியாவசிய செலவுகளைச் செய்தேயாக வேண்டும். அது என்ன அத்தியாவசியச் செலவு என்பீர்கள். தொழிலதிபர்கள்/பிரபலங்கள் என பலரின் பேட்டிகளைப் படிக்கும்போது, அவர்களின் வீட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்களைப் பார்த்தீர்கள் எனில், நிச்சயமாக ஒரு மினி நூலகம் இருக்கும். சாதாரண மனிதர்கள் வீட்டில் இது இருக்காது. வீட்டில் நூலகம் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷனோ அல்லது அந்தஸ்தைக் காண்பிக்கும் விஷயமென்றோ நாம் நினைக்கிறோம். ஆனால், புத்தகங்கள் வாங்குவது என்பது ஓர் அத்தியாவசியச் செலவு என்பதே உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் சம்பாதிக்க நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தொடர்ந்து விஷயங்களைத் தெரிந்துகொள்வது கட்டாயமாகிறது. அதேபோல், சூழலுக்கு ஏற்றாற்போல் சிலபல அட்வைஸ்களும் தேவைப்படுகிறது. புத்தகங்கள் அந்தத் தேவையை நன்றாகவே பூர்த்தி செய்கின்றன.

தொழில் செய்வது எப்படி?, வெற்றிபெறுவது எப்படி?, பணம் சம்பாதிப்பது எப்படி? என பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டபோதும், இந்தப் பயிற்சிகளுக்கான கட்டணச் செலவையும் அந்தப் பணத்துக்கு நீங்கள் புத்தகம் வாங்கினால் கிடைக்கும் பலனையும் சீர்தூக்கிப் பார்த்தால் புத்தகமே சிறந்தது.

பயிற்சியில் சொல்லப்படும் விஷயங்கள் காற்றில் போய்விடலாம்! புத்தகமோ நம்முடனேயே இருக்கும். ஒரு புத்தகத்தை வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வாசிக்கும்போது அது வெவ்வேறு விதமான அனுபவத்தையும், எண்ணத்தில் புதுவிதமான பார்வையையும் தரும்.  

பணவளக் கலை!

நாம் பொதுவாக எதிர்பார்ப்பது, ஓர் இலவச அட்வைஸைதான். ஆனால், நிஜத்தில் தரமான அட்வைஸுக்கு ஒரு விலை இருக்கிறது. புத்தகங்களின் மூலம் மிகக் குறைந்த  பொருட்செலவில் அற்புதமான ஆலோசனைகளும் அறிவுரைகளும் கிடைக்கின்றன.  

தவிர, கோடீஸ்வரரானாலும், மாதச் சம்பளக்காரர் ஆனாலும் புத்தகத்தின் விலை ஒரே அளவிலானதுதானே! அதனால்தான், புத்தகங்கள் முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாகிறது. இலவச அட்வைஸ்களைக் கேட்காமல், குறைந்த செலவில் புத்தகங்களின் மூலம் பலனை அடையலாம்.

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும், இதிலிருந்து நான் தெரிந்துகொள்வது என்ன? இது ஏன் எனக்கு அடிக்கடி நடக்கிறது என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வாழ்பவரால்தான் பணம் சம்பாதிக்க முடிகிறது. அனுபவத்தில் இருந்து புரிந்துகொள்ளாதவரால் பணரீதியாக முன்னேற முடிவதேயில்லை. நம்முடைய வாழ்க்கை அனுபவங்களையும் தாண்டி மற்றவர்களுடைய அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்கள் பெருமளவு உதவுகின்றன.

புத்தகங்களால் நம்முடைய அனுபவத்துடன் மற்றவர்களின் பல  அனுபவமும் சேரும் வாய்ப்புள்ளது. எனவேதான், பணக்காரர்களின் வீட்டில் நூலகங்கள் தென்படுகிறது. ஃபேஷனோ, அந்தஸ்தை பறைசாற்றும் ஷோகேஸ் பொருளோ இல்லை அவை!

பணவளக் கலை!

இதையும் தவிர்த்து, தொழில்புரிவோர் தொடர்ந்து தொழில் குறித்து பல விஷயங்களைக் கற்றுகொள்ள வேண்டியுள்ளது. அதற்கும் புத்தகங்கள் பெருமளவு உதவுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் விளக்கினால் புரியும்.

நீங்கள் ஒரு புது ஊருக்கு ரயிலில் செல்கிறீர்கள். ஊரில் எந்த ஹோட்டல் நல்ல ஹோட்டல், ரயில் நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம், ஆட்டோ கட்டணம் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும், எந்த வழியில் போகவேண்டும் என்பதையெல்லாம் புத்தகம் மூலமாகவோ (இன்றைக்குதான் கூகுள் மேப்பும் இன்டர்நெட்டில் ஹோட்டல் ரிவ்யூவும் இருக்கிறதே!) வேறு ஏதாவது ஒரு சோர்ஸின் மூலமாகவோ தெரிந்துகொண்டு போனால் சிரமம் குறைவு இல்லையா.

இப்படி தெரிந்து கொண்டு போவதில் இருக்கும் சௌகரியத்துக்கு அளவேயில்லை. பணரீதியாகவும், நேர ரீதியாகவும் உங்களுக்கு ஏகப்பட்ட சேமிப்பு இருக்கும் இல்லையா? ஆட்டோ வாடகையை கறாராகப் பேசி சேமிக்கலாம். ஊருக்குள் போகவேண்டிய இடங்களின் தூரங்களை அறிவதன்மூலம், நம்முடைய பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் திட்டமிடலாம்.

அதேபோல்தான் தொழிலிலும். தொழில் துறையில் ஒவ்வொரு தொழில் குறித்தும் நேரடியாகத் தெரிந்துகொள்ள புத்தகங்கள் இல்லாவிட்டாலும், பொதுவாகத் தொழிலில் ஏற்படும் சூழல்கள்/சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்/வழிமுறைகள் பலவற்றை விளக்கும் புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன.

பணம் குறித்தும், தொடர்பு விரிவாக்கம் (நெட்வொர்க்), தொழில் ரீதியான உறவுகளைப் பலப்படுத்துவது குறித்தும், மூளையின் பலம் குறித்தும், மற்றவர்களின் வெற்றி குறித்தும்; தோல்வி குறித்தும் பணம் சம்பாதிக்க நினைப்பவர் தொடர்ந்து படித்துவர வேண்டியது கட்டாயமாகிறது.

படித்தால் மட்டும் போதுமா? படிச்சு படிச்சு என்ன பிரயோஜனம், நாலுகாசு சம்பாதிக்காமலேயே இருக்கிறேன்! புத்தகம் வாங்க காசு செலவு செய்வதுதான் மிச்சம் என்று சிலர் சொல்வார்கள்.

புத்தகங்களில் இருந்து கிடைக்கும் கருத்துகள் ஒரு விதையைப் போன்றது. அதை உங்கள் மூளையில் விதைக்கிறீர்கள். விதையை விதைத்தால் நாளைக்கே பலன் கிடைக்காது. அது முளைத்து, வளர்ந்து, பூவாகி, காயாகி, பழமாகி பலன் (பணம்) தரவேண்டும். அதற்கு நீண்ட நாட்களாகும். ஒவ்வொருமுறை புத்தகங்களைப் படிக்கும்போதும் நீங்கள் உங்கள் மூளை என்னும் நிலத்தில் ஒரு விதையை ஊன்றவோ அல்லது ஏற்கெனவே போடப்பட்டிருக்கும் விதைக்கும் நீர் ஊற்றவோ செய்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

'எங்கே சார் படிக்கிறது. படிக்கிறதுக்குப் பிடிக்கவேமாட்டேன் என்கிறது’ என்பீர்கள். படிக்கப் பிடிக்காவிட்டால், பிடித்ததைப் படிப்பதில் இருந்து ஆரம்பியுங்கள். போகப்போக நம்முடைய போக்கை சுலபத்தில் மாற்றிவிடலாம்.

பணவளக் கலை!

படிப்பதற்கான செலவைத் தாண்டி அடுத்த விஷயம், தொழில் ரீதியான அறிவு மற்றும் தகுதிகளை உயர்த்திக்கொள்ளச் செய்யும் செலவுகள் அத்தியாவசியமானது.

இந்தத் தகுதி உயர்த்துதல் என்பதன் அத்தியாவசியத்தை அலுவலகப் பணியில்கூட நீங்கள் அனுபவித்து உணரும் வாய்ப்புள்ளது. என்ன சம்பளம் வாங்குகிறோமோ, அதை நிலைநிறுத்திக்கொள்ள உழைப்பதற்கும், என்னவாகவேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்காக உழைப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.

வேலையை நிலைநிறுத்துவதற்காகப் போடப்படும் உழைப்பு, வேலையை மட்டுமே நிலைநிறுத்தும். எந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைச் சென்றடைய செய்வதற்கான உழைப்பு நம்முடைய தனித்திறனை உயர்த்துவதாக அமையும்.

1990-களில் ஸ்டெனோ டைப்பிஸ்டாக இருந்தவர்கள் பலர், கம்ப்யூட்டர் வந்தபோது கம்ப்யூட்டரில் டைப்பிங் பழகினார்கள். எதற்காக? வேலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக!.

அதிகப் பணம் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்று நினைத்த அவர்களில் சிலர் கம்ப்யூட்டர் டைப்பிங் பழகப்போன இடத்தில் விசாரித்து 'சி’ ப்ரோகிராமிங் படித்து ப்ரோகிராமராக மாறி, ஒய்2கே பிரச்னை தலைவிரித்தாடியபோது அமெரிக்காபோய் செட்டிலானார்கள்.

பணவளக் கலை!

முன்னவர்கள் வேர்டு ப்ராசஸிங் படிக்க கம்பெனி செலவு செய்தபோது போனார்கள். பின்னவர்கள் கைசெலவு செய்து 'சி’ ப்ரோகிராமிங் பயின்றார்கள். அத்தியாவசியமான செலவு 'சி’ ப்ரோகிராமிங் பயில்வதற்காகச் செய்ததுதானே!  

நிறைய நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்றால், நீங்கள் இன்றிருப்பதைவிட அதிகத் தகுதி கொண்டவராக இருக்கவேண்டும். எனவே, தகுதி உயர்த்துதலில்தான் உங்கள் கவனம் முழுவதும் இருக்கவேண்டும்.

நீங்கள் உங்களுடைய தகுதிகளை மாற்றிக்கொள்ளவில்லை எனில், உங்களுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவும் மாறாது. அவ்வளவேதான்!

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism