Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 29

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 29

Published:Updated:
##~##

லகத்தில் இருக்கும் எல்லா பணத்தையும், சொத்துகளையும் பறிமுதல் செய்து ஒரு கணக்கு போடுவோம். உலகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையையும் ஒன்றுவிடாமல் கணக்கெடுப்போம். பின்னர் மொத்த சொத்துகளையும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுப்போம். பணரீதியாக அனைவரும் சமம் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டோமா? இதன்பின்பு எல்லோரும் பணரீதியில் சமம் என்ற நிலை தொடருமா அல்லது மாறுமா? என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி அல்லவா?

இந்தக் கேள்வியை ஒரு அறிஞரிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? என்னதான் கட்டாயத்தின் பேரில் பிரித்துத் தந்திருந்தாலும், பணத்தைப் பிரித்துக்கொடுத்த தருணத்தின்போது சமமாக இருப்பதுதான் கட்டாயநிலை. அதற்குப்பிறகு பணம் எங்கு எப்படி உபயோகிக்கப்படுகிறது, யாரிடமிருந்து யாரிடம் செல்கிறது என்பதில்தான் விஷயமே இருக்கிறது. ஏனென்றால், ஏற்கெனவே பணம் வைத்திருந்தவர்களை நோக்கி பல்வேறு காரணகாரியங்களால் ஆட்டோமேட்டிக்காக சென்று பணக்காரர்களை மீண்டும் பணக்காரர்களாகவும், பணமில்லாதவர்கள் மீண்டும் பணம் இல்லாதவர்களாகவும் ஆகிவிடுவார்கள் என்று சொல்லியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் அர்த்தம் என்ன? பணத்தை கவரச் செய்வது ஒரு சில குணாதிசயங்கள் இருந்தால் மட்டுமே முடியும் என்பது. இதைத்தவிர மிக முக்கியமான விஷயம் ஒன்றையும் இது காண்பிக்கிறது. பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. பணத்தைத் தக்கவைப்பதுதான் மிகப் பெரும் கலை என்பது.

பணவளக் கலை!

என்னதான் வருமானத்தை அதிகரித்தபோதிலும், அதற்கேற்ற செலவுகளும் புதிதுபுதிதாக வந்துகொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு சம்பாத்திய அளவீட்டின் நிலையிலும், சேமிப்பும் அந்த சேமிப்பை முதலீடு செய்து புதியதாக சம்பாதித்தலும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.

பணவளக் கலை!

'சம்பாத்தியம் உயரவே மாட்டேன் என்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிப்பது விற்கும் விலைவாசியில் செலவுக்கே போதவில்லை. அப்புறம் எப்படி சேமிப்பது, தொழிலில் முதலீடு செய்வது, புதியதாக சம்பாதிப்பது?' என்று பெரும்பாலானோர் சொல்கின்றனர்.

பணம் சம்பாதிப்பதும் கஷ்டமான விஷயம். பணம் இல்லாமல் இருப்பதும் கஷ்டமான விஷயம் எனில், இந்த இரண்டு கஷ்டங்களில் நாம் எந்தக் கஷ்டத்தை சுலபமாகத் தாங்கிக்கொள்ள மனதளவில் தயாராக இருக்கிறோமோ, அந்தக் கஷ்டத்தை நாம் மனதார வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம். பணம் சம்பாதிக்கிற கஷ்டத்தை நம்மால் அனுபவிக்க முடியாது என்று திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டால், பணமில்லாத கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகிவிடுகிறோம்.

பணம் சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகிவிட்டால், பணம் இல்லாமல் படும் கஷ்டத்தைக் கைவிடத் தயாராகிவிட்டோம் என்பதுதானே நிதர்சனம்.

கொஞ்சம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தாலே நமக்கு இந்த நுணுக்கங்கள் புரியும். சம்பாதிக்கும் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்கும் போதே, நாமே பணம் நம்மை நோக்கி வருவதற்கான தடைக்கற்கள் பலவற்றை நம்முன்னே கொண்டுவந்து போட்டுவிடுகிறோம். நாமே தடைக்கற்களை நம் பாதையில் போட்டுக்கொள்வதால் அதைத் தாண்டுவதில் இரட்டைக் கஷ்டம் இருக்கிறது. தடைக் கற்களைச் சுமந்து கொண்டுவந்து போட்ட அசதி ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. அந்த அசதியுடன் இருக்கும்போது பணம் சம்பாதிக்க நினைத்தால் முதலில் தடைக்கற்களை அப்புறப்படுத்தி பாதையைச் சுத்தப்படுத்தவேண்டும். அவற்றை அகற்றும்போது புதிதாக மேலும் அசதி வரும். இந்த அசதிகளைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் ட்ராக்கில் ஓடவேண்டும். இந்த ட்ராக்கில் ஓடும்போது இருக்கும் கஷ்டத்தினால் வரும் அசதியும், பணம் சம்பாதிக்கும் வழிகளில் அடக்கம். ரொம்பக் கஷ்டம் என்கிறீர்களா? அதுதான் இல்லை.

பணவளக் கலை!

மனரீதியான தெளிவுநிலை இதற்கு ரொம்பவே உதவும். எப்படி? முடியாது என்ற தடைக்கல்லை கொண்டுவந்து போடாமல் இருந்துவிட்டால், இரட்டை அசதியைத் தவிர்க்கலாம் இல்லையா? முடியும் என்று நினைத்து முனைப்புடன் செயல்பட்டால், முயற்சியினால் நமக்கு வருவது ஒரே கஷ்டம்தான். மூன்று கஷ்ட (அசதி) நிலைகளில் இரண்டை நாம் மனநிலை மாற்றத்தின் மூலம் ஒழித்துக்கட்டிவிடலாம். அப்புறம் இருப்பதோ ஒரே ஒரு கஷ்ட (அசதி) நிலைதான். இதை உங்களால் சுலபமாகத் தாங்க முடியும். ஆனால், முடியாது என்ற தடைக்கல்லை கொண்டுவந்து போட்டு, பின்னர் அதை எடுத்துத் தூர வீச முடியும் என்று நிலைமையை மாற்றி, அதன்பின் களத்தில் இறங்கி முயலும் மூன்று நிலை கஷ்டங்களை ஒருவர் தாங்குவது ரொம்பவும் கடினமான விஷயம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் இல்லையா?!

அதனால், என்னால் தொழில் செய்ய முடியாது என்ற நினைப்பைக் கொண்டு வராதீர்கள். முடியாது என்ற நினைப்பே பண வருகைக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாகும். உங்களைச் சுற்றி இருக்கும் சுயதொழில் செய்பவர்கள் பலரைப் பாருங்கள், நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியும். பின்னர் சுலபமாக உங்களையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். சுயதொழில் புரிபவர்களிடத்தில் முடியும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.

'இதெல்லாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கும். என் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் தெரியும்' என்று சிலர் சொல்வார்கள். இப்படி சொல்பவர்களுக்கான விளக்கத்தை விரிவாக ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

சொந்த வீட்டில் இருப்பவர்கள் பலர் சொல்லும் ஒரு பொதுவான விஷயத்தைப் பார்த்தால், இது இன்னமும் சுலபமாய்ப் புரியும்.

'நான் இடம் வாங்கப் போனபோது என் பாக்கெட்டில் பத்து பைசா கிடையாது. இடத்தைப் பார்த்தோம், பிடித்திருந்தது. அங்கே, இங்கேன்னு அதுவா பணம் புரண்டது. கடுவன் பூனையான முதலாளிகூட லோன் கொடுத்தார். நண்பர்கள் உதவினார்கள். எப்போதும் சண்டை போடும் மச்சினன்கூட எனக்குத் தெரியாமல் மனைவி வழியாக பணம் கொடுத்தானப்பா! வாங்கணு முன்னு ஆசைப்பட்டேன். சுலபமா வாங்கிப்போட்டேன். சட்டுபுட்டென்று வீட்டையும் கட்டி இப்ப கடனைக்கூட அடைச்சுட்டேன் என்பார்கள். வருஷம் பல ஓடிப்போச்சு' என்று சொல்லி இறுதியில் இப்ப நினைச்சாலும் பயமா இருக்குது என்று சேர்த்துக்கொள்வார்கள்!

வீட்டுமனை எப்படி வாங்கினீர்கள் என்று கொஞ்சம் விலாவாரியாகக் கேட்டீர்கள் என்றால், மனையின் ப்ரமோட்டரோ அல்லது தரகரோ மிகவும் பாசிட்டிவ்வான விஷயங்களைச் சொல்லி உங்களால் பணரீதியாக நிச்சயம் முடியும் என்ற நம்பிகையை அவர்களுக்கு ஊட்டியி ருப்பார்கள். வீட்டுமனையை வாங்கியவருக்கோ சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையும் அது சாத்தியம் என்ற எண்ணமும் மனதில் முழுமையாக இருந்திருக்கும்.

இந்த பாசிட்டிவ் எண்ணத்துடன் கூடிய ஆசை மற்றும் தரகரின் பாசிட்டிவ் பேச்சு ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்க அலுவலகம், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுசரணையால் காரியம் நிகழ்ந்திருக்கும்.

இந்த அனைத்துக்கும் அச்சாணியே நம்மால் வீடு கட்ட முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணமே. இந்த எண்ணத்தைக் கொண்டிராதவர்கள் பயம் என்னும் முட்டுக்கட்டையைத் தங்கள்முன் போட்டுக்கொண்டு ரிட்டையராகும் வரை வீடு என்பது கனவு என்ற நிலை யிலேயே வாழ்ந்துவிடுகிறார்கள்.

'வீடு என்றால் எல்லோரும் கடன் கொடுப்பார்கள். ஏனென்றால், ஒரு சொத்தினை உருவாக்குகிறோம். அதன் விலை ஏறும் என்ற நம்பிக்கை யில் எல்லா உதவியும் கிடைக்கும். தொழிலுன்னு போய் கேட்டுப்பாருங்கள். நல்லாப் பேசிக்கிட்டிருக்கிற மச்சினனே சண்டை போட்டுப் போய்விடுவான்' என்பீர்கள்.

கொஞ்சம் நிறுத்தி நிதானமாக யோசியுங்கள். பணம் போடப்படும் விஷயம், நிச்சயமாய் மதிப்புக்கூடும் என்பதால்தானே உதவி ஓடோடி வந்தது என்றுதானே சொன்னீர்கள். அதுதான் மேட்டரே! உங்கள் தொழிலில் போடப்படும் பணமும் மதிப்புகூடும் என்பதற்கான நம்பிக்கையைத் தரும் அளவுக்கு உங்கள் மனமும் செயல்பாடும் இருந்தால் உதவி நிச்சயம் உங்களைத் தேடி ஓடோடி வந்தே தீரும் என்பதுதான் என்னுடைய வாதம்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism