Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

பெரிய பிசினஸ்மேன் ஆவேன்!

வேலை தேடி அலைவதைவிட சொந்தமாக பிசினஸ் செய்யவேண்டும் என்பது என் ஆசை.

##~##

''என் அப்பா, காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று, இரவு லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவார். காரணம், அவர் பார்ப்பது கூலி வேலை. ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்கவைக்கும் அவருக்கு எப்படியேனும் உதவவேண்டும் என்ற உந்துதல்தான் என்னை பிசினஸ் பக்கமாக நகர்த்தியது'' என்கிறார், ஈரோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்(சி.ஏ) படிக்கும் எஸ்.விக்னேஷ்.

அவரே, தொடர்ந்து பேசினார். ''படிக்கிற காலத்துலயே பகுதிநேரமாக ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்று யோசித்தபோதுதான், நண்பர்கள் பாப்கார்ன் பிசினஸ் செய்யலாம் என்று ஐடியா தந்தார்கள். மூன்றுபேர் சேர்ந்து ஆளுக்கு ரூ.15,000 போட்டு, ரூ.45,000 முதலீட்டில் பாப்கார்ன் பிசினஸைத் தொடங்கினோம்.

ஆரம்பித்து ஆறு மாதத்தில் மாதம் ரூ.5000 வீதம் ரூ.30,000 லாபம் கிடைத்தது. அதை மூன்று பேரும் ஆளுக்கு ரூ.10,000 வீதம் பிரித்து எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த லாபம் மிக குறைவாக இருக்கிறது என்று நண்பர்கள் கூறியதால், பாப்கார்ன் பிசினஸை நிறுத்திவிட்டு, பாப்கார்ன் மெஷினையும் விற்றுவிட்டோம். அதை விற்றதில், தலைக்கு ரூ.15,000 வீதம் கிடைத்தது. அதையும் வங்கியில் எனது பேங்க் அக்கவுன்டில் சேமித்து வைத்தேன்.

பின்னர், பிசினஸ் செய்யலாம் என்று யோசித்தபோது, எங்களது வீட்டின் அருகிலேயே இட்லி மாவு அரைக்கும் தொழிலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். இந்தமுறை நான் மட்டுமே தொழிலைத் தொடங்கினேன். பல்வேறு காரணங்களால் பழைய நண்பர்களுடன் என்னால் கூட்டாக பிசினஸ் செய்ய முடியவில்லை. எனவே, என்னிடம் இருந்த 15,000, ஏற்கெனவே கிடைத்த லாபம் 10,000, இதனோடு என் அப்பாவிடம் 5,000 கடன் கேட்டு, 30,000 ரூபாயில் இட்லி மாவு விற்கும் பிசினஸை ஆரம்பித்தேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

இட்லி, தோசைக்கான மாவு என்பது அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருள். தவிர, நான் வசிக்கும் ஏரியா, வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறம் என்பதால் வீட்டில் மாவு அரைக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. இதனால், பெண்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். இதைப்பற்றி என் அப்பா, அக்காவிடம் பேசினேன். அவர்களும் நல்ல யோசனைதான் என்று என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

பிறகு மாவு அரைக்கும் மெஷினை 30,000 ரூபாய் செலவு செய்து வாங்கினேன். வீட்டின் அருகிலேயே சிறிய கடையை மாதம் 1,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தேன். அதற்கு அட்வான்ஸாக 2,000 ரூபாய் தந்தேன். இந்தச் சிறிய கடையில்தான் மாவு அரைக்கும் மெஷினை வைத்துள்ளேன். மேலும், மின்சார கட்டணம் சுமார் ரூ.500 வரை வரும்.

கல்லூரி சென்றுவந்த நேரம் தவிர, இந்தக் கடைதான் எனது உலகம். அங்குதான் மாவு அரைப்பேன்; மாவு கேட்டு வருகிறவர்களுக்கு பாக்கெட்டில் போட்டுத்தருவேன். நேரம் கிடைக்கும்போது, அப்படியே கொஞ்சம் படிக்கவும் செய்வேன்.

தற்போது, எல்லா செலவுகளும்போக தினசரி 150 ரூபாயும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 350 ரூபாய் வரையும் லாபம் கிடைக்கிறது. நான் இவ்வாறு தினசரி மாவு அரைப்பதைப் பார்த்துவிட்டு எனது சொந்தக்காரர்கள், என்னை ஊக்குவிக்கும்விதத்தில்,  சில கல்யாண ஆர்டர்களை வாங்கித் தந்தனர். தற்போது அக்கம்பக்கத்தில் உள்ள ஹோட்டல்களிலிருந்தும் தினமும் ஆர்டர் தர ஆரம்பித் துள்ளனர். ஆக, எனக்கு கூடுதலாக லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனால், இந்த பிசினஸை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

மேலும், படிப்பை முடித்து வேலை தேடி அலைவதைவிட சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையும் இன்னும் விரிவடைந்துள்ளது. அதற்கான தகுதியைத்தான் தற்போது வளர்த்துகொண்டு இருக்கிறேன். இது என்னுடைய எதிர்காலத்துக்கு நல்ல அனுபவத்தைத் தந்துள்ளது.  

தற்போது, எனது கல்லூரிக் கட்டணங்களை நானே கட்டிக் கொள்கிறேன். தவிர, இரண்டு சக்கர வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளேன். வெளியே மாவு எடுத்து செல்வதற்கும், ஆர்டர் வாங்க செல்வதற்கும் இந்த வாகனம் மிக பயனுள்ளதாக உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை என் வீட்டுக்குத் தந்து, என் அப்பாபடும் கஷ்டத்தை ஓரளவுக்கு என்னால் குறைக்க முடிந்திருக்கிறது. இது எனக்கு பெருமையாகவும், திருப்தியாகவும் உள்ளது. எதிர்காலத்தில் பெரிய பிசினஸ்மேனாக வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்று நம்பிக்கையோடு சொன்னார் விக்னேஷ்.

நிச்சயம் வருவீர்கள் என்று நாங்களும் நம்பிக்கையுடன் சொன்னோம்!

- சே.புகழரசி,

படம்:  மு.லலித் குமார்.

அடுத்த கட்டுரைக்கு