நில்! கவனி! பேசு!

##~##

படித்து முடித்தபிறகு நான் ஒரு பார்மா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கம்பெனியில் ஒரு மாதம் சேல்ஸ் ட்ரையினிங் முடிந்ததும், என்னைப் பாராட்டி மூன்றாவது பரிசு தந்தாங்க. ஒரு டாக்டரிடம்  கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை எப்படி விற்பது என்பதை சரியாகப் புரிந்துகொண்டதால் பரிசு வாங்கிய நான், பயிற்சி முடிந்தபிறகு ஒருநாள் பந்தாவாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டு ஒரு டாக்டரை பார்க்கப் போனேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'குட்மார்னிங் சார்'' என்று ஆரம்பித்து, ''சார், எங்களோட மருந்தை சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது, ரத்தம் ஓடுஓடுன்னு ஒடும்'ன்னு 30 நிமிஷம் நான்-ஸ்டாப்பாக பேசினேன். அவ்வளவு நேரம் பேசியதால், பக்கத்தில் அவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தேன்.

டாக்டர் கடுப்பாகிவிட்டார். என்னை பத்து நிமிஷம் அர்ச்சனை செய்துவிட்டு, 'இன்னொரு தரம் இந்தப் பக்கம் வந்துடாதே'' என்று  விரட்டிவிட்டார். கம்பெனியில் போய் சொன்னேன். ''அவர் பெரிய க்ளையன்ட், விட்டுராதே, போயி பாரு!'' என்றார்கள். வேறு வழியில்லாமல் மறுநாளும் அவர் முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்தவுடன் அவர் மீண்டும் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். பத்து நிமிஷம் அர்ச்சனை முடிந்தவுடன், ''சார், நான் எந்த மருந்தையும் விக்கிறதுக்கு வரலை. உங்களை சும்மா பார்த்துட்டு போகலாம்னுதான் வந்தேன்'' என்றவுடன் அமைதியானார். ''இன்னைக்கி நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, சார்' என்று நான் சொன்னதும் என்னை உட்காரச் சொல்லி பேச ஆரம்பித்தார்.

உனக்கும் மேலே நீ!

''தம்பி, நேத்தி என்னை பேசவிடாம நீயே பேசிகிட்டே இருந்தே! என்னை கொஞ்சம் பேசவிட்டிருந்தீன்னா நேத்தியே ஆர்டர் தந்திருப்பேன். அதனால நீ பேசறதுக்கு முன்னாடி மத்தவங்களை பேச விடு. ஏன்னா, மத்தவங்க பேசறதிலேயிருந்து நிறைய விஷயம் உனக்கு கிடைக்கும். உன்னோட வேலையும் சுலபமாயிடும். அவங்களும், 'ஆஹா, நம்ம பேசறதை இவ்ளோ பொறுமையா கேட்டான். இவனுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சி நல்லது செய்வாங்க' என்று சொல்ல, அன்றைக்கு என் வாழ்வில் மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்.  

ஒரு சிறந்த பேச்சாளராக வரவேண்டுமென்றால் முதலில் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கவேண்டும். காது கொடுத்துக் கேட்கவேண்டும். வயது வித்தியாசம் பார்க்காமல், மற்றவர்களின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டால், அவர்கள் எதை விரும்புகிறார்கள், அவர்கள் குணம் என்ன, நாம் எப்படி திரும்பவும் அவர்களிடம் நம் கருத்தை சொல்லலாம் என்கிற தெளிவு கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் பிறர் பேசுவதை முழுமையாகக் கேட்டுக்கொள்வதில்லை. அதனால்தான் முழு அளவிலான தெளிவு கிடைக்காமல், நடத்தி முடிக்கவேண்டிய காரியத்தை முடிக்க முடியாமல் போய்விடுகிறது. நாம் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்கவேண்டும். அடுத்தவர்கள் பேசுவதை நாம் பொறுமையாக கவனித்து கேட்கக்கூடாது; ஒருவேளை நாம் மற்றவர்களின் பேச்சை பொறுமையாக கேட்டால், அவர்களின் வலையில் விழுந்துவிடுவோமோ... பேசுபவன் நம்மைவிட கெட்டிக்காரனாக இருந்தால், அவனுக்கு நாம் அடிமையாகிவிடுமோ என்ற உள்ளுணர்வுடனேயே நாம் இருப்பதால் மற்றவர்கள் பேசுவதை நாம் கவனிப்பதில்லை.

'இந்த வயசானவங்களுக்கு வேற வேலையே இல்ல. சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க!''

'குழந்தைக்கென்னமா தெரியும். அது பாட்டுக்கு ஏதேதோ உளறிக்கிட்டே இருக்கும்!''

'ஏய், சும்மா நிறுத்து! நீ சொல்றதெல்லாம் எனக்கு தெரியும். புதுசா ஏதாவது இருந்தா சொல்லு' என்று மற்றவர்கள் சொல்ல வந்ததை நிறுத்தி, அவர்களின் வாயை அடைத்து, ஒரு புது விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளாமலேயே இழந்துவிடுகிறோம்.

மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதேமாதிரி நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் எனில், முதலில் நீங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேளுங்கள்.

உனக்கும் மேலே நீ!

நாம் ஏன் மற்றவர்களின் பேச்சைக் கேட்பதில்லை? இந்த கேள்விக்கு பல காரணங்களைச் சொல்ல முடியும்.

* பேசுபவர்கள் யார் என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை.

* எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற மனப்பான்மை.

* இவன் என்ன பெரிசா சொல்லிடப் போறான்?

* கிடைக்கிற சந்தர்ப்பத்தில் நாம் பேசி மற்றவர்களை 'இம்ப்ரஸ்’ செய்வதை விட்டுவிட்டு, மற்றவர்களின் பேச்சில் நாம் 'இம்ப்ரஸ்’ ஆகவேண்டுமா என்கிற நினைப்பு!

* நான் பெரிய ஆள், மற்றவர்களின் பேச்சைக் கேட்க எனக்கு நேரமில்லை என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த நினைப்பது.

* பேசுபவர்கள் இதைத்தான் பேசுவார்கள் என்பதை முன்பே நாம் தீர்மானிப்பது!

நாம் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் சரி, முதலில் நாம் அவர்களை தெளிவாகக் கவனிக்க வேண்டும்.

ஒரு இன்டர்வியூவில் நான் ஒரு மாணவனை சந்தித்தேன். அவனுடைய 'அப்சர்வேஷன்’ எப்படி இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காக அந்த மாணவனிடம், ''தம்பி, ஒரு நிமிஷம் ரிஷப்சனுக்கு போய், எல்லாப் பொருளும் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வாங்க'' என்று அனுப்பினேன். ரிஷப்சனுக்கு போய்வந்த அவன், ''பிள்ளையார் படத்துக்கு அணிவித்திருந்த மாலை பழசா இருந்ததால அதை  குப்பைத்தொட்டியில் போட்டுட்டு வந்துட்டேன்'' என்றான். நான், ''எதனால அப்படி செஞ்சே''ன்னு கேட்டேன். 'சார், உங்க ரூம்ல எல்லா சாமி படங்களையும் சுத்தமா வச்சிருக்கீங்க. உங்களுக்கு கடவுள் பக்தி அதிகம்னு எனக்கு பட்டுது. அதனால பிள்ளையார் படமும் சுத்தமா இருக்கட்டும்னு நெனைச்சு, பழைய மாலையை எடுத்துப்போட்டேன்'' என்றான் அவன்.

மற்றவர்களின் பேச்சை காது கொடுத்துக் கேட்பதால், மற்றவர்கள் என்ன நினைக்கிறர்கள் என்று நமக்குத் தெரியவரும். புரிதல் வளரும். ஒருவருடைய சந்தோஷங்களையும், துக்கங்களையும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் வளரும். புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவரையருவார் சார்ந்து நிற்கும் தன்மை வளர்ந்து, கூட்டு முயற்சியோடு செயல்களை அணுக முடியும்.

மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கும் திறனை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சில வழிகளை சொல்கிறேன்.

1. பேசுபவர்களின் கண் பார்வையிலிருந்து விலகாதீர்கள்.

2. அவர்கள் பேசும் 'சப்ஜெக்டை’ உள்வாங்குங்கள்.

3. கவனிக்கும்போது, உணர்ச்சிவயப்படாதீர்கள்.

4. மற்றவர்கள்பேசும்போது, குறுக்கே பேசாதீர்கள்.

5. கருத்துகளை முதலில் ஆமோதியுங்கள்.

6. சில கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், அவர்களின் அனுமதியோடு கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

7. உங்களுடைய முகபாவங்கள், நீங்கள் அவர்கள் பேசுவதை சிரத்தையாக கேட்கிறீர்கள் என்பதையே உணர்த்தட்டும்.

உனக்கும் மேலே நீ!

8. அவர்களை கவனிக்காததுபோல் உங்களுடைய உடல் செயல்பாடுகள் இருக்கவேண்டாம்.

9. முடிந்தவரை பேசிய நபரைப் பாராட்டுங்கள்.

இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிர்களும், மற்றவர்களிடம் ஏதாவது பேசி தம் உணர்வுகளைப் பதிவுசெய்ய நினைக்கின்றன. மழலைமொழி பேசும் குழந்தையாகட்டும், வயதானவர்கள் ஆகட்டும், ஏதோ நம்மிடம் சொல்ல நினைக்கிறார்கள். அதை கவனித்தாலே போதும், உங்கள் முன் அமைதியான உலகம் விரிந்துகிடப்பது புரியும்!

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism