Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 30

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 30

Published:Updated:

பணத்தின் மீதான பயம்தான் உலகத்தையே ஒழுங்காகச் செயல்பட வைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

##~##

தொழில் செய்வதற்கு பணம் கேட்கும் போது, உங்கள் செயல்பாடுகள் போடப்படும் பணத்தின் மதிப்பு கூடும் என்ற நம்பிக்கை அளிக்கும் வண்ணம் இருக்கவேண்டும் என்றும், உங்கள் மனமும் செயல்பாடுகளும் அவ்வாறு இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக அலசிப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் சம்பாத்தியம் சம்பந்தப்பட்ட முக்கிய குணாதிசயங்கள் என்னென்ன என்று உங்களை நான் கேட்டால், நீங்கள் எந்தெந்த விஷயங்களைச் சொல்வீர்கள்?

நம்பிக்கை, வெட்கம், பயம், துணிச்சல், கோபம், சுறுசுறுப்பு என பல்வேறு விதமான காரணங்களும் பணத்துடன் சம்பந்தப்பட்டது என்பீர்கள். இந்த அனைத்து குணங்களுமே பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சைடுகளைக் கொண்டவை. அதாவது, நம்பிக்கை - நம்பிக்கையின்மை, பயம் - பயமின்மை, துணிச்சல் - துணிச்சலின்மை, கோபம் - கோபமின்மை, வெட்கம் - வெட்கமின்மை என இரண்டு வகைகளுமே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சேர்ந்திருப்பதாகும்.

இந்தத் தொடரில் ஏற்கெனவே நாம் பணத்தின் குணம் என்பது மனிதர் களின் குணமே என்று பார்த்துள்ளோம். இதில் எந்தெந்த குணங்கள் பணத்தை இழுக்க உதவும், எந்தெந்த குணங்கள் பணத்தை துரத்தி அடிக்கும் என்று பார்ப்போம்.

பணவளக் கலை!

'நான் ரொம்பவுமே கஷ்டத்தி லிருக்கிறேன். என்னால் எல்லாம் முடியுமா?’ என்ற நம்பிக்கையற்ற எண்ணம் சம்பாதிப்பதிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். 'நான் சம்பாதிக்காவிட்டால் யார் சம்பாதிப்பார்கள்’ என்ற நம்பிக்கையான எண்ணம் பணத்தின் அருகில் நம்மைக் கொண்டு செல்லும். இந்த நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையால்தான், ஒரேசூழலில் இருந்துவரும் இரண்டு பேரில் படிப்பு மற்றும் தகுதிக் குறைவான ஒருவர் மற்றவரைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடிவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

அடுத்து பயம். பணம் சம்பாதிப்ப தற்கான நடவடிக்கைகளை எடுக்க பயப்படுபவர்கள் சிலர். பணம் இல்லையே என்று பயப்படுபவர்கள் சிலர். பணத்தை இழந்துவிடுவோமே என்று பயப்படுபவர்கள் சிலர்.  பணம் பண்ணுகிறேன் என்று தொழிலில் இறங்கி கடனை வாங்கி பணத்தைத் தொலைத்துவிட்டேனே! எப்படி பணத்தைத் திருப்பிக் கட்டுவேன் என்று பயப்படுபவர்கள் சிலர் என பயம் பல்வேறுவிதமான காரண காரியங்களினாலான பயங்களை உள்ளடக்கியே உள்ளது.

துணிச்சல் என்பது அடுத்தவகை. வாய்ப்புகள் கண்ணில் தெரியும் போதும் நடவடிக்கை எடுக்காமல் ('கொஞ்சம் கடன் வாங்கிப் புரட்டி தொழில் பண்ணியிருக்கலாம்தான்’ என்று பிற்பாடு புலம்புவர்கள்) அதற்கான துணிச்சல் இல்லாமல் இருந்து பணம் சம்பாதிக்காமல் இருப்பவர்கள் சிலர். சாத்தியமே இல்லை என்று தெரிந்தும் அந்தத் தொழிலை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறேன் என ஒருவிதமான துணிச்சலுடன் இறங்கி தோல்வி பெற்ற சிலர் என துணிச்சலும் அதனுடைய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பரிமாணங்களில் பணம் சம்பாதிக்க ஓர் அத்தியாவசிய குணமாகவே உள்ளது.

பணவளக் கலை!

பணம் சம்பாதிப்பதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொல்ல வெட்கப்படுவது என்பது ஒரு ரகம். எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகளை முதல்முதலாக எடுக்க ஆரம்பிக்கும் காலத்தில் (வேலைக்குச் சென்று சம்பாதிப்பதைத் தவிர) இந்தநிலை அனைவருக்குமே வரும். பணம் சம்பாதிக்க தொழில் போன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து, ஏதாவது

இடைஞ்சல் வந்து யாரிடமாவது கடன் கேட்கவேண்டியிருந்தால் கடன் எப்படி கேட்பது என்று வெட்கப்படுவது ஒருநிலை. தாம்தூம் என்று செலவு செய்து கடனை அதிகரித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் பல பொய்களைச் சொல்லி பார்க்கிறவர்கள் எல்லோரிடமும் பித்தலாட்டம் செய்து பணம் வாங்கிப் பொழுதை ஓட்டுவது ஒரு வெட்கமின்மை ரகம்!

இப்படி பல்வேறு குணங்கள் பணம் (இழுக்க/துரத்த) சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், பணமில்லாத நிலையில் இருப்பவர்களிடையே இருக்கும் பெரும்பான்மையான விஷயம் என்ன என்று பார்ப்போம். பயம், வெட்கம், கோபம் என்ற மூன்றும்தான் அது. பணத்தின் மீதான பயம்தான் உலகத்தையே ஒழுங்காகச் செயல்பட வைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. உங்களில் ஒருசிலர் இதை ஒப்புக்கொள்ள மறுப்பீர்கள் என்றாலும், நிதானமாக யோசித்தால் மனிதனின் அன்றாட செயல்பாடுகளின் அடித்தளத்தில் பணம் என்பதுதான் ஓரளவாவது காரணகாரியமாக இருக்கவே செய்யும். பணத்தின் தேவையே பெரும்பான்மையான மனிதர்களை ஒழுங்காகப் படிக்கச் செய்கிறது. வேலைக்குப் போகச் செய்கிறது. மேலதிகாரியுடன் சண்டை போடாதிருக்கச் செய்கிறது.

பணமில்லாத நிலையின் வெட்கம் தான் பணக்காரர்களையும், பலம் பொருந்தியவர்களையும்விட்டு தானாகவே நம்மைச் சற்று எட்ட நிற்கச் செய்கிறது. திருமண விழாக்கள், விசேஷங்கள், கூட்டங்கள் என எதிலும் பணத்தினால் ஏற்படும் பாகுபாடு வெளிப்படையாகவே தெரிந்தாலும், நம்மில் யாரும் அதைப் பெரியதாகக் கண்டுகொள்வதில்லை. திருமணங்களுக்குச் செல்லும்போது மணமக்களுக்கு மேடையில் வாழ்த்துச் சொல்ல நாம் வரிசையில் நிற்கும்போதுகூட படகுக் காரில் வருபவர் க்யூவில் நிற்காமல் நேரடியாக மேடையேறி வாழ்த்திவிட்டுச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. திருமணத்தில் நிகழும் இந்த நிகழ்வை நாம் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை இல்லையா?! பிஸியான பிசினஸ்மேன்! அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். ஒரு முகூர்த்த நாளென்றால் பத்து கல்யாணங்களுக்குப் போக வேண்டியிருக்கும். இதுபோன்ற சிறப்பு உபசரிப்புகள்தான் அவருக்கு உதவும் என்று நினைத்து சமாதானமாகி விடுவோம். ஒரு பொதுஇடத்தில் இதுபோன்ற சிறப்புச் சலுகை பணத்துக்குக் கிடைப்பதை நம்மில் பெரும்பாலானோர் பெரிய தவறாக எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், சில பொதுஇடங்களில் பணம் படைத்தவர்கள் இப்படி சிறப்புச் சலுகை பெற்று வருவதை ஆட்சேபிப்பதைப் பார்த்திருக்கிறோம். முணுமுணுப்பில் தொடங்கி சத்தமாக சொல்வது, சண்டை இடுவது வரையிலான பல்வேறு நிலை கோபங்களை நாம் காண்கிறோம். பணம் இல்லை என்பதனால் வரும் பயம், வெட்கம், கோபம் என்ற மூன்று மனநிலைகளையுமே கடந்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும். இந்த மூன்று குணங்களையும் விட்டொழித்தால்தான் பணத்தை நோக்கிய பயணத்தில் முதல் அடியை நாம் எடுத்து வைக்கிறோம் எனலாம்.

வெட்கம், கோபம் என்பதைக் கொஞ்சம் முயற்சி செய்தால் மறைத்துவிடலாம். பயத்தை எப்படி மறைப்பது? ரொம்பக் கஷ்டமாச்சே என்பீர்கள். உண்மையில் பயத்தை மறைப்பதுதான் சுலபம்.  வெட்கமும் கோபமுமாவது அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் முகம் கொஞ்சம் காட்டிக்கொடுத்துவிடும் வாய்ப்புள்ளது. ஆனால், பயத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும்கூட முற்றிலுமாக மறைக்க முடியும். பயப்படாத மாதிரியான தோற்றத்தை எல்லோராலும் சற்று முயற்சித்தாலே காண்பிக்க முடியும். பயப்படுகிறேன் என்று நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத வரை / காண்பிக்காத வரை யாராலும் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாது.

வியாபாரத்தில் ஆகட்டும், தொழிலாளர் மேலாண்மையில் ஆகட்டும், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களாகட்டும், உங்கள் பயம் வெளித்தெரிந்தால் உங்களுக்கு அது பலவீனமாக முடிந்துவிடும். பணரீதியான பயம் இல்லாதவர்களே இல்லை எனலாம். எந்த அளவு பணத்துக்குப் பயப்படுகிறார்கள் என்பதுதான் மாறுபடப் போகிறது. உங்களுக்கு ஐம்பதாயிரம் என்றால், பெரும் தொழில் அதிபருக்கு ஐம்பது கோடியாக இருக்கலாம். அவ்வளவுதானே தவிர மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் இருக்கவே செய்யும்.

இந்தப் பயத்தை மறைக்கப் பழகினால்தான், பணம் என்பது நம்முடன் நட்பாக இருக்க நேசக்கரத்தினை நீட்டும். ஏனென்றால், பணத்துக்கு பயம் கிடையாது. பயந்தவர்களிடம் இருக்க பணத்துக்குப் பிடிக்காது. அப்படி என்றால், பயப்படும் நபரை நம்பி முதலீடு செய்யவும் ஆளே இருக்காது, இல்லையா!

(கற்றுத் தேர்வோம்)

நம்பிக்கை தரும் இந்தியா!

''இந்தியாவில் முதலீடு செய்வது என்பது தற்காலிக சென்டிமென்டைப் பொறுத்து கிடையாது. இங்கு நிலவும் அடிப்படையான விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை தேர்வு செய்துள்ளோம். இந்திய சந்தை அடிப்படையில் வலிமையாக இருப்பது முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும் என நம்புகிறோம்.  நாங்கள் இந்தியாவில், இந்தியாவுடன், இந்தியாவுக்காக வளர விழைகிறோம்'' என பெப்ஸி கோ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism