Published:Updated:

கம்பெனி ஸ்கேன்!

லூபின்!

லாபத்தை சரியான அளவில் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து கொடுக்க லூபின் நிர்வாகம் தவறியதே இல்லை!

##~##

ளர்ந்த நாடுகளில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, சுற்றுச்சூழல், உணவுப் பழக்க மாறுபாடுகளினால் வரும் புதுப்புது பிரச்னைகள் போன்றவற்றால் பலன் பெறும் லூபின் நிறுவனத்தைதான் இந்த வார ஸ்கேனுக்கு எடுத்துக்கொண்டுள்ளோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கம்பெனி ஸ்கேன்!

கம்பெனி எப்படி?

அமெரிக்க மருந்துச் சந்தையில் பொதுவகை (ஜெனரிக்) மருந்துகளுக்கான எதிர்காலம் பிரமாதமான அளவில் இருக்கும். இந்தவகை மருந்துகளைத் தயாரித்து விற்கும் கம்பெனிகளில் சிறந்த பயனைப் பெறும்  கம்பெனி லூபின் லிமிடெட். அமெரிக்கச் சந்தையில் இருக்கும் இந்த வாய்ப்பு, லூபினுக்கு மட்டுமேயல்லாமல் உலகில் இருக்கும் பெரிய பெரிய மருந்து கம்பெனிகளுக்கும் தெரியத்தானே செய்யும்? அப்படி இருக்கும்போது இதிலென்ன பெரிய லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்றுகூட கேட்கலாம். இங்கேதான், லூபின் மற்றவர்களிடமிருந்து பெரிய அளவில் வித்தியாசப் படுகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான மருந்து வகைகளையே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினாலும், நன்கு தீர ஆராய்ந்து நல்ல மார்க்கெட் இருக்கிற மருந்துகளை மட்டுமே இந்த கம்பெனி அங்கே விற்பனை செய்கிறது. இது மட்டுமல்ல, ஜெனரிக் மருந்துகளைத் தாண்டி பல ப்ராண்டடு மருந்துகளையும் அமெரிக்காவில் விற்பனை செய்கிறது. இந்த ப்ராண்டடு மருந்துகளுக்கு தன்வசம் காப்புரிமையும் வைத்துக்கொண்டுள்ளது லூபின். ஜெனரிக் மருந்துகளைவிட ப்ராண்டடு மருந்துகளில்தான் லாபம் அதிகம். ஜெனரிக் மற்றும் ப்ராண்டடு என்ற இரண்டையும் தன்வசத்தே லூபின் கொண்டுள்ளதால்தான் இந்த கம்பெனியை முதலீட்டுக்காக  முதலீட்டாளர்கள் ஆராயலாம்.

கம்பெனி ஸ்கேன்!
கம்பெனி ஸ்கேன்!

பிரச்னைகள் உண்டா?

மருத்துவம் மற்றும் மருந்து சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலே சிக்கல்தானே! அதுவும், அமெரிக்காவில் வியாபாரம் என்றால் கெடுபிடிகள் அதிகமாயிருக்கும். பல இந்திய கம்பெனிகள் கடந்த வருடங்களில் அமெரிக்க ரெகுலேட்டரி சிக்கல்களை சந்தித்தபோதும், லூபின், 13 புதிய வகை மருந்துகளை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்று முன்னணியில் உள்ளது. உலக அளவில் 14-வது பெரிய மருந்து தயாரிக்கும் கம்பெனி இது என்பது தனிச்சிறப்பு.

கம்பெனி ஸ்கேன்!

உள்ளூர் வியாபாரம் எப்படி?

இந்திய அளவில் நான்காவது பெரிய மருந்து தயாரிப்பு கம்பெனியாக இருக்கிறது லூபின்.  இந்த நிறுவனத்தின் இந்திய வியாபாரம் அதன் மொத்த வியாபாரத்தில் ஏறக்குறைய 25% ஆகும். நீண்டநாள் சிகிச்சை மற்றும் உடனடி சிகிச்சைக்கான மருந்துகளை 5,200 விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் விற்பனை செய்து கணிசமான லாபம் பார்க்கிறது லூபின்.

கம்பெனி ஸ்கேன்!

மருந்து விற்பனையில் நீண்டநாள் சிகிச்சை தேவைப்படும் மருந்துகளே தொடர் லாபத்தைத் தருவதாக இருக்கும். இருதய நோய், காசநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு தொடர்சிகிச்சையும், மருந்தும் தேவைப்படுகிறது. இந்தத் தொடர்சிகிச்சை வியாதிக்கான மருந்துகள், ஒரேமுறை  சிகிச்சைக்கான மருந்துகள் (ஆக்சிடென்ட் சிகிச்சை) விற்பனையைவிட லூபினுக்கு தொடர் லாபத்தை அளிக்க வல்லது. இதை நன்குணர்ந்த லூபின் இந்தத் தொடர்சிகிச்சை மருந்துகளில் சிறந்த அளவில் கால்பதித்து வருகிறது. 2006-ல் 31 சதவிகிதமாக இருந்த தொடர் சிகிச்சை மருந்து விற்பனை 2013-ல் 61 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த அளவு அதிகரிப்பு லூபின் தொடர் சிகிச்சை மருந்துத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் காட்டும் ஈடுபாட்டை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

கம்பெனி ஸ்கேன்!
கம்பெனி ஸ்கேன்!

அயல்நாட்டு வியாபாரம் எப்படி?

2013-ல் லூபினின் மொத்த விற்பனையில் 40 சதவிகிதம், அமெரிக்காவில் லூபின் விற்பனை செய்யும் 50 வகை மருந்துகளின் விற்பனை மூலம் வந்துள்ளது.  இந்த 50 வகை மருந்துகளில் ஏறக்குறைய 24 வகை மருந்துகளில் அமெரிக்கச் சந்தையில் மார்க்கெட் லீடராகவும், 37 மருந்துகளில் விற்பனையளவில் முதல் மூன்று இடத்துக்குள் இருக்கும் கம்பெனியாகவும் திகழ்வது லூபினின் தனிச்சிறப்பு.

அமெரிக்காவில் மருந்து விற்பனை செய்யும் கம்பெனிகளினுள் லூபின் மட்டுமே ப்ராண்டடு மருந்துகளைக் கொண்டது. அமெரிக்காவில் நடக்கும் வியாபாரத்தின் அளவு, கடந்த ஐந்து வருடத்தில் 63% (சிஏஜிஆர்) வளர்ந்துவந்துள்ளது என்பதிலிருந்தே லூபினின் மருந்துகளுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

கம்பெனி ஸ்கேன்!
கம்பெனி ஸ்கேன்!

எதிர்காலம் எப்படி?

கம்பெனி ஸ்கேன்!

மருந்துச் சந்தையில் உலக அளவில் ஜப்பானின் சந்தைதான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தச் சந்தையிலும் ஜெனரிக் மருந்து வகைகளின் பங்களிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. தற்சமயம் விற்பனை அளவில் 10 சதவிகிதமும், எண்ணிக்கை அளவில் 23 சதவிகிதமும் இருக்கிறது. ஜப்பானிய மருந்துச் சந்தையில் ஒரு ப்ராண்டடு மருந்து விற்கும் விலையில் ஏறக்குறைய 60% அளவிலான விலைக்கு ஜெனரிக் மருந்தின் விலை நிர்ணயிக்கப்படலாம். இது லாபம் தரும் ஒரு நிலையாக இருந்தாலும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடு ஆகையாலும், அனைவருக்குமே மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அரசு அளிப்பதாலும் இந்த விலைகளை அரசாங்கம் கன்ட்ரோல் செய்யவே முயற்சிக்கிறது.  இதனாலேயே, உலகின் பல நாடுகளில் இருந்தும் புதிய கம்பெனிகள் ஜப்பானிய சந்தைக்குள் நுழைய முற்படுகின்றன.

ஜப்பானிய சந்தைக்குள் நுழைவதில் லூபின் கொஞ்சம் வெற்றி அடைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். க்யோவா மற்றும் ஐராம் என்ற இரண்டு கம்பெனிகளை வாங்கியதன் மூலம் கடந்த ஐந்து வருடத்தில் ஜப்பானிய மருந்து விற்பனையில் 23% அளவு (சிஏஜிஆர்) வளர்ச்சியை சந்தித்து வருகிறது லூபின். க்யோவாவின் விற்பனை நெட்வொர்க்கும், ஐராமின் பரிசோதனை மற்றும் மருந்து பரிந்துரைக்கான நெட்வொர்க்குமே இந்த அளவு வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

தற்சமயம் ஜப்பானிலேயே மருந்து உற்பத்தியும் விற்பனையும் செய்துவரும் லூபின், எதிர்காலத்தில் உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்துவருகிறது. அவ்வாறு  உற்பத்தி இந்தியாவில் செய்யப்படும்போது, லாபம் அதிகரிக்கவே செய்யும். கோவாவில் உள்ள லூபினின் பேக்டரி தற்சமயம் மூன்று மருந்துகளை உற்பத்தி செய்ய ஜப்பானின் அனுமதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் தவிர, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸிலும் லூபின் வியாபாரம் செய்துவருகிறது.  உலக அளவில் காச நோய்க்கான மருந்தில் லூபினின் தயாரிப்புகளே மிகவும் பிரசித்திபெற்றதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்றாகும்.

கம்பெனி ஸ்கேன்!

ரிஸ்க்குகள் என்ன?

பெரும்பாலான வியாபாரம் அயல்நாட்டில் செய்யப்படும்போது, கரன்சி சந்தையில் வரும் ஏற்றஇறக்கம் லாபத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. லூபின் தயாரித்து அயல்நாட்டில் விற்கும் கருத்தடை மாத்திரைகளின் சந்தை மிகவும் போட்டிகள் நிறைந்த ஒன்றாகும். ஏற்கெனவே இருக்கும் போட்டியாளர்கள் பெரிய ப்ராண்டு லீடர்கள். கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பவர்கள் மருத்துவக் கட்டாயங்கள் இல்லாதபோது ப்ராண்டுகளை மாற்றவே மாட்டார்கள். எனவே, இந்தத் தயாரிப்புகளின் விற்பனை பெரிய அளவில் வளராமல் போகலாம்.

எப்படி மற்ற கம்பெனிகளின் ப்ராண்டடு மருந்துகளுக்கு லூபினின்  விலை குறைந்த ஜெனரிக் மருந்துகள் மாற்றாக இருக்கின்றதோ, அதேபோல் லூபினின் ப்ராண்டடு மருந்துகளுக்கும் மற்ற ஜெனரிக் கம்பெனிகளின் தயாரிப்புகள் போட்டியாக வரவே செய்யும்.

கம்பெனி ஸ்கேன்!

நிர்வாகம் எப்படி?

லாபத்தை நிலைநிறுத்துவது என்பதையும், பங்குதாரர்களுக்கு லாபத்தை சரியான அளவில் பகிர்ந்து கொடுப்பது என்பதையும் லூபினின் நிர்வாகம் எப்போதும் செய்யத் தவறியதில்லை. எஃப்டிஏ போன்ற ரெகுலேட்டர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு இந்திய மருந்து நிறுவனங்களை ஆராய்ந்த காலத்திலும் கூட, லூபின் பெரிய அளவிலான சிக்கல்களைச் சந்திக்காத அளவுக்கு கம்பெனியின் தரத்தை வைத்துள்ளது இந்த மேனேஜ்மென்ட். இதனால், கம்பெனியின் எதிர்காலம் பெரிய அளவில் கெட்டுவிட வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.

லூபினின் ப்ரமோட்டர்கள் அவர்களுடைய ஷேர் எதனையும் அடமானம் வைக்கவில்லை என்பது ரிஸ்க் அளவீட்டை குறைக்கும் மிக முக்கியமான ஒரு விஷயமாகக்கொள்ளலாம். ஓரளவுக்கு கடன் இருந்தாலும்கூட சீரான பேலன்ஷீட்டைக் கொண்டுள்ளது லூபின் எனலாம்.

இத்தனை நல்ல விஷயங்களைக் கொண்ட இந்த மருந்து கம்பெனி பங்குகளை சந்தை வேகமாக இறங்கும்போது (ஏறக்குறைய தற்போதைய நிலையில் இருந்து 10% வரை) முதலீட்டாளர்கள் வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

மறுசீரமைக்கப்பட்ட வாராக்கடன்!

வங்கிகள் வழங்கிய கடன் தொகையானது, வாராக்கடனாக மாறி அது மறுசீரமைக்கப்பட்டதில் 2013-ம் ஆண்டில் ரூ.74,000 கோடி உயர்ந்துள்ளது. மொத்தம் 1.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாராக்கடன் மறுசீரமைப்பு செய்ய, கடன் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், வாராக்கடன்களை அலசி ஆராய்ந்த வங்கிகள் ரூ.74,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் தந்துள்ளது.