Published:Updated:

ஷேர்லக்: இனியும் ஒதுங்கி நிற்கவேண்டாம்!

ஷேர்லக்: இனியும் ஒதுங்கி நிற்கவேண்டாம்!

அண்மைக்காலத்தில் நிஃப்டி பங்குகளில் எஃப்ஐஐ-களின் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது.

##~##

'எங்கே ஆளைக் காணோமே’ என நாம் ஷேர்லக்கைத் தேடிக்கொண்டிருக்க, ''இதோ வந்துட்டேன்'' என்கிறபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் அவர். வந்தவருக்கு முதலில் சுடச்சுட காபி கொடுத்தோம். அதை ரசித்துக் குடித்தவர், சந்தையின் போக்குபற்றி பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பங்குச் சந்தை ஏற்றஇறக்கத்தோடு இருப்பதைக் கண்டு நம்மவர் ஒதுங்கிநிற்க, எஃப்ஐஐகள் கொஞ்சம்கூட அஞ்சாமல் நம் சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள். 2001 - 2009 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் எஃப்ஐஐகள் முதலீடு செய்த தொகையைவிட 2010 - 2013 வரையிலான நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை அதிகமாக இருப்பதைப் பார்க்கும்போதே அவர்கள் நம் சந்தை மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எஃப்ஐஐகள் நம் சந்தையில் ரூ.3,71,342 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், நம்மவர்களுக்கு நம் சந்தை மீதே நம்பிக்கை இல்லை! விலை குறைவாக இருக்கும்போது வாங்காமல், உச்சத்தில் செல்லும்போது வாங்கிவிட்டு, பிறகு விலை குறைந்தவுடன், 'ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்!’ என்று புலம்புவதுதான் நம்மவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது! இந்த மனப்போக்கை நம்மவர்கள் மாற்றிக்கொண்டால்தான் இனிவரும் காலத்திலாவது பணவீக்கத்தைத் தாண்டி லாபம் பார்க்க முடியும்'' என்றவர், மிச்சமிருக்கிற காபியையும் மடக் மடக்கென்று குடித்தார்.

''அப்போலோ டயர்ஸ் ஒரேநாளில் சுமார் 12% அதிகரித்துள்ளதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''இந்தப் பங்கு அதன் 52 வார உச்ச விலையை அடைந்துள்ளது. கூப்பர் டயர் அண்டு ரப்பர் நிறுவனத்தை சுமார் ரூ.14,500 கோடிக்கு வாங்கப் போவதாக அப்போலோ டயர்ஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான தொகையைத் திரட்டுவதில் அப்போலோ டயர்ஸ் சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில், இந்தத் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விலை அதிகரிப்பு'' என்றார்.  

ஷேர்லக்: இனியும் ஒதுங்கி நிற்கவேண்டாம்!

''எஸ்கார்டு நிறுவனப் பங்கின் விலை ஒரேநாளில் 7% வீழ்ச்சி கண்டுள்ளதே?'' என்று மீண்டும் ஆச்சர்யம் காட்டினோம்.

''டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ட்ராக்டர் விற்பனை குறைந்து போனதே இதற்கு காரணம்'' என்று சொன்னார்.

''எஃப்ஐஐகள் சில பங்குகளில் எக்கச்சக்கமாக வாங்கிக் குவித்திருக் கிறார்கள் போலிருக்கிறதே?'' என்றோம்.

''அண்மைக்காலத்தில் நிஃப்டி பங்குகளில் எஃப்ஐஐ-களின் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. நிஃப்டி நிறுவனப் பங்குகளில் இவர்களின் முதலீடு 18.12 சதவிகிதமாக உள்ளது. ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்டு எம், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டாடா பவர் கம்பெனி, என்டிபிசி, விப்ரோ, சன் பார்மா நிறுவனங்களில் எஃப்ஐஐ-களின் முதலீடு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், இந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்துடன் காணப்படுகிறார்கள். அதாவது, இந்தப் பங்குகளின் விலை அதிகரிக்கும்போது, எஃப்ஐஐ-கள் கணிசமான பங்குகளை விற்றுவிட்டால், பங்கின் விலை தடால் என்று இறங்கிவிடுமே என்பதுதான் பயத்துக்கான காரணம்'' என்று விளக்கம் தந்தார்.

ஷேர்லக்: இனியும் ஒதுங்கி நிற்கவேண்டாம்!

''சில பங்குகள் மீது செபி அபராதம் போட்டிருக்கிறதே?'' என்று வினவினோம்.

''பிரியதர்ஷினி ஸ்பின்னிங் மில்ஸ் பங்கு மீது விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்த ஆறு நிறுவனங்களுக்கு செபி 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இன்னொரு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது செபி. முன்னுரிமை அடிப்படையில் நிறுவனங்களுக்கு ஒதுக்கித் தரப்படும் பங்குகளும் டீமேட் கணக்கு வழியாகவே தரவேண்டும் என்று அதன் புதிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. பங்குச் சந்தை நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே செபி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறதாம்'' என்றார்.  

''சில பங்குகளின் சர்க்யூட் வரம்பை மும்பை பங்குச் சந்தை மாற்றி அமைத்திருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''ஆமாம்,  விஜய் மல்லையாவின் யுனைடெட் புரூவரீஸ் நிறுவனப் பங்கு மீதான வர்த்தகத்தில் சர்க்யூட் வரம்பை 10 சதவிகிதமாக பிஎஸ்இ நிர்ணயித்துள்ளது. இதேபோல், வைஸ்ராய் ஹோட்டல்ஸ், குளோபல் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், மாவென்ஸ் பயோடெக், ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகளுக்கும் 10% சர்க்யூட் லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூபி இன்ஜினீயரிங் மற்றும் ப்ரைம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் சர்க்யூட் லிமிட் முறையே 5% மற்றும் 2 சதவிகிதமாக  நிர்ணயம் செய்துள்ளது.

''என்எஸ்இஎல் விவகாரத்தில் என்ன நியூஸ்?'' என்று விசாரித்தோம்.

''ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் உள்ள எம்சிஎக்ஸ்-ன் 24 சதவிகித பங்குகளை வாங்க யுனிவர்ஸல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (யூசிஎக்ஸ்) தலைமையிலான குழு ஆர்வம்காட்டி வருகிறது.

தவிர, எம்சிஎக்ஸ்-ன் புதிய எம்டி மற்றும் சிஇஓ-வாக மனோஜ் வைஷ் விரைவில் பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 1988 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கு இடையே பிஎஸ்இ-ன் எம்டி மற்றும் சிஇஓ-வாக இருந்துள்ளார். மனோஜின் பெயர் எஃப்எம்சி-ன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. புதிய எம்டி வந்த பிறகாவது வர்த்தகம் அதிகரிக்கிறதா பார்ப்போம்'' என்றவர், ''சந்தை உள்ள நிலைமையில் குறுகியகால முதலீட்டுக்கு எந்தப் பங்கையும் பரிந்துரைக்க மனசு வரவில்லை'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.