Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 31

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் 31

Published:Updated:
பணவளக் கலை!
##~##

ணமும் பயமும் எப்படி ஒன்றுக்கொன்று எதிர்மறையாகச் செயல்படக் கூடியவை என்று பார்த்தோம். பயமும் பணமும் எதிர்திசையில் செயல்படக்கூடியவை. ஒருவர் வெளிக்காட்டிக்கொள்ளும் பயத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பணம் சம்பாதிக்கும் திறன் குறையவே வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயம் வெளிக்காட்டப்படும்போது, வெளிக்காட்டும் நபரை நம்பி  முதலீடு செய்யவும்/கடன் தரவும் பணம் வைத்திருக்கும் நபர்கள் பயப்படவே செய்வார்கள். வெளிக்காட்டுதல் என்பதில் புதிய முயற்சிகளில் இறங்காதிருத்தல் என்பது முழுமையாக அடங்கும். உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களில் நன்கு சம்பாதித்துக்கொண்டிருக்கும் நபர்களைச் சற்று கூர்ந்து பாருங்கள். இது புரியும். அவர்கள் தொடர்ந்து பயமில்லாமல் புதுமுயற்சிகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். அல்லது ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் முயற்சிகளில் விரிவாக்கங்களைத் தளராமல் செய்துகொண்டே இருப்பார்கள். பயம் மனதில் இருக்கவே செய்தபோதும், இதுக்கெல்லாம் பயந்தால் பிழைக்க முடியுமா என்று சொல்லியோ/நினைத்தோ முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கும் நபர்களாக இருப்பார்கள் அவர்கள்.

பணவளக் கலை!

இவர்களை நம்பியே முதலீடுகள் செய்யப்படுகிறது. கடன்களும் வழங்கப்படுகிறது. இதென்ன புதுகண்டிஷனாக இருக்கிறது. நல்ல ப்ராஜெக்ட்களை நோக்கி முதலீடுகளும், ஈடாகக் கொடுக்கச் சொத்தும் இருந்தால் கடனும் சுலபமாகக் கிடைக்கவே செய்கிறதே என்று நீங்கள் சொல்லலாம். நாம் பேசிக்கொண்டிருப்பதே நல்ல தொழிலை தேர்ந்தெடுப்பதற்கான முறைகளையும், ஈடாகக் கொடுக்க எந்தச் சொத்துக்களும் இல்லாத ஒரு சாமான்யன் முதலீடு (கடனாகக் கூட) திரட்டும் வழிகளையும் பற்றித்தானே! முதல்தலைமுறை பணக்காரர் ஆவதுதானே ரொம்ப சிரமமான காரியம். அதனாலேயே இதைக் கொஞ்சம் விரிவாக அலசிப் பார்ப்போம்.

பணக்காரரான எந்த ஒரு சாமான்யரையும் ஆரம்பகாலத்தில் அவர்களுடைய பண மேலாண்மை எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டுப்பாருங்கள். ஆரம்பகால முதலீடுகளுக்கும், அவ்வப்போது தேவைப்படும் கடன்களுக்கும் பெரும்பாடுபட்டிருக்கவே செய்வார்கள். பயமின்மையே முதலீட்டையும் கடனையும் பெறுவதற்கு அவர்களுக்கு மிகவும் உதவியிருக்கும். ஆரம்பத்தில் அவர் செய்யவேண்டிய முதலீட்டுக்கு மிகுந்த சிரமப்பட்டிருப்பார். பின்னர்த் தொழில் வளர்ந்து ஒரு நிலையான லாபம் தரச் சாத்தியமான தொழில் என்று நிரூபணமாகும் வரை  வங்கிகள் போன்ற ரெகுலர் சேனல்களில் கடன் பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருந்திருக்கும்.

பணவளக் கலை!

மிக அதிக அளவிலான வட்டி, அபராத வட்டி எனப் பல்வேறுவிதமான தண்டங்களைக் கட்டிய வண்ணமே முன்னேறி வந்திருப்பார். அப்படி பல வருடங்கள் தொழில் நடத்தி முன்னேறிய பின்னரே அவருடைய பேலன்ஷீட் ஒரு டீசன்டான நிலைமைக்கு வந்திருக்கும். வங்கிகள் கடன் கொடுக்க இசைந்திருக்கும். சாமான்யர்கள் பணம் சம்பாதிக்கும் வழியில் இந்தவகையிலான சிக்கல்கள் இருந்திருக்கவே செய்யும். அதிக வட்டியையும் அபராத வட்டியையும் கண்டு பயப்படாமல் தொழிலை சிறப்பாகச் செய்து லாபம் ஈட்டி கடனை அடைத்து முன்னேறி இருப்பார்கள்.

தொழிலை தொடர்ந்து நடத்தத் தேவைப்படும் கடனுக்கு இந்தப் பிரச்னை என்றால், ஆரம்பகால முதலீடுகளுக்கோ கேட்கவே வேண்டாம். அதிபயங்கரமான பிரச்னைகள் இருந்திருக்கவே செய்யும். இவை அனைத்தையும் தாண்ட பயம் என்பது மிகக் குறைவான அளவில் இருக்க வேண்டும்.

ஆரம்ப நிலைதானே! பெரிய காசு, வசதி, சொத்து பத்து ஏதும் இருக்காதே!. இழக்க ஒன்றுமில்லை எனும் சூழ்நிலையில் பயம் எங்கே இருக்கப்போகிறது என்ற வாதத்தை நீங்கள் வைக்கலாம். ஆரம்ப நிலையில் இழக்க ஒன்றுமில்லை என்றாலும் பயம், மனதில்  குடிகொண்டிருக்கவே செய்யும். அப்படியே இழக்க ஒன்றுமில்லை என்று துணிந்து பணம் புரட்டி தொழில் செய்து தோல்வி அடைந்து பணத்தை உரியவருக்குக் கொடுக்க முடியவில்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். யாரும் அவரை நம்பி முதலீடாகவோ/கடனாகவோ பணத்தைத் தரமாட்டார்கள். எந்தப் பயம் இல்லாவிட்டாலும் இந்தப் பயம் மனதில் இருக்கவே செய்யவேண்டும். இந்தப் பயம் மனதில் இருக்கும்போதும் வெற்றி பெற்றவர்கள் இதனை வெளிக்காட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறீர்கள். கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதுபோக தேவைப்படும் பணத்துக்கு உங்கள் நண்பர்கள் இருவரை நாடுகிறீர்கள். அவர்களிடம் உங்களுக்குத் தேவைப்படும் பணம் இருக்கிறது. ஆனால், அவர்களோ தொழில் செய்யும் மூடிலுமில்லை; பார்ட்னராகத் தயாராகவும் இல்லை. உங்களுடைய கடந்தகால ட்ராக் ரெக்கார்டையும், உங்கள் மீதிருக்கும் உள்ளார்ந்த அன்பின் அளவினையும் வைத்தே அவர்கள் உங்களுக்குப் பணம் தருவது என்பது சாத்தியமாகும்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் தொழில் குறித்து எந்தவிதமான வார்த்தைகளை நீங்கள் சொல்ல வேண்டிவரும். 'எனக்கே பயம்மா இருக்குங்க. போட்ட பணம் வருமா, வராதான்னு தெரியலை’ என்றா? இல்லை, சூப்பரான லாபம் வருவதற்கான அதிக வாய்ப்புகளைக்கொண்ட தொழில், என்ற வார்த்தைகளையா? எதிர்காலத்தில் லாபம் வருவது பல அடிப்படைக் காரணிகளைப் பொறுத்தே இருக்கும் என்கிறபோது, தோல்வியடைய இருக்கும் வாய்ப்புகளை ஊதிப் பெரிதாக்கி நண்பர்களுக்கு விளக்கினால், உங்கள் நண்பர்கள் உங்களுக்குப் பணம் தந்து உதவுவார்களா? இல்லவே இல்லை அல்லவா?

எந்த ஒரு வியாபாரமும் ஆரம்பிப்பதற்கு முன்னர் சில எதிர்பார்ப்பு கணக்குகளைக் கொண்டே ஆரம்பிக்கப்படுகிறது. ஆரம்பித்தபின்னர் நடக்கும் நிஜ நிகழ்வுகள் எதிர்பார்ப்பைவிட பல மடங்கு சிறப்பாகவோ, எதிர்பார்த்ததைப் போன்றோ அல்லது எதிர்பார்ப்புக்குப் பலமடங்கு எதிர்மறையாகவோ நிகழ்வது என பல்வேறு நிலைகளில் இருக்கலாம். எதிர்காலம் குறித்த கணக்குகள் தவறுவது சகஜம்தானே! தவறும் என்ற நினைப்பு மனதில் ஊறிப்போனால், நீங்கள் கையில் வைத்திருக்கும் டீ டம்ளர்கூட ஒவ்வொரு முறையும் தவறிவிழுந்து உடையவே செய்யும், இல்லையா?

தொழிலுக்குத் தேவையான முதலீட்டை நண்பர்களிடம் இருந்து கைமாற்றாக வாங்கும்போது நமக்குத் தொழில் குறித்து இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை பெரிதுபடுத்திச் சொன்னால் பணம் தரலாம் என்று நினைக்கும் நபர்கூட, உங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து ஆரம்பியுங்கள்; பின்னால் பார்ப்போம் என்று நழுவிவிடுவார்கள். எனவே, முதலில் நாம் செய்யப்போகும் வியாபாரம் அல்லது தொழில் குறித்த முழுத் தெளிவை நாம் பெறவேண்டும். அதில் நமக்குத் தோன்றும் சந்தேகங்களை நாம் முழுமையாக போக்கிக்கொள்ள வேண்டும். எதிர்கால எதிர்பார்ப்புகளில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை முற்றிலுமாக உணர்ந்தும் சீர்தூக்கிப் பார்த்தும் நெகட்டிவ் விஷயங்களை எந்த அளவுக்கு கண்டுகொள்ளத் தேவையில்லை என்பதற்கான காரணகாரியங்களையும் நம் கைவசம் வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், உதவி செய்யும் நண்பர் கொஞ்சம் தெளிவாக இருந்து இந்தக் கேள்விகளை நம்முன்னே வைத்தால் நம்முடைய ஐடியாவை ஆதரித்து நாம் பேசவேண்டியிருக்கும் அல்லவா? நீங்கள் செய்துகொண்டிருக்கிற அல்லது செய்யப்போகிற விஷயத்தை நீங்களே குறைவாக மதிப்பிட்டீர்கள் என்றால், உலகம் உங்களையே மிகக் குறைவாக மதிப்பீடு செய்யும் என்பதை மட்டும் நினைவில் வைத்துகொண்டு செயல்படுங்கள்.  

சார், எனக்கு நண்பர்களும் இல்லை, முதலீடு செய்கிற அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்கிறீர்களா? நண்பர்கள் இல்லையா அல்லது முதலீடு செய்து உதவுகிற அளவுக்கு நண்பர்கள் இல்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.

உங்கள் பதில், நண்பர்களே இல்லை என்றால், இது கொஞ்சம் சீரியஸான மேட்டர். உடனடியாக நீங்கள் இந்தப் பிரச்னையைக் கவனிக்க வேண்டும். முதலீட்டுக்கு உதவி செய்யும் அளவுக்கு  வசதியான நண்பர்கள் இல்லையென்றால், அந்தப் பிரச்னை கொஞ்சம் சிறியதுதான்.

முதலில் ஆளைத் தேடு. அப்புறம் ஆஸ்தியைத் தேடு என்பார்கள். நண்பர்களே இல்லையென்றால், முதலில் நல்ல நட்பைத் தேடுங்கள். வளர்ச்சி என்பது சிறிது காலத்தில் உறுதியாக வர ஆரம்பிக்கும்.

(கற்றுத் தேர்வோம்)

சிறுதொழிலுக்குத் தமிழக அரசு உதவி!  

குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக தமிழக அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களில் 228 கோடி ரூபாய் தந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் 2.25 லட்சம் பேர் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆரம்பித்துள்ளனர். ஜனவரி 31, 2013-ன்படி தமிழகம் முழுக்க 8,43,000 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் 30,438 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதன்மூலம் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism