Published:Updated:

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் : முயற்சி இன்னும் தேவை!

தொகுப்பு: செ.கார்த்திகேயன், படங்கள்: க.பாலாஜி.

##~##

மகளின் கல்லூரி மற்றும் திருமணத்துக்கான முதலீட்டை உடனடியாக இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நமக்கு என்ன தேவை என்பது பலருக்குத் தெரிவதே இல்லை. ஒருவருக்குத் தேவை ஏற்படும்போதுதான் அதுபற்றிய சிந்தனையே வருகிறது. நிறையச் சம்பாதிக்கும்போது பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்கிறோம். ஆனால், தேவை என்று வரும்போதுதான் நம் கையில் பணம் இல்லாமல் தவிக்கிறோம். நாம் எல்லோரும் செய்யக்கூடிய தவறுதான் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் செய்ய இந்த வாரம் நம்மைத் தேடி வந்தவர் முருகேசன். 35 வயதான இவர், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். மாதச் சம்பளம் பிடித்தம் போக 80,000 ரூபாய். மனைவி, விஜயகுமாரி இல்லத்தரசி. இவர்களுடைய மகள் மிருதுளாவுக்கு 6 வயது. மகன் ஹிரிதிக்குக்கு 2 வயது. வேலை நிமித்தமாகச் சொந்த ஊரான திருச்சியைவிட்டுச் சென்னையில் குடியேறியவர்களில் முருகேசனும் ஒருவர். இவர் தற்போது வசிக்கும் வீட்டுக்கு வீட்டுக் கடன் மாதம் 28,250 ரூபாய்க் கட்டுகிறார். இதை இன்னும் 15 வருடம் கட்டவேண்டும். இதுதவிர, சொந்த ஊரில் இரண்டு காலி மனைகள் உள்ளன. இன்றைய விலையில் ஒன்று 18 லட்சம் ரூபாயும், இன்னொன்று 20 லட்சம் ரூபாயும் போகும்.

நான் முன்பே சொன்னதுபோலக் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இருந்து வருபவர்கள், பணத்தை அதன் மதிப்பினை உணர்ந்து செயல்படுவதால் தவறான முதலீட்டில் அவ்வளவாக விழுவதில்லை என்பதற்கு முருகேசனும் ஓர் உதாரணம். அவரே அவருக்கான நிதித் திட்டமிடலை ஓரளவுக்குப் பூர்த்திச் செய்துகொண்டார் என்றே சொல்லவேண்டும்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் : முயற்சி இன்னும் தேவை!

இவருடைய மாதச் செலவு தற்போது 30,000 ரூபாய். இதனுடன் வீட்டுக்கான கடனையும் (ரூ.28,250) சேர்த்தால், மொத்தம் ரூ.58,250 ஆகிவிடும். இன்னும் ஒரு வருடத்தில் கார் வாங்கவேண்டும் (5 லட்சம் ரூபாய் மதிப்பில்). இது 20% முன்பணம் தந்து, மீதமுள்ளவற்றுக்கு லோன் எடுப்பது நல்லது. ஒரு லட்சம் முன்பணத்துக்குத் தற்போதுள்ள நேரடிப் பங்கு முதலீட்டை வைத்துக்கொள்ளலாம். இதுவே சரியான வழி.

கல்வி மற்றும் திருமணத்துக்கு!

மிருதுளாவின் மேல்படிப்புக்கு இன்றைய நிலையில் 10 லட்சம் ரூபாய் என எடுத்துக்கொண்டால், இன்னும் 12 வருடத்தில், 8 சதவிகித பணவீக்கத்தில் ஏறக்குறைய 25 லட்சம் தேவை. இதற்கு மியூச்சுவல் ஃபண்டில் 6,000 ரூபாயை 15% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும். மிருதுளாவின் தற்போதைய திருமணச் செலவு ரூ.15 லட்சம். அது இன்னும் 17 வருடத்தில் ரூ.55 லட்சமாக உயரும். அதற்கான சேமிப்பாக 6,000 ரூபாயை 15% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்தால் அந்தத் தொகை கிடைத்துவிடும்.

இன்றுவரை இந்த முதலீடுகளை முருகேசன் செய்யாமல் விட்டிருக்கிறார். காலத்தைக் கடத்தினால் மிருதுளாவின் கல்லூரி மற்றும் திருமண நேரத்தில் தேவைகளுக்காகத் திண்டாட வேண்டியிருக்கும் என்பதை மனதில் நிறுத்தி இப்போதே இந்த முதலீடுகளை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிப்பதோடு நிறுத்திவிடாமல் வருடம் ஒருமுறை நிதி ஆலோசகர்களின் உதவியுடன் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

அதேபோலத்தான் ஹிரிதிக்குக்கு  இன்னும் 16 வருடப் படிப்புக்கு 32 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதற்கு மாதம் 4,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் 15% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். இதையும் இன்றே ஆரம்பித்தால்தான், நிதானமாகவும் நிம்மதியாகவும் இலக்கை அடைய முடியும்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் : முயற்சி இன்னும் தேவை!

 முருகேசனின் ஓய்வுக்காலம்!

முருகேசன் தனது 55 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். இதில் கல்விக்கான செலவை எடுத்துவிட்டால், ரூ.25,000தான் அவரின் மாதாந்திர குடும்பச் செலவாக இருக்கும். இந்த ரூ.25,000 இன்னும் 20 வருடத்தில் 8% பணவீக்கத்தில் ரூ.1.16 லட்சமாக உயர்ந்துவிடும். ஒருவருடைய ஆயுட்காலம் 80 என எடுத்துக் கொண்டால், அவர் தனது 55 வயதில் ரூ.3.50 கோடி இருந்தால்,  அதிலிருந்து வரும் வருமானம் மாதச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும். அதற்கு மாதம் 20,000 ரூபாயை 15% வருமானம் தர வாய்ப்புள்ள டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் சேமிக்க வேண்டும்.

இவ்வளவு பெரிய தொகையை ஓய்வுக்காலத்துக்காக இன்றைய நிலையில் இவரால் சேமிக்க முடியாது. காரணம், வீட்டுக் கடன் 15 ஆண்டுகளுக்குக் கட்டவேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காரை கடன் மூலமாக வாங்க நினைப்பதால் அதற்கான இஎம்ஐ சுமார் 8,000 ரூபாய் வரை கட்டவேண்டி இருக்கும். இந்த செலவு இன்றைய நிலையில் தேவைதானா என்று யோசிப்பது அவசியம். கடன் இருக்கிறது என்ற காரணத்தால் ஒருவர் ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பிக்காமல் இருக்கமுடியாது. அதனால் முருகேசன் எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வழி செய்துகொண்டு அதன்மூலம் வருமானத்தை ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யலாம். பின்னர் வருமானம் உயரும்போது முதலீட்டை உயர்த்திக்கொள்ளலாம்.

 தற்போதுள்ள நிதி நிலைமை!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் : முயற்சி இன்னும் தேவை!

1. நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசியில் 40,000 முதலீடு செய்து வருகிறார். இதில் 9 லட்சத்துக்கு கவரேஜ் உள்ளது. ஒரு பாலிசி 2002-ல் தொடங்கியது, 20 வருடம் வரை கட்டவேண்டும். அடுத்த இரண்டு பாலிசி 2006-ல் எடுத்தது; கடைசியாக 2011-ல் மகளின் பெயரில் எடுத்த பாலிசியை உடனடியாக நிறுத்த வேண்டும். மற்ற மூன்றும் பெய்டு-அப் பாலிசி ஆகிவிட்டதால் இனி ப்ரீமியம் செலுத்தவேண்டிய அவசியமில்லை. இதற்கு பதில் ரூ.1.5 கோடிக்கு டேர்ம் இன்ஷூன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சுமார் வருடத்திற்கு 28,000 ரூபாய் அவருக்குத் தேவைப்படும்.

2. மூன்று லட்சம் ரூபாய் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை அலுவலகத்தில் தருகிறார்கள். இதற்குமேலும் தனியாக ஒன்று எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், யாரும் ஒரே இடத்தில் கடைசி வரை வேலை செய்வதில்லை. வேலை மாறுதலாகிப் போகும்போது அலுவலகத்தில் தந்திருக்கும் பாலிசிகள் கூட வராது.

3. பெண்ணின் திருமணத்துக்கென்று மாதம் இரண்டு கிராம் தங்கம் வாங்குகிறார். தங்கத்தின் விலை வருங்காலங்களில் பெரிதாக வருமானம் தர வாய்ப்பில்லாததால் அதை நிறுத்தி டைவர்சிஃபைட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நிறையபேர் செய்யும் தவறு, அதைத் தங்கமாகவே சேர்க்கவேண்டும் என்று எண்ணுவதே.

4. பங்குச் சந்தையில் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். அதை கார் வாங்குவதற்கு முன்பணமாக வைத்துக்கொள்ளலாம்.

5. இரண்டு காலி மனை, தற்போது அவருடைய ஓய்வுக் கால முதலீடாக எடுத்துக்கொள்ளலாம்.

 ஹெல்த் செக்-அப் ரிப்போர்ட்!

1. எதிர்காலம் குறித்து அச்சப்படாமல் இலக்குகள் அடையக்கூடியதான நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறார்.

2. லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் சரியாக எடுக்கவேண்டும்.

3. வருமான வரிச் சலுகை பிரிவில் 80சி-ல் சேமிப்பதற்குக் கடந்த 5 வருடமாக என்எஸ்சி பாண்டு போடுகிறார். அதைத் தவிர்த்து மியூச்சுவல் ஃபண்டில் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் போட்டால், நான்காவது வருடத்துக்கு முதலாண்டில் போட்ட பணத்தை உபயோகிக்கலாம். அது நல்ல வருமானம்  மற்றும் குறைந்தகால அவகாசம் உள்ள க்ளோஸ்ட் - எண்டட் திட்டமாகும்.

4. ஓய்வுக்காலத்துக்குச் சேமிக்கப் பணம் தற்போது இல்லை என்பதால் அதற்காகக் காலம் கடத்தக் கூடாது. முக்கியத் தேவை என்பதால் அதற்கான பணத்தை ஈட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், காலி மனைகளை அதற்காக ஒதுக்கிக்கொள்ளலாம்.

5. செலவுகள் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

6. தங்கத்தில் முதலீட்டைத் தவிர்க்கவும்; மேலும், நல்ல மியூச்சுவல் ஃபண்டில் பணத்தைச் சேர்க்கவும்.

 ஹெல்த் செக்-அப் ரேட்டிங்!

கட்டுப்பாடான செலவுகள், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி, பரவலான முதலீடு, அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டுக் குணங்கள், அதன் செயல்பாடு, ரெகுலராக முதலீடு செய்யும் பண்பு முதலியவற்றை வைத்து, இவருக்கு 65% மார்க் தரலாம்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் : முயற்சி இன்னும் தேவை!