Published:Updated:

உனக்கும் மேலே நீ!

உனக்கும் மேலே நீ!

பிரீமியம் ஸ்டோரி

 இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

##~##

நான்தான் ஜெயித்தேன், என்னால்தான் என் நிறுவனத்துக்கு நல்ல பெயர் என்று நினைக்காமல் அந்த வெற்றியில் மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணருங்கள்.

ரோல்மாடலாக இருங்கள்!

வேலைக்குச் செல்வது என்பது புருஷ லட்சணமாகிவிட்ட காலம் இது. ஒன்று, ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்கவேண்டும் அல்லது பிசினஸாவது செய்யவேண்டும். இந்த இரண்டும் செய்யாத இளைஞர்கள் பிறரிடத்திலிருந்து மரியாதையைக் கெஞ்சிக்கேட்டுதான் வாங்கவேண்டும். வெற்றிகரமாக பிசினஸ் செய்வது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்கிறேன். இப்போது வேலையில் ஒருவர் வெற்றிக் கொடி நாட்ட என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

1. முதலில், நாம் பணியாற்றும் நிறுவனத்தைப் பற்றிப் பெருமை கொள்வோம். நாம் படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம், நாம் படிப்பதற்குப் பணம் கட்ட வேண்டும். ஆனால், அலுவலகத்தில் நமக்குப் பணம் தந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுத் தருவார்கள். நமக்கு ஒருவர் பணம் தரும்போது பல கேள்விகள் கேட்பது சகஜம்தானே. 'பாஸ் எப்பப்பாரு கேள்வி கேட்கிறார்? எப்பப்பாரு குற்றம் கண்டுபிடிக்கிறார்?’ என்று சொல்வது நம் தப்புதானே! ஆடத் தெரியாதவனுக்குத்தான் மேடை கோணல். ஆடத் தெரிந்தவனுக்கு எல்லா இடமும் மேடைதான். வேலை என்பது உங்களுக்குச் சமூகத்தில் கிடைத்த அங்கீகாரம். அதனால் அந்த வேலையையும், வேலை தந்தவர்களைப் பற்றியும் பெருமைகொள்வோம்.

உனக்கும் மேலே நீ!

2. பழைய ஐடியாக்களையே வைத்துக் காலம்தள்ளாமல், புதிது புதிதாக யோசியுங்கள். எல்லா வேலையும் சலித்துப்போன மனதுடன் செய்யாமல், புதிதாக அதை அணுகுங்கள். புதிய புதிய வேலைகளைத் தேடிச் சென்று செய்யுங்கள். இதன்மூலம் உங்களுக்குக் கிடைப்பது மிகப் பெரிய அனுபவம். அந்த அனுபவம் உங்களை என்றென்றும் வேலையில் வைத்திருக்கும்.

3. ஒரு நேர்முகத் தேர்வில் உட்கார்ந்திருந்தேன். அப்போது ஓர் இளைஞனிடம், ''உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்?'' என்று கேட்டேன். ''சார், தமிழ், ஆங்கிலம், இந்தின்னு மூணு மொழியும் தெரியும்'' என்றான். எனக்குப் பெரிதாக இந்தி தெரியாது என்றாலும், எனக்குத் தெரிந்தவரை ஒன்றிரண்டு கேள்வி கேட்டேன். தத்தக்கப்பித்தக்க என்று உளறினான். வேர்த்துக் கொட்டிவிட்டது அவனுக்கு. பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான். வேலை என்று வரும்போது பொய்யான வாக்குறுதிகளை நாம் அள்ளிவிடுகிறோம். பிறகு, வசமாக மாட்டி அவதிப்படுகிறோம். உண்மையைச் சொல்லி நம்பிக்கையைப் பெறுவதுதான் உயர்பதவிகளை   அடைய சிறந்த வழி!

4. ஒரு விஷயத்தை முடியாதுன்னு சொல்றதுக்கும், நாம நிச்சயமா பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக, ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு அதைச் செயல்படுத்துவதற்குமுன் நன்கு யோசித்து முடிவெடுங்கள்.

5. சகஊழியர்களை நேசியுங்கள். அவர்கள் செய்த நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் தவறு செய்தால் தனியாக அழைத்துச் சொல்லுங்கள். பொது இடத்தில் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். அப்படிச் செய்வதால், அவர்கள் மனதில் உங்களுக்கென்று தனி இடம் கிடைக்கும். உங்களுடைய வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பும் அவசியம்.

உனக்கும் மேலே நீ!

6. உங்கள் வெற்றிகளை மற்றவர் களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். தோல்வி ஏற்பட்டால் நீங்களும் அதற்குப் பொறுப்பென்றால், தைரியமாக அதை ஒப்புக்கொள்ளுங்கள். வெற்றி என்பது கூட்டாக வேலை செய்ததன் பரிசு என்பதை உணருங்கள். நான்தான் ஜெயித்தேன், என்னால்தான் என் நிறுவனத்துக்கு நல்ல பெயர் என்று நினைக்காமல் அந்த வெற்றியில் மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணருங்கள். அதுதான் ஒரு நல்ல தலைவராக உருவாவதற்கான அடிப்படை.

உனக்கும் மேலே நீ!

7. அலுவலகச் சுமையை வீட்டுக்கும் வீட்டு நினைப்பை அலுவலகத்துக்கும் கொண்டு செல்லாதீர்கள். அது தேவையற்ற மனஅழுத்தத்தை உண்டாக்கும். அலுவலகம் இல்லாத நேரங்களில், வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். வெளியே செல்லுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

8. உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக இருக்கும் என்கிற அளவுக்கு உங்கள் 'ஹ்யூமர் சென்ஸை’ வளர்த்துக்கொள்ளுங்கள்.

9. உங்கள் பொறுப்புகள் சம்பந்தமான மேல்படிப்புகளைப் படிக்க ஆரம்பியுங்கள். உங்கள் பதவி உயர்வுக்கு அது நிச்சயம் உதவும். அவை தொடர்பான செய்திகளை அன்றாடம் சேகரியுங்கள். எந்த நேரத்திலும் அந்தத் தகவல்களைப்பகிர்ந்துகொள்ள 'அப்டேட்டடாக’ இருங்கள்.

10. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அந்த நிறுவனத்தின் கூடவே வளருங்கள். மரத்துக்கு மரம் தாவாதீர்கள். பணம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக உங்கள் குறிக்கோளையும், நேர்மையையும் அடகு வைத்துவிட்டு பணிபுரியும் நிறுவனத்தை ஏமாற்றாதீர்கள். வாழ்க்கையில் ஒன்றைவிட ஒன்று 'பெட்டராக’த்தான் இருக்கும். இதுதான் சிறந்தது என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. ஆனால், இதுவே சிறந்தது, என் மனதுக்குப் பிடித்தது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

11. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி ஆனால், ஒரே அலுவலகத்தில் படிப்படியாக வளர்ந்து அந்த அலுவலகத்தில் உயர்ந்த பதவியை அடைவதே மனதுக்கு மகிழ்ச்சி. குளிர்ச்சியா? மகிழ்ச்சியா முடிவு செய்யுங்கள்.

இத்தனையும் செய்தீர்கள் எனில், உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஒரு ரோல்மாடல்தான்!

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு