Published:Updated:

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

##~##

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மத்திய அரசு வழங்கும் பாண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் அவசியம்!

நிறைகுடம் தழும்பாது. அதுபோலத்தான் பாண்டு மார்க்கெட்டும். உலக அளவிலும்,  இந்திய அளவிலும், பாண்டு மார்க்கெட் மிகப் பெரிய மார்க்கெட். வேறு எந்தச் சந்தையைக் காட்டிலும் பெரியது. நாம் அறிந்தோ, அறியாமலோ அந்தச் சந்தையில் தினசரி கலந்துகொண்டுதான் இருக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாண்டு என்றால்..?

கடன் வாங்கும் நிறுவனத்துக்கும் / அரசாங்கத்துக்கும் மற்றும் கடன் தரும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் உள்ள ஒருவிதமான ஒப்பந்தத்தைத்தான் பாண்டு என்று குறிப்பிடுகிறோம். இன்னொரு வகையில், பாண்டு என்பது கடன் வாங்குபவர் இவ்வளவு தொகையை, இந்தத் தேதியில், இவ்வளவு வட்டியுடன் சேர்த்து, கடன் கொடுத்தவருக்கு, கொடுப்பதற்குச் செய்து தந்த சத்தியம் / உறுதிமொழி ஆகும்.

பொதுவாக, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இருவகையான முதலீடுகள் தேவை. ஒன்று, பங்குப் பணம். அதாவது, கேப்பிட்டல் ரிஸ்க் முதலீடு. ரிஸ்க் முதலீட்டில் எவ்வளவு வருமானம் வரும் என்று உறுதியாகத் தெரியாது. அதேசமயம், தொழில் வெற்றிகரமாக நடந்தால், பங்கு முதல் போட்டவருக்கு நல்ல லாபம். மற்றொன்று, கடன். நன்றாக வளர்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு கேப்பிட்டல் போதும். மேற்கொண்டு வளர்ச்சிக்கு கடன் வாங்கிக்கொள்வோம் என்று பாண்டுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு நிரந்தர வட்டி வருமானத்தை வழங்குகின்றன.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

உலகளவில் பாராட்டக்கூடிய வகையில் நமது பங்குச் சந்தை இருந்த போதிலும், பாண்டு மார்க்கெட் என்பது அந்த அளவு இந்தியாவில் இன்னும் வளரவில்லை. இதனை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மற்றுமொரு பிரச்னை, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய நிதித் தேவைகளுக்கு வங்கிகளையே நாடுகின்றன. வங்கிகளும் பெரிய நிறுவனங்களுக்குக் கடன் தருவதில் முன்னுரிமை தருகின்றன. இதுவும் கார்ப்பரேட் பாண்டு மார்க்கெட் இந்தியாவில் பெரிதாக வளராமல் போனதற்கு ஒரு காரணம்.

பாண்டு மார்க்கெட் இன்னும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அரசுக்  கடன் பத்திரங்களைப் பெருவாரியாக வாங்குவதும் விற்பதும் நம் நாட்டின் வங்கிகளே. வங்கிகளும் வாங்கிய கடன் பத்திரங்களை எல்லாம், முதிர்வு வரை தங்கள் கையிருப்பிலேயே வைத்திருப்பதால் போதுமான அளவு வர்த்தகமும் நடப்பதில்லை.

பாண்டுகள் பலவிதம்!

பாண்டுகளின் முதிர்வுக் காலத்தை வைத்து குறுகிய, நடுத்தர, மற்றும் நீண்டகாலப் பாண்டுகள் என வகைப்படுத்தலாம். மேலும், எப்போதுமே முதிர்வு இல்லாத பாண்டுகளை 'பெர்பெஷ§வல் பாண்டு’கள் (Perpetual Bonds) என அழைக்கிறோம்.

பாண்டுகள் தரும் வட்டி, கூப்பன் (Coupon) என அழைக்கப்படுகிறது. அந்த கூப்பனை வைத்து பிரித்தோமேயானால், ஜீரோ, ஃபிக்ஸட், மற்றும் ஃப்ளோட்டிங் (Zero, Fixed, Floating)என வகைப்படுத்தலாம். ஃபிக்ஸட் கூப்பன் பாண்டுகள் ஒவ்வொரு கால இடைவெளியிலும் ஒரே சீரான வட்டி வருமானத்தைத் தரும். ஃப்ளோட்டிங் கூப்பன் உள்ள பாண்டுகளுக்கு, கடன் சந்தையைப் பொறுத்து ஒவ்வொரு கால இடைவெளியிலும் வட்டி அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். ஜீரோ கூப்பன் பாண்டுகளுக்கு முதிர்வு சர்ட்டிஃபிகேட்டாகவே தந்துவிடப்படும். இடைப்பட்ட காலத்தில் வட்டி ஏதும் தரமாட்டார்கள். முதிர்வின்போது வட்டி மற்றும் அசல் கிடைத்துவிடும்.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

அதேபோல, பாண்டை வெளியிட்ட வர்கள் எப்போதுவேண்டுமானாலும் திருப்பி வாங்கிக்கொள்ளும் வசதி இருந்தால், அதை கால் ஆப்ஷன் (Call Option) பாண்டுகள் எனக் குறிப்பிடு கிறோம். பாண்டை வாங்கியவர் தனக்கு வேண்டும் என்கிறபோது வெளியிட்ட நிறுவனத்துக்கு விற்றுவிடும் ஆப்ஷன் இருந்தால், அவற்றை புட் ஆப்ஷன் (Put Option) பாண்டுகள் எனக் குறிப்பிடுகிறோம்.

முதிர்வுக் காலத்தை வைத்தும் பாண்டுகளை ஒரே முதிர்வுடைய பாண்டுகள் (Single Redemption Bonds) எனவும், பல முதிர்வுடைய பாண்டுகள் (Multiple Redemption Bonds) எனவும் வகைப்படுத்தலாம். இரண்டாவது வகையில், முதிர்வுத் தொகையை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரித்துத் தருவார்கள்.

இன்றைய அளவில் இந்திய மக்களுக்கு பாண்டு முதலீடுகளில் உள்ள வெவ்வேறு வாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.

1. ரிசர்வ் வங்கி பாண்டுகள் (RBI Bonds)

2. பணவீக்க பாண்டுகள் (Inflation Indexed Bonds)

3. அரசாங்க பாண்டுகள் (Government of India Bonds)

4. டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் (Tax Free Bonds)

5. கேப்பிட்டல் கெயின்ஸ் பாண்டுகள் (Capital Gains Tax Exempt Bonds)

6. என்சிடி (Non Convertible Debentures)

ஆர்பிஐ பாண்டுகள்:

இது நமது மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் பாண்டுகள் ஆகும். குறைந்தபட்ச முதலீடு ரூ1,000-மும், உச்சபட்சமாக ஒருநபர் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வுக் காலம் 6 வருடங்கள் ஆகும். வருடத்துக்கு 8% வட்டி கிடைக்கும். அரை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது முதிர்வின்போது அசலுடன் சேர்த்து வட்டியைப் பெற்றுக் கொள்ளலாம்.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

கிடைக்கும் வட்டிக்கு வருமான வரிவிலக்குக் கிடையாது. ஆனால், செல்வ வரியிலிருந்து (Wealth Tax) விலக்குத் தரப்பட்டுள்ளது. தனிநபர் தனியாகவோ அல்லது ஜாயின்ட் ஆகவோ அல்லது மைனர் பெயரிலோ முதலீடு செய்யலாம்.

இந்த பாண்டுகளை வேறொருவர் பெயருக்கு மாற்ற முடியாது. வங்கிகள் மூலமாகவும் ஏஜென்ட்கள் மூலமாகவும் இந்த பாண்டுகளை வாங்கலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதிர்வுக் காலத்துக்கு  முன்பு பாண்டை க்ளோஸ் செய்வதற்கு சில நிபந்தனைகளுடன் அரசாங்கம் தற்போது  அனுமதித்துள்ளது. இப்போது சந்தையில் டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் இதைவிட அதிக வட்டியில் வருவதால், இந்த பாண்டுகளுக்கு மவுசு சற்று சுமாராகவே உள்ளது. இந்தவிதமான பாண்டுகளை உங்கள் நிதி ஆலோசகர் மூலமாக முதலீடு செய்துகொள்ளலாம்.

பணவீக்க பாண்டுகள்:

பணவீக்கத்தைவிட சற்று அதிக வருமானம் தரக்கூடிய மாதிரியான பாண்டுகளை நமது மத்திய அரசாங்கம் சந்தையில் சென்ற வருடம் கொண்டுவந்தது. இந்த பாண்டுகளை ஐஐஎன்எஸ்எஸ்-சி (Inflation Indexed National Saving Securities - Cumulative) என அழைக்கிறார்கள். இந்தப் பணவீக்க பாண்டில் நிரந்தர வட்டி ஆண்டுக்கு 1.50 சதவிகிதமாக (பணவீக்க விகிதத்துக்குமேல்) நிர்ணயம் செய்யப்பட்டது. (இந்த பாண்டுகள் பற்றி 'லாபம் தருமா?’ என்கிற தலைப்பில் 29.12.2013 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் விளக்கமாக  கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையைப் படிக்க விரும்புகிறவர்கள் பார்க்க: http:// nanayam.vikatan.com/index.php?aid=4763

இந்திய அரசாங்க பாண்டுகள்:

நமது மத்திய அரசாங்க பாண்டுகளை ஜிஓஐ (Government of India) செக்யூரிட்டீஸ் எனவும் கில்ட் எனவும் அழைக்கிறோம். நமது அரசாங்கம் தனக்கு நேரடி வருமானம் குறையும்போது அல்லது அதிகமாகப் பணம் தேவைப்படும் போதோ, பாண்டுகளை வெளியிட்டு பொதுமக்களிடமிருந்தும், நிறுவனங் களிடமிருந்தும் கடன் பெற்றுக் கொள்கிறது.

இந்த பாண்டுகள் வெவ்வேறு முதிர்வுக் காலங்களுக்கு (குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத்துக்கு) வெளியிடப்படுகின்றன.

இந்திய அரசாங்க பாண்டுகள் ஒவ்வொரு வெளியீட்டின்போது சில்லறை முதலீட்டாளர்களுக்கென 5% போட்டி இல்லாத வகையில் ஒதுக்கப் படுகிறது. ஆனால், நம் நாட்டில் மத்திய அரசாங்க பாண்டுகளை வாங்கும் சில்லறை முதலீட்டாளர்கள் மிக மிகக் குறைவு. காரணம், அதே வட்டியில் அல்லது அதைவிட சற்றுக் கூடுதலாக வங்கிகள், அஞ்சலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டி கொடுப்பதே! நம் நாட்டிலே ரிஸ்க்கே இல்லாத முதலீடு என்று ஒன்றை கூற வேண்டுமேயானால், அது நமது மத்திய அரசாங்கம் வழங்கும் ஃபாண்டுகள்தான்! ஆகவே, சுத்தமாக ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்கள் இவ்விதமான ஃபாண்டுகளில் முதலீடு செய்யலாம்.

வட்டி ஏற்றஇறக்கத்தின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள், இவ்விதமான பாண்டுகளை வாங்கி விற்பதன் மூலம் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ரிஸ்க்கும் உள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள். நேரடியாக இவ்விதமான பாண்டுகளை வாங்க சிரமப்படுவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் கில்ட் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம்.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்:

இப்போது சந்தையில் உச்ச வருமான வரம்பில் உள்ளவர்களிடையே மிகவும் பாப்புலரான பாண்டு முதலீடு இதுவாகும். தற்சமயத்தில் வெளிவந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் வெளியீடு பலவற்றிலும், கேட்ட தொகைக்கு மேல் பன்மடங்கு பணத்தை முதலீட்டாளர்கள் கொட்டினார்கள். பலருக்கு குறைவான அலாட்மென்டே (allotment) கிடைத்தது. இன்னும் சிலருக்கோ சுத்தமாகக்  கிடைக்கவில்லை. இதிலிருந்தே இந்த பாண்டின் பிரபலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இவ்விதமான பாண்டுகளில், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இணையான வட்டி கிடைக்கிறது. ஆனால், வரும் வட்டிக்கு வருமான வரி ஏதும் கட்டத் தேவையில்லை. நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இவ்விதமான பாண்டுகள் வெளியிடப்படுவதால், அரசாங்கம் வரிவிலக்கு அளித்துள்ளது. முதிர்வுக் காலம் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து, ஆண்டுக்கு 8.5 - 9% தற்போது வட்டி கிடைக்கிறது. பொதுவாக, முதிர்வுக் காலம் 10, 15, அல்லது 20 ஆண்டுகளாக உள்ளது. அதிகமான முதிர்வுக் காலம்தான் இந்த பாண்டுகளில் உள்ள அசௌகரியம் என்று கூறலாம்.

30% வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, 12-12.85% வரை வரிக்கு முந்தைய வருமானமாகக் கிடைக்கிறது. அரசாங்கம் சார்ந்த ‘AAA’ ரேட்டிங் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இந்த அளவு வட்டி கிடைப்பது மிகவும் சாதகமான ஒன்று. டீமேட் கணக்கு வடிவிலும், சர்ட்டிஃபிகேட் வடிவிலும் இவ்விதமான பாண்டுகளை மக்கள் வைத்துக்கொள்ளலாம். சிறு முதலீட்டாளர்களுக்குச் சற்று கூடுதல் வட்டி (8.5-9%) தரப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ஆர்ஓ கணக்குகள் மூலம் முதலீடு செய்வதற்கு சில நிறுவனங்களே அனுமதிக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் என்ஆர்ஐ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது இல்லை. பொதுவாக, ‘AA’ ரேட்டிங் மற்றும் அதற்கு மேல் ரேட்டிங் கொண்ட நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்யலாம். சில்லறை முதலீட்டாளர்களுக்கு உச்சபட்ச வரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

இவ்விதமான பாண்டுகளை உங்கள் நிதி ஆலோசகர் மூலமாகவும் மற்றும் நிதிச் சேவை செய்து தரக்கூடிய பிற நிறுவனங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். இனிவரும் காலங்களில் வட்டி விகிதம் குறையும்பட்சத்தில் இவ்வித பாண்டுகள் மூலம் முதலீட்டு லாபமும் (Capital Appreciation) வட்டியுடன் சேர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளது. என்டிபிசி, இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹட்கோ, நேஷனல் ஹவுஸிங் வங்கி, ஐஐஎஃப்சிஎல், பிஎஃப்சி, என்ஹெச்பிசி (NTPC, IRFC, HUDCO, NHB, IIFCL, PFC, NHPC) போன்ற நிறுவனங்களும் இன்னும் சில நிறுவனங்களும் இந்த வருடம் டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளை வெளியிட்டன. இன்னும் வெளியிடவும் உள்ளன. இந்த பாண்டுகள் பங்குச் சந்தையிலும் லிஸ்ட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கேப்பிட்டல் கெய்ன்ஸ் பாண்டுகள்:

நாம் வீடு, ப்ளாட் போன்ற சொத்துக்களை விற்கும்போது முதலீட்டு லாபம் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் லாபத்துக்கு (பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்ததுபோக) வருமான வரி கட்டவேண்டும். அவ்வாறு கட்ட வேண்டாம் என நினைப்பவர்கள் இவ்விதமான பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும். ஆண்டுக்கு ஒருநபர் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். லாக்-இன் (lock-in) காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அந்தப் பணத்தை எடுத்து முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பம்போல் உபயோகித்துக் கொள்ளலாம்.

வட்டி வருடத்துக்கு 6% ஆகும். ஒவ்வொரு அரை ஆண்டிலும் வட்டி கிடைத்துவிடும். நமது அரசாங்கம் ஆர்இசி (Rural Electrification Corporation)மற்றும் என்ஹெச்ஏஐ (NHAI – National Highways Authority of India)நிறுவனங்களை இவ்விதமான பாண்டுகளை வெளியிட அனுமதித் துள்ளது. இந்த பாண்டுகளை 54ணிசி பாண்டுகள் எனவும் அழைக்கின்றனர். இவ்விதமான பாண்டுகளை உங்கள் நிதி ஆலோசகர் மூலமாக முதலீடு செய்துகொள்ளலாம்.

 என்சிடி (Non Convertible Debentures):

பல கார்ப்பரேட் நிறுவனங்கள் என்சிடி-கள் மூலமாக இந்தியாவில் கடனை திரட்டுகின்றன. பெரும்பாலும் இவ்விதமான என்.டி-கள் செக்யூர்டு என்சிடி-களாக (Secured NCDs) வெளியிடப்படுகின்றன. அதாவது, நிறுவனங்கள் தங்களது சொத்தை அடமானமாக வைத்து நிதி திரட்டுகின்றன. சந்தையில் வங்கிகள் தரும் வட்டி விகிதத்தைவிட 2 - 3% வட்டியை இவ்விதமான உபகரணங்கள் மக்களுக்கு வழங்குகின்றன. இவ்விதமான வெளியீடுகளில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு நன்றாக உள்ளது.

பக்கா லாபம் தரும் பாண்டுகள்!

இந்த என்சிடி-கள் பங்குச் சந்தையிலும் லிஸ்ட் செய்யப்படுகின்றன. அதனால், அவசரத் தேவைக்கு மக்கள் விற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிகளிலோ அல்லது முதிர்வின்போதோ வட்டியைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. டீமேட் கணக்கில்லாதவர்கள் சர்ட்டிஃபிகேட் வடிவிலும் இவ்விதமான என்சிடி-களை வைத்துக்கொள்ளலாம். டீமேட் கணக்கில் பாண்டுகளை வைத்துக்கொள்ளும்போது மூலத்தில் வரிப் பிடித்தம் கிடையாது.

இவ்விதமான உபகரணங்களில் முதலீடு செய்யும்போது ‘AA’ அல்லது அதற்குமேலும் ரேட்டிங் கொண்ட நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்வது நல்லது. இவ்விதமான பாண்டுகள் பொதுவாக வங்கிசாரா நிதி நிறுவனங்களால் தங்களுடைய அன்றாட நிதி தேவைகளுக்காக வெளியிடப்படுகின்றன. நிறுவனத்தைப் பொறுத்து, ரேட்டிங்கைப் பொறுத்து, தேவைகளைப் பொறுத்து மக்கள் இவ்விதமான உபகரணத்தில் முதலீடு செய்துகொள்ளலாம். இவ்விதமான என்சிடி-களை உங்கள் நிதி ஆலோசகர் மூலமாக முதலீடு செய்துகொள்ளலாம்.    

பாண்டுகள் என்பது அனைவரின் போர்ட்ஃபோலியோ விலும் இருப்பது கட்டாயம். இளம் வயதினர் அல்லது ரிஸ்க் அதிகம் எடுக்க முடிந்தவர்கள் சற்று குறைந்த சதவிகிதத்திலும், முதியவர்கள் அல்லது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அதிக சதவிகிதத்திலும் பாண்டுகளை தங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்துக்கொள்ளலாம். பாண்டுகள் ஒருவரின் போர்ட்ஃபோலியோவுக்கு நல்ல திடத்தன்மையைக் கொடுக்கும். நிம்மதியான வாழ்வுக்கு பாண்டு முதலீடு மிக மிக அவசியம்!