Published:Updated:

ஹாலிவுட் படம் சொல்லும் உண்மை: சந்தையை வீழ்த்தும் பேராசை!

அண்டன் பிரகாஷ்

 வால் ஸ்ட்ரீட்டில் பென்னி ஸ்டாக்ஸ் விற்கும்
ஒரு புரோக்கரின் கதைதான் இந்தப் படம்.

##~##

நியூயார்க் நகர மன்ஹாட்டனில் இருக்கும் வால் ஸ்ட்ரீட் எல்லா நகரங்களிலும் இருக்கும் வீதிகள் போலத்தான் மேலோட்டமான பார்வைக்கு இருக்கும். பங்குச் சந்தை இயங்கும் பகல் வேளைகளில் படுபிஸியாக இருக்கும் இந்தத் தெரு, மாலை நேரங்களிலும், வார இறுதிகளிலும் மற்றத் தெருக்களைவிட சற்றே பரபரப்பாக இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பங்குச் சந்தையில் நுழையும் நிறுவனங் களது பங்குகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் இடையே நடுத்தரகு செய்யும் நிறுவனங்களாகவே வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றின் வருமானம் மேற்படி நடுத்தரகுக்கான கமிஷன்தான். சந்தையின் போக்கைக் கணித்து, தங்களது வாடிக்கையாளர்களுக்காகப் பங்குகளை வாங்கி, விற்றுப் பணத்தை ஈட்டுவது அழுத்தமான பணி என்பதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களில் அவ்வப்போது நடைபெறும் சில ஃப்ராடு நிகழ்வுகள் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கும். இதற்கு முக்கியக் காரணம், சுரண்டப்படும் பணத்தின் அளவு, அந்தப் பணம் கொடுக்கும் கிளாமர் வாழ்க்கை, அந்த வாழ்க்கையின் சரிவு இவை அனைத்துக்கும் பின்னிருக்கும் பாடம். இப்படியரு நிகழ்வின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘The Wolf of wall street’. .

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செசியின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம், 90-களில் பங்குச் சந்தை தரகராகப் பணிபுரிந்த ஜோர்டன் பெல்வோர்ட் என்பவரது சுயசரிதையையட்டி எடுக்கப்பட்டது. ஜோர்டனாக நடித்திருப்பது டைட்டானிக் புகழ் லியனார்டோ டி காப்ரியோ.

ஹாலிவுட் படம் சொல்லும் உண்மை: சந்தையை வீழ்த்தும் பேராசை!

மலிவான கோட்சூட், பேருந்து பயணம், வால் ஸ்ட்ரீட்டில் வேலைவாய்ப்பு தேடிவரும் பல்லாயிரக்கணக்கான மத்திய வர்க்கத்தின் பிரதிநிதியாக லியனார்டோவைக் காட்டியபடி ஆரம்பிக்கிறது இந்தப் படம். அந்த நாளிலேயே, அவரது மேலாளர் படுகாஸ்ட்லியான உணவகத்துக்கு  ஜோர்டனை அழைத்துச் சென்று வால் ஸ்ட்ரீட் பற்றிய பாலபாடங்களை மது மற்றும் போதைப் பொருளை உறிஞ்சியபடியே தொடங்குகிறார்.

சந்தையின் மோசமான சரிவால், வேலை இழக்கும் ஜோர்டனுக்கு பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks) எனப்படும் மிக மலிவு விலை பங்குகளை விற்கும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சாதுர்யமாகப் பேசும் திறமை கொண்ட ஜோர்டனுக்கு, கிடைத்துவந்த கமிஷன் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவு. புதிய வேலையில் 50 சதவிகிதம் கமிஷன் தருவோம் என்று சொல்ல, ஜோர்டனின் பேராசைத்தீக்கான முதல் கங்கு விதைக்கப்படுகிறது. சில மாதங்களுக்குள் தானாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, நண்பர்கள் பலரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு இந்த வர்த்தகத்தில் பெரிய அளவில் ஈடுபட ஆரம்பிக்கிறார் ஜோர்டன்.

ஹாலிவுட் படம் சொல்லும் உண்மை: சந்தையை வீழ்த்தும் பேராசை!

பணம் குவியத் தொடங்குகிறது. அதோடு சேர்ந்து, போதை மருந்து பழக்கமும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் நீராவிக் குளியல் எடுத்து, உடலில் இருக்கும் போதைப் பொருட்களை வியர்வையாக வெளிக்கொண்டு வந்துவிட்டு, அலுவலகம் சென்றதுமே மீண்டும் போதைப் பொருளை உட்கொள்வதாக ஓடுகிறது.

ஜோர்டனின் தந்தை எவ்வளவோ எச்சரித்தபின்பும், மனசாட்சி ஜன்னலை, பேராசைப் புகையால் அடைத்திருக்கும் ஜோர்டன் அதை சட்டை செய்வதாக இல்லை. தன்னைப் பற்றி எஃப்பிஐ விசாரிக்கத் தொடங்கிவிட்டது என்று  தெரிந்ததும், சட்டத்துக்கு விரோதமாக ஈட்டிய பணத்தை எப்படி ஆங்காங்கே புதைத்துவைப்பதில் கவனம் செலுத்துகிறார். சுவிட்சர்லாந்து வங்கிகளில் அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரியாமல் பணத்தை மறைத்து வைக்க முயல்கிறார். பணம் சேர்க்கப்பட்டுவரும் பினாமி ஒருவர் இறந்துவிட, சுவிஸ் வங்கியின் அதிகாரி உடனடியாக வரும்படி அழைக்கிறார்.

தனது நிறுவனத்தைத் தான் நேரடியாக நடத்துவதில்லை என்ற தோற்றத்தை எஃப்பிஐ-க்கு தருவதற்காக இத்தாலியில் தனது சொகுசு படகில் இருக்கும் ஜோர்டன், படகின் கேப்டன் சொல்வதைக் கேட்காமல், படகை சுவிட்சர்லாந்துக்குவிடச் சொல்ல, சூறாவளியில் சிக்கியபடி படகு சின்னாபின்னமாகிறது. இத்தாலிய கடற்படையால் மீட்கப்படும் ஜோர்டன் நியூயார்க் திரும்பி, நிறுவனத்தை  மீண்டும் நடத்தத் தொடங்குகிறார்.

ஜோர்டனது லீலைகள் பற்றிக் கேள்விப்படும் எஃப்பிஐ சிறப்பு விசாரணையாளர் ஒருவரை நியமிக்கிறது. வருடக்கணக்கில் ஜோர்டன் செய்யும் சட்டமீறல்களை ஆவணம் செய்து அவரைக் கைது செய்ய நெருங்குகிறார். ஜோர்டனை விசாரிக்கவரும் முதல் சந்திப்பிலேயே அவருக்குப் பணம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, மறைமுகமாக லஞ்சம் தரும் உத்தேசத்தைத் தெரிவிக்க, அதுவே அவருக்கு எதிராக கயிற்றை இறுக்கும் முடிச்சுகளில் ஒன்றாக மாறுகிறது.

ஜோர்டனின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருக்கும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதன் மூலம், அவர் மேலிருக்கும் குற்றங்களுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் சேர்த்துவிடுகிறது எஃப்பிஐ. கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் செல்லும் ஜோர்டன் எஃப்.பி.ஐ-யுடன் ஒத்துழைப்பதன் மூலம் தனது தண்டனைக் காலத்தை வெகுவாகக் குறைத்து, இரண்டு வருடங்கள் மட்டுமே சிறையில் இருக்கிறார். சிறைவாழ்வை முடித்து வெளியேவரும் ஜோர்டன், வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய 'ஊக்கமூட்டும் உரைகளை’ (Motivational Speeches) கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். திரைப்படத்தின் கடைசி நிமிடத்தில் உண்மையான ஜோர்டன், தனது பாத்திரத்தை ஏற்று நடித்த லியனார்டோவுக்கு மேற்படி நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாகப் படம் முடிகிறது.

ஜோர்டனை பற்றி விசாரணை நடத்திய எஃப்பிஐ அதிகாரி கோகன், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'பல தகிடுதத்தங்களைச் செய்தவருக்கு இப்படி ஒரு விளம்பரமா? கேவலம்’ என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.

பங்குச் சந்தைகளானது பக்கா கட்டுப்பாடுகளுடன் நடந்தாலும் இந்தப் படத்தின் ஹீரோ  ஜோர்டன் (நம்மூர் ஹர்ஷத் மேத்தா!) போன்றவர்கள் அதிரடியாக நுழைந்து சில தில்லுமுல்லுகளைச் செய்வதன் மூலம் அடிப்படையையே எப்படி ஆட்டிவிடுகிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்தப் படம்.

அதிரடி த்ரில்லராக அதகளம் செய்துகொண்டிருக்கும் இந்தத் திரைப்படம் சில ஆஸ்கார் விருதுகளை வாங்கும் என்றே நினைக்கிறேன்.