Published:Updated:

பணவளக் கலை!

பணவளக் கலை!

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

##~##

பயம் வந்துவிட்டால் ரிஸ்க் எடுக்கும் திறன் குறைந்துவிடுகிறது! ஆனால், ரிஸ்க் எடுக்காவிட்டால், ரிவார்டு கிடைக்காது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையிலிருந்து எப்படியாவது விடுபட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதேபோல, நஷ்டம் வேண்டாம் என்ற எண்ணமும் நம் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த இரண்டு எண்ணங்களுமே எதிர்மறை நிலைப்பாடுகள்.

நம்மில் பலர், பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் இருந்து எப்படியாவது விடுபட்டுவிட வேண்டும் என்று நினைப்பதில்லை. எப்படியாவது சம்பாதித்துவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், நாம் அனைவருமே சம்பாதிக்கும் முயற்சியில் நஷ்டம் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம் இல்லையா?

இந்த எதிர்மறையான நிலைதான் பலரது முன்னேற்றத்துக்குத் தடைபோடுவதாக அமைகிறது என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். நஷ்டத்தினை வேண்டாம் என்று நினைக்க நினைக்க உலகத்தின் அடிப்படை தத்துவத்தின் செயல்பாட்டினால் நாம் நன்றாகக் கவர்ந்திழுக்கவே செய்கிறோம் என்கின்றனர்.

இது சரியான வாதமா என்று கேட்பீர்கள். பணம் சம்பாதிக்கும் திறனை வளர்க்க நினைக்கும்போது முதலில் நமக்குத் தேவைப்படுவது ரிஸ்க் எடுக்கும் திறன் என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். பயத்துக்கும் பணத்துக்கும் ரொம்பத் தூரம் என்று சமீபத்தில் பார்த்தோம். நஷ்டம் வேண்டாம் என்று நினைப்பது ஒருவித பயங்கொண்ட நிலைதான். பயம் வந்தால் ரிஸ்க் எடுக்கும் திறன் குறையவே செய்கிறது. ரிஸ்க் எடுக்காவிட்டால், ரிவார்டு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே! பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் நம் அடிமனதில் எப்போதும் இருக்கும். அதனால் அந்த முயற்சிகளில் இறங்க நல்ல தருணம் பார்த்து நாம் காத்துக்கொண்டிருப்போம். இதில் நஷ்டம் வேண்டாம் என்று நினைக்கும் நிலையில் பணம் பண்ணும் பல ஐடியாக்களை நாம் தீவிர பரிசீலனை செய்துகொண்டே வருவோம். இந்தப் பரிசீலனையில் நாம் பல ஐடியாக்களைப் புறந்தள்ளுவோம். இப்படிப் புறந்தள்ளி புறந்தள்ளி ஒரு நிலையில் மிகவும் சோர்ந்துபோவோம். நாட்களும், மாதங்களும் ஏன் சிலசமயம் வருடங்களுமே ஓடிவிடும்.

பணவளக் கலை!

எத்தனை நாள் ஓடிவிட்டது என்று நினைத்துக் கொஞ்சம் சுற்றுமுற்றும் பார்ப்போம். நாம் ஆராய்ந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டங்களுக்குள்ளேயே நம்மைச் சுற்றி இருந்தவர்கள் பலரும் ஓரளவு முடிவெடுத்து சற்றே பணம் சேர்த்திருப்பார்கள்.

அட! எல்லாரும் ஓரளவு பணம் சேர்த்துவிட்டார்களே? நாமதான் ரொம்பவும் காலம் தாழ்த்துகிறோமோ? முடிவெடுக்கத் தவறிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றும். கூடவே, கொஞ்சம் பொறாமையும் சேர்ந்துகொள்ளும் இல்லையா? அப்போது நாம் துணிந்து எடுக்கத் தவறிய முடிவையேகூட நம்மைச் சுற்றியிருக்கும் ஒருவர் எடுத்து ஓரளவு சம்பாதித்திருப்பது நம் கண்ணில் படும். அடுத்து நமக்கு வரும் விஷயத்தைச் செய்து பார்த்துவிட வேண்டியதுதான் என்ற வைராக்கியத்துக்கு வருவோம். அந்தச் சூழ்நிலையில் ஓர் உதவாக்கரை ஐடியா நம்முன்னே வரும். அந்த ஐடியாவினை செயலாக்கத் துணிவோம். ஐடியா உதவாக்கரையாதலால் நஷ்டம் வரத்தானே செய்யும்.

இதற்கு உங்கள் பதில் என்ன? அட, ஆமால்ல என்பீர்கள்.

இப்போது, கொஞ்சம் முந்தைய பாராக்களைப் படியுங்கள். நஷ்டம் தவிர்க்கவேண்டும் என்ற எதிர்மறை எண்ணம் நஷ்டத்தை நம்மை நோக்கி ஓடிவரவே செய்கிறது என்பது எப்படி உண்மையாகிப் போனது பார்த்தீர்களா?

பணவளக் கலை!

பணம் சம்பாதிக்க நட்பு வட்டம் மிகவும் முக்கியம் என்று ஏற்கெனவே நாம் பார்த்துள்ளோம். அடுத்தபடியாக, இதில் இன்னமும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, பொறாமை தவிர்த்தல் பணம் சம்பாதிப்பதற்குத் தேவையான முக்கியக் குணம் என்பதையும்தான். நம்முடன் இருந்தவர் உயர்ந்தால் அது நம்முடைய வளர்ச்சிக்கு உதவவே செய்யும். பணரீதியாக, ரெஃபரல்கள் ரீதியாக எனப் பல்வேறு வழிகளில் நம்முடன் இருந்தவர்களின் வளர்ச்சி நமக்கு உதவவே செய்யும். பொறாமை நம் மனதில் குடிகொண்டால், நம்முடன் இருப்பவர்கள் வளர வளர நாமே நம்மையறியாமல் ஒரு தூரத்தை அவர்களிடம் உண்டுபண்ணிக் கொள்வோம்.

ஒரு துறையிலோ/தொழிலிலோ வெற்றிபெறும் ஒரு நபருக்கு பல்வேறுவிதமான நம்பிக்கையான மற்றும் அறிமுகமான நபர்கள் பல்வேறு விஷயங்களுக்குத் தேவைப்படுவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய, தொழிலில் சிறியதொரு பணியைப் பிரித்துக் கொடுக்க எனப் பல்வேறு தேவைகளுக்கு நம்பிக்கை மற்றும் ஏற்கெனவே பழக்கம் உள்ள ஆட்களையே வெற்றிபெற்றவர்கள் விரும்புவார்கள். உடனிருப்பவர்கள் வளர்ச்சி கண்டு பொறாமைகொண்டு ஒதுங்க ஆரம்பித்தால் இந்த வாய்ப்பு கள் எல்லாம் புதியதாய் வந்த நண்பர்களுக்கே போய்ச் சேரும். இதனால்தான் நமக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் வளரும்போது நட்பை பொறாமை காரணமாகவோ அல்லது வேறெந்த காரணங்களினாலோ முறித்துக்கொள்ளக் கூடாது.

நம்முடன் நாளின் பதினெட்டு மணிநேரத்தையும் கழித்த நபர் தொழிலில் வேகமாக வளர்வதால் நம்முடன் பதினெட்டு நிமிடம்கூடப் பேச முடியாமல் போகலாம். நண்பர் நம்மைத் தள்ளிவைக்க நினைக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலேயன்றி இதுபோல் உறவாட கிடைக்காத நேரமின்மையை ஒரு நெகட்டிவ் விஷயமாகக் கருதி 'ஒண்ணுமில்லாதப்ப என்னோட இருந்தாரு! இப்ப

பணவளக் கலை!

நாலு காசு சேர்ந்தது கண்டுக்கிறதில்லை’ என்று நாமாகவே நினைத்துக்கொண்டு விலகக் கூடாது.

நெட்வொர்க் என்பது பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று, தானாகவே உருவான நெட்வொர்க்கை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெட்டிவிட்டு விடக்கூடாது. வேலையோ/தொழிலோ நீங்கள் ஒரு விஷயத்தில் தலைசிறந்த நபராக இருந்தபோதிலும் உங்களுக்கு அந்தத் திறமை இருக்கிறது என்பதைப் பல இடங்களுக்கும் சரியான நேரத்தில் சரியானபடி கொண்டுசென்று சேர்ப்பதில் நெட்வொர்க்குக்கு மிகப் பெரும் பங்கு உள்ளது என்பதை முதலில் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

பணம் சம்பாதிப்பதில் அதிலும் ஆரம்பக் காலத்தில் இந்த நெட்வொர்க்தான் பணம் செலவில்லாத விளம்பரமாக, ஒரு கேரன்டி கையெழுத்தாக, நல்லவர் என்பதற்கு ஒரு ரெஃபரன்ஸாகவும், அவசரத்துக்குக் கைமாற்றாகப் பணம் வாங்கவும் வெகுவாக உதவும்.

பணம் சம்பாதிப்பது என்பது இதுபோன்ற பல்வேறு கலவைகளைக் கொண்ட ஒரு செயல்பாடு. சரியான சமயத்தில் செய்யப்படும் ஒரு பண உதவி, முதலீட்டு உதவி, சரியான நேரத்தில் போடப்படும் ஒரு கேரன்டி, சரியான நேரத்தில் சொல்லப்படும் ஒரு நல்ல வார்த்தை, சரியான நேரத்தில் பிரித்துத் தரப்படும் பிசினஸின் ஒரு சிறுபகுதி, சரியான நேரத்தில் நண்பர் என்ற அணுசரணையுடன் தரப்படும் ஒரு ஃபிரான்சைஸ்/ஏஜென்சி போன்ற பல சரியான நேரத்தில் செய்யப்படும் ஒரு செயல் பலரின் பண ரீதியான நிலைமையை மாற்றியுள்ளது என்பதை நீங்கள் உங்களைச் சுற்றியிருக்கும் பண ரீதியான வெற்றி பெற்றவர்களைக் கேட்டுச் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே பலமுறை சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். பணம் என்பது  நீங்கள் செய்யும் பல கூட்டு வினைகளின் (செயல்களின்) எதிர்விளைவாகும். பணம் என்பது ஒரே ஒருமுறை மட்டும் கிடைக்கும் ஒரு பரிசுப் பொருள் அல்ல. உங்கள் செயல்பாடுகள் எந்த அளவுக்குப் புத்திசாலித்தனத்துடனும், சாதுர்யத்துடனும் இருக்கிறதோ அத்தனை மடங்கு உங்களுக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிக்கவே செய்யும்.

பணம் சம்பாதித்தல் என்பது ஒரு தொடர் விஷயமாக இருப்பதாலேயே எந்த அளவுக்கு நீங்கள் தொடர்ந்து சாதுர்யமாக நடக்கின்றீர்களோ அந்த அளவுக்குத் தொடர் வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இந்தத் தொடர் சாதுர்யம் (தொழிலில் கருத்து, நெட்வொர்க், மனோநிலை, பணத்தின் மீதான ஈர்ப்பு, நஷ்டத்தின் மீதான குறைந்த ஈர்ப்பு போன்றவற்றில்) இல்லாதுபோகும் போதுதான் சிலர் ஓரளவுக்குச் சம்பாதித்தப் பின்னர் அடுத்த நிலைக்குப் போக முடியாமல் அதே நிலையில் மட்டுப்பட்டு விடுகின்றனர்.

(கற்றுத் தேர்வோம்)