Published:Updated:

ஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்?!

ஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்?!

##~##

நல்ல பங்குகளை நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கிறவர்களுக்கு இது நிச்சயம் வசந்தகாலம்தான்!

'வரும் பொதுத்தேர்தலில் பிஜேபி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு வந்திருப்பதைக் கவனித்தீரா?’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக்கை வரவேற்று உட்காரவைத்து, சந்தைச் செய்திகள் பக்கம் கவனத்தைத் திருப்பினோம். ''வசந்தகாலம் வரப்போகிறது என்று பார்த்தால், சந்தை இன்று மீண்டும் சறுக்கிவிட்டதே?'' என்று கேட்டோம் சற்று கவலையுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கவலை வேண்டாம். அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் பெருகி இருக்கிறது. தவிர, சலுகைக் குறைப்பு நடவடிக்கைகள் இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவிலிருந்து வெளியான புள்ளிவிவரங்களும் நெகட்டிவாக இருந்தது. இதனால் உலகம் முழுக்க உள்ள சந்தைகள் இறக்கம் கண்டிருக்கின்றன.  

தவிர, ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் சமீபகாலமாகப் பணவீக்கம் மிகப் பெரிய பிரச்னை என்று சொல்லி வருகிறார். தவிர, கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸைத்தான் அவர் அதிகம் ஃபாலோ செய்கிறார் என்பதையும் கடந்த வாரமே சொன்னேன். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வருகிற செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் ஆர்பிஐ மீட்டிங்கில் 0.25 சதவிகித வட்டி உயர்த்தும் அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற பயம் முதலீட்டாளர்களுக்கு வந்துவிட்டது. இதனால்தான் இன்றைக்கு சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்திருக்கிறது. இந்த இறக்கம் இன்னொரு பெரிய இறக்கத்துக்கு வழிவகுத்துவிடாது என்பதால் இதைக் கண்டு பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. நல்ல பங்குகளை நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கிறவர்களுக்கு இது நிச்சயம் வசந்தகாலம்தான்'' என்றவருக்கு, சுடச்சுட இஞ்சி டீ தந்தோம். இந்த வாரம் வெளியான பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தோம்.  

ஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்?!

''எல் அண்டு டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 63% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே?''

''எல்லாம் வட்டிச் செலவு அதிகரித்திருப்பதே. மூன்றாம் காலாண்டில் ரூ.797 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதேகாலத்தில் வட்டிச் செலவு ரூ.591 கோடியாகத்தான் இருந்தது. மேலும், இதன் மொத்த வாராக்கடனும் அதிகரித்துள்ளது. பொருளாதார நிலை தொடர்ந்து மந்தநிலையில் காணப்படுவதால், வாகன நிதி உதவி வாங்குவதும் குறைந்துபோய் உள்ளது. இதுவும் இந்த நிறுவனத்தின் நிகர லாப வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது''.

''நம்மூர் இந்தியன் வங்கியின் நிகர லாபமும் 20 சதவிகிதம்  குறைந்துபோனதற்கு ஏதாவது விசேஷ காரணம் இருக்கிறதா?''

''பணியாளர்களின் பென்ஷன் ஃபண்டு மற்றும் கிரா§விட்டிக்குக் கூடுதலாக ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்ததால் நிகர லாபம் குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் 3.42 சதவிகிதமாக, அதாவது ரூ.3,834.78 கோடியாக உள்ளது. அந்தவகையில் வாராக் கடனைக் குறைக்கும் முயற்சியில் இந்த வங்கி தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது. மூன்றாம் காலாண்டில் மட்டும் ரூ.539 கோடி ரூபாய் வாராக்கடன் வகையில் வசூலாகி இருக்கிறது.''

''மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்டீஸ் நிகர லாபம் 48 சதவிகிதம் வீழ்ச்சிக் கண்டுள்ளதே?''

''இதற்கு மத்திய அரசுதான் காரணம். மருந்துவிலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால், இந்த நிறுவனத்தின் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், டாலருக்கு இணையான ரூபாய் மதிப்புக் குறைந்ததும் நிகர லாபம் குறைந்ததற்குக் காரணமாக இருக்கிறது.

இதேபோல், கெய்ர்ன் இந்தியாவின் நிகர லாபமும் ஃபாரக்ஸ் இழப்பால் குறைந்துபோய் உள்ளது. மூன்றாம் காலாண்டில் இதன் நிகர லாபம், சந்தை எதிர்பார்ப்பைவிடக் குறைந்துள்ளது. அதாவது, 14 சதவிகிதம் குறைந்து ரூ.2,884 கோடியாக உள்ளது''.

''ஹெச்டிஎஃப்சி மூன்றாம் காலாண்டில் 12 சதவிகிதம் நிகர லாபம் ஈட்டி உள்ளதே..?''

''ஒட்டுமொத்தப் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், இந்த வீட்டு வசதி நிறுவனம், தனிநபர்களைக் குறிவைத்துச் செயல்பட்டதால் குறிப்பிடத்தக்க அளவுக்கு லாபம் ஈட்டி இருக்கிறது. மூன்றாம் காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.1,278 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வரம்பு 4 சதவிகிதம் அளவுக்கு இருப்பது இதன் லாப அதிகரிப்புக்கு ஆதரவாக உள்ளது. இதன் வாராக் கடன் சில்லறைக் கடன் பிரிவில் வெறும் 0.57 சதவிகிதமாக உள்ளது. மேலும், சிறிய நகரங்களில் அதிகக் கிளைகளைக் கொண்டுவர ஹெச்டிஎஃப்சி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் வரும் காலாண்டுகளில் அதன் நிகர லாபம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதையடுத்து அந்த நிறுவனப் பங்குகளில் எஃப்ஐஐ முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. அண்மையில் இந்த நிறுவனத்தில் எஃப்ஐஐ முதலீடு 74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.''

''வேறு என்ன விசேஷம்?'' என்றோம்.

''டெக் மஹிந்திரா, நிதித் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றை வாங்கும் முயற்சியில் முன்னேறி இருக்கிறது. இந்த நிறுவனத்தை வாங்குவதன்மூலம் ஆசிய பசிபிக் பகுதியில் டெக் மஹிந்திரா முக்கிய நிறுவனமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆக்ஸிஸ் பேங்கில் எல்ஐசி-ன் பங்கு முதலீடு 10 சதவிகிதத்தைத் தாண்டி இருக்கிறது. அண்மையில் எல்ஐசி நிறுவனம், சுமார் 52 லட்சம் ஆக்ஸிஸ் பேங்க் பங்குகளை வாங்கி இருக்கிறது. இதையடுத்து எல்ஐசி-ன் பங்கு மூலதனம் 9.33 சதவிகிதத்திலிருந்து 10.44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 4.9 கோடி பங்குகள் எல்ஐசி வசம் இருக்கிறது.

பங்கு வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வர்த்தக எண்ணிக்கையில் என்எஸ்இ முதல் இடத்தில் இருக்கிறது. 2013-ம் ஆண்டில் இந்தப் பங்குச் சந்தையில் சுமார் 145 கோடி பங்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளது'' என்றவரிடம், ''2005-க்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் பிரச்னையில் உடனடியாக ஏதாவது மாற்றம் ஏற்படுமா?'' என்று கேட்டோம்.

''பணப்புழக்கம் திடீரென அதிகரித்து, பல பொருட்கள் விலை உயர வாய்ப்புண்டு. தேர்தல் நேரம் என்பதால், போஸ்டர் அடித்துவிடுவது முதல் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தப் பெரிய அளவில் பணம் இறக்கிவிடப்படலாம். எக்கசக்கமாக கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான்!'' என்றவர், ''சரி, அடுத்த வாரம் பார்ப்போம்'' என்று கிளம்பினார்.