Published:Updated:

எடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..?

எடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..?

##~##

ரயில்வே ஏன் அரசுக்குக் கீழே இருக்குன்னா, அது ஒரு சர்வீஸ். லாபநோக்கோட செயல்படக் கூடாதுங்கிறதுக்காகத்தான்.

சமீபத்துல ஷாக் அடிக்கிற செய்தி ஒண்ணைப் படிச்சேங்க. 37 புது ரயில்களை ரயில்வே டிபார்ட்மென்ட்ல அறிமுகப்படுத்த போறாங்களாம். 'இதுல என்ன ஷாக், புதுசா ரயில் விட்டா நல்லது தானே ஏகாம்பரம்’னு நீங்க கேக்கலாம்.  ஆனா, நான் முழுசாச் சொல்லி முடிச்சப் பின்னாடி நீங்களும் ஷாக் ஆகிடுவீங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போன டிசம்பர் கடைசியில கிறிஸ்துமஸ்/புதுவருஷமுன்னு ஏகப்பட்ட பேர் கூட்டம் கூட்டமா ஊருக்குப் போனப்ப மும்பை-டெல்லி மார்க்கத்துல பரிசோதனை முறையில ஓர் இடைநில்லா குளிர்சாதன வசதிகொண்ட பிரீமியம் ரயில் ஒன்றை சோதனை முறையில நடத்தியிருக்கிறாங்க. இதுக்குண்டான பயண முன்பதிவை ரயில் நிலையத்துல இருக்கிற கவுன்டரில பண்ண முடியாதுன்னு சொன்னாங்களாம். பயண முன்பதிவு ஆன்லைனில மட்டும்தான் புக் செய்ய முடிஞ்சதாம்.  அதேமாதிரி 15 நாட்களுக்கு முன்னாடிதான் முன்பதிவு ஆரம்பிச்சுதாம்.

விலையும் நிலையானது கிடையாதாம். டிமாண்டுக்கு ஏத்தாப்போல மாறுகிற விலையாம்.  அதாவது, விமானத்துல நடைமுறையில இருக்கிற மாதிரி, 15 நாளுக்கு முன்னாடி முன்பதிவு செஞ்சா ஒரு ரேட், ஒரு வாரத்துக்கு முன்னாடி முன்பதிவு செஞ்சா அதைவிட அதிக ரேட். இரண்டுநாள் அல்லது அதுக்குக் குறைவான நாள் இருக்கையில முன்பதிவு செஞ்சா மிக அதிகமான ரேட்டுன்னு பல ரேட்டுல விமான புக்கிங் நடக்குதுல்ல, அதுமாதிரி!

இதுல ஆச்சர்யம் என்ன தெரியுமா? சாதாரணமா 1,815 ரூபாய்க்கு விக்குற மூன்றடுக்குக் குளிர்சாதன வசதி டிக்கெட் இந்த முறையில வித்தப்ப 12,000 ரூபாய் வரைக்கும் போச்சாம். அதேமாதிரி சாதாரணமா 2,910 ரூபாய்க்கு விக்குற இரண்டடுக்கு ஏசி வசதி டிக்கெட் 17,000 ரூபாய் வரைக்கும் விலை போச்சாம்.

ஐ, நல்லா இருக்கே. சீஸனில இதுமாதிரி ரயிலை விட்டா ரயில்வே துறைக்கு நல்ல லாபம் கிடைக்குமே'ன்னுதானே நீங்க  நினைக்கிறீங்க. கொஞ்சம் நிறுத்தி நிதானமா யோசிச்சுப் பாருங்க. நீங்க நினைக்கிறது தப்புன்னு உங்களுக்கே புரியும்.

எடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..?

தீபாவளி பொங்கலுன்னு கூட்டம் அலைமோதுறப்ப தமிழக அரசு என்ன பண்ணுச்சு? ஓம்னி பஸ்காரங்க கட்டணம் அதிகமா வசூலிச்சா நடவடிக்கைன்னு சொல்லி செக்கிங்கை அதிகப்படுத்தி, ஹெல்ப் லைன் நம்பரையெல்லாம் விளம்பரப்படுத்தி அவசரத்தேவையை உபயோகிச்சுப் பணம்புடுங்க நினைக்கிற செயலைக் கட்டுப்படுத்தினாங்க. ஆனா, ரயில்வே துறைங்கிறது அரசாங்கத்தோட ஒரு டிபார்ட்மென்ட். சர்வீஸ் மைண்டோட இருக்கவேண்டிய இடத்துல தனியார் நிறுவனத்துக்கு இணையா யோசிச்சு சம்பாதிக்க வழி தேடுனா என்னங்க அர்த்தம்?

இப்ப என்னாச்சுப் பாருங்க. சோதனைமுறையில நடத்தி நிறைய வருமானம் வந்ததால இந்த மாதிரி சேவையை இன்னும் 37 மார்க்கத்துல இதுபோல பிரீமியம் சர்வீஸை அறிமுகப்படுத்தலாமுன்னு இருக்கறாங்களாம். இந்தப் புது மார்க்கெட்டுலேயும் நிறைய வருமானம் வந்துச்சுன்னா அப்புறம் என்ன, லீவு நாட்களில டிக்கெட்டெல்லாம் ஏலமுறைக்குக் கொண்டுவந்திடலாமான்னுகூட யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

அப்புறம் என்னவாகும்? இன்னைக்கு ஓம்னி பஸ்ஸில ஏற முடியாம தவிக்கிற  சாமானியன் ரயிலிலேயும் ஏறமுடியாம திணறுவான். ஊருக்குப் போறதுங்கிறது கனவாயிடும். அட, ஊருக்குக் கல்யாணம் காட்சி, பண்டிகைன்னு போறதையாவது குறைச்சுக்கலாம். படிக்கிற புள்ளைங்களுக்கு கவுன்சிலிங், வேலைக்கான இன்டர்வியூன்னு ஏழைபாளைங்க பயணம் செய்யத்தானே செய்வாங்க. அவங்க எல்லாரும் பெரிய பாதிப்பை அடைவாங்களே! இதை ஏன் யோசிக்கமாட்டேங்கிறீங்க?

வருமானம் அதிகமா வருதுன்னு ஆசைப்பட்டு நிறைய ரயிலை பிரீமியம் சர்வீஸா மாத்தினா என்னாகும்? ஆத்தாடி! கொள்ளைக்காசு கொடுத்துல்லப் போகணும். ரயில்வே ஏன் அரசுக்குக் கீழே இருக்குன்னா, அது ஒரு சர்வீஸ். லாபநோக்கோட செயல்படக் கூடாதுங்கிறதுக்காகத்தான். ஒரு பைசா விலை ஏத்தலைன்னு பல ஆண்டுகளாச் சொல்லிட்டுக் கடைசியில பெரிய குண்டைத் தூக்கிப்போட்டா என்னங்க அர்த்தம்?

கடந்த பத்து ஆண்டுகளில ரயிலுல தொடர்ந்து போய்ப் பார்த்திருந்தீங்கன்னா தெரியும். கொஞ்சம் கொஞ்சமா சுத்தபத்தம் குறைஞ்சுகிட்டே வருது. ஏசியோ, ஏசி இல்லையோ எல்லாத்திலேயுமே இந்தப் பிரச்னை இருக்குது. இந்த லட்சணத்துல பிரீமியம் ரயில் ஓட்ட ஆரம்பிச்சா எல்லோரோட கவனமும் அதில திரும்பிடும்.

அப்புறம் என்ன நீங்களும் நானும் ரொம்பச் சுமாரான சர்வீஸைத்தான் ரயில்வேயில இருந்து பெற முடியும். பிரீமியம் சர்வீஸ் பிரீமியம் பணம் தர்றவங்களுக்குத்தான்னு சொல்லீட்டாங்கன்னா? ஐயா, ஆபீஸருங்களே கொஞ்சம் சிந்தனைப் பண்ணுங்க. ரயில்வே அரசாங்கத்தோட அங்கம். இதைக் கொஞ்சம் நினைவுல வச்சுக்கிட்டுச் செயல்படுங்க.

முழுக்க முழுக்க ஏசி சர்வீஸ் தானே ஏகாம்பரம்! இதனால சாதாரண மனிதனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையே ஏகாம்பரம். இதுக்குப் போயி ஏன் இப்பிடிக் கோபப்படறே?ன்னு நீங்க  கேக்கலாம்.

உடனடியா எந்தப் பாதிப்பும் இல்லைதான், ஆனா, பிற்பாடு பாதிப்பு  ஏற்பட நிறையவே வாய்ப்பிருக்கு. அதனால, வியாபார ரீதியா யோசிக்கிறதை விட்டுட்டு நல்லபடியா நியாயமான ரேட்டுல சாமான்யனை எப்படிப் பத்திரமா போகவேண்டிய ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாமுன்னு யோசிங்க ஆபீஸர்ஸ்!