Published:Updated:

சிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..?

சிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..?

இரா.ரூபாவதி

##~##

சிபில் அமைப்பு எந்தத் தகவலையும் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறுவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே தங்களுடைய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை வழங்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்றைய பொருளாதாரச் சூழலில் கடன் வாங்காமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அந்தக் கடனை வாங்கச் செல்லும்போது சிபில் ரிப்போர்ட் என்ற வார்த்தை இன்று பலரையும் பதற வைக்கிறது. காரணம், இந்த ரிப்போர்ட்டில் நமக்கு அதிகமான புள்ளிகள் கிடைக்கவில்லை என்றால், வங்கிக் கடன் கிடைக்காமல் போக நிறைய வாய்ப்புண்டு. புள்ளிகள் குறைவது மட்டுமல்ல, பெயர், முகவரி, வயது போன்ற விஷயங்களும் சரியாக இருந்தால்தான், பிரச்னை இல்லாமல் கடன் கிடைக்கும்.  

சென்னையைச் சேர்ந்த பிரபல சொத்து மதிப்பீட்டாளர் பார்த்தசாரதி. இவருடைய பெயர் எப்படியோ சிபிலில் சிக்கிவிட, அதிலிருந்து மீண்டுவர இரண்டு ஆண்டு போராடி இருக்கிறார். அதுபற்றி அவரிடமே கேட்டோம்.

சிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..?

''எனது சொந்தத் தேவைகளுக்காகப் பல்வேறு வங்கிகளிலிருந்து பல கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வந்தேன். இதில் தனியார் வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டு பில் தொகையைக் காசோலை மூலமாகச் செலுத்தினேன். வங்கியும் காசோலையை என் வங்கிக் கணக்குக்கு அனுப்பிப் பணத்தை எடுத்துக்கொண்டது. ஆனால், எட்டு மாதம் கழித்து அந்தப் பணத்தை என் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைத்தார்கள். ஆனால், அதுபற்றி எனக்கு எந்தத் தகவலும் வங்கியிலிருந்து  சொல்லவில்லை. இதுபற்றி வங்கிக்குக் கடிதம் எழுதியபோதும் எந்தப் பதிலும் வரவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, கிரெடிட் கார்டுக்கான பணம் 20 ஆயிரம் ரூபாயை நான் கட்டாமல் இருப்பதாக வங்கியிடமிருந்து  எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்படியானால், நான் ஏற்கெனவே தந்த காசோலை என்னாச்சு என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்டேன். நான் தந்த காசோலையில் கிரெடிட் கார்டின் எண் இல்லை. எனவே, அதனால் பணத்தை எடுக்க முடியவில்லை என்று சொன்னார்கள். அப்படியானால், இதை எட்டு மாதத்துக்கு முன்பே தெரிவித்திருக்கலாமே அல்லது எனது கணக்கிலிருந்து பணம் எடுக்காமல் இருந்திருக்கலாமே என்று நான் கேட்டதற்கு, வங்கித் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

இதுபற்றி வங்கிக் குறைதீர்ப்பு மையத்தில் முறையிட்டபோதும் சரியான பதில் கிடைக்கவில்லை. கடைசியில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடியதன் விளைவாக, எனக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கிடைத்தது'' என்றார்.

சிபிலில் இவருக்கு நேர்ந்த பிரச்னை இப்படி என்றால், இவரது மனைவி திலகவதிக்கு நேர்ந்தது வேறுமாதிரி.  திலகவதி பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் என்றாலும், அவரது முகவரி மும்பை என சிபிலில் பதிவாகி இருக்கிறதாம். இதை மாற்றுவதற்கு அவர் எவ்வளவோ போராடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லையாம்.  

சிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..?

ஐ.டி நிறுவன ஊழியர் கணேஷ§க்கு ஏற்பட்ட அனுபவம் இன்னொரு ரகம்.  அதுபற்றி அவரே சொன்னார். ''தனியார் வங்கி ஒன்றில் பல வருடமாகச் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தேன். சில வருடங்களாக நான் அந்தக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்வதில்லை. சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச தொகையை யும் நான் வைக்கவில்லை. இரண்டு, மூன்று வருடம் கழித்து,  தனிநபர் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தபோது, கடன் தரமுடியாது என்றார்கள். ஆனால், அதற்கான காரணத்தை வங்கி சொல்லவில்லை. கடைசியில் கிரெடிட் ரிப்பேர் ஏஜென்சியை அணுகியபோது, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை நான் வைக்கவில்லை என்பதால்தான், என் பெயர் சிபிலில் பதிவாகி இருப்பதாகச் சொன்னார்கள். அதன்பிறகு வங்கிக்குத் தொடர்ந்து பல கடிதம் எழுதி சேமிப்புக் கணக்கு சார்ந்த பிரச்னைகளை சிபிலில் சேர்க்கக்கூடாது என்று வாதாடி,  அதிலிருந்து விடுபட்டேன்''  என்றார்.

சிபில் அமைப்பு எந்தத் தகவலையும் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறுவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை சிபில் அமைப்புக்கு வழங்கும். அதை அப்படியே சேமித்து வைப்பதுதான் சிபிலின் வேலை. இப்படித் தகவல்களைச் சேமித்து வைக்கும்போது  எப்படியோ சில தவறுகள் நடந்துவிடுகின்றன. இந்தத் தவறுகளை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோதான் சரிசெய்ய முடியுமே ஒழிய, நாம் வேறு எந்தவகையிலும் சரிசெய்ய முடியாது.

தெரிந்தோ, தெரியாமோ சிபில் ரிப்போர்ட்டில் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர என்ன செய்யலாம் என விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரித்தோம்.

சிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..?

''வங்கியிலோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ வாங்கிய கடனை இதுவரை திரும்பக் கட்டாமல் இருந்தால், அதை உடனடியாகத் திரும்பக் கட்டிவிடுங்கள் அல்லது செட்டில்மென்ட்தான் செய்யமுடியும் எனில், அதையாவது முறையாகச் செய்துவிடுங்கள். பெயர், வயது, முகவரி போன்றவற்றில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கிரெடிட் கார்டு நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் எழுதுவதன் மூலமே தவறை சரி செய்யமுடியும். வங்கி மற்றும் நிதிப் பரிவர்த்தனைத் தொடர்பாக நன்கு விஷயம் தெரிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று நடப்பது நல்லது. இதுதொடர்பாக எல்லா வேலைகளையும் நீங்களே செய்யவேண்டி இருக்கும். எனவே, மனம் சலிக்காமல், பொறுமையாகச் செயல்பட்டால், நிச்சயம்  நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்'' என்றார்கள்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால், நடக்காதது எதுவும் இல்லையே!

படம்: ப.சரவணக்குமார்.