Published:Updated:

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

Vikatan Correspondent

செ.கார்த்திகேயன்

##~##

நிறுவனத்துக்கு பிரச்னை என்றால் அதற்கு முழுப்பொறுப்பையும் நிறுவனத்தின் தலைவரே ஏற்று, தீர்வுகாண வேண்டும்.

அருணன் படித்து முடித்ததும் வங்கியில் கடன் வாங்கிச் சொந்தமாகத் தொழில் ஆரம்பித்தார். தொழில் ஆரம்பித்த நேரம் சிறப்பாக இருக்க, தொழிலில் லாபமும் நன்றாகவே கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் இப்படியே தொடர, மூன்றாவது ஆண்டில் அருணனுக்குப் போதாத காலம் பிறந்தது. தொழில் ரீதியாகப் பல நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டிய கட்டாயம் உருவானது.

நிதி நெருக்கடி, ஊழியர்களுக்குச் சம்பளம் தரமுடியாமல் போனதால் தொழிலாளர்ப் பிரச்னை, உற்பத்திச் செய்யும் பொருட்களுக்கு வர்த்தகத்தில் போட்டிகள் எனப் பல பிரச்னைகள் அருணனை நெருக்க, இந்தச் சொந்தத் தொழிலே வேண்டாம் என்கிற முடிவெடுத்து, பிசினஸிலிருந்து விலகிவிடும் நிலைக்குப் போய்விட்டார்.

வாழ்க்கையில் ஏதோ ஓர் உந்துதலில் சொந்தத் தொழில் செய்ய ஆரம்பிக் கிறவர்கள் பிற்பாடு ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் இதுமாதிரி திணறிவிடுகின்றனர்.

தொழில் தொடங்குபவர்களுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் வரும்?, அதை எப்படிச் சமாளிக்க வேண்டும்?, அந்தச் சமயங்களில் எப்படிக் கவனமாகச் செயல்படவேண்டும்? என கார்ப்பரேட் கிளினிக் நிறுவனத்தின் சிஇஓ ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

பயந்து ஓடக்கூடாது!

''பிரச்னைகளைச் சந்திக்காத மனிதனே இல்லை; பிரச்னைகள் இல்லாத தொழிலும் இல்லை. எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, பிரச்னைகளைக் கண்டு பயந்து ஓடுவதைவிட, துணிச்சலாக எதிர்கொண்டு அதைத் தீர்ப்பவர் களால்தான் வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருக்கமுடியும். பிசினஸில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளித்துத் தீர்வு காண்பது ஒரு கலை. இதில் கைதேர்ந்தவர்கள்தான் சொந்தத் தொழிலில் நிலைத்துநிற்க முடியும்'' என்றவர், பிரச்னைகளைச் சமாளிக்கும் பல்வேறு வழிகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நெருக்கடிகள் பலவிதம்!

''ஒரு தொழில் நிறுவனத்துக்குப் பல வழிகளில் நெருக்கடி வரலாம். உதாரணமாக, ஒரு நிறுவனம் உற்பத்திச் செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் சொல்லும்பட்சத்தில், அது அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியாகவே இருக்கும். இதைச் சமாளிக்கும்படியான பொருளாதாரம் அந்த நிறுவனத்துக்கு இல்லாதபட்சத்தில் திணறவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

அதேபோல, உற்பத்திச் செய்யும் பொருட்கள் மீது இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளாமல் இருந்து அந்தப் பொருட்களுக்குச் சேதம் ஏற்படும்பட்சத்தில் முழு நஷ்டத்தையும் நிறுவனமே ஏற்கவேண்டி இருக்கும். இந்தநேரத்தில் பதற்றம் கொள்ளாமல் அதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நிறுவனத்தின் முதலாளி கவனம் செலுத்தவேண்டும்.

அஜாக்கிரதை மனநிலை!

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

இன்றைய சூழலில், பிசினஸ் ஆரம்பிப்பவர்களின் பொதுவான மனநிலை, 'பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்பதுதான். இப்படிப்பட்ட மனநிலையுடன் தொழில் தொடங்கவே கூடாது. சிறிய நிறுவனங்களை விரிவுபடுத்தும்போது, தேவையான நிதிக் கிடைக்காததால் நெருக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் திறமையான ஆட்கள் கிடைக்காததால் நெருக்கடி ஏற்படுகிறது. நிறுவனம் வேகமாக வளரும்போது வொர்க்கிங் கேப்பிட்டல் தேவையான அளவுக்குக் கிடைப்பதில்லை. ஊழியர்களுக்குத்  தேவையானதைச் செய்துதந்து அவர்களைத் திருப்திப்படுத்தாதபோது அவர்களால் நெருக்கடி வருகிறது. இப்படி ஒவ்வொருமுறை நெருக்கடி நேரும்போதும் அதைச் சரி செய்வதற்கான வழி தெரியாமல் தப்பும்தவறுமாக ஏதேதோ செய்து வெளிவரும் நிலையில்தான் பல நிறுவனங்களும் இருக்கின்றன.

எப்படிச் சமாளிப்பது?

பிசினஸில் ஏற்படும் நெருக்கடி யினால் பாதிக்கப்படாமல் இருக்க, நாம் எவ்வாறு தயாராக இருக்கவேண்டும் என்பதை இப்போது சொல்கிறேன்.

பொதுவாக, நெருக்கடி வரும்போது பதறாமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்.

நிறுவனத்துக்கு பிரச்னை என்றால் அதற்கு முழுப்பொறுப்பையும் நிறுவனத்தின் தலைவரே ஏற்று, அதை எந்தக் கோணத்தில் அணுகினால் எளிதாகத் தீர்க்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைத்துப் பிரச்னையைச் சமாளிக்க வேண்டும். ஊழியர்கள் நிலைகுலைந்து போயிருந்தாலும் பிரச்னையை எளிதில் தீர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையைத் தரவேண்டும்.

பிரச்னை எதனால் ஏற்பட்டது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அனைவருக்கும் ஆரம்பத்திலேயே  சொல்லிவிடுவது நல்லது.  

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

நிறுவனத்துக்கு நெருக்கடி என்றதும் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டியது, மனிதவளம் மற்றும் பணவளத்தில்தான். இந்த இரண்டையும் சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தினால், ஒருவரால் எளிதாக நெருக்கடியைச் சமாளித்துவிட முடியும்.

நெருக்கடி ஏற்படும்போது அதைக் களைவதற்கான கருத்துகள் அனைவரிடத்திலிருந்தும் பெற வேண்டும்.

சிறிய பிரச்னைதானே! இதைத் தனக்குக் கீழ் இருப்பவர் கவனித்துக் கொள்வார் என்று அலட்சியம் காட்டாமல் தலைவராகவே இறங்கி கவனிப்பது நல்லது. அதேபோல, தொழிலின் ஆரம்பக் காலத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களையும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கவனிப்பதே நல்லது.

பிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்!

அரசுக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிப் போன்றவற்றைச் செலுத்தாமல் இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளுக்குக் காரணம், அந்த நிர்வாகம்தான். அதுமாதிரியான பிரச்னைகள் ஏற்படாதவாறு அந்த நிறுவனம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்தச் சூழலிலும் தொழில் நேர்மையில் சமரசம் கூடாது'' என்று முடித்தார் ராமகிருஷ்ணன்.

சொந்தத் தொழில் செய்கிறவர்கள் இதன்படி நடந்தால் என்றும் நிலைத்து நிற்கலாமே!

படம்: ஜெ.வேங்கடராஜ்