Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

##~##

பணத்தைக் காட்டிலும் மற்ற எல்லாவற்றுக்கும் நிர்ணயிக்கப்படும் டார்கெட் நிச்சயமாக நன்றாக உதவவே செய்யும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பணம் சம்பாதிப்பது மட்டுமே என் குறிக்கோள் என்று 24 மணி நேரமும் அதை மனதில்கொண்டே செயல்பட வேண்டுமா? அப்படிச் செயல்பட்டால்தான் சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் இந்த நேரம் தோன்றியிருக்கும்.

உலகத்தில் இருக்கும் அத்தனை பேருக்குமே பணம் சம்பாதிப்பதுதான் அடிப்படைக் குறிக்கோள். எவ்வளவு சிரத்தையுடன் இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு முனைப்பாக இறங்குகிறார்கள்/இயங்குகிறார்கள்? எவ்வளவு தூரம் அதில் வெற்றிப் பெறுகிறார்கள்? என்பதுவும் சம்பாதித்ததில் எவ்வளவு பணத்தை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள் (கடுமையான சேமிப்புக் கொள்கைகள் மற்றும் சரியான முதலீடுகள் மூலமாக) என்பதில்தான் அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்தார்களா, இல்லையா என்பதற்கான விடை இருக்கிறது.

பணமே டார்கெட் என்பது தவறில்லையா? என்ற கேள்வியை உங்களில் சிலர் கேட்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விக்கு நிச்சயமாகத் தவறு, என்பதுதான் என் பதிலாக இருக்கும். 'என்ன சார் இது, இத்தனை வாரம் பணவளக் கலைப் படித்த பின்னர்ப் பணமே டார்கெட் என்று இறங்குவது தவறு என்றால், மொத்த அடித்தளமுமே ஆடுகிறதே’ என்று நீங்கள் சொல்வீர்கள். இந்தப் பதிலுக்கான காரணத்தைக் கொஞ்சம் ஆராய்ந்தால் உங்களுக்கு அதன் காரணகாரியங்கள் புரியவரும்.

போட்டிகள் நிறைந்த உலகத்தில் பொதுவாகவே டார்கெட்களை நிர்ணயித்துக்கொண்டு பெருமுயற்சி எடுப்பதில் நிறைய மனச்சோர்வுகள் (டார்கெட்டை அடைய முடியாவிட்டாலோ/ தோல்வி யுற்றாலோ) வந்துவிட வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். விளையாட்டு, படிப்புப் போன்றவற்றில் டார்கெட் வைத்துப் பெருமுயற்சி எடுத்துத் தோல்வியுற்றாலே அதன் வலியை மறக்க நீண்டநாட்கள் ஆகிறது. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று நமக்கு நாமே சொல்லிச் சமாதானம் ஆகிக்கொள்ள வெகுநாட்கள் ஆகிறது. படிப்பிலோ, விளையாட்டிலோ நினைத்த இடத்தைப் பிடிக்க முடியாமல் போனால் அது அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் பெரிய அளவிலான சிக்கல்களைக் கொண்டுவந்துவிடாது. தவிர, இந்தத் தோல்விகளிலிருந்து மீண்டுவருதல் என்பது கொஞ்சம் இலகுவானது. காலம் என்ற குணமாக்கும் மருந்து நம்மைக் குணப்படுத்திவிடவே செய்யும்.

பணவளக் கலை!

அதேசமயம், பணம் சம்பாதிக்க ஒரு டார்கெட் வைத்துப் பெருமுயற்சி எடுத்து அதில் தோல்வியுற்றால் (நஷ்டம் அடைந்தால்) அதிலிருந்து மீண்டுவருவதற்கு நீண்டநாட்களும், அதீத மனோதிடமும் தேவைப்படும். ஏனென்றால், சம்பாத்தியத்துக்கு எடுக்கும் முயற்சிகளில் பணம் முதலீடு செய்யப்படவேண்டும். கையில் இருந்தோ கடனாகவோ வாங்கிப் போட்டபட்சத்தில் முறையே இருப்பை இழந்த வருத்தமும் / திருப்பித்தர வேண்டிய நிர்ப்பந்தமும் நம்மைப் பின்தொடர்ந்து வரும். சிலசமயங்களில் நாம் அதற்காகச் செலவழித்த காலமும் (வயது - வருடங் களில்) விரயமாகிப் போய்விடலாம்.

ஒரு மனிதனின் வாழ்வில் காலவிரயம்கூடச் சம்பாதிக்கும் திறனைச் சிலசமயம் குறைத்துவிடும். உதாரணத்துக்கு, கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லவேண்டிய வயதில் ஓர் இளைஞன் பிசினஸ் ரூட்டைத் தேர்ந்தெடுத்து மூன்று வருடம் முட்டிமோதித் தோற்கிறான் என்று வைத்துக்கொள்வோம். மூன்று வருட முயற்சி வெற்றிபெறாமல் போனபின்னர், அவன் வேலை தேடிப்போனால் என்னவாகும்? புதிய துறையில் ஆரம்பநிலைச் சம்பளத்துக்கே வேலைக்குச் செல்ல முடியும் இல்லையா? அவன் உடன் பயின்ற நண்பர்களின் சம்பளத்துக்கும் அவனுடைய சம்பளத்துக்கும் இடையே ஓர் இடைவெளி நீண்ட நாட்களுக்கு இருக்கவே செய்யும் இல்லையா?

தொழில் முயற்சியில் இழந்த பணத்தின் அளவு, தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தால் பிரச்னைகள் குறைவு. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு இருந்தால் என்னவாகும்? கிடைக்கும் குறைந்த வருமானத்தில் தொழிலால் அடைந்த கடனைவேறு அடைக்கவேண்டியிருக்கும். இப்படி பல கஷ்டங்களை அடுத்தடுத்து நீங்கள் சமாளிக்கவேண்டியிருக்கும்.

பணவளக் கலை!

இதனாலேயே பணம் என்பதை மட்டுமே பெரியதொரு டார்கெட்டாக வைத்து முயற்சிகளில் இறங்கக் கூடாது. ஏனென்றால், ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்து செயல்பட ஆரம்பிக்கும்போது அந்த டார்கெட்டை தவறவிடும் வாய்ப்பும் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பதை நாம் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

டார்கெட் இல்லாமல் வாழ்க்கையா? என்ற கேள்வி உங்கள் மனதில் வரும். பணத்தைக் காட்டிலும் மற்ற எல்லாவற்றுக்கும் நிர்ணயிக்கப்படும் டார்கெட் நிச்சயமாக நன்றாக உதவவே செய்யும். அதிலும், பணம் வரும்போது சேமிப்புக்கு நாம் வைக்கும் கறாரான டார்கெட் மிகவும் அதிகமாகவே உதவும். பணம் என்பது நீங்கள் செய்யும் தொழிலின் (செயலின்) துணை விளைவாக (பை-புராடக்ட்) இருக்க வேண்டும். கொஞ்சம் சிக்கலான கருத்துதான் என்கிறீர்களா? கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் சுலபத்தில் புரியும்.

முழுஈடுபாட்டுடன் நீங்கள் தயாரித்து விற்கும் பொருளோ அல்லது தரும் சர்வீஸோ அதன் சிறப்பான தன்மையினால் மட்டுமே உங்களுக்குப் பணத்தைக் கொண்டுவந்து தரவேண்டுமே தவிர, பணத்துக்காகப் பொருளையோ அல்லது சர்வீஸையோ நீங்கள் வழங்குவதாக இருக்கக்கூடாது. தொழிலில் நீங்கள் காட்டும் தனித்துவத்தினால் பணம் என்பது ஒரு பை-புராடக்டாக வரவேண்டும். உங்கள் கவனமெல்லாம் உங்களுடைய புராடக்ட் அல்லது சர்வீஸின் உகந்ததன்மை (சூட்டபிலிட்டி), புதுமை மற்றும் தரத்தின் மீதே இருக்கவேண்டுமே தவிர, என்ன லாபம் பார்க்கலாம் என்பதில் மட்டுமே இருக்கக்கூடாது. உங்கள் வீடு இருக்கும் ஏரியாவில் இருக்கும் ஆப்பிள் விற்கும் பழக்கடையிலிருந்து ஐபோன் தயாரித்து விற்கும் ஆப்பிள் கம்பெனி வரையிலும் இதுவே பிரதானமாக இருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் கூர்ந்துநோக்கினால் புரியும். நேர்த்தியான சர்வீஸ் மற்றும் மேன்மையான புராடக்டை நோக்கித்தான் பணம் செல்லும். அதனாலேயே பணத்தின் மீது கவனம் (டார்கெட்) வைப்பதைவிட்டு நாம் தரும் சர்வீஸ் / புராடக்டின் தனிச்சிறப்பின் மீது கவனம் (டார்கெட்) வைக்கவேண்டும் என்கிறேன்.

பணவளக் கலை!

இதில் டார்கெட் வைத்தால் மட்டும் சரியா என்ற கேள்வி உங்களுக்கு வரும். இந்த டார்கெட்டில் ஒரு மிகப் பெரும் சௌகரியம் இருக்கிறது. இந்த டார்கெட்டை நிர்ணயிப்பதற்கு அளவுகோல்கள் நிறைய

பணவளக் கலை!

இருக்கிறது. போட்டியாளர்கள் என்ன தருகிறார்கள், அதைவிட ஒரு படி மேலே போக நாம் என்ன செய்யவேண்டும், எந்தப் புதுமையை இதில் புகுத்த வாய்ப்புள்ளது, எந்தக் குறைபாட்டை ஏற்கெனவே இருப்பதில் சரிசெய்ய முடியும், இந்த வாழ்க்கைச் சூழலில் மனிதர்களுக்கு என்ன தேவைப்படுகிறது, எதை மற்றப் போட்டியாளர்கள் தரவில்லை எனப் பல்வேறுவிதமான அளவுகோள்களின் துணைகொண்டு அளவிடக்கூடிய டார்கெட் இது.

ஒரு குத்துமதிப்பான தூரம் தெரியாத டார்கெட்டை அடைய முடியாவிட்டால், அதிக இடைஞ்சலைத் தருகிற பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற டார்கெட்டைவிட, அடைய முடியாவிட்டால் குறைந்த இடைஞ்சல்களைத் தருகிற நீள, அகல, தூரங்கள் தெரிந்த இந்த இரண்டாவது வகை டார்கெட்டை வைத்து செயல்படுவது மிகச் சுலபமானது. ஏனென்றால், புராடக்ட் அல்லது சர்வீஸின் திட்டமிடுதல் என்கிற ஸ்டேஜிலேயே இது நம்மால் முடியும், இதற்குண்டான வசதி நம்மிடம் இருக்கிறது, இதற்குண்டான பணம் நம்மிடம் இருக்கிறது, இதற்குண்டான அனுபவம் நம்மிடம் இருக்கிறது எனப் பல்வேறு விஷயங்களையும் நம்மால் சீர்தூக்கிப் பார்த்துவிட முடியும்.

இந்தச் சீர்தூக்கலில் அனைத்தை யுமே நம்மால் முடியும் என்று 'டிக்’ செய்ய முடிந்தால், அந்தக் காரியத்தில் நம்பி இறங்கலாம். அப்படி இறங்கும்போது பணம் என்னும் பை-புராடக்ட் நம்முடைய முயற்சியில் கிடைக்கவே செய்யும்.

(கற்றுத் தேர்வோம்)