Published:Updated:

உனக்கும் மேலே நீ!

உனக்கு நீயே உந்து சக்தி! இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

##~##

பல ஆண்டுகளுக்கு முன்,  திருவண்ணாமலைச் சென்றிருந்தேன். அனைவரும் கிரிவலம் செல்ல முடிவெடுத்தபோது, 14 கி.மீ தூரம் நடக்க முடியுமா என என்னோடு வந்தவர்கள் அனைவரும் யோசித்தார்கள். என்றாலும், இரவு வேளையில்தான் நடைபயணம் என்பதால் எல்லோரும் என்னுடன் உற்சாகமாக நடக்க ஆரம்பித்தார்கள். நடுநடுவே சோர்வும் உற்சாகமும் குறைந்தபோதெல்லாம் நாம் மனதுவைத்தால் இதைச் சுற்றிவிட முடியும் என்கிற மனநிலையில் நடந்து கொண்டிருந்தோம்.

நடுவில் ஒரு டீக்கடையில் எல்லோரும் இளைப்பாறினோம். கிட்டத்தட்ட 80 வயது முதியவர் சளைக்காமல் அனைவருக்கும் காபி, டீ போட்டுக்கொடுத்துக் கிரிவலம் பற்றிய விவரங்களை உற்சாகமாகக் கூறிக்கொண்டிருந்தார். அவரிடம், 'இந்த வயதில் எப்படி உங்களால் உற்சாகமாக இருக்கமுடிகிறது?’ என்று நான் கேட்டேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு அவர்: ''தம்பி, மனசுல தெம்பும், உற்சாகமும், செய்யற வேலையில் பிடிப்பும் இருந்தா, ஜாலியாச் செய்யலாம்பா. அதுவும், என்கிட்ட டீ வாங்கிக் குடிச்சிட்டு, தெம்பா ஜனங்க நடந்துபோறப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?'' என்றார்.

நான் புரிந்துகொண்டேன், நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்வதும், அடுத்தவர்களை ஊக்குவிப்பதும் உலகம் நம்மை அடையாளம் கண்டுகொள்ளச் சிறந்த வழிகள் என்று. இதற்குப் பிறகு நான் வாழ்க்கையைப் பார்க்கிற விதமே மாறியது!

உனக்கும் மேலே நீ!

ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய நமக்குள் இருக்கும் சக்தி நம்மை உத்வேகப்படுத்துகிறது. இன்றே இந்தக் காரியத்தைச் செய்துமுடித்தாக வேண்டும் என்கிற உத்வேகம் நம்மை ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய ஊக்குவித்துத் தூண்டுகிறது.

நாம் எப்போதுமே நமக்கு எல்லாம் நல்லதாகவே, வெற்றியாக நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடுதான் வாழ்க்கை நடத்துகிறோம். 'எப்போதும் சந்தோஷ மாகவே இருக்கவேண்டும். நல்ல வேலை கிடைக்கவேண்டும் அல்லது நல்ல தொழிலை நடத்தவேண்டும். விரும்பியவரை மணம்

உனக்கும் மேலே நீ!

செய்துகொள்ள வேண்டும். பிரச்னைகள் வரவேகூடாது’ என்று நினைத்துதான் வாழ்கிறோம்.

இப்படியே நினைத்துக்கொண்டு வாழும்போது, ஏதாவது ஒரு சின்ன ஏமாற்றமோ அல்லது பிரச்னையோ வந்தால் நம்மால் அதை ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. எதிர்பாராததையும் எதிர்பார்த்து வாழும்போது பிரச்னைகள் பெரிதாகத் தெரிவதில்லை.  வாழ்க்கை, துன்பம் நிறைந்ததுதான். உற்சாகமாக அதனை அணுகுவதன் மூலமே நாம் தடைகளைக் கடந்துவர முடியும்.

ஆனால், தன்னம்பிக்கையை நாம் இழக்கும்போது நாம் என்னவாகிறோம்? எரிச்சல், நிராதரவு அல்லது நம்பிக்கை இழத்தல் போன்ற எதிர்மறை உணர்வுகள் நமக்குள் பலமாக வெளிப்படுகிறது.  தினசரி நடவடிக்கைகளை நாம் கட்டுப்படுத்த இயலாத அல்லது விரும்பியவாறு செயல்படுத்த முடியாத நிலை உருவாகிறது. நாம் விரும்பும் தனித்துவமும், நிறைவும் நிரம்பிய வாழ்க்கையை யாருடைய குறுக்கீடுகளும் இல்லாமல் சிந்தித்து அதை வாழ்ந்துகாட்ட முடியும் என்ற தன்னம்பிக்கைக் கொண்டவராக நாம் இருக்கும்பட்சத்தில் வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான். இமயமலைகூட நம் இடுப்பளவு உயரம்தான்.

ஒவ்வொரு தடங்கலும், ஒரு வழிகாட்டிதான். நீரோடை, தடுப்புகள் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால் அது அழகில்லை. பாறைகள் தடுத்து, அதனால் வரும் அழகான ஓசையும், தேங்கிய தண்ணீருமே மனிதனுக்கு நன்மை பயக்கும். தடைக்கல்லை மைல்கல்லாக மாற்றுவதற்கான  ஆரம்பத்தை இந்தத் தடைகள்தான் உருவாக்கித்தருகிறது. மற்ற ஓட்டப்பந்தயங்களைவிடத் தடை ஓட்டப்பந்தயத்தில்தான் வெற்றி ருசிக்கப்படும்.

சில நேரங்களில், நடைமுறை வாழ்க்கையில் கொஞ்சமும் விருப்ப மில்லாத வேலையில், அமரவேண்டிய நிலை நமக்கு ஏற்படலாம். நீங்கள் நினைத்ததைவிட, வெற்றி தொலைதூரத்தில் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் நம்முடைய தன்னம்பிக்கையும், எல்லாம் நன்மைக்கே என்ற ஊக்க உணர்வும்தான் நம் கையைப்பிடித்து வெற்றி என்னும் இலக்குக்கு அழைத்துச் செல்லும்.  அந்த நம்பிக்கைதான், நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய், நிலவுக்கே சென்று சோறு உண்ணும் காலத்தைக் காட்டியது.

மற்றவர்கள் நம்மை உற்சாகப்படுத்து வார்கள் என்று காத்திருக்காமல், நம்மை நாமே  உற்சாகப்படுத்திக்கொள்ள இதோ சில வழிகள்:

1. உங்களது பழைய தவறுகளை நினைத்து கவலைப்பட்டு காலம் கடத்தாதீர்கள்.

2. எந்த விஷயத்திலும் இதுதான் என்னால் முடியும் என்று சுருங்கி நில்லாமல், அதிலிருந்து வெளியே வாருங்கள்.

3. பெரிதினும் பெரிது கேளுங்கள்.

4. எதை உங்களால் நடைமுறையில் சாதிக்க முடியும் என்று தெரிகிறதோ, அதைக் குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள்.

உனக்கும் மேலே நீ!

5.  உங்களைச் சுற்றியிருக்கிற அனைத்து விஷயங்களும் உங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என நினைத்து பாராட்டி வாழுங்கள்.

ஊக்கம் கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்களுடன் நல்ல உறவுகளை வைத்துக்கொண்டிருப்பார்கள். எந்த அணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள்.

உங்களை ஊக்குவித்துக்கொள்கிற அதேநேரம் அடுத்தவர்களின் செயல்களை அங்கீகரியுங்கள், பாராட்டுங்கள். அவர்களின் திறமைக்கு மரியாதைக் கொடுங்கள். அவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.

பல புத்திசாலிகள் ஜெயிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமே, தன் திறமையைக் காட்டாமல், அதைத் தனக்குள்ளேயே அமுக்கி வைத்துக்கொள்வதினால்தான். இதனால் என்ன ஆகிறது? திறமை இல்லாதவர்கள் அதிர்ஷ்டத்தால் வெற்றி அடைந்துவிடுகிறார்கள். இதை நினைத்து வருந்துவதும், பொறாமைப்படுவதும் இயலாதவர்கள் செய்யும் காரியம்.

ஆனால், தன்னம்பிக்கை என்கிற வலிமைமிக்க ஆயுதத்துடன் போராடினால், இலக்குகள், நம் இமைகளுக்கருகில் வந்துசேரும்! நான் சாதாரணமானவன் என்ற எண்ணத்தை விடுத்து, உயரப் பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

நிந்திப்பதை விட்டுவிட்டு ஒருபடி மேலே  சென்று சிந்தியுங்கள். எழுதத் தொடங்குங்கள்; என்றேனும் உங்களுக்குள் கவி பிறக்கும். முயலத் தொடங்குங்கள்; முதுமையும் உங்களைத் தொட மறுக்கும்!

(மேலே செல்வோம்)