Published:Updated:

பணவளக்கலை !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக்கலை !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

##~##

இதுவரையிலும் நாம் பார்த்த விஷயங்களை வைத்துப் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது என்ற எண்ணத்துக்கு நீங்கள் வந்திருப்பீர்கள். உலகத்தில் எந்தச் செயலும் மிகக் கடினமான செயலே அல்ல என்றார் ஓர் அறிஞர். அப்படியென்றால் எல்லோராலும் எல்லா விஷயங்களையும் செய்ய முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு உடனடியாகத் தோன்றும். அதற்குப் பதிலாக அவர், எல்லோருக்கும் ஒரே ஒரு கஷ்டமான காரியம் இருக்கிறது என்கிறார். அது, எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க மனிதர்கள் பயப்படுகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கஷ்டமான விஷயம் என்று சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் என்றவுடன் பயம் என்ற ஒன்றும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறதே! ஒரு மனிதன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து அதுநோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும்போதே அந்தப் பாதையில் பாதுகாப்பாகப் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர படுஸ்ட்ராங்கான மனக்கவசம் (டூவீலருக்கு ஹெல்மெட்போல) ஒன்று தேவைப்படுகிறது. சொந்தமாக, தானே உருவாக்கிக்கொண்ட தன்னுடைய ஆழ்மனப் பயம், சுற்றுச்சூழலில் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் அன்புடனும் அக்கறையுடனும் சொல்வதாகச் செய்யும்/சொல்லும் பயமுறுத்தல்கள், பணம் சம்பாதிக்கும் பாதையில் பயணிக்கும்போது எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ளும்போது - சவால்விடுபவர்கள் செய்யும் பயங்காட்டல்கள் போன்ற பல இடைஞ்சல்களையும் இடையூறுகளையும் தாங்கும் கவசமாக அது இருக்கவேண்டும்.

இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், ஹெல்மெட்போல இந்தக் கவசம் கடையில் கிடைக்காது. நாமேதான் இதை உற்பத்திச் செய்யவும் வேண்டும். நாமே உற்பத்திச் செய்யவேண்டி இருப்பதால் இந்தக் கவசம் தாங்கிக்கொள்ள வேண்டியவை என்னென்ன எனக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பணவளக்கலை !

பணம் சம்பாதிக்கும் முயற்சியில் எனக்குத் தோல்விகூட வரலாமே! நமக்குத் தோல்வியென்றால் கொஞ்சம் அலர்ஜிங்க என்று சொல்பவரா நீங்கள்? இந்தக் குணத்தைக் கொண்டவர்கள் பணம் பார்ப்பது கொஞ்சம் கடினம்தான். சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள், அக்கம்பக்கம் என்ன நினைக்கும் என்று நினைப்பவரா நீங்கள்? இந்த வகை மனிதர்களும் சம்பாதிப்பது கடினம்தான்.

உங்கள் வயதுக்கு ஏற்றாற்போல்(!) அம்மா, அப்பா, காதலி, மனைவி, குழந்தைகள் என அந்தந்தச் சூழ்நிலையில் உங்களைச் சார்ந்திருக்கும் யாருமே எந்தச் சிக்கலும் கஷ்டமும் படாமல் வாழ்க்கை ஸ்மூத்தாகப் போகவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? நீங்களும் பெரிதாகப் பணம் பண்ணுவது கடினம்தான். ஏனென்றால், அனைவரும் போகும் பழகிய பாதைகளிலேயே பணரீதியான உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர நினைப்பீர்களே தவிர, புதியதாகப் பணம் தரும் (சில சமயம் இழக்கவும்) வாய்ப்பிருக்கக் கூடிய(!) பாதையில் பயணிக்கத் துளியும் நினைக்கமாட்டீர்கள்.

நான் ஒரு பெரிய தனித்திறமையைக் காண்பிக்க வாய்ப்பிருக்கும் துறையில் நிபுணராக வேண்டும்

பணவளக்கலை !

என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? இந்தத் திறமையை வளர்ப்பதுதான் என்னுடைய முழுமூச்சான எண்ணம். பணத்தை நோக்கி நான் பயணித்தால் அது என்னுடைய நிபுணத்துவக் கனவைப் பாதிக்கும் என்ற பயம் தரும் எண்ணம் உங்களை அதிகமாகச் சம்பாதிக்கவே விடாது. உங்களைச் சுற்றிலும் இருக்கும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் எந்த அளவு உழைக்கின்றனரோ, அதையும் தாண்டி உங்கள் ஸ்மார்ட்டான உழைப்புக்கான நேரத்தை ஒதுக்க நீங்கள் தயாராகாவிட்டால் நீங்கள் நிறையப் பணம் சம்பாதிப்பது கடினம்.

நீங்கள் பணக்காரராகத் தகுதியானவரே என்ற எண்ணம் உங்கள் அடிமனதில் ஆழமாகப் பதிந்தும், அதை உறுதியாக நம்பியும் நீங்கள் செயல்படாவிட்டால் உங்களால் பணம் சம்பாதிக்கவே முடியாது. நிறைய இடங்களில் இதுபோன்ற நபர்களை நீங்கள் பார்ப்பீர்கள். ஒரு தொழிலையோ/அலுவலகத்தையோ மிகவும் திறமையாக நடத்தும் வேலைக்கு இருக்கும் ஒருநபர், எந்தச் சிக்கல் வந்தபோதும், எந்த ரிஸ்க்கை எதிர்கொள்ளும்போதும் அஞ்சாமல் செயல்பட்டு நிறுவனத்தைக் காப்பாற்றிப் பணம் சம்பாதித்துக் கொடுப்பார். பலசமயங்களில் முதலாளியைவிடத் திறமையாகவே அந்தத் தொழிலைத் தெரிந்துவைத்திருப்பார். சில சமயங்களில் அவருடைய பணம் மற்றும் பல பின்புலங்கள் முதலாளியின் அளவுக்கேகூட இருக்கும். ஆனாலும், இவர் உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஆவலாக இருக்க, முதலாளி பணத்தைப் பெருக்குவார். 'ஏனப்பா உனக்கு முதலாளியைவிடப் பேக்ரவுண்டும் திறமையும் அதிகமா இருக்கே! தொழிலிலும் புலியாய் இருக்கிறாயே! நீயே ஏன் தொழில் தொடங்கக்கூடாது?’ என்று கேட்டால், தன்னுடைய சொத்துக்களைத் தனக்குப் பாதுகாக்க மட்டுமே தெரியும். முதலாளியின் சொத்துக்களை வைத்துதான் ரிஸ்க் எடுத்துச் சம்பாதிக்கத் தெரியும் என்று தெளிவாகச் சொல்லுவார். இவர்தான் நாமும் அதிகமாய்ச் சம்பாதிக்க முடியும் என்ற ஆழ்மன எண்ணம் இல்லாதவர்.

பணத்தையும் சொத்துக்களையும் காப்பது வேறு. அவற்றைப் புத்திசாலித்தனமாய் உபயோகித்துப் பெருக்குவது என்பதுவேறு. இந்தவகை நபர், தனக்குக் கிடைத்ததைக் (பெரும்பாலும் வம்சாவளி சொத்துக்கள்) காப்பாற்ற பர்ஃபெக்டான திறமைகளைக் கொண்டிருப்பார்.

பணவளக்கலை !

பணம் சம்பாதிப்பது என்பது ஒரு விளையாட்டைப் போன்றது. இதில் தகுதியும் திறமையுமே முக்கியம். நான் இந்த விளையாட்டை முழு ஈடுபாட்டுடன் விளையாடுவேன் என்ற விளையாட்டுக்கே தேவையான பாசிட்டிவ் மூட் உங்களிடம் இல்லையென்றாலும் பணம் சம்பாதிக்க முடியாது. அதேபோல், தோற்றுவிடுவோமோ என்ற பயம் உங்கள் மனதில் குடிகொண்டு இருந்தாலும், இந்த மனபயத்தைச் சிந்தனைத் திறனால் வெல்ல முடியாமல் தவிப்பவராக நீங்கள் இருந்தாலும் அதிக அளவில் சம்பாதிப்பது என்பது நிச்சயமாய்ச் சாத்தியமில்லாமல் போய்விடும். எல்லோரின் மனதிலும் பயம் என்பது இருக்கவே செய்யும். அந்தப் பயத்தை எதிர்த்தும்/மறைத்தும் செயல்பட முடிந்தால் மட்டுமே விளையாட்டுப் போட்டிக்காக மைதானத்தில் இறங்கி வெற்றி பெற்று அதனால் வரும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். இதில் எல்லாவற்றிலும் இருக்கும் இழப்புகளையும் மனமாற்றங்களையும் தாங்க வல்லதாய் உங்களுடய மனக்கவசம் இருக்கவேண்டும்.

மேலே சொன்ன விஷயங்களைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்குத் தீர்க்கமாய்ப் புரியும். பணம் பண்ண விஷயங்கள் பல தெரிந்திருக்கவேண்டும். அது மட்டுமல்லாமல் பல விஷயங்களை உணர்ந்திருக்கவும் வேண்டும். விஷயம் தெரிந்தால் மட்டுமே பணம் வந்துவிடுமா என்ன? தெரிந்த விஷயங்களைச் செயலாக்க வேண்டும். தெரிந்துவைத்துக்கொண்டுள்ள பலரை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அட! இவ்வளவு விஷயம் தெரிந்தும் இவர் பெரிதாகச் சம்பாதிக்கவில்லையே என்று ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள். செயலாக்குபவர்கள் பலரையும் சந்தித்திருப்பீர்கள். இவ்வளவு கடுமையான முயற்சிகளை எடுக்கிறார். இருந்தும் இவருக்குப் பணரீதியான வெற்றிக் கிடைக்கமாட்டேன் என்கிறதே என்று ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்.

வெறுமனே தெரிந்து வைத்துக்கொள்வது வேறு! வெறுமனே செயலாற்றுவது என்பது வேறு. நன்றாகத் தெரிந்துகொண்டு செயலாற்றுவதே பணம் என்னும் வெற்றியை நம்மை நோக்கிக் கொண்டுவரும் என்பதை நன்றாகப் புரிந்துகொள்வதே பணத்தை நோக்கிய பாதையில் நம்முடைய கால் எடுத்துவைக்கும் முதல் அடியாகும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism