Published:Updated:

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

ச.ஜெ.ரவி.

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

ச.ஜெ.ரவி.

Published:Updated:
##~##

'எங்கள் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்குங்கள். உங்களுக்குத் தேவையான சலுகைகளை நாங்கள் தருகிறோம்’ எனக் கோவை, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிற்துறையினரை வேண்டிவிரும்பி  அழைத்திருக்கிறது கர்நாடகா.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் கெல்லம்பள்ளி, பதனக்குப்பே எனும் கிராமத்தில் 1,362 ஏக்கர் பரப்பளவில் தொழில் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குத் தமிழகத் தொழிற்துறையினருக்கு இடமும் இன்னபிற சலுகைகளும் வழங்கத் தயார் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா கோவைக்கு வந்து அறிவித்த மாத்திரத்தில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 200 முதலீட்டாளர்கள், ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவு பெரிய அளவில் தொழில் முதலீடுகள் இங்கிருந்து வெளியேற என்ன காரணம்?, இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்குப் பாதிப்படையும்? என்பது குறித்து விசாரிக்கக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிற்துறையினர் பலருடன் தொடர்புகொண்டு பேசினோம்.

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

என்ன காரணம்?

'கடுமையான மின்வெட்டு இருக்கும் சூழலில் தொழிற்துறை யினருக்கான எந்த வசதியும், சலுகையும் தமிழக அரசு செய்துதரத் தயாரில்லை. தொழிற்துறையினரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதனைத் தீர்ப்பதற்குண்டான வேலைகளை அரசு முயற்சிக்கவில்லை. இந்தச் சூழலில் அனைத்து வசதிகள், சலுகைகளுடன் வரும் இதுபோன்ற அழைப்புகள் தொழிற் துறையினரைக் கவர்ந்திழுப்பது இயற்கைதான்'' என்று சொன்னார்கள் தங்களை வெளிப்படையாக முகம் காட்டிக்கொள்ள விரும்பாத சில கோவைத் தொழிலதிபர்கள்.

மேலும் அவர்களே, ''சமீபகாலமாக, சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் தமிழகத் தொழிற்துறையினருக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி பல முதலீடுகள் ஏற்கெனவே இடம் மாறிவிட்டன. சாம்ராஜ் நகர் திட்டம் மூலமும் மிகப் பெரிய அளவில் முதலீடுகள் இடம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது' என்றும் சொன்னார்கள்.  

என்னென்ன சலுகை?

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

சாம்ராஜ் நகரில் அமைக்கப்பட இருக்கும் தொழிற் பூங்காவில், உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில் உற்பத்தி, வேளாண், ஜவுளி, ஆட்டோமொபைல் உற்பத்திப் பொருட்கள், பொறியியல் தயாரிப்புப் பொருட்கள், மின் மோட்டார் தயாரிப்பு, இரும்பு உருக்கு ஆலை, கிரானைட் மற்றும் சுரங்கத் தொழில் உள்ளிட்ட தொழில்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என உறுதி அளித்திருக்கிறது கர்நாடக அரசு.  

இதுமட்டுமின்றி, முதலீட்டு ஊக்குவிப்பு மானியம், முத்திரைத் தீர்வையில் (ஸ்டாம்ப் டூட்டி) இருந்து விதிவிலக்கு, பதிவுக்கட்டணத்தில் சலுகை, நுழைவுக்கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு, ஏற்றுமதி தொழில் களுக்கான சிறப்புச் சலுகைகள், வேளாண் உற்பத்திச் சந்தைக்குழுக் கட்டணம், வரி, கட்டணத்தில் இருந்து விலக்கு, கழிவு நீர்ச் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மானியம், மதிப்புக் கூட்டப்பட்ட வரி அடிப்படையில் வட்டியில்லாத கடன், மின்சார வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

புதிய வாய்ப்புகள்!

'சாம்ராஜ் நகர் என்பது கோவையில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதி கனிமவளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, கறுப்பு கிரானைட் அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கறுப்பு கிரானைட் மற்றும் கட்டட கல் சார்ந்த தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்கள் இந்தப் பகுதியில் குறைந்த ஊதியத்தில் அதிகளவில் கிடைப்பார்கள். அவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்கின்றனர் கர்நாடக தொழில் வர்த்தகச் சபைக் கூட்டமைப்பின் அதிகாரிகள்.

வாய்ப்பே இல்லை!

இதுதொடர்பாகக் கோவை இந்திய தொழில் வர்த்தகச் சபைத் தலைவர் பாலசுந்தரத்திடம் பேசினோம். 'கர்நாடக முதல்வரே கோவைக்கு வந்து தொழிற்துறையினருக்கு அழைப்பு விடுத்ததைத்தொடர்ந்து,  ரூ.12 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய விரும்புவதாகத் தொழிலதிபர்கள் சொல்லியிருக்கின்றனர். இது விருப்பம்தான், ஒப்பந்தம் அல்ல. இப்போது விருப்பம் தெரிவிப்பவர்கள் அத்தனைபேரும் அங்கு சென்று தொழில் தொடங்குவார்களா என்பது சந்தேகமே. என்னைப் பொறுத்தவரை, ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு இங்கிருந்துச் செல்ல வாய்ப்பே இல்லை.

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

ஆனால், கிரானைட் கட்டிங் பாலிஷிங் தொழில்கள் கோவைப் பகுதியில் செய்ய வாய்ப்பில்லை. அந்தத் தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அங்குச் செல்லலாம். அதேபோல், உணவுத் தயாரிப்புத் தொழில்கள் அங்குத் துவங்க வாய்ப்புள்ளது. பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களுக்கு உற்பத்திப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறுந் தொழில்கள் அங்குச் செல்லக்கூடும்.

திருப்பூர் டையிங் தொழிலுக்கு, சாயக்கழிவு பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளது. கர்நாடக அரசு தரப்பிலிருந்து பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தந்தால் ஒரு குழுவாக வருவதாகச் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சில தொழில்கள் இடம்மாறலாமே தவிர, கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள தொழில்கள் அனைத்தும் அங்குப் போய்விடும் என்றெல்லாம் சொல்ல முடியாது' என்றார்.

பிரச்னைகள் என்ன?

கர்நாடகாவில் புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்குப் பல சலுகைகளைத் தருவோம் என அந்த மாநில அரசு சொன்னாலும், அங்குத் தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்னைகள் என்னென் என்று  கோவை தொழிற்துறையினரிடம் கேட்டோம்.

'தமிழகத்தைப் போன்று கர்நாடகா விலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் சூழல் இல்லை. இந்த ஆண்டில் மின்விநியோகம் மேம்படும் எனக் கர்நாடக அரசு கூறினாலும், அது சாத்தியமா என்பது தெரியவில்லை.

இரண்டாவது, தண்ணீர். சாம்ராஜ் நகர் என்பது வறட்சியான பகுதி. இங்கு தண்ணீர் வசதி அதிக அளவில் இல்லை. கபினியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.

கோவை To கர்நாடகா: இடம்பெயரும் தொழிற்துறை!

மூன்றாவது, தொழிலாளர் பிரச்னை. அங்குத் தொழில் துவங்கும்போது திறமை மிகுந்த தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஸ்கில் டெவலப்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தி சிக்கலை தீர்ப்பதாகக் கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. இப்படித் தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் அங்கும் உள்ளது'' என்றனர்.

தமிழகத்துக்கு இழப்புதான்!

என்றாலும், 'ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் முதலீட்டை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல நினைப்பது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். கடந்த ஓராண்டில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு சென்றுள்ளன. இந்த முதலீடுகள் தமிழகத்திலேயே போடப்பட்டிருந்தால் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கும். பொருளாதார வளர்ச்சியும் கணிசமான அளவு உயர்ந்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் இது தமிழகத்துக்கு இழப்புதான்' என்கின்றனர் சிலர்.  

என்ன செய்யலாம்?

தமிழகத்திலிருந்து தொழில் முதலீடுகள் வெளிமாநிலத்துக்குச் செல்வதைத் தடுக்கத் தமிழக அரசாங்கம் என்ன செய்யவேண்டும் எனத் தொழிற்துறையினரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் வைத்த கோரிக்கைகள்:

மின்சாரம்தான் மிக முக்கியப் பிரச்னை. எனவே, தொழிற்துறையினருக்கு முடிந்தவரைத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க அரசே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. இதுமாதிரி தமிழக அரசாங்கம் செய்தால், இங்குள்ள எந்த முதலீடும் வெளியேறாது. ஆனால், வெளிமாநிலங்களிலிருந்து புதிய முதலீடு தமிழகத்துக்கு வரும்.

தேவையான அளவு தொழிலாளர்களை ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சிகளை வழங்கி தயார்படுத்து வதற்கான முயற்சிகள் மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப் படுகின்றன. தமிழகத்தில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பிட்ட அளவுக்குமேல் முதலீடு செய்வோருக்கும், வர்த்தகம் செய்வோருக்கும் குஜராத் போன்ற மாநிலங்களில் அரசு வரிச் சலுகை அளிக்கிறது. இந்த முறையைத் தமிழகம் பின்பற்றலாம். மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கான  பதிவு செய்து, உரிமம் பெறுவதில் துவங்கி, வரிச் சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறுவது வரை அனைத்தும் அரசாங்கமே செய்துவிடுகிறது. இதனால் தொழில் துவங்கி நடத்துவது என்பது மற்ற மாநிலங்களில் மிக எளிதாக உள்ளது. தமிழகத்திலும் அப்படி ஒரு நிலை வரவேண்டும்'' என்றனர்.

தொழிற்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தைக் கொண்டுவர நினைக்கிற முதல்வர் ஜெயலலிதா, இவற்றைப் பரிசீலித்து நிறைவேற்றுவாரா?

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism