உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்
##~## |
அன்றாட வாழ்வில் பணம் குறித்த புலம்பல்கள் பலவற்றையும் நாம் தொடர்ந்து செய்துகொண்டும், நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்து கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். உலகத்தில் இருக்கும் மக்கள்தொகையில் இத்தனைபேர்தான் பணவசதியுடன் இருக்கவேண்டும், இத்தனைபேர் நிச்சயம் பணவசதி இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஏதாவது ரகசிய விதி இருக்கிறதோ? என்று நினைக்கும் அளவுக்குப் பலரும் பணமில்லாத நிலைகுறித்துக் கவலைப்பட்டும் புலம்பியும் திரிகின்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படிப் புலம்புபவர்களில் பலரையும் இந்த நிலையிலிருந்து வெளிவர நீங்கள் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் என்னென்ன என்று பட்டியலிடுங்கள் என்று நிதானமாகக் கேட்டால், என்ன பதில் வரும்?
சிலர் பயமாக இருக்கிறது என்பார்கள். சிலர் தற்போது பிழைக்கும் பிழைப்பை ஓட்டவே நேரம் சரியாக இருக்கிறது என்பார்கள். இன்னும் சிலர் பணத்தைப் போட்டால்தானே பணம் எடுக்க முடியும். முதல் போடுவதற்குப் பணம் எங்கே இருக்கிறது என்பார்கள். இப்படிப் பல்வேறு விதமான காரணங்கள் சொன்னாலும் இவர்கள் அனைவரிடத்திலுமே பயம் என்பதுதான் பெரிய அளவில் குவிந்து கிடக்கும்.
பணம் சம்பாதிப்பது என்பது மிதிவண்டி ஓட்டுவதுபோல் ஒருகலை. அதிகத் தூரம் நடந்துபோக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மிதிவண்டி (காலத்துக்கு ஏற்றாற்போல் டூவீலர் என்றுகூட நீங்கள் வைத்துக்கொள்ளலாம்!) ஓட்டத் தெரியாத ஒருவர், மிதிவண்டி ஓட்டுபவர்களைப் பார்த்து பெருமூச்சுவிடுவார். அதேசமயம், மிதிவண்டி ஓட்டப் பழகுபவர்கள் கீழே விழுந்து அடிபட்டதைக் கண்டால், 'அய்யோ, இது நமக்கு ஆகாது’ என்று பட்ட அடியின் மீதும் அதனால் அவருக்கு வந்த வலியின் மீதுமே கவனமாக இருப்பார்.

வண்டி ஓட்டத் தெரிந்தவரிடத்தில் கேட்டால், ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்சம் விழுந்து எழுந்து கற்றுக்கொண்ட பின்னர் இப்போது சௌகரியமாக இருக்கிறது. எக்கச்சக்கமாக நேரமும் கிடைக்கின்றது, சோர்வும் குறைகிறது என்பார். நன்கு பழகிய பின்னரும் மிதிவண்டி ஓட்டுவதில் ஏதும் ரிஸ்க் இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது. வேறு ஏதாவது வாகனங்கள் வந்து இடித்தால் பிரச்னைதான் என்பார்.
மிதிவண்டியில் போகும்போது வேறு வண்டியில் அடிபட்டு கீழே விழுந்தால் வலியை யார் படுவது என்று ஒரு கேள்வி வரும். பழகும்போது வரும் சிக்கல்கள், பயணிக்கும்போது இருக்கும் சிக்கல்கள் என்ற இரண்டுவகைச் சிக்கல் களையும் நினைத்து, மிதிவண்டி பழகாமல் நடந்தேபோக நினைத்தால் அன்றாடம் கஷ்டநிலைதான். அப்படி நடந்துபோகும்போதுகூட ஏதாவது வாகனம் வந்து இடித்தால் வலியும் வேதனையும் உறுதிதானே!
இந்த மிதிவண்டி உதாரணம்தான் பணத்திலும். மிதிவண்டியை ஓட்ட ஆரம்பித்துப் பழகப் பழகவும் கைதேர்ந்த ஓட்டுநரான பின்னரும்கூடத் தொடர்ந்து சிக்கலான சூழல்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கவே செய்கிறது. அதேசமயம் பழகப் பழக, முயற்சிகள் செய்யச் செய்ய அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் ஓட்டுபவரை அநாயசமாகப் பயணிக்கவும் வைக்கிறது. மிதிவண்டியில் பழகி, மோட்டார் சைக்கிள், கார், பென்ஸ் எனப் பல படிநிலைகளையும் அவர் தாண்டவே செய்கிறார்.
மிதிவண்டியை ஓட்டப் பழகாதவர்கள் வாழ்க்கையின் இறுதிவரையிலும் பயத்துடனேயே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். முயற்சிகளை எடுத்துப் பணத்தைச் சம்பாதித்துச் சிக்கல்களை எதிர்கொண்டவர் பணத்துடனும் ஏனையவர்கள் பயத்துடனும் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

மிதிவண்டி பழகுவது என்பது தனியொரு நபராகச் சாத்தியமில்லாத விஷயம். பெரும்பாலானோர் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தே இதனைக் கற்றிருப்பார்கள். அப்பாவோ, சித்தப்பாவோ, எதிர்வீட்டு மாமாவோ/இளைஞனோ மிதிவண்டிப் பழகும் இடத்தில்கூட இருந்திருப்பார். கொஞ்சம்
கொஞ்சமாகப் பழகி ஒரு குழுவாக இருந்தே நல்ல நிலையை அடைந்திருப்போம். இதில் அதி பயந்தாங்கொள்ளியாக ஒன்றிரண்டு நண்பர்கள் நம் அனைவருக்கும் இருந்திருக்கவே செய்வார்கள். அவர்களுக்கும் நம்பிக்கை தந்து பின்னால் ஓடி கஷ்டப்பட்டுக் கற்றுக்கொடுத்திருப்போம்.
மிதிவண்டியைப் போலவே, பணத்தைப் பொறுத்தவரையிலும் நீங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கை ஒன்றேதான். முடியும் என்றால் முயற்சி செய்வது. அதென்ன பயிற்சி என்பீர்கள். எங்கேயும் கைகொடுக்க நம்மைச் சுற்றி ஒரு குழுதான் இருக்கவே இருக்கிறதே! நீங்கள் இருக்கும் வேலை, உங்கள் நண்பர்கள் இருக்கும் தொழில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் பலதொழில்கள் போன்றவற்றில் சம்பளத்துடனோ, சம்பளம் இல்லாமலோ களம் இறங்கி வேலைபார்த்து பயிற்சிகளை எடுப்பதும் இந்தவகையையே சாரும்.
நம் வாழ்வில் பலவிஷயங்களை நாம் தேர்வு செய்ய முடியாது. ஆனால், நாம் வாழும் வாழ்க்கைப் பாதையை நாம் நிச்சயமாய்த் தேர்ந்தெடுக்க முடியும். இதிலும் நாம் நம்முடைய தேர்வு செய்யும் உரிமையை விட்டுத் தந்துவிட்டு பலரும் போகும் பாதையான நிலையான வருமானம் என்ற வேலைக்குச் செல்லும் பாதை யில் போக நினைத்தால் அந்தப் பாதையில் வரும் இடர்களைத் தாங்கிக்கொள்ளவும், பயணம் மிகவும் வேகமற்றதாகவே இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டுமே செயல்பட வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் சம்பளம், நாளடைவில் நம்மை அடிமையாக்கிவிடும் (அடிக்ஷன்) குணமுடையது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
குழு, குழு என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சொல்லிவிட்டீர்களே, அதன் முக்கியத்துவம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பிசினஸில் ஜெயிக்க இந்த டீம்-வொர்க் முக்கியம். நல்லவர்கள், கெட்டவர்கள், திறமையானவர்கள், திறமையில்லாதவர்கள், அதிபுத்திசாலிகள், குறைந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள் எனப் பலரும் சேர்ந்ததுதான் உலகம். நிறுவனங்களும் உலகத்தின் சிறிய வடிவம்தான். எனவே, எல்லாப் பிரிவினரும் சேர்ந்து ஒருமனதாக விட்டுக்கொடுத்து, சொல்லிக் கொடுத்து, தள்ளிக்கொடுத்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும் என்று நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்குச் சொல்லித்தரும்.
வேலைக்குச் சேரும்போது, சேர்ந்த பிறகு டீம்-வொர்க் என்கிற சித்தாந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவே அனைவருக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. டீம்-வொர்க் அலுவலகத்தில் உள்ள நல்ல பல விஷயங்களை (இன்சென்டிவ், அப்ரைசல், புரமோஷன்) கொண்டு வருவதற்கு உதவும். வேலையில் இருக்கும்போது பல்வேறு டிபார்ட்மென்ட்களும் எப்படிக் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது என்று புரிந்துகொள்ளவும் முடியும். சைக்கிளில் ஆரம்பித்த டீம்-வொர்க், வேலை வரையிலும் தொடரவே செய்கிறதே!

அதேசமயம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நீங்கள் வேலையைவிட்டு வெளியேறி சொந்தமாய்ச் செயல்பட ஆரம்பிக்கும் போது இந்த டீம்-வொர்க் என்ற சித்தாந்தம் கொஞ்சம் உங்களைத் தடுமாறவைக்கும். டீம்-வொர்க்கை நீங்கள் உங்களிடம் பணிபுரிபவர் களிடத்தில் நம்பவைக்க வேண்டி யிருக்கும். பலசமயம் குழுவில் ஒருவராக இருப்பதைப்போல் நடிக்க வேண்டியும் இருக்கும். குழுவில் இருக்கும் சொத்தைகளைப் பலசமயம் பிடுங்கி எறியவும் மனதைக் கல்லாக்கி தயாராக இருக்கவேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது அனுசரணை! முதலாளியானால் (குழுவினால் வரும் முழுப்பலனையும் பெறுபவராக மாறியபின்னர்) அனுசரணையின்மை! இந்த மனநிலை மாற்றம் உங்களைச் சிலகாலம் தடுமாறவே வைக்கும். நிர்வாகம் நீண்டநாட்கள் உங்களுக்குக் கொடுத்த பயிற்சியாயிற்றே! அவ்வளவு சுலபத்தில் மறக்க முடிந்துவிடுமா என்ன? இரண்டு, மூன்றுமுறை உங்கள் சொந்த நிறுவனத்தில் பெரும் சொதப்பல்கள் நடந்த பின்னர் நீங்களே மனதைக் கல்லாக்கிக் குழுவை நிர்வகிக்க ஆரம்பிப்பீர்கள். இறுதியாக நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். பெரிய நிறுவனங்களில் நடக்கும் நிர்வாகத்தில் திறமையானவர்கள் மற்றும் திறமைக் குறைந்தவர்கள் எனப் பலரும் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இதில் உங்களைப் போல் திறமையானவர்கள் மனச்சோர்வடையக் கூடாது என்பதற்காகவே டீம்-வொர்க் என்ற ஐடியாவை நிறுவனம் போதிக்கிறது.
அதேசமயம், நம்முடைய நிறுவனம் சிறியதாக இருப்பதால் சொதப்பல்களைத் தாங்கிக்கொள்ளப் பணரீதியாகத் திறனற்றதாக இருக்கிறது. அதனாலேயே திறமையின்மையை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறேன் என்ற விடையைக் கண்டுபிடிப்பீர்கள். டீம்-வொர்க் என்ற மந்திரம் எப்படித் திறமை நிறைந்த உங்களைக் கொஞ்சகாலம் வேலையில் கட்டிப்போட்டிருந்தது என்பதனையும் உணர ஆரம்பிப்பீர்கள். அதேசமயம் தேவைப்படும் இடத்தில் சாட்டையைச் சுழற்றவும் கற்றுக்கொள்வீர்கள்.
(கற்றுத் தேர்வோம்)