Published:Updated:

தமிழ்ப் பேசும் ஆடைகள்!

இணைய வர்த்தகத்தில் மாத்தியோசி இளைஞர்கள்ஞா.சுதாகர்

தமிழ்ப் பேசும் ஆடைகள்!

இணைய வர்த்தகத்தில் மாத்தியோசி இளைஞர்கள்ஞா.சுதாகர்

Published:Updated:
##~##

ஆங்கில வாசகங்கள் எழுதிய டி-ஷர்ட்களைத்தான் இன்றைய இளைஞர்கள் அணிகின்றனர். ஆங்கில வாசகங்களுக்கு பதிலாக தமிழ் வாசகங்களை டி-ஷர்ட்களில் எழுதினால்...?

இப்படி ஒரு வித்தியாசமான யோசனை சென்னையைச் சேர்ந்த மூன்று  இளைஞர்களுக்கு வர,  இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தமிழ் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை இணையதளத்தின் மூலம் அமோகமாக விற்றுவருகிறார்கள் லெனின், யுவராஜ், கோபிநாத் என்கிற இளைஞர்கள். டி-ஷர்ட்டில் தமிழ் வாசகங்கள் எழுதும் இந்த ஐடியா எப்படி வந்தது என அவர்களிடம் கேட்க, அவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்ல  ஆரம்பித்தார்கள். முதலில், லெனின் பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆரம்ப அத்தியாயம்!

'நாங்கள் மூவரும் கடந்த ஆண்டுதான் பொறியியல் படித்து முடித்தோம். படிக்கும்போதே சுயதொழில் தொடங்கவேண்டும் என்று ஆர்வத்தில் இருந்தோம். படிப்பு முடிந்த கையோடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தோம். அப்போதுதான் டி-ஷர்ட்கள் எங்கள் கண்ணில்பட்டது. ஆங்கில வாசகங்களைக்கொண்ட டி-ஷர்ட்கள் மட்டுமே அதிகம் கிடைக்கின்றன. அதில் சில மோசமான வாசகங்களாகவும் இருந்தன.  அர்த்தம் தெரியாத ஏதோ ஒரு வாசகத்தைச் சட்டையில் எழுதிக்கொள்வதைவிட, அழகு தமிழில் நல்ல வாசகங்களை அச்சிட்டுத் தந்தால், அதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தோம்.

தமிழ்ப் பேசும் ஆடைகள்!

இந்தியாவில் பனியன் என்றாலே திருப்பூர்தான். என்றாலும், திருப்பூரில் அல்லது தமிழ்நாட்டில் தயாரான பனியன் என்று சொல்லிக்கொள்கிற மாதிரி அது ஒரு பிராண்டாக உருவாகவில்லை. ஆனால், எங்கள் தயாரிப்புத் தமிழகத்தில் தயாரானவை என்பதைச் சொல்வதற்காக 'இலவம்’ எனத் தமிழ்ப் பெயரை எங்கள் நிறுவனத்துக்கு வைத்தோம். இப்படிப் பலவகையிலும் யோசித்துதான் எங்கள் பிசினஸ் முயற்சியைத் தொடங்கினோம்'' என்று பேசியவரைத் தொடர்ந்தார் யுவராஜ்.

 பெயருக்கு முக்கியத்துவம்!

'எங்கள் தயாரிப்பை இணையம் மூலம் விற்க முடிவு செய்தோம். மனதில் நிற்கும் நல்ல பெயரை வைப்பதன் மூலமே இணையத்தில் ஜெயிக்க முடியும் என்று நினைத்தோம்.  எங்கள் குழுவில் இருக்கும் கோபிநாத் ஐடி படித்து முடித்தவர். அவருடைய உதவியோடு நாங்கள் எங்கள் இணையதளத்தை வடிவமைக்கும் வேலையில் இறங்கினோம். முதலில் வாகை, தமிழ்க்கடை எனப் பரிச்சயமான பெயர்களையே தேர்வு செய்ய நினைத்தோம். ஆனால், இந்தப் பெயர்களில் வலைதளம் (டொமைன்) கிடைப்பதற்கு அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது. எனவே, 'இலவம்’ (www.ilavam.com)  என்ற பெயரைத் தேர்வு செய்தோம். வெறும் 600 ரூபாயில் இந்த வலைதளம்  எங்களுக்குக் கிடைத்தது'' என்று பேசியவரை இடைநிறுத்தி, அடுத்து பேச ஆரம்பித்தார் கோபிநாத்.

தமிழ்ப் பேசும் ஆடைகள்!

''பனியன் தொழில் என்பது எங்களுக்குத் துளியும் பரிச்சயமற்ற ஒன்று. இதில் ஜெயிக்கக் கண்டிப்பாக அனுபவம் வேண்டும் என்று நினைத்து, அதுபற்றிக் கற்றுக்கொள்ளத் திருப்பூருக்குச் சென்றோம். ஆனால், யாரும் கற்றுகொடுக்கத் தயாராக இல்லை. சிலர் மட்டும் இதுதொடர்பாகக் கற்றுகொடுக்க முன்வந்தனர். அப்போது அவர்கள் தொழிற்சாலைக்குச் சென்று அங்கு அச்சிடும் பணியைப் பார்வையிட்டு அதைச் சிறிது சிறிதாகக் கற்றோம்.

டி-ஷர்ட்டுக்கான மூலப்பொருளைத் திருப்பூரிலிருந்தே வாங்கினோம். அதில் வாசகங்கள் அச்சிட இயந்திரங்கள் வேண்டும் என்றபோது ஒரு இயந்திரம் ரூ.50,000 ஆகும் என்றார்கள். எங்கள் மூவரில் இருவர் இயந்திரவியல் படித்தவர்கள் என்பதால் அதைப்பற்றி இணையத்தில் தேடிக் கற்றோம். இப்படி ஒவ்வொரு பாகம் பற்றியும் அறிந்து உதிரிபாகங்கள் வாங்கி முழு இயந்திரத்தினையும் உருவாக்கினோம். இதற்கு நாங்கள் செலவு செய்தது வெறும் 5,000 ரூபாய்தான்'' என்றார்.

தமிழ்ப் பேசும் ஆடைகள்!

 புதுமை முக்கியம்!

மீண்டும் பேச ஆரம்பித்தார் லெனின். ''இந்தத் தொழிலில் எங்களுக்கு எடுத்தவுடன் லாபம் கிடைத்துவிடவில்லை. முதல் மாதம் எங்களுக்குக் கிடைத்த வருமானம் வெறும் ரூ.400 மட்டுமே. ஆரம்பத்தில் விழாக்கள், கல்லூரி நிகழ்ச்சிகளுக்குப் பிரத்யேக வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஆர்டர் வாங்கினோம். அந்த லாபத்தை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து எங்கள் பிசினஸ் முயற்சியைத் தொடர்ந்தோம். இன்று எங்கள் தயாரிப்புகளில் ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைவிட ஏதாவது ஒரு புதுமையைப் புகுத்தி வருகிறோம்'' என்றார்.

 குவியும் ஆர்டர்கள்!

'இணையம் மூலம் நாங்கள் விற்பதால் வெளிநாடுகளான துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வத்துடன் எங்கள் தயாரிப்புகளை வாங்குகின்றனர். மொழி தெரியாத வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்கூட வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

நம் நாட்டில் பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களிலிருந்தும் ஆர்டர் தருகின்றனர். தற்போது இதை மொத்தமாகக் கொள்முதல் செய்யப் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் விண்ணப்பம் வந்துள்ளது. இதை விரிவுபடுத்த யோசித்து வருகிறோம்'' என்றார் கோபிநாத்.

''ஆரம்பத்தில் மிகுந்த அச்சத்துடனே இந்தத் தொழிலைத் தொடங்கினோம். நாங்கள் மூவரும் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களே. இதற்கு நாங்கள் போட்ட முதலீடு ஒரு லட்சத்துக்கும் குறைவே. உலகளவில் இலவம் என்ற வணிகப் பெயரைத் தமிழர்களின் குறியீடாக அறியச் செய்வதே எங்கள் நோக்கம். அனைவரது டி-ஷர்ட்களும் தமிழ் பேச வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்'' என்றனர் அந்த மூன்று இளைஞர்களும்.

சாதிக்க நினைக்கும் இந்த இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்!

படங்கள்:  தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism