Published:Updated:

ஷேர்லக் - திவால் திகிலில் யுனைடெட் பேங்க்!

ஷேர்லக் - திவால் திகிலில் யுனைடெட் பேங்க்!

ஷேர்லக் - திவால் திகிலில் யுனைடெட் பேங்க்!

ஷேர்லக் - திவால் திகிலில் யுனைடெட் பேங்க்!

Published:Updated:
##~##

'அரவிந்த் கெஜ்ரிவாலின் 48 நாள் நாடகம் முடிந்தது! ஜன்லோக் பால் மசோதாவைக் கொண்டு வரமுடியாத காரணத்தினால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் அரவிந்த்’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். உடனே, சந்தை தொடர்பான செய்திகள் பக்கம் திரும்பியவர், ''முதலில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்'' என்றார். ''என்ன அது?'' என்றோம்.

''யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு பொதுத்துறை வங்கி. இந்த வங்கியின் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாகவே தாறுமாறாக நடந்துவந்திருப்பது இப்போது தெரிந்திருக்கிறது. வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் பணத்தைத் திரும்பக் கட்டவில்லை எனில், அதை ஆட்டோமேட்டிக்காகக் கண்டுபிடித்துச் சொல்லும் சிஸ்டம், யுனைடெட் வங்கியில் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக 'ஆஃப்’ செய்து வைக்கப்பட்டிருக்கிறதாம். வேண்டுமென்றேதான் இதை 'ஆஃப்’ செய்தார்களா அல்லது மறதி காரணமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டார்களா என்பது புதிராக இருக்கிறது. இதனால் இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் தற்போது 10.89% என்கிற அளவுக்கு உயர்ந்து, அபாய கட்டத்தைத் தாண்டிப்போய் நிற்கிறதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வங்கியில் என்னதான் நடக்கிறது என ஆராயும் வேலையை அமெரிக்காவின் டெலாய்ட் நிறுவத்துக்கு ஆர்பிஐ தர, அந்த நிறுவனம் இந்த அதிர்ச்சித் தகவல்களைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்த வங்கியின் மூலதனத் தன்னிறைவு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. ட்யர் 1 நகரங்களில் இந்த வங்கியின் மூலதனம் கடந்த டிசம்பருக்குள் 5.6% குறைந்திருக்கிறதாம். இதையெல்லாம் பார்த்த ஆர்பிஐ, மத்திய அரசாங்கம் ஒரு கமிட்டியை நியமித்து பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகச் செயல்பாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசனைச் சொல்லி இருக்கிறது. ஏறக்குறைய திவால் திகிலில் சிக்கியிருக்கும் இந்த வங்கியிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருப்பது நல்லது'' என்றவருக்கு, கேரட் அல்வா சுடாகத் தந்தோம்.

''எஸ்பிஐ-ன் நிகர லாபம் 34% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே?'' என்றோம்.

''எஸ்பிஐ-ன் நிகரலாபம் 34.2% குறைந்து ரூ.2,234.34 கோடியாக உள்ளது. வாராக்கடனுக்கு அதிக ஒதுக்கீடு மற்றும் செலவு அதிகரிப்பால் இதன் நிகர லாபம் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் வகையில் ரூ.5077 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய முதலீட்டைத் திரட்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது எஸ்பிஐ வங்கிக்கு. சமீபத்தில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டின் மூலம் 1.5 பில்லியன் டாலர் பணத்தைத் திரட்ட  நினைத்தது எஸ்பிஐ. ஆனால், 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே அதனால் முதலீட்டைத் திரட்ட முடிந்திருக்கிறது. வெறும் 250 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே எஃப்ஐஐகள் முதலீடு செய்திருக்கிறார்கள். எஸ்பிஐ வங்கி கடந்த காலத்தில் இவ்வளவு மோசமான வரவேற்பைக் கண்டதே இல்லை. ஆகப் பெரிய வங்கிக்கே  இந்த நிலைமை!''  என்றவரிடம், ''வேறு என்ன செய்தி?'' என்று கேட்டோம் ஒரு கப்பில் டீ தந்தபடி.

ஷேர்லக் -  திவால் திகிலில் யுனைடெட் பேங்க்!

''நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு (கார்ப்பரேட் டெட் ரீஸ்ட்ரக்ஷரிங் - சிடிஆர்) மிகப் பெரிய அளவில் பயமுறுத்தும் விஷயமாக மாறியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறு பெரிய கம்பெனிகள் வாங்கியிருந்த ரூ.110 பில்லியனுக்கான கடன், சிடிஆர் செல்லுக்கு மறுசீரமைப்பு செய்யக் கேட்டு வந்திருக்கிறதாம். கடந்த ஆண்டில் ரூ.230 பில்லியனாக இருந்த கடன் மறுசீரமைப்பு, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ரூ.360 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பில் சிக்கியுள்ள ஐந்து முக்கிய துறைகளின் பங்கு 5 முதல் 20% வரை இருக்கிறதாம். உள்கட்டமைப்பு, இரும்பு மற்றும் உருக்குத் துறை, மின் உற்பத்தி ஆகிய நிறுவனங்களின் பங்கு மிக அதிகமாக இருக்கிறதாம். எனவே, இந்தத் துறை பங்குகள் குறித்து கொஞ்சம் உஷாராகவே இருப்பது நல்லது'' என்றார்.

''அடுத்த முக்கிய செய்தி என்ன?'' என்றோம்.

''பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் நிர்வாகம் சிறப்பாக இருக்க எடுக்கவேண்டிய கார்ப்பரேட் கவர்னன்ஸு-க்கு செபி அமைப்பின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதிகபட்ச இண்டிபென்டன்ட் டைரக்டர்களின் எண்ணிக்கை, விசில் ப்ளோயர் பாலிசி, சிஇஓகளின் சம்பளத்துக்குக் கட்டுப்பாடு போன்றவை முக்கியமானவையாகும். மேலும், மியூச்சுவல் ஃபண்டு வரிச் சேமிப்புத் திட்ட முதலீட்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை அளிக்கவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு செபி கோரிக்கை வைத்துள்ளது. செபியின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால், சிறு முதலீட்டாளர்கள் நன்மை அடைவார்கள்'' என்றார்.

''சன் பார்மா நிறுவன பங்கின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளதே..?'' என்று ஆச்சர்யப்பட்டோம்.

''கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இதன் நிகர லாபம் 74% அதிகரித்து ரூ.1,531 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ரூ.2,852.01 கோடியாக இருந்த விற்பனை, ரூ.4,286 கோடியாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்ததும் நிகர லாப அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் சன் பார்மாவின் மருந்து விற்பனை 57% அதிகரித்து 434 மில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவில் விற்பனை 20% அதிகரித்து ரூ.947 கோடியாக உள்ளது. தரச் சிக்கலில் மாட்டியிருக்கும் ரான்பாக்ஸி மீது சன் பார்மாவுக்கு ஒரு கண் இருக்கிறதாம். எனவே, ரான்பாக்ஸியை ஃபாலோ செய்வது நல்லது'' என்று விளக்கம் தந்தார்.

''பொதுமக்களிடமிருந்து முதலீட்டுத் திட்டம் என்கிற பெயரில் நிதித் திரட்டி  மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் பற்றி மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் அமைச்சகத்திடம் கேட்க, ஏறக்குறைய  35,000 நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டு இருக்கிறதாம். கூடிய விரைவில் இந்த நிறுவனங்கள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார் ஷேர்லக்.

''தேர்தலுக்குமுன் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. தேர்தலில் பாஜக ஜெயித்து, மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால், சில நாட்களிலேயே சென்செக்ஸ் 3000 புள்ளிகள் உயரவும் வாய்ப்புண்டு என்கிறார் மும்பையைச் சேர்ந்த என் அனலிஸ்ட் நண்பர். பார்த்துக்கொள்ளவும்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism