##~##

ஒருமுறை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்காக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மத்தியில் 'இன்டர்பெர்சனல் ரிலேஷன்ஷிப்’ பற்றி பேசினேன். ''உலகத்திலேயே எந்த உறவு மிகச் சிறந்தது?'' என்று கேட்டேன். 'தாய், தந்தை, மனைவி, நண்பன், அலுவலக நண்பர்கள்...'' என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.

தாய், தந்தையை விட்டுவிடுங்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இல்லை. ஆனால், மனைவி, நண்பர்கள், அலுவலகத் தோழர்களை நாம் தேர்வு செய்யலாம். அவர்களைத் தேர்வு செய்கிறபோது நான்கு முக்கியமான நிலைகளை நாம் கடக்கவேண்டியிருக்கிறது. முதலாவது, அறிமுகம்; இரண்டாவது, புரிந்துகொள்ளுதல்; மூன்றாவது, ஏற்றுக்கொள்ளுதல்; நான்காவது, சேர்ந்துவாழத் தொடங்குதல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த உறவாக இருந்தாலும் சரி, அதன் ஆயுளைத் தீர்மானிப்பதில் நம்முடைய குடும்பச் சூழல், நம்முடைய சமுதாயச் சூழல், நம்முடைய வேலை செய்கின்ற இடத்தின் சூழல் என்கிற மூன்று விஷயங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கிற மனிதர்கள், நிகழ்வுகள் இவற்றின் தாக்கம் உங்களுடைய மனநிலையை ஆட்கொண்டு நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. உங்களது வெற்றி, தோல்வியும் இங்கேதான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் தனித்தன்மை கொண்டவராக ஆவதும் இங்குதான்.

உனக்கும் மேலே நீ

அடுத்தவர்களுடனான நம் உறவை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? ஒருவர் நமக்குப் பிடித்துவிட்டால், அவர் என்ன செய்தாலும் நாம் ஒப்புக்கொள்கிறோம். பிடித்த நண்பர் தவறு செய்தாலும் தெரிந்தே அவருக்கு ஆதரவு அளிக்கிறோம். ஒருவர் பிடிக்கவில்லையெனில், அவர் என்னதான் நல்லது செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு ஆசிரியரை நமக்குப் பிடிக்கும். ஆனால், அவர் நடத்தும் பாடம் நமக்குப் பிடிக்காது. ஆனால், அந்த ஆசிரியரைப் பிடித்ததாலேயே அந்த சப்ஜெக்ட் நமக்குப் பிடித்துவிடும். பிடித்த பாடத்தைப் பிடிக்காத ஆசிரியர் சொல்லித் தந்தால், அந்தப் பாடமே நமக்குப் பிடிக்காமல் போய்விடும்.

அலுவலகத்தில் உங்கள் உயரதிகாரியை முதல் சந்திப்பிலேயே உங்களுக்குப் பிடித்துவிட்டால், அவருக்காக ஓவர் டைமில் வேலை பார்க்க தயங்கவே மாட்டீர்கள். இப்படி அமையும் உறவு எப்போதும் நிலைத்து நிற்கிற மாதிரி இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை பிடிக்கிற நபர், திடீரென பிடிக்காமல் போய்விட்டால் பிற்பாடு அவருடனான உறவு அறுந்துவிடும். அதன்பிறகு அவர் என்ன

உனக்கும் மேலே நீ

சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். அவர் சொல்வதற்கு எதிரான விஷயத்தையே செய்வீர்கள்.

மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அதுபோல நீங்களும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள ஆரம்பித்தால், உங்களுக்கு யாருடனும் எந்தப் பிரச்னையும் இருக்காது. மற்றவர்கள் விரும்புவதை நாம் கொடுத்தால், நீங்கள் விரும்புவதை மற்றவர்கள் கொடுப்பார்கள்.

உள்நோக்கம் வைத்துக்கொண்டு உறவுகளை வளர்க்காதீர்கள். நாம் ஒரு பரிசு கொடுத்தால் மற்றவர்களும் நமக்கு ஏதாவது ஒரு பரிசு தருவார்கள் என்று நினைக்காதீர்கள்.  

மற்றவர்களுடனான உறவில் எந்த சுணக்கமும் வராமல் இருக்க சில வழிகளைச் சொல்கிறேன்.

அலுவலகத்துக்குப் போனால், முதலில் வாழ்த்து சொல்லுங்கள். செக்யூரிட்டி முதல் மேனேஜர் வரை வாழ்த்து சொன்னால் சந்தோஷப்படாத மனிதர்களே இருக்கமாட்டார்கள்.

ஒருவரது நல்ல விஷயங்களை பொதுவில் வெளிப்படையாகப் பேசுங்கள்.

ஒருவர் தவறு செய்தால் அவரைத் தனியாக அழைத்து அந்தப் பாதிப்பை புரியவையுங்கள்.

உங்கள் வீட்டில் உங்கள் அலுவலகத்தை குறை கூறாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் வீட்டைப் பற்றி குறை கூறாதீர்கள்.

மற்றவர்களின் வெற்றி நம் வெற்றி என்றும், நம் வெற்றியில் அடுத்தவரின் பங்கு இருக்கிறது என்பதை உணருங்கள்.

காரியம் முடிகிற வரைதான் உறவு; அது முடிந்தவுடன் அந்த உறவை வெட்டிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

நான் சொன்ன வழிகளை பின்பற்றிப் பாருங்கள். பிறகு மற்றவர்களுடனான உங்கள் உறவு கட்டாயம் வலுப்படும்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism