Published:Updated:

வேலையில் டார்கெட்... சமாளிக்கும் சூட்சுமம்!

ச.ஸ்ரீராம் படம்: ர.சதானந்த்.

##~##

இன்றைக்கு கார்ப்பரேட் உலகில் சிஇஓ முதல் சாதாரண ஊழியர்கள் வரை அனைவரும் கண்டு நடுங்கும் வார்த்தை, டார்கெட். மாத டார்கெட், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு டார்கெட் எனப் பல டார்கெட்கள் நம்மை நடுங்க வைக்கின்றன. இந்த டார்கெட்டை கண்டு பயப்படாமல் வெற்றிகரமாக நிறைவேற்றுவது எப்படி என தென்இந்தியாவிலேயே  மிக முக்கியமான எம்பிஏ கல்லூரியான கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டின் இயக்குநரும், பேராசிரியருமான ஆர்.எஸ்.வீரவல்லியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''டார்கெட் என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் பலரும் பயப்படவே செய்கிறார்கள். டார்கெட் என்பதை இலக்கு என புரிந்துகொண்டால் அதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது. இலக்கு என்பது எல்லா விஷயங்களிலும் இருக்கிறது. இலக்கு என்பது ஒரு வீணையிலிருந்து எழும் இசை போல கருதுங்கள்.  வீணையில் உள்ள கம்பிகள் தளர்வாக இருந்தாலும், மிகவும் இறுக்கமாக இருந்தாலும் அது சத்தத்தை மட்டுமே எழுப்பும். சரியான அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே நல்ல இசையைத் தரும். அதுமாதிரி டார்கெட்டும் சரியான நிர்வாக அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே அடைய முடிகிற ஒரு விஷயமாக மாறும்.

ஒரு நிறுவனம் டார்கெட்டை நிர்ணயிக்கும் முன்பு, யாருக்கு என்ன தேவை என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டபின், அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள் அல்லது சேவையானது தரமாக, விலை குறைவாக, வாடிக்கையாளர்களின் மனதைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே, அந்தப் பொருள் அல்லது சேவையை வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வாங்க நேரிடும். இதன்மூலமே அந்த நிறுவனம் டார்கெட்டை அடைந்து, லாபம் சம்பாதிக்க முடியும்.

வேலையில் டார்கெட்... சமாளிக்கும் சூட்சுமம்!

டார்கெட் என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பொருளை அதிக அளவில் விற்பது, உற்பத்தியைப் பெருக்குவது, லாபத்தை அதிகரிப்பது, முடிவாக வளர்ச்சியைக் கூட்டுவது எனப் பல நிலைகளில் நிர்ணயம் செய்யலாம்.

இந்த டார்கெட்டை நிறைவேற்ற ஒவ்வொரு  நிலையில் உள்ளவர்களும்  ஒவ்வொரு விதமாக செயல்பட வேண்டியிருக்கிறது. உயர்மட்டத்தில் உள்ளவர்கள் திட்டமிடுதல் என்ற அளவிலும், நடுநிலையில் உள்ளவர்களுக்கு  நிர்வகித்தல் என்ற அளவிலும், கடைசிமட்டத்தில் உள்ளவர்கள்  எண்ணிக்கை என்ற அளவிலும் டார்கெட்டை செயல்படுத்த வேண்டியிருக்கிறது. ஊர்கூடித் தேர் இழுக்கிற  விஷயம்தான் இந்த டார்கெட்.

வேலையில் டார்கெட்... சமாளிக்கும் சூட்சுமம்!

இந்த டார்கெட் இரண்டு வழிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒன்று, மேலிருந்து கீழே செல்லும் டார்கெட். அதாவது, ஒரு  நிறுவனம்  இந்த ஆண்டு இத்தனை கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்வது என்கிற முடிவை எடுப்பது விற்பனை டார்கெட். ஒரு மாநிலத்தில், அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள், மாவட்டங்களில் உள்ள நகரங்கள், அந்த நகரங்களின் அருகே  இருக்கும் சிறிய ஊர்கள் என மேலிருந்து பல பகுதிகளாக இந்த டார்கெட்டானது பிரிக்கப்படும்.

இரண்டாவதுமுறை, கீழிருந்து மேலே செல்வது. அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் விற்பனை செய்யவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துகொண்டு,  அதிலிருந்து நகரம், மாவட்டம்,  மாநிலம் என டார்கெட்களை மேலே கொண்டு செல்வது.

இந்த இரண்டு முறைகளில் எந்தமுறையில் டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டாலும், இதன்பிறகு ஒவ்வொரு தனிநபர் என்கிற அளவில் அந்த டார்கெட்டானது பல கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. டார்கெட் பெரிதோ, சிறிதோ அதை நிறைவேற்ற வேண்டிய வேலை தனிமனிதர்களிடமே இருக்கிறது.

ஒரு நிறுவனம் டார்கெட்டை நிறைவேற்றும்போது, பயமுறுத்தியே காரியத்தை சாதிக்க நினைக்கக்கூடாது. முடிந்தவரை ஊழியர்களை தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்துவதன் மூலமே நிறுவனத்தின் டார்கெட்டை அடைய முடியும்.

ஊழியர்கள் டார்கெட்டை அடைவதற்கும், அடையத் தவறுவதற்கும் இரண்டு விஷயங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, ஆசை அல்லது உற்சாகம். இரண்டாவது, பயம். இதில் முதல் விஷயம் பாசிட்டிவ் ஆனது; இரண்டாவது விஷயம், நெகட்டிவ் ஆனது. பாசிட்டிவ் ஆன விஷயத்தை  விட்டுவிட்டு, நெகட்டிவ்-ஆன விஷயத்துக்கான தீர்வை மட்டும் இப்போது பார்ப்போம்.

வேலையில் டார்கெட்... சமாளிக்கும் சூட்சுமம்!

முதலாவதாக, டார்கெட்டை பற்றி முதலில் ஒருவர் சரியாக புரிந்துகொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.  ஒருவர் சரியாக தன்னுடைய டார்கெட்டை புரிந்துகொள்ளவில்லை என்றால், அதை அவரால் நிறைவேற்ற முடியாது. இரண்டாவது, திறமை இல்லாதது. டார்கெட்டை நிறைவேற்றுகிற அளவுக்கு ஒருவருக்கு திறமை இல்லாமல் இருக்கலாம். திறமை இல்லாதவருக்கு உடனடியாக திறமையைத் தரமுடியாது. இந்தச் சமயத்தில் அதிக திறமை வாய்ந்த ஒருவரை அவருக்குத் துணையாக அனுப்புவது அவசியம்.

மூன்றாவது, நம்பிக்கை குறைபாடு. ஒருவருக்கு நம்பிக்கை இல்லை எனில் அவரால் நிச்சயமாக டார்கெட்டை அடைய முடியாது! எனவே, அவருக்கு நம்பிக்கை ஏற்படுகிற மாதிரி விஷயங்களை சொல்வதன் மூலம் அவருக்கான டார்கெட்டை அடைய நிர்வாகத்தால் உதவமுடியும். நான்காவது, இது ஒரு குழு முயற்சி என்பதை  சொல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தனியாக செய்வதைவிட குழுவாக செய்யும்போது பயம் விலகி, உற்சாகம் பிறக்கும்.

ஐந்தாவது, ஒருமுறை டார்கெட்டை நிர்ணயம் செய்துவிட்டு விட்டுவிடக் கூடாது. அதை குறித்த கால அளவில் மதிப்பீடு செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், டார்கெட்டை அடையவே முடியாது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட்டாலே போதும், எவ்வளவு பெரிய டார்கெட்டையும் அடைய முடியும்'' என்றார் பேராசிரியர் வீரவல்லி.

அவர் சொன்னதை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன்!

அடுத்த கட்டுரைக்கு