Published:Updated:

தனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு!

இரா.ரூபாவதி

பெண்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக சில பெண்கள் தனித்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் பொருளாதார ரீதியாகத் தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை நிதி ஆலோசகர் ஏ.பி.வாசுதேவனிடம் கேட்டோம்.  

''இன்றைக்குத் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காததால் தனித்து வாழ்பவர்கள், சூழ்நிலை காரணமாகத் திருமணம் செய்துகொள்ளாதவர்கள், கணவனை இழந்தவர்கள், விவாகரத்து ஆனவர்கள் எனப் பல காரணங்களினால் பெண்கள் தனித்து வாழவேண்டிய சூழல் உருவாகிறது. இவர்கள் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேலைக்குப் போய் சம்பாதிக்கின்றனர். இப்படி சம்பாதிக்கும் பணத்தைத் தேவைக்கேற்ப எப்படி முதலீடு செய்வது என்பது முக்கியமான விஷயம்.

தனித்து வாழும் பெண்களைப் பொறுத்தவரை, சேமிப்பு என்பது தேவையின் அடிப்படையில் இருக்கும். அதாவது, குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வுக்காலம் போன்றவை முதலில் இருக்கும். வீடு வாங்குவது, கார் வாங்குவது, வெளிநாடுகளுக்குச் செல்வது போன்ற ஆசைகளைப் பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு நிறைவேற்றிக்கொள்ளலாம்'' என்றவர், முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

தனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு!

திருமணமாகாத பெண்கள்!

''திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்கள் முதலில் செய்யவேண்டியது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான். ஏனெனில், தனிமையில் வசிப்பவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகமான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மருத்துவத் தேவைகள் ஏற்படும் சமயங்களில் யாரிடமும் உதவி கேட்க முடியாது என்பதால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்.

அடுத்து, ஓய்வுக்காலத்தில் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முதலீட்டைத் தொடங்குவது. காரணம், தனித்து வாழும் பெண்கள்  ஓய்வுபெறும்போது அவர்களுக்கு உதவி செய்யப் பலரும் முன்வரமாட்டார்கள். வேலைக்குப்போகிற வரை செலவுகளை எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம். அதன்பிறகு என்ன செய்வார்கள் என்பது முக்கியமான கேள்வி.

முதுமைக்காலத்தின் தேவை களுக்காக அதிக ரிஸ்க் இல்லாத முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. பி.பி.எஃப், தேசிய ஓய்வூதியத் திட்டம் இதற்கு சிறந்தது. உங்கள் நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகையுடன் குறிப்பிட்ட அளவுத் தொகையைக் கூடுதலாகச் செலுத்தலாம். இந்த முதலீடு எல்லாம் அதிகம் ரிஸ்க் இல்லாத முதலீடுகளாக இருக்கும்.

இந்தச் சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் தொகையை ஓய்வுக் காலத்துக்குப் பிறகு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவைத்து, அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தைத் தினசரி செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

தனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு!

தனித்து வாழ்ந்து வருபவர்களுக்குச் சொந்தமாக வீடு இருந்தால், ஓய்வுக்காலத்தில் அதை ரிவர்ஸ் மார்ட்கேஜ் மூலமாக அடமானம் வைத்து, அதன்மூலமாகக் கிடைக்கும் பணத்தில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

விவாகரத்தான பெண்களுக்கு..!

கணவனை இழந்து அல்லது விவாகரத்தாகி குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறவர்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் குழந்தைகளின் தேவைகளையும் சேர்த்து நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பார்கள். அதாவது, இவர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு முதலீடு செய்வது அவசியம். இவர்கள் தேவையில்லாத ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம். இந்த முதலீட்டை தனியொரு ஆளாக நின்று செய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான் என்றாலும், கஷ்டப்பட்டு இதைச் செய்தால் அதன்மூலம்

தனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு!

கிடைக்கும் பலன் சிறப்பாக இருக்கும்.

இதுமாதிரியான பெண்கள் அலுவலக வேலை அல்லது பிசினஸ் செய்கிறார்கள் எனில், தங்கள்  வருமானத்தைப்போலப் பத்து மடங்கு அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைப்பது அவசியம். ஏனெனில், எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படும் இழப்புகளினால் உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பாதிப்படையக் கூடாது.

உங்களுக்கும், குழந்தைக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேவை. இதன் கவரேஜ் ரூ.3-லிருந்து 5 லட்சத்துக்கு இருப்பது நல்லது. மேலும், அவசர காலத் தேவைகளுக்காக 3-6 மாத காலத்துக்குத்  தேவையான நிதியை வைத்திருப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். அந்தப் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கு, ஆர்.டி, லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம். இந்தப் பணத்தை அவசரத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.

பிள்ளைகளின் உயர்கல்விக்காக ஆரம்பத்திலிருந்தே சேமிப்பது முக்கியம். அதாவது, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் முதலீட்டுத் தொகையில் 30 சதவிகிதத்தை ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும், மீதமுள்ள தொகையைக் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளின் திருமணத்துக்கு தங்கம் தேவைப்படும் எனில், கோல்டு ஃபண்டு, கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்யலாம்.ஓய்வுக்காலத் தேவைகளுக்காகப் பி.பி.எஃப், பி.எஃப் தொகையுடன் கூடுதலாகக் குறிப்பிட்ட தொகையை போடலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யலாம்'' என்றார்.

தனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு!

தனித்து வாழும் பெண்கள் தங்கள் நிலையை நினைத்து நிற்காமல், தனக்காகவும்  தன்னை நம்பியுள்ள குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக் காகவும் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தலாமே!

பின் செல்ல