Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

 37 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

பணம் சம்பாதிப்பதில் இருக்கும் மற்றொரு பெரிய சிக்கல், ஒப்பீடு செய்து பார்ப்பது. நம்மை இன்னொருவருடன் ஒப்பிடுவது என்பது பணம் சம்பாதிக்கும் பாதையில் வரும் ஒரு வேகத்தடை என்று சொல்லலாம். சாதாரணமாகவே வேலைபார்க்கும் இடத்திலும், தொழில் செய்யும் சூழலிலும் எல்லோருமே ஓர் ஒப்பீட்டை செய்துவருவோம். அவர் ஏன் அதிகச் சம்பளம் வாங்குகிறார், அவர் எப்படித் தொழிலில் லாபம் பார்க்கிறார், என்கிட்ட இல்லாதது அவரிடம் என்ன இருக்கிறது, என்னிடம் அவரைவிட என்ன தகுதிகள் அதிகமாகவே இருக்கிறது, எனக்கு மட்டும் வருமானம் குறைவாகவே இருக்கிறதே ஏன், இது அவர் அதிர்ஷ்டமா, என் துரதிருஷ்டமா (அதிர்ஷ்டம் பற்றி கடந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்த்தோம்!) என்றெல்லாம் நம் எல்லோரின் மனத்திலும் ஓர் ஆதங்கம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

சம்பாத்தியத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவரிலிருந்து படிப்படியாய் மேலேபோகும்போது ஒப்பீடு எல்லோரிடமும் இருக்கவே செய்யும். ஆதங்கத்தின் அளவு கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். இந்த ஆதங்கம் என்பது ஒரு தவறேயல்ல. ஒருவகையில் பார்த்தால், இந்த ஆதங்கமே நம்மை மேலும் முன்னேற்றப் பாதையில் செல்லவைக்க உதவுகிறது. ஆனாலும் பலமுறை இந்தவகை ஆதங்கங்கள் மனிதர்களைச் செயலிழக்கவும் வைத்துவிடுகிறது. ஒப்பிடுவது நல்லதுதான். ஆனால், எது ஒப்பிடப்படுகிறது என்பதுதான் கூர்ந்துநோக்கப்பட வேண்டிய விஷயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மைவிட வேகமாக முன்னேறுகிறவரிடத்தில் நம்மைவிட என்ன தனித்திறைமை இருக்கிறது என்பதா அல்லது வெறுமனே நமக்கும் அவருக்கும் இடையே உள்ள சம்பாத்திய வித்தியாசங்கள் மட்டுமேயா என்பதில்தான் முன்னேற்றத்துக்கான தூண்டுகோல் இருக்கிறது. வெறும் சம்பாத்தியம் மட்டுமே ஒப்பீடு செய்யப்பட்டால், அது தூண்டுகோலாக அமைய வாய்ப்புகள் குறைவே. ஆனால், திறமைகள் ஒப்பீடு செய்யப்பட்டால் அது தூண்டுகோலாக அமைய வாய்ப்பு அதிகம்.

பணவளக் கலை!

அது எப்படித் திறமையை ஒப்பிடாமல் சம்பாத்தியத்தை மட்டும் ஒப்பிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். லாஜிக்கலாக இந்தக் கேள்வி சரிதான் என்றபோதும் நமக்கு என்று வரும்போது லாஜிக் நிலைமையைத் தாண்டிய மனநிலைக்கு நாம் சென்றுவிடுவோம். நம்முடைய திறமையின்மேல் சுலபமாக நமக்கு அதீத தன்னம்பிக்கை (ஓவர் கான்ஃபிடன்ஸ்) வந்துவிடும்.

அமெரிக்காவில் இந்தத் தனிமனித அதீத தன்னம்பிக்கை பற்றிய பல ஆய்வுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. நிறையபேரை நேர்முகச் சந்திப்பின் மூலம் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அமெரிக்காவில் எத்தனை கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது? குறிப்பிட்ட ஒரு நகரத்தில் எத்தனை டாக்டர்கள் இருக்க வாய்ப்புள்ளது? ஒரு வருடத்தில் எத்தனை வெளிநாட்டு கார்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது? ஒரு டோல்கேட்டில் எவ்வளவு சுங்கம் வசூலிக்கப்படுகிறது என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை இரண்டு சதவிகிதம் கூடுதல் குறைவாகச் சொல்லலாம் என்றார்களாம்.

மொத்தமாக அந்த ஆய்வில் பதிலளித்த அனைவரும் 'விடை தெரியாது’ என்று கூறாமல் ஏறக்குறைய 40 சதவிகித அளவுக்கு மாறுபட்ட விடைகளைச் சொல்லி, 'இதுதான் சரியான விடை’ என்று வேறு சொல்லி இருந்தார்களாம். நமக்குத் தெரிந்ததுதான் சரி என்ற எண்ணம் அதிக அளவில் இருப்பதற்கு இந்த அதீத தன்னம்பிக்கையே காரணம் என்று சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

பணவளக் கலை!

பொதுவான விஷயங்களுக்குப் பதில் சொல்வதிலேயே இவ்வளவு அதீத தன்னம்பிக்கை இருந்தால் நம்மைப் பற்றியும் நம் திறமையைப் பற்றியும் கேள்விகள் வரும்போது இந்தவகை அதீத தன்னம்பிக்கை அதிகரிக்கவே செய்யும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவே செய்வீர்கள். நடுநிலைமையுடன் சிந்தித்து நமக்கும் மற்றவருக்கும் இடையேயுள்ள சம்பாத்திய வேறுபாட்டுக்குக் காரணமான திறமைகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் அதில் உள்ள குறைபாடுகளை நாம் கண்டறிந்து களைவதன் மூலம் நம்முடைய சம்பாதிக்கும் திறனை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்.

பணவளக் கலை!

இதையும் தவிர்த்து நாம் ஒப்பீடு செய்யும் நபருக்கு இடையேயுள்ள பல அடிப்படை வேறுபாடுகளையும் நாம் புரிந்துகொண்ட பின்னரே இந்தவகையான திறமை ஒப்பீடுகளைச் செய்ய முற்படவேண்டும். குறிப்பாகச் சொன்னால், சர்வ விஷயங்களிலும் சம அந்தஸ்தைக் கொண்டவர்களுடனேயே நாம் முன்னேற்றதுக்கான ஒப்பீடுகளைச் செய்வது சரியான ஒன்றாக இருக்கும்.

இந்த அதீத தன்னம்பிக்கை பணம் சம்பாதிக்க நீங்கள் செய்யும் /அல்லது செய்யப்போகும் தொழிலிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை எப்படிச் சரிசெய்வது என்று கேட்பீர்கள்.

பொதுவாக, உங்களைச் சுற்றி நடக்கும் தொழில் நிகழ்வுகளின் வெற்றி/தோல்வி குறித்த உங்கள் மதிப்பீடுகளை நீங்கள் சிஸ்டமேட்டிக்காக ஒரு டைரியில் பதிவு செய்துகொண்டே வந்தால் மிகச் சுலபமாக உங்களுடைய வெற்றி/தோல்வி கணிப்புத் திறனையும் அதிலுள்ள அதீத தன்னம்பிக்கையின் பாதிப்பையும் சுலபமாகக் கண்டுகொள்ளலாம்.

இதில் இன்னுமொரு முக்கிய விஷயம், அதீத தன்னம்பிக்கையில் ஆப்டிமிஸ்ட், பெசிமிஸ்ட் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. இரண்டுவகைக் குணம் கொண்டவர்களுமே அதீத தன்னம்பிக்கையுடன் செயல்படுவதில் மிகவும் சிறந்தவர்கள் எனலாம்.

தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும்போது இந்த அதீத தன்னம்பிக்கை என்பது கொஞ்சம் தலைதூக்கவே செய்யும். இதில் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஏனென்றால், நடைமுறையில் தொழில் துவங்குவதில் மற்றுமொரு சிக்கல் உள்ளது. பெரும்பாலான சூழல்களில் நாம் தொழில் ஐடியாக்களை நம்மைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லக் கேட்டோ அல்லது நம்முடைய ஐடியாக்களை அவர்களிடம் சொல்லி பரிசீலனை செய்யவோ முற்படுவோம். நம் ஐடியாவாக இருந்தாலும் சரி, பிறருடைய ஐடியாவாக இருந்தாலும் சரி, அது கேள்வி ஞான அறிவாக இருக்கக்கூடாது. ஆழ்ந்து சிந்தித்து முழுக்கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஐடியாவாக இருக்க வேண்டும். ஏனென்றால், கேள்வி ஞான ஐடியா மிகவும் சிக்கலான சூழலில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். இதை ஆங்கிலத்தில் 'சாஃபுர் நாலெட்ஜ்' (ஓட்டுநர் பெற்ற அறிவு) என்பார்கள். இந்த 'சாஃபுர்

பணவளக் கலை!

நாலெட்ஜ்’ என்கிற கருத்தாக்கம் புழக்கத்துக்கு வந்ததற்கு சுவாரஸ்யமான ஒரு கதையும் உண்டு.

1918-ம் ஆண்டு குவான்டம் மெக்கானிக்ஸுக்கான நோபல் பரிசை வென்ற பின்னர் மாக்ஸ் பிளாங்க் என்னும் விஞ்ஞானி குவான்டம் மெக்கானிக்ஸ் குறித்துப் பேச பல இடங்களுக்கும் சென்றாராம். அவருடைய டிரைவரும் சலிக்காமல் பல்வேறு இடங்களிலும் அவருடைய பேச்சை முழுமையாகக் கேட்டாராம். ஒருநாள், 'நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கேட்டு எனக்கே குவான்டம் மெக்கானிக்ஸ் அத்துப்படியாகிவிட்டது. அதனால் நான் இந்தக் கூட்டத்தில் உங்களுக்குப் பதிலாக பேசட்டுமா? நீங்கள் கூட்டத்தில் என் தொப்பியை அணிந்து டிரைவராக அமர்ந்திருங்கள்’ என்றாராம். மாக்ஸும் சரி என்று சொல்ல, கூட்டத்தில் அட்சரசுத்தமாக டிரைவர் குவான்டம் மெக்கானிக்ஸ் பற்றிப் பேசினாராம். இறுதியில் கூட்டத்துக்கு வந்த ஒருவர் ஒருகேள்வி கேட்க, டிரைவருக்கோ அதற்கான பதில் தெரியவில்லை. எப்படித் தெரியும்? அவருக்கு இருப்பது கேள்விஞானம்தானே! ஆனால், டிரைவர் சமயோசிதமாக, 'இவ்வளவு பெரிய ஊரில் இவ்வளவு சாதாரணக் கேள்வியைக் கேட்கிறீர்களே! இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல என் டிரைவரே போதும்’ என்று மாக்ஸை கைகாட்ட, மாக்ஸ் அதற்குப் பதில் சொல்லி கைதட்டல்கள் பெற்றாராம்.

இந்த நிகழ்விலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? முழுமையாக நம்முடைய சொந்த யோசனையிலும் முழுச் சிந்தனையிலும் இருந்து வராத ஐடியாக்களைச் செயலாக்குகிறேன் என்று தொழில் செய்ய இறங்குவது மிக மிகத் தவறான விஷயம் என்பதே!

உங்களுக்கு ஐடியா சொல்பவரானாலும் சரி, நீங்களேயானாலும் சரி, சொந்த ஐடியாவாக இல்லாமல் கேள்விஞான ஐடியாவாக இருக்கும்பட்சத்தில் அது பணத்துக்குக் கேட்டை விளைவிப்பதாகவே இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால் நிச்சயமாக வெற்றி பெறமுடியும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism