மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிசினஸ் தந்திரங்கள்

3எம் - இன்னோவேஷன் மைண்ட்செட்! ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

ஸ்ட்ராடஜி 38
கம்பெனிகள் ஜெயித்த கதை

இந்த வாரம் நாம் பார்க்கப் போகிற நிறுவனம் 3வி(Minnesota Mining and  Manufacturing Co) நூறு ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் வெகுசில நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று. தொழிலின் தொடக்கக் காலத்தில் காட்டிய வேகத்தைப்போலவே இப்போதும் அதே ஆர்வத்தோடும், துடிப்போடும் இயங்கிவரும் நிறுவனம் இது. இன்னோவேஷன் (புதுமைகளைப் படைப்பது) என்கிற விஷயத்தில் உலக அளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக 3எம் இருக்கிறது.

ஒரு நிறுவனம் தனது தொடக்கக் காலத்தில் இப்படியான வளர்ச்சியைச் சந்திப்பது சாத்தியம். ஆனால், 104 ஆண்டுகளைக் கடந்த ஒரு நிறுவனம் இப்போதும் அதே துடிப்போடு இருப்பது சாத்தியமில்லை.

தவிர, குறிப்பிட்ட வருடங்களுக்குமேல் ஒரு நிறுவனமோ, சந்தையோ சீரான வளர்ச்சி நிலையிலேயே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு காரணத்தின் மூலம் வளர்ச்சி வேகம் மட்டுப்படலாம் அல்லது தேங்கலாம். கடந்த இருபது, முப்பது வருடங்களில் பெரிய வளர்ச்சியைக் கண்ட யாகூ, ஆர்குட், நோக்கியா போன்ற நிறுவனங்களே இதற்கு உதாரணம்.

தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தையின் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், நிறுவனக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என எல்லாவற்றையும் தாண்டிதான் ஒரு நிறுவனம் சந்தை யில் நிலைத்து நிற்கவேண்டும். கடந்த 104 ஆண்டுகளில் பல மாற்றங்களைக் கண்டாலும் தனது தேவையை உணரவைப்பதில் 3எம் கடைப்பிடித்த உத்திகள் முக்கியமானவை.  

பிசினஸ் தந்திரங்கள்

3எம் நிறுவனத்தைக் குறித்து ஒரே வரியில் சொல்லவேண்டும் எனில், இன்னோவேஷன். இப்போதும் புதுமையானவற்றைத் தொடர்ச்சியாகத் தந்துகொண்டே இருக்கிறது. இதற்காக தனது வருமானத்தில் 5-6 சதவிகிதத் தொகையைச் செலவிடுகிறது.  

கிட்டத்தட்ட 55 ஆயிரம் தயாரிப்புகள்... எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், கார் பாதுகாப்புச் சாதனங்கள் எனப் பல தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. லேமினேஷன், பாலிஷ், கார் ஷாம்பு உள்ளிட்ட பொருட்களைக்கூட இந்த நிறுவனம் புதிது புதிதாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. போஸ்ட் இட், ஸ்காட்ச் கார்டு போன்றவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே.

ஏறக்குறைய 25 ஆயிரம் பொருட்களுக்குமேல் காப்புரிமை வாங்கி வைத்திருக்கும் மிகப் பெரிய உற்பத்தி சார்ந்த நிறுவனம் இது. இதன்காரணமாகவே 3எம் நிறுவனம் தாக்குபிடித்து நிற்கிறது.  

பிசினஸ் தந்திரங்கள்

தவிர,  இந்த நிறுவனம் ஒரே தொழிலை மட்டும் மேற்கொள்ளவில்லை. பல தொழில்களையும் ஒரேநேரத்தில் நிர்வகித்து வருவதும் இந்த நிறுவனத்தின் இன்னொரு சிறப்பு. இது எப்படி சாத்தியம்? இதற்காக இந்த நிறுவனம் கடைப்பிடித்த உத்திகள் என்னென்ன?

இன்னோவேஷன் என்பதை வெறும் வழிகாட்டுதல் என்கிற அளவில் மட்டுமல்ல, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தே இதைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களும் இன்னோவேஷன் என்கிற கான்செப்டை கமிட்மென்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும். புதியவற்றை முயற்சித்துப் பார்க்கவேண்டும்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் ஸ்டைலுக்கு ஏற்ப வேலை பார்க்கலாம் என்பதை  ஒரு வழிகாட்டுதலாகவே வைத்திருக்கிறது இந்த நிறுவனம். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் இந்த மனநிலை அப்படியே கடைநிலை வரை பிரதிபலிக்கும் என்பதால் இதை அனுமதிக்கிறது 3எம். சில நேரங்களில் பணத்தை, உழைப்பை இன்னோவேஷனுக்காகச் செலவழிப்பதில் தவறில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

தவிர, நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைபோல, கிட்டத்தட்ட 6 சதவிகித வருமானத்தைத் தனது ஆராய்ச்சி வேலைகளுக்குச் செலவிடுகிறது இந்த நிறுவனம். உற்பத்தித்துறை சார்ந்து இயங்கும்  நிறுவனங்களில் ஆராய்ச்சிக்காகத் தனது வருமானத்தில் இத்தனை சதவிகிதம் ஒதுக்குவது 3எம் மட்டும்தான். தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சிகளுக்குச் செலவிடலாம். ஆனால், உற்பத்தித் துறையில் இந்த நிறுவனம் இத்தனை ஆராய்ச்சி செய்வதால்தான் பிற நிறுவனங்களிலிருந்து  வித்தியாசப்பட்டு நிற்கிறது.

இந்தச் செலவுகளிலிருந்து உடனடியான ஆதாயத்தையோ அல்லது உடனடி ரிசல்ட்களையோ எதிர்பார்க்காமல் நீண்டகால நோக்கில் என்ன விளைவைத் தரும் என்றுதான் யோசிக்கிறது. அதாவது, ஒரு புதிய ஐடியாவை நடைமுறைப்படுத்தும்போது, அதிலிருந்து கிடைக்கும் இறுதி ரிசல்ட்  என்பதை மட்டுமே பார்க்கிறது இந்த நிறுவனம்.

3எம் தனது பணியாளர்களுக்கான பணிச்சூழலில், அவர்களை ஊக்குவிக்கும்விதமாக பல புதுமைகளைப் படைத்திருக்கிறது. ஒரு பணியாளர் தனது வேலை நேரத்தில் 15 சதவிகிதத்தைப் புதிய பொருட்களை உருவாக்க (இன்னோவேஷன்) நேரம் ஒதுக்கிக்கொள்ளலாம். ஒரு பணியாளரிடத்தில் ஐடியா இருக்கிறது; அதற்கு செயல்வடிவம் தரவேண்டும் என யோசித்தால் அந்த புராஜெக்ட்டுக்கு நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனமே செய்துதரும்.

பிசினஸ் தந்திரங்கள்

இதிலிருந்து பாசிட்டிவ்-ஆன ரிசல்ட் வந்தேதீரவேண்டும் என்கிற எந்த கட்டாயமும் இல்லை. ரிசல்ட்  நெகட்டிவாக இருந்தாலும் அதை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். புதிய ஒன்றை செய்ய முயற்சிக்க வேண்டும். புதிதாக யோசிக்க வேண்டும். அதாவது, புதுமை படைக்கும் மனநிலை (இன்னோவேஷன் மைண்ட்செட்) ஊழியர்களிடம் வரவேண்டும். ஊழியர்களை இப்படி யோசிக்க வைப்பதன் மூலம் பல ஆயிரம் புதிய தயாரிப்புகளைக் கொண்டுவர முடிந்திருக்கிறது இந்த நிறுவனத்தால்.

தவிர, ஒரு புராஜெக்ட்டுக்குக் கூடுதலாக உதவிகள் தேவைப்படுகிறது எனில், நிறுவனம் மேற்கொள்ளும் எந்த ஒரு தொழிலில் இருந்தும் உதவிகளை வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால், 3எம் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்களையும் மேற்கொண்டு வருகிறது. பிற்காலத்தில் கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்த ஐடியாவை தங்கள் நிறுவனங்களிலும் பின்பற்ற ஆரம்பித்தது.

பேசு, கலந்து பேசு, கலந்து உரையாடு என்பதை ஒரு கொள்கையாகவே இந்த நிறுவனம் ஊக்குவிக்கிறது. புதுமை படைக்கும் ஊழியர்களுக்கு அன்பளிப்புகள், பாராட்டுகளை வழங்குவதிலும் இந்த நிறுவனம் தயங்குவதில்லை.  ஒரே தொழிலில் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு இறங்குவதைவிட, ஒவ்வொரு முனையிலிருந்தும் பல யோசனைகள் கிடைக்கச் செய்து, அதைச் செயலுக்குக் கொண்டுவந்ததன் மூலம் புதிய மேலாண்மை தந்துவங்களை உருவாக்கியது இந்த நிறுவனம்.

புதுமை படைக்கும் இந்த  சிந்தனைதான் இந்த நிறுவனத்தைப் பல்வேறு தொழில்களை நோக்கி நகர வைத்தது. ஒவ்வொருவருக்குள்ளும் இந்தப் புத்தாக்க மனநிலையை கொண்டுவருவது சாதாரணக் காரியமில்லை. ஆனால், 3எம் அந்தச் சாதனையைச் செய்து, இன்றும் இளமைத் துடிப்போடு செயல்பட்டு வருகிறது!

(வியூகம் வகுப்போம்)
படம்: ஆ.முத்துக்குமார்