Published:Updated:

டிரேடரா இருங்க; இல்லாட்டி வேடிக்கை பாருங்க!

- ஷேருச்சாமி தரும் கைடன்ஸ்

பிப்ரவரி மாதத்திலிருந்தே ஷேருச்சாமியை போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு அடிக்கடி நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான் செல் (செல்வம்). போகலாமா, வேணாமா என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், 'இஃப் யூ ஆர் ஃப்ரீ ஷால் வி மீட் டுமாரோ மார்னிங்?’ என்று சாமியிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது. சாமியே அழைத்தபிறகு சும்மா இருக்க முடியுமா? மறுநாள் காலை நாங்கள் இருவரும் அவர் வீட்டில் ஆஜர்.  

மெலிதாய் பக்திப் பாடல் ஒன்று ஐபேடில் ஓடிக்கொண்டிருக்க, சாமி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். ''வாங்கய்யா வாங்க'' என வரவேற்று நம்மை உட்கார வைத்தவர், ''உங்களை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?'' என்று கேட்டார். ''புது வருஷத்துக்கு உங்களைப் பார்க்க வந்தப்ப, எலெக்ஷனுக்கு முன்னாடியே 6700-6800 பாயின்ட் வரைக்கும் நிஃப்டி போயிடலா முன்னு சொன்னீங்க. ஆனாலும், ஜாக்கிரதையா இருக்கணுமுன்னும் சொன்னீங்க. இப்ப என்ன சொல்லப் போறீங்க சாமி?'' என்று கேட்டான் செல்.

''நீ சொன்ன மாதிரி எலெக்ஷனுக்கு முன்னாடியே 6700-6800 லெவல்கள் வந்திடுமுன்னு ஒரே ஒரு ஹேஷ்யத்தைச் சொல்லலே! 2014-15 சேலஞ்சான வருடமா இருக்கும். வருஷக் கடைசியில 6700-6800 லெவல்கள் வந்திட வாய்ப்பிருக்குது. ஒருவேளை எலெக்ஷனுக்கு முன்னாடி கூட இந்த லெவல்கள் வந்துடக்கூடும் அப்படீன்னுதான் சொன்னேன்'' என்று செல்லைத் திருத்தினார் சாமி.

டிரேடரா இருங்க; இல்லாட்டி வேடிக்கை பாருங்க!

''சாமி, தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடனேயே இப்ப நிஃப்டி 6500 பாயின்டைத் தாண்டிபோயிடுச்சே சாமி, என்ன காரணம்'' என்று கேட்டேன் நான். ''சந்தை எதனால மேலே போகுதுன்னு யாராலயும் கணிச்சு சொல்ல முடியாது. ஆனா, எதிர்பார்ப்பினால மேலே போகுதுன்னு சாதாரணமா எல்லாரா லேயும் சொல்ல முடியும்'' என்று ரைமிங்காய் பேசினார் சாமி.

''அடப்போங்க சாமி. வேகமா ஏத்திக்கிட்டே போய்க் கடைசியா தடாலுன்னு சாய்ச்சிடுவாங்க'' என்றான் செல். ''என்ன ஒரு நெகட்டிவான எண்ணம் உனக்கு?''  என்றார் சாமி. ''என்ன சாமி, நெகட்டிவ் எண்ணமுங்கிறீங்க. எத்தனையோ தடவை இப்படி வேகமா ஏற்றத்தை காண்பித்து அதைப் பார்த்து ஏமாந்தும் போயிருக்கேன் தெரியுமா?'' என்றான் செல்.

''அப்ப உனக்கு முதலீடு செய்யத் தெரியலேன்னு சொல்லு. அதை விட்டுட்டு சந்தையைக் குறை சொல்லாதே. மார்க்கெட் எப்பவுமே ரைட்டுதான். நாமதான் தப்பு'' என்றார் சாமி கம்பீரமாக. அதற்குள் செல், ''சந்தையைக் குறை சொன்னா நீங்க எப்ப சாமி ஒத்துகிட்டு இருக்கீங்க'' என்று சலித்துக்கொண்டான்.

''அடேய், நீ ரோடில் வண்டி ஓட்டிக்கிட்டு போற. ஒருத்தன் வண்டியைக் கொண்டுவந்து உன் மேலே மோதிடறான். இது யாரோட தப்பு?'' என்று கேட்டார் சாமி. ''எதிர்ல வந்தவன்மீதுதான் தப்பு. நாம என்னதான் சரியா வண்டியை ஓட்டினாலும் எதிர்ல வர்றவங்க ஏடாகூடமா ஓட்டி நம்மைக் கவுத்திவிட்டுறாங்களே'' என்றேன் நான்.

''இப்ப சொன்னியே இதுதான் சந்தையோட நிலைமை. நீ சரியாப் போனா மட்டும் பத்தாது. மத்தவங்க ஏதாவது தப்புப்பண்ணினாகூட அதனால உனக்குப் பாதிப்பு வராத அளவுக்குக் கவனமா போகணும்'' என்றார் சாமி.

''எப்படி சாமி இது சாத்தியம்?'' என்று நொந்தபடி கேட்டான் செல். மேற்கொண்டு பேச ஆரம்பித்தார் சாமி. ''டிரைவிங்குல டிஃபென்சிவ் டிரைவிங்குன்னு சொல்வாங்க. நாம சரியாப்போறதோட இல்லாம மத்தவங்க யாராவது தப்பா வர்றாங் களான்னு பார்த்துக்கிட்டு போகணும். அப்பதான் நாம ஆக்ஸிடென்ட் ஏதும் ஆகாம போய்ச் சேரமுடியும். அதேபோலத்தான் முதலீட்டிலும். நாம சரியான முதலீடுகளைச் சரியான நேரத்துல செஞ்சா மொத்த மார்க்கெட்டுமே தப்புப் பண்ணினாலும் நமக்கு அதனால பாதிப்பு வராது'' என்றார் சாமி.

''சாமி, நீங்க சொல்றது ஒண்ணும் எனக்கு வெளங்கலை'' என்றேன் நான். ''புரியும்படியாச் சொல்றேன். தேர்தலுக்கு முன்னாடி சந்தை மேல்நோக்கிப் பறக்குது. இன்னமும் கொஞ்சம் மேலே போச்சுன்னா, நீங்களெல்லாம் என்ன பண்ணுவீங்க. அட, இன்னும் மேலேபோகும் போலிருக்கேன்னு நினைச்சு கையில கிடைச்ச ஸ்டாக்குகளை வாங்கிப்போடுவீங்க. தேர்தல் முடிவு ஒரு தெளிவில்லாம வர்றபட்சத்துல உடனடியா சந்தை ரியாக்டாகும். அப்ப என்ன பண்ணுவீங்க? கிடைச்ச வரைக்கும் போதுமுன்னு நினைச்சு வித்துட்டு, இந்த மார்க்கெட்டே தப்புன்னு புலம்ப ஆரம்பிச்சிடுவீங்க. செய்வீங்களா, இல்லையா?'' என்று கேட்டார் சாமி. ஆமாம் சாமி என்கிற மாதிரி நாங்கள் இருவரும் தலையை ஆட்டினோம்.

''கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பார்த்தா, உங்களுக்கு ஒண்ணு புரியும். தேர்தல் முடிவுங்கிற விஷயத்துல நல்லபடியான ரிசல்ட் வந்தா ஏறும். வராட்டி இறங்கும். அதாவது, ஒண்ணு '0’, இல்லாட்டி '1’. இடைப்பட்ட அளவுல, அதாவது 0.5 அப்படீங்கிறதெல்லாம் கிடையாது. இந்தச் சூழ்நிலையில நீ முதலீடு பண்ணலாமா? அதுல இருக்கற ரிஸ்க்கை நீ தாங்குவியான்னு முதல்ல பாக்கணும். தாங்க முடியுமுன்னா 6500-லகூட வாங்கலாம். தாங்க முடியாதுன்னா பேசாம நடக்குறதை வேடிக்கை பார்க்கலாம்'' என்றார் சாமி.

டிரேடரா இருங்க; இல்லாட்டி வேடிக்கை பாருங்க!

''அதெப்படி சாமி வேடிக்கை பார்க்கிறது. கை சும்மா நமநமங்குதே?'' என்றான் செல். ''அப்படி ஆசைப்படறவன் டிசம்பர்/ஜனவரியிலேயே வாங்கிப்போட்டிருக்கலாமே. அப்ப ஏன் போடலை?'' என்று கேட்டார் சாமி.

''சாமி, அப்ப நம்பிக்கை வரலியே'' என்றான் செல். ''அப்ப இல்லாத நம்பிக்கை இப்ப எப்படி வந்துச்சு? செம்மறி ஆட்டுக்கூட்டம்போல ஏறுகிற மார்க்கெட்டில் வாங்குறதும் இறங்குகிற மார்க்கெட்டில் வித்துட்டுத் திரும்பறதும் உனக்குப் பழக்கமாயிடுச்சு. அதைத் தொடர்ந்து எத்தனை வருஷமானாலும் செஞ்சுக்கிட்டேதான் இருப்பே'' என்று சலித்துக்கொண்டார் சாமி.

''அப்ப நாங்க என்னதான் செய்றது சாமி? உங்களைத் தேடிவந்தா ஆறுதலா எதையாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா...'' என்று இழுத்தான் செல்.

''வருஷ ஆரம்பத்துல நான் எதைச் சொன்னேனோ, அதைத்தான் இப்பவும் சொல்றேன். வாங்கி வித்து லாபம் பார்த்துட்டு போய்கிட்டே இரு. குறைஞ்ச லாபமா இருந்தாலும் பரவாயில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவர்றதுக்கு ஒரு பத்துநாளைக்கு முன்னாடியே கொஞ்சம் முதலீடுகளைக் குறைச்சுக்கோ. நீண்டநாள் அடிப்படையில் வைத்திருக்கும் முதலீடுகளை மட்டும் வச்சுக்க. குறைந்த மற்றும் மத்திய கால அளவுக்கான முதலீடுகள் எதையும் செஞ்சுராதே. இந்த 6500 லெவலிலேயே பதறிப்போய் முதலீடு செய்யாதே. ஹெல்த்தியான கரெக்ஷன் ஏதாவது வரும்போது நல்ல பாரம்பரியம்மிக்க கடனில்லாத கம்பெனிகளில் முதலீடு பண்ண ஆரம்பி. ஆறு முதல் எட்டு பெர்சன்ட் கிடைச்சாலே வித்துட்டு வெளியில வந்துடு'' என்றார்.

''கிட்டத்தட்ட எங்களைக் கடைசியில டிரேடராக்கிட்டீங்களே சாமி'' என்றான் செல். ''டிரேடர் மாதிரி செயல்பட விருப்பமில்லையா? அப்ப கொஞ்ச நாளைக்கு வெளியில இருந்து வேடிக்கை பாரு'' என்றார் சாமி. ''அது எப்படிச் சாத்தியம்?'' என்றான். ''இப்போதைக்கு  குயிக் பிராஃபிட் புக்கிங். இல்லேன்னா வெயிட்டிங் என்ற இரண்டும்தான்  சரியான ஸ்ட்ராடஜியா இருக்கும்'' என்றார் உறுதியாக.  

''வாசகர்களுக்கு என்னதான் சொல்றீங்க சாமி?'' என்றேன்.

''எச்சரிக்கையாய் இருங்க. தேர்தல் முடிவுங்கிறது அடுத்த ஐந்து வருடத்துக்கு நாட்டோட போக்கை கணிக்கப்போறதா இருக்கும். அடுத்த ஐந்து வருடத்துக்கான கைடன்ஸா இருக்கிறதாலதான் சந்தையும் ரொம்பவுமே இதுக்கான ரியாக்ஷனை தரும். இதைப் புரிஞ்சுக்கிட்டா பிரச்னை இருக்காது'' என்றார். ''அப்படியே செஞ்சிடுறோம்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு கிளம்பினோம்!

அடுத்த கட்டுரைக்கு