Published:Updated:

உனக்கும் மேலே நீ!

ஞாபக சக்தியே நமது பலம்! டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

 இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு தேசிய வியாதி 'ஞாபக மறதி’.  படித்தவர் களாகட்டும், படிக்காதவர்களாகட்டும் ஒருமனதாக இதனை ஒப்புக் கொள்வார்கள்.

ரெக்கார்டு நோட்டை வீட்டிலேயே வச்சிட்டேன் டீச்சர்... என்று சொல்கிற பள்ளி மாணவன் முதல், செல்போனை வீட்ல மறந்து வச்சுட்டு வந்துட்டேன் சார்... என்று நெளியும் அலுவலக ஊழியர்கள் வரை வகை வகையாகப் பலவிதமான மறதிகள். இன்னும் சிலருக்கு ஒரு ரூமுக்குள்ள போனதும் எதுக்காக அங்கே வந்தோம் என்பதே மறந்துவிடும். மீண்டும் ஒருநடை பழைய இடத்துக்குப்போய் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப வருவார்கள்.

இந்த மறதி நோய்க்கு என்ன காரணம்? இன்றைய அவசர யுகத்தில் எந்தக் காரியத்தை எடுத்தாலும்  வேகம், வேகம், வேகம்தான். கண்ணை மூடித் திறப்பதற்குள் காரியம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எதையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்யும்போது மறதி என்பது இயல்பான விஷயமாக மாறிப் போய்விடுகிறது.

'சூடா ஒரு டீ குடுப்பா’ என்கிறோம் ஏதோ ஒரு யோசனையில். டீக்கடைக் காரர் சூடாக காபி கொடுக்கிறார். நாமும், காபிதான் ஆர்டர் செய்தோம் போல என்று நினைத்து வாங்கிக் குடித்துவிடுகிறோம். அந்த அளவுக்கு சுயநினைவுடன் நாம் ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறோம்.

அதிலும், இன்றைய இளைஞர்கள் ஞாபகமறதி விஷயத்தில் மன்னன் களாகவே இருக்கிறார்கள்.

உனக்கும் மேலே நீ!

ஞாபகம் என்றால் என்ன? நம் மூளையில் தேக்கிவைத்திருக்கிற விஷயங்களைத் தேவைப்படும்போது வெளியே எடுத்து தகுந்த நேரத்தில் அதை உபயோகப்படுத்துவது. ஒன்றை மறந்துவிடும்போது மூளை ஒரு கம்ப்யூட்டர்போல் வேலை செய்கிறது. தொலைந்ததைத் தேடும் பணிதான் அது.

ஞாபகத்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, குறுகியகால ஞாபகங்கள். சிலருக்கு இரண்டு, மூன்று வருடங்கள் வரைக்கும் நடந்த விஷயங்கள்தான் பளிச்சென ஞாபகம் இருக்கும். அதற்குமுன் நடந்த விஷயங்களைக் கஷ்டப்பட்டு நினைவில் வைத்திருக்க முயற்சிப்பார்கள்.

இரண்டாவது, நெடுங்கால நினைவுகள். எத்தனை வருடங்கள் ஆனாலும் பழைய நினைவுகள் பசுமை மாறாமல் அவர்கள் மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு பழைய நண்பர்கள், போய்வந்த இடங்கள், சில புள்ளிவிவரங்கள், பழைய செய்திகள், ஒருமுறை பார்த்திருந்தாலும், சந்தித்திருந்தாலும் ஞாபகத்தில் பசுமரத்தாணிபோலப் பதிந்திருக்கும். எத்தனை வயதானாலும் பல விஷயங் களை மறக்காமல் ஞாபகத்தில் வைத்தி ருப்பார்கள்.

ஒருவருக்கு ஒரு விஷயம் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வேண்டும் எனில் என்ன செய்யவேண்டும்?  ஒரு விஷயத்தைச் செய்யும்போது அல்லது ஒருவரோடு பழகும்போது அதில் கொஞ்சமும் ஈடுபாடு காட்டாமல், ஏனோதானோவென்று செயல்பட்டால் குறுகியகாலம் வரைதான் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், எந்தச் செயலையும் நம் மனதுக்குப் பிடித்தமாதிரி சந்தோஷமாக, ஈடுபாட்டோடு செய்தால், அதை எத்தனை ஆண்டுகள் போனாலும் நம்மால் மறக்க முடியாமல் நினைவில் இருக்கும்.

உனக்கும் மேலே நீ!

சில விஷயங்கள் குறுகியகாலத்துக் குள்ளேயே மறந்துவிடுகிறது என்று சொல்கிறீர்களா? மறந்துபோன அந்த விஷயங்கள் முக்கியம் வாய்ந்தவை அல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் எனில், தொலைந்துபோகிறது என்று விட்டுவிடுங்கள். காரணம், தினமும் நடக்கிற எல்லா விஷயங்களையும் நம்மால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. மறப்பது என்பது குறை அல்ல; தவறும் அல்ல.

நாம் ஏன் சில விஷயங்களை மறக்கிறோம்? நம் மூளை என்பது ஒரு சின்ன ஹார்டு டிஸ்க் மாதிரி. ஏற்கெனவே அது ஒரு நினைவை ஸ்டோர் பண்ணி வைத்திருக்கும்போது, புதிதாகச் சென்றடைகிற விஷயங்கள் சிறிது இடத்தை ஆக்ரமிக்கும். இப்படி ஒவ்வொரு விஷயமாக நினைவில் பதியும்போது, பழைய விஷயங்கள் புதியவைக்கு இடம் விட்டு தானாகவே காணாமல் போய்விடும். இயற்கையாகவே நடக்கும் இந்த விஷயம் கடவுள் நமக்குத் தந்த வரப்பிரசாதம்.

சரி, முக்கியமான பல விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைத்துக்கொள்வது என்று கேட்கிறீர்களா?

முதலில், நாம் நினைவில் வைத்திருக்கவேண்டிய விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.  புரியாத விஷயங்கள் நம் மூளையில் பதிவதில்லை. குறிப்பாக, இளைஞர்கள் வகுப்பில் படிக்கிறபோது, ஆசிரியர் சொல்வது விளங்கவில்லையென்றால், அதை ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாது. உடனே சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.

உங்கள் வேலையைச் செய்து முடிக்கும் வரை டிவி, போன்கால்கள், நண்பர்களின் தேவையில்லாத இடையூறுகள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 ஒரேநேரத்தில் பல வேலைகளைச் செய்யாதீர்கள். ஒரு வேலையைச் செய்தாலும் அதை முழுமையாக அனுபவித்து செய்யுங்கள்.

ஒரு பெரிய பாடத்தையோ அல்லது பெரிய தத்துவத்தையோ அல்லது அலுவலக பிரஸன்டேஷனையோ  முழுவதுமாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. அதில் முக்கியமானவற்றைத் தலைப்பாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தலைப்புகளை ஞாபகம் வைத்துக்கொண்டால், மொத்த விஷயங்களும் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

உனக்கும் மேலே நீ!

சில விஷயங்களை எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள, ஒரு பட்டப்பெயர் அல்லது ஒரு பாட்டு, ஒரு ஜோக் என ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் நினைவில் கொண்டால், அந்த விஷயத்தையும் நீங்கள் மறக்க முடியாது.

உங்களுடைய குறுகியகால, எதிர்கால லட்சியங்களை எழுதி நீங்கள் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் இடத்தில் வையுங்கள்.

அன்றாட வேலைகளைப் பட்டியலிடுங்கள்.

எதை அடிக்கடி மறக்கிறீர்களோ, அதை நினைவில்கொள்வதற்கு ஒரு செக் லிஸ்ட்டை வைத்துக்கொள்ளுங்கள். வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும், வரும்போதும், அலுவலகத்திலும் இது உதவும்.

நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் உங்களது கம்ப்யூட்டரிலும்கூட அன்றைய வேலைகளை ஞாபகப்படுத்த வசதிகள் உள்ளன.

இதையெல்லாம் செய்வதற்கு உங்கள் மூளை ஃப்ரெஷாக இருக்கவேண்டும். உங்கள் மூளை ஃப்ரெஷாக இருக்க இதோ சில வழிகளைச் சொல்கிறேன்.

1.நன்றாக ஓய்வெடுங்கள். இயற்கைக்கு மாறான தூக்கம், தூங்க வேண்டிய நேரத்தில் படிப்பது, படிக்க வேண்டிய நேரத்தில் தூங்குவது போன்றவை உங்கள் ஞாபக சக்தியை குறைக்கும்.

2. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

3. ஒவ்வொருநாள் காலையிலும்  10 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் புத்துணர்வைத் தரும்.

4. அளவுக்கு அதிகமாக உண்ணாதீர் கள். அதிக உணவு உங்களை மந்தமாக்கிவிடும்.

5. நிறையத் தண்ணீர் குடியுங்கள்.

6. உங்களுடைய கேட்கும் திறனை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

7. தினமும் ஒரு சில மணித்துளியாவது தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

10. உங்களைச் சுற்றி நல்லவர்களும் நல்ல இயற்கை சூழலும் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் இப்படியெல்லாம் இருந்தால், நீங்கள் உலகத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதோடு, இந்த உலகம் உங்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ளும்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு