Published:Updated:

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு முக்கியமானது என்ற கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். இதனை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் பணமே வாழ்க்கையில் பிரதானம் இல்லை; பணத்தையும் தாண்டி பல விஷயங்கள் வாழ்வில் இருக்கவே செய்கிறது என்ற கருத்தை மையமாக வைத்தே தங்களுடைய வாதங்களைச் செய்ய முற்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுவாக, ஒருவருடைய தேவைக்கு அதிகமாகப் பணம் கொட்டிக்கிடக்கவேண்டும் என்று நினைப்பது வேண்டுமென்றால் தவறு என்று சொல்லலாம். ஆனால், ஒரு மனிதனுடைய தேவைகள் அனைத்தையும் நியாயமான அளவில் பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்குத் தேவையான பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் இருப்பதுதான் தவறாகும்.

வேகமான மாறுதல்களையும், சிலசமயம் தலைகீழ் போக்கையும் கொண்டுள்ள நவீன உலகில் எதிர்காலத்துக்காக ஓரளவு பணத்தினைச் சேகரித்துவைப்பது அவசியமானதாகத் தெரிகிறது! இவ்வளவு தூரம் இந்தக் கருத்தை வலியுறுத்தி சொல்வதற்குக் காரணம், பணம் ஓர் அத்தியாவசியமான விஷயம் என்பதையும், அதை நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதையும் அடிப்படையில் ஒவ்வொருவரும் நம்பியாக வேண்டும். அப்போதுதான் பணத்தைச் சம்பாதிக்க முடியும்.

பணவளக் கலை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணத்தைச் சம்பாதிக்க ஒவ்வொரு நிமிடமும் புதிய பல முயற்சிகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டும் அப்படிச் செய்த சிந்தனையைச் செயலாக்கிக்கொண்டும் இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க நினைக்காதவர்களும், சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதோடு நிறுத்திக்கொள்பவர்களும் இந்த நிலைக்கு வருவதேயில்லை. நீங்கள் எப்போதும் செய்வதையே தொடர்ந்து செய்துகொண்டு இருந்தீர்கள் என்றால், உங்களுக்கு எப்போதும் கிடைக்கும் பணமே தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான பல மாறுதல்களைச் செய்து செயலாக்குவதன் மூலமே நமக்கு வரும் பணத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

பணவளக் கலை !

பணம் சம்பாதிப்பது எப்படி என்ற தலைப்பில் புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லித்தரும் வகுப்புகளுக்குச் செல்வதன் மூலமுமே ஒருவர் பணக்காரர் ஆகிவிட முடியாது. கற்றதையும் கேட்டதையும் செயலாக்க வேண்டும். செயலாக்குவதற்கு முதலில் நம்மால் சம்பாதிக்க முடியும் என்ற அதீத நம்பிக்கையை மனதளவில் பெறவேண்டும். எல்லாம் தெரிந்திருந்தும் பெரிதாகப் பணம் சம்பாதிக்காதவர்கள் ஐடியாக்களைச் செயலாக்காதவர்களே. அவர்கள் ஒருபோதும் பணத்தை நோக்கிய பயணத்தின் முதல் அடியை எடுத்துவைத்திருக்க மாட்டார்கள். ஒருநாள் நான் சம்பாதிப்பேன் என்ற ஆசையை மட்டுமே மனதில் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமும், அதற்கான பிரார்த்தனையும் செய்து கொண்டிருக்கும் அவர்கள், இந்த இரண்டின் கூடவே சேர்த்துச் செய்யப்படும் செயல்களே பணத்தைக் கொண்டுவரும் என்பதை உணர மறந்துபோகின்றனர். இது சரியான தருணம் இல்லை; சந்தை சரியில்லை; பொருளாதாரம் சரியில்லை என ஒவ்வொன்றாகக் காரணங்களைச் சொல்லித் திரிந்து பணம் சம்பாதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுப்பவர்கள், இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

இப்படிப் பல காரணங்களைச் சொன்ன பின்னர் நீண்டகாலம் கழித்து, 'அட, கடந்தமுறை பொருளாதாரம் மேலேபோய் நாடே செழிப்பாய் இருந்தபோது, நான் தொழில் பண்ணலாமுன்னுதான் நினைத்தேன். கொஞ்சம் ஓவரா யோசிச்சுட்டேன். அதற்குள்ள நாலைந்து வருடங்கள்(!) ஓடிப்போயிடுச்சு. பொருளாதாரச் சுழற்சியும் கீழ்நோக்கி வந்துவிட்டது. அடுத்த வளர்ச்சி சூழ்நிலையில் நிச்சயமாக நான் சம்பாதித்துவிடுவேன்’ என்று சொல்பவர்கள் இவர்கள். தள்ளிப்போடும் கலையை நன்கறிந்த இவர்களால் பணம் சம்பாதிப்பதற்கான நடவடிக்கை எதையுமே சரியான சமயத்தில் செய்துகொள்ள முடியாது. இப்படித் தள்ளிப்போடுவதன் மூலம் அவர்களுடைய மொத்த எதிர்காலமுமே தள்ளிப்போய்விடும் என்பதை உணராமல் செயல்பட வல்லவர்கள் இவர்கள்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முடிவைப் பற்றித் தெரிந்துகொண்டால், நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள். உங்களைச் சுற்றிலுமே இதுபோன்ற நிகழ்வுகள் பல நடந்திருக்கும். நல்ல வசதியான வீட்டில் பிறந்த புத்திசாலியான குழந்தைகள் வாழ்வில் பணரீதியான வெற்றியை சுலபமாகப் பெறுகிறார்களா? அல்லது வறுமையில் வாடி, சாமானியமான அறிவைக் கொண்டவர்கள் பணரீதியான வெற்றியை சுலபமாகப் பெறுகிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடும் வண்ணம் செய்யப்பட்டதுதான் இந்த ஆய்வு.

இந்த ஆய்வில் கண்டறிந்தது பணக்கார வீட்டுக் குழந்தையோ, ஏழை வீட்டுக் குழந்தையோ, புத்திசாலியோ, புத்திசாலித்தனத்துடன் திகழவில்லையோ, காலம் குறித்த ஒரு தெளிவு இல்லாதவர்களால் சம்பாதிக்கவே முடியவில்லை என்பதைத்தான்.

பணவளக் கலை !

அது என்ன காலம் குறித்த தெளிவு என்கிறீர்களா? நாம் வாழும் வாழ்வில் எதிர்காலத் தேவைகளைப் பற்றி நன்கு சிந்தித்து அறிந்தவர்கள் மிகவும் இலகுவான முறையில் பணத்தைச் சேர்த்து வெற்றிகரமாக அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டார்கள் என்றும், காலத்தின் அளவினைப் பற்றி எண்ணாமல் கண்போனபோக்கிலும், கால்போனபோக்கிலும் சென்றுகொண்டிருந்தவர்களால் நீண்டகால அடிப்படையில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை என்பதை யும் அந்த ஆய்வின் முடிவுகள் உறுதி செய்தன.

நேரத்தினைப் பற்றிய சிந்தனையும், இந்த வருடம் இன்ன தேதியில் என்னுடைய தேவை இதுவாக இருக்கும், அதற்கான சேமிப்பு ஏற்பாட்டையோ அல்லது வருமானத்தைக் கூட்டும் ஏற்பாட்டையோ நான் மட்டுமே எனக்குச் செய்துகொள்ள முடியும் என்று உணர்ந்தவர்களே பணரீதியான தன்னிறைவைக் கண்டுள்ளனர் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் சொல்கிறது.

பணவளக் கலை !

எனவே, நீண்டகால அடிப்படையில் எதிர்காலத்தைக் கூர்ந்துநோக்குங்கள். இன்றைய சுற்றுச்சூழலில் திகைத்துப்போய்ச் சும்மா உட்கார்ந்துவிடாதீர்கள். அடுத்த மாத சம்பளத்தில் இதை வாங்குவேன்; என்னுடைய லோன் வரும் ஜூனில் முடிகிறது. அடுத்த லோன் போட தயாராகி வருகிறேன் என ஒரு மாதம், இரு மாதம் என்ற திட்டமிடல் ரேஞ்சுகளைத் தாண்டி என் மகன் இன்றைக்கு ப்ரீகேஜி செல்கிறான். ஐந்து/பத்து/இருபது வருடம் கழித்து ஒவ்வொரு நிலையிலும் இந்த அளவுக்கு எனக்குப் பணம் தேவை. நான் செய்யும் இன்றைய தொழிலிலிருந்து வரும் என்னுடைய வருமானத்தில் இருந்து சேமிக்க முடியுமா? அல்லது வருமானத்தைக் கூட்டியேயாக வேண்டுமா என்றெல்லாம் யோசிக்கும் நபரே சீக்கிரத்தில் பணக்காரர் ஆகின்றாராம். எந்த அளவுக்குத் தொலைநோக்குடன் செயல்படுகிறோமோ, அந்த அளவுக்கே பணரீதியான வெற்றி நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி வெகு நீண்டகாலத்துக்கான யோசனைகள் உங்களைப் பொறுப்புடன் செயல்படவைக்கும். செலவைக் குறைத்து சேமிக்கவைக்கும். பொறுமையையும் விடாமுயற்சியையும் தருவதாக அமையும். இதனால் நீங்கள் நல்ல குணத்தையும், செயல்பாடு ரீதியான தெளிவையும் பெறுவீர்கள். இவைதான் உங்களை பிசினஸ் செய்யவைக்கும். வேலையில் கடுமையான போட்டியைச் சமாளித்து முன்னேற வைக்கும். உங்களை ஒரு முழுமையான புரஃபஷனலாக மாற்றும்.

தவிர, எல்லாத் தொழில்களிலுமே விற்பனை செய்யும் நபருக்கே முக்கியத்துவம் கிடைக்கும். உங்கள் வாழ்விலும் அதே கதைதான். சிறுவயதில் விற்பனை செய்வதைத் தொழிலாக எடுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். எனவே, விற்பனை செய்வதில் கைதேர்ந்தவராக மாற முயலுங்கள். பணம் உங்களைத் தேடிவர ஆரம்பிக்கும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism