Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

இனிக்க இனிக்க ஒரு தொழில் - கலக்கும் கல்லூரி மாணவன் ஞா.சுதாகர்

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

இனிக்க இனிக்க ஒரு தொழில் - கலக்கும் கல்லூரி மாணவன் ஞா.சுதாகர்

Published:Updated:

பல பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனங்களின் விளம்பரங் களுக்கு நடுவே, மக்கள் மனதைக் கொள்ளைகொண்டதன் மூலம் கல்லூரியில் படிக்கும்போதே ஆயிரக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் கோவை அரசு கலைக் கல்லூரி எம்.பில் மாணவர் சந்தானகிருஷ்ணன். 'லிவிங் ஐஸ்க்ரீம்ஸ்’ என்கிற பெயரில் இவர் தயாரித்து விற்கும் ஐஸ்க்ரீம் இன்று கோவையில் பிரபலம்.

அனுபவத்தாலே ஆரம்பித்தேன்!

'நான் பிறந்து வளர்ந்தது அனைத்துமே சாதாரண எளிய குடும்பத்தில்தான். நான் படித்துக்கொண்டே செக்யூரிட்டி, சமையல் எனச் சிறுசிறு வேலைகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று, அந்த வருமானம் மூலம் படிப்புச் செலவை நானே சமாளித்துக்கொள்வேன். ஆரம்பத்தில் அப்படி நான் கற்றுக் கொண்ட வேலைகளில் ஒன்றுதான், ஐஸ்க்ரீம் தயாரிப்பு. ஒரு சிறிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்தபோது, ஐஸ்க்ரீம் எப்படித் தயாரிப்பது, அதை எத்தனை சுவைகளில் தயாரிப்பது, அதை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுவை... தரம்... விலை..!

சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல விஷயங்களைக் கற்றுகொண்டேன். ஒரு பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் கோவை மாவட்ட விநியோகஸ்தராகச் சேர்ந்தேன். இதன்மூலம் கோவையில் நடக்கும் சில திருமணங்களுக்கு ஐஸ்க்ரீம் விநியோகித்து வந்தேன். அதற்குப் போட்ட மொத்த முதலீடு 2 லட்சம் ரூபாய். அந்தப் பணம் முழுக்க நான் படித்துக்கொண்டே பகுதி நேர வேலையின் மூலம் கிடைத்த வருமானம் மூலம் சேமித்த தொகை. வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும்போதுதான் சில பிரச்னைகள் வந்தது. முதலாவது, அந்த ஐஸ்க்ரீம் நிறுவனம் விலையை ஏற்ற ஆரம்பித்தது. இதன்மூலம் பல ஆர்டர்கள் கைநழுவி போனது. அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை வந்தது. வாடிக்கையாளர்கள் விரும்புவதில் முதலாவது, சுவை. இரண்டாவது, தரம். மூன்றாவது, விலை. இவை அனைத்தையும் நாமே நிர்வகித்தால் என்ன என்று யோசித்தேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

ஏற்கெனவே பெற்ற தொழில் அனுபவத்தைக்கொண்டு தரத்துடன் ஐஸ்க்ரீமை தயாரித்தேன். ஆனால், அதில் ஏதோ ஒரு குறை இருக்கிறமாதிரி தோன்றியது. உடனடியாக ஐஸ்க்ரீமுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்கிறவர்களுக்கு போன் செய்து சில நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன். துல்லியமாக எடுத்துச் சொன்னார்கள். பிறகென்ன, 'லிவிங் ஐஸ்க்ரீம்' என்கிற பெயரில் என் பிராண்டை உருவாக்கினேன்!

சுவை கொடுத்த நம்பிக்கை!

முதன்முதலாக ஐஸ்க்ரீம் செய்து சுவைத்துப் பார்த்தபோது, எனது நாக்கில் நின்ற சுவைதான் எனக்கு அன்றைய நம்பிக்கை. அதே நம்பிக்கையுடன் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயந்திரங்களை வாங்கினேன். அதன் மூலம் தயாரிப்பை தொடர்ந்தேன். அதுவரை பிரபல நிறுவனத்தின் ஐஸ்க்ரீம் கிடைக்கும் என என்னிடம் வந்த பல வாடிக்கையாளர்கள் நான் வேறு ஒரு புதிய பெயரில் விற்கிறேன் என்றபோதே பின்வாங்கினர். அதுதான் எனக்கிருந்த முதல் சவால். அந்தச் சவாலை என்னால் மிக எளிதாகக் கடக்க முடியவில்லை. அவர்களை மாற்ற பலமுறை அவர்களிடம் பேசுவேன். என்னுடையது தரமானது என்பதை நிரூபிக்கப் பலமுறை சேம்பிள் கொண்டுபோய்க் காட்டுவேன். திருமணம் என்றால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என இருவீட்டாரிடமும் சென்று ஐஸ்க்ரீம் மாதிரிகளைக் கொடுத்து ஒரு சில ஆர்டர்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. எந்தவொரு கல்யாண மண்டபத்தில் விழாக்கள் புக் செய்யப்பட்டாலும் உடனே எனக்குத் தகவல் தர சொல்லி கேட்டுக் கொண்டேன். அதைவைத்தே ஆர்டர்களைப் பிடிப்பேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

தரம் ஜெயிக்க வைக்கும்!

எனது வெற்றிக்குக் காரணம் என்றால் எனது ஐஸ்க்ரீமின் தரம் மட்டும்தான். காரணம், நான் என்னென்ன மூலப்பொருட்களைச் சேர்க்கிறேன் என்பதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியும். கலப்படமற்ற பால், வெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டே தயாரிக்கிறேன். எனது வெற்றிக்கு மற்றொரு காரணம், எனது போட்டி நிறுவனங்கள். அவர்கள் விலையை ஏற்றியதும், எனது தயாரிப்புக்கு மவுசு கூடியது.

மிகப் பெரிய வி.ஐ.பி-க்களின் வீட்டு திருமண விழாக்களை எப்படியும் பிடித்துவிடுவேன். அதற்குக் காரணம், அதுதான் நம்மை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். மக்களிடம் நல்ல விளம்பரமும் கிடைக்கும். இதற்காக விலையில் அல்லது எண்ணிக்கையில் கூடுதல் சலுகை அளிக்கத் தயங்கமாட்டேன். விளம்பரத்துக்கான செலவை நான் வாடிக்கையாளருக்கே சலுகையாகத் தருகிறேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

சவால்களால் சாதித்தேன்!

ஐஸ்க்ரீம் மட்டுமே வழங்குவதாலேயே பல ஆர்டர்கள் கைநழுவின. அதை நிறுத்தவே கூடவே பீடா, கரும்புச் சாறு, ஃப்ரூட் சாலட், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், பாணி பூரி போன்றவற்றையும் இணைத்தேன். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இவற்றையும் கலப்படமில்லாமல் செய்தேன்.

எனது நிறுவனத்தில் முழுநேர பணியாளர்களாக இரண்டு பேரை மட்டுமே வைத்துள்ளேன். மற்றவர்கள் அனைவரும் கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதி நேரமாக வேலை செய்பவர்கள்தான். ஆர்டர்கள் வரும்போது போன் செய்து அழைப்பேன். அனைவரும் வந்தால் ஒரேநாளில் உற்பத்தி முடிந்துவிடும்.

இதுவரை நான் பட்டகஷ்டங்கள் சவால்கள்தான், அடுத்து அதுக்கான உத்வேகம். பத்தாம் வகுப்பில் நான் தோல்வி அடைந்தபோது எனக்குப் படிப்பே வராது என்று என்னைச் சிலர் ஒதுக்கினார்கள். அது தவறு, என்னாலும் படிக்க முடியும் என்று நிரூபிக்கவே வெறியோடு படிக்க ஆரம்பித்தேன். இன்றுவரை படிக்கிறேன். படிப்பு, தொழில் இரண்டிலும் எனக்கு வெற்றிதான்'' என்கிறார் புன்னகையுடன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

'ஓடினால் விழுந்துவிடுவோமோ என்பவன் என்றும் வெல்லமாட்டான். விழுந்தாலும் எழுந்துகொள்ளலாம் என்பவனே வெல்வான்’ என்பதைத் தன் வெற்றியின் ஃபார்முலாவாகச் சொல்கிறார் சந்தானகிருஷ்ணன். வாழ்த்துக்கள் சகோதரா!

படங்கள்:  ர.சதானந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism