Published:Updated:

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

ச.ஸ்ரீராம்

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

முன்பெல்லாம் சின்னச் சின்னக் கடைகளில்தான் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கினோம். பிற்பாடு, பெரும் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஷோரூம்கள் வந்தபிறகு இந்தச் சிறிய கடைகளின் வர்த்தகம் ஓரளவு பாதிப்படைந்தது.

இப்போது இந்தப் பெரிய ஷோரூம்களுக்கே ஆன்லைன் வர்த்தகம் மூலம் புதிய சிக்கல் வந்து சேர்ந்திருக்கிறது. விவரமாக யோசிக்கும் வாடிக்கையாளர்கள் சிலர் ரீடெய்ல் கடைகளுக்குச் சென்று எந்தப் பொருள், எந்த நிறத்தில், என்ன விலையில் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப் பொருளை அங்கு வாங்காமல், வீட்டுக்கு வந்து ஆன்லைனில் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதாவது, ரீடெய்ல் கடைகளை ஒரு டிரையல் ரூமாக (சோதனை அறை) பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.  லட்சக்கணக்கில் முதல்போட்டுத் திறக்கப்பட்ட ரீடெய்ல் ஷோரூம்கள் வெறும் டிரையல் ரூம்களாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று மனம் கொதிக்கின்றனர் ஷோரூம் மேனேஜர்கள்.

ரீடெய்ல் ஷோரூம்களுக்கும், ஆன்லைன் ஷாப்புகளுக்கும் இடையே என்ன மோதல்? ஏன் ஒன்றுக்கொன்று இப்படிச் சண்டை போட்டுக்கொள்கின்றன? என்கிற  கேள்விக்கு பதில் காணும்முன் இ-காமர்ஸ் என்று அழைக்கப்படுகிற ஆன்லைன் வர்த்தகம் அடைந்துவரும் அதிவேக வளர்ச்சி பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

ஆன்லைன் வர்த்தகம் என்பது இன்று வேகமாக வளர்ந்துவரும் துறை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இது அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கிறது. 2007-08ம் ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் துறையாக இருந்த இ-காமர்ஸ், இன்று ரூ.13,900 கோடி வருவாய் தரும் துறையாக வளர்ந்துள்ளது. ஆண்டுக்குச் சராசரியாக 50-55%  என்ற அளவில் வளர்ந்துவரும் துறையாக உள்ள இந்த இ-காமர்ஸின் வருவாய் வளர்ச்சி 2016-களில் ரூ.50,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் துறை இவ்வளவு வேகமாக வளர என்ன காரணம்? ஆன்லைன் நிறுவனங்கள் மக்களைக் கவர்வதற்காகப் போட்டி போட்டு ஆஃபர்களை வீசி, வாடிக்கையாளர் களைத் தங்கள் வசப்படுத்துகின்றன. நேரத்தை மிச்சப்படுத்தவும், மக்கள் அலைந்துதிரிந்து பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் வசதியாக இருப்பதால், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.  

இந்தத் துறை வேகமாக வளர இன்னொரு காரணம், இந்திய மக்கள் தொகையில் பத்துக்கும் அதிகமான சதவிகிதத்தினர் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களாகவும், 12.5% பேர் இந்த இன்டர்நெட் பயன்படுத்து பவர்களை நேரடியாகச் சார்ந்தும் இருப்பதே. இவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஓர் இடத்துக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கும் பழக்கத்தை விரும்பாதவர்கள்.அலையாமல்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தபடி பொருட்களை வாங்க நினைப்பவர்கள்.

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

இதுமாதிரியான இளைஞர்களை இ-மெயில்கள் மூலம் குறிவைத்துச் செயல்படுகின்றன ஆன்லைன் நிறுவனங்கள். முன்பெல்லாம் ரயில், பஸ் டிக்கெட்களை மட்டுமே ஆன்லைனின் புக் செய்துவந்த மக்கள், இன்று காலணி, புத்தகம் தொடங்கி எல்லாப் பொருட்களையும் ஆன்லைனிலேயே வாங்கிவிடுகிற அளவுக்கு மாறிவிட்டார்கள்.

ஆன்லைன் நிறுவனங்களால் ரீடெய்ல் நிறுவனங்கள் பாதிப்படைகிறதா என சென்னையில் ரீடெய்ல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளரிடம் கேட்டோம்.

''ஆன்லைன் வர்த்தகம் ரீடெய்ல் வர்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. இங்குவரும் வாடிக்கையாளர்களில் சிலர் எங்களிடம், 'இதே பொருளை நான் ஆன்லைனில் குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்கிறேன். இங்கு விலை அதிகமாக உள்ளது’ என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். இன்னும் சிலர் பொருளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கவனித்துவிட்டு, ஆன்லைன் மூலம் வாங்கப் போய்விடுகின்றனர்'' என்றார்.

அதிவேகமாக வளரும் இந்த ஆன்லைன் நிறுவனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று சென்னையில் உள்ள லேண்ட்மார்க் ஸ்டோர்ஸின் மேலாளர் தீன்ஷாவிடம் கேட்டோம்.

''ரீடெய்ல் நிறுவனங்கள் ஆன்லைன் நிறுவனங்களால் பாதிப்படைந் திருப்பது உண்மைதான். ஆனால், நிறையப் பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஷோரூம்களைத் தேடிவந்து பொருட்களைப் பார்த்துவிட்டு, ஆன்லைனில் வாங்குபவர்கள் இருந்தாலும், இன்னமும் நிறையபேர் இங்கு வந்து நேரடியாக பொருட்களைப் பார்த்துச் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டு, வாங்கவே செய்கின்றனர். ஆனாலும், ரீடெய்ல் வர்த்தகமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தங்களை அப்டேட் செய்துகொள்ளும் பட்சத்தில் ஆன்லைனும் ரீடெய்லின் ஓர் அங்கமாக மாறிவிடும்'' என்றார்.

ஆன்லைன் வர்த்தகம் என்பது ஒரு சவால்தான் என்று ஆரம்பித்தார் ரீடெய்ல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சிஇஓ குமார்.

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

''இன்று வேகமாக வளர்ந்துவரும் ஆன்லைன் வர்த்தகம், ரீடெய்ல் துறைக்கு ஒரு சவாலாகவே மாறியிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் ஒரு நிறுவனம் களமிறங்க அதிகபட்ச முதலீடு தேவையில்லை. ஆன்லைன் மூலம் ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது மிகவும் சுலபமான விஷயமாக உள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்கிறமாதிரி பொருட்களை விளம்பரம் செய்து, ஆஃபர்களையும் தருவதன் மூலம், எளிதாக அந்தப் பொருளை வாங்கவைக்க முடிகிறது.

ஆன்லைன் நிறுவனங்கள் மொத்த விற்பனை விலையில் பொருட்களை வாங்குவதன் மூலம் எந்தவித செயல்பாட்டுக் கட்டணத்தையும் கட்டாத காரணத்தினால் குறைந்த விலையில் பொருட்களை விற்று, அதிக லாபம் பார்க்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதையே விரும்புவதால், இந்த வர்த்தகம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தால் ரீடெய்ல் வர்த்தகத்துக்கு  பாதிப்பு இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஏறக்குறைய எல்லா ரீடெய்ல் வர்த்தக நிறுவனங்களுமே இப்போது ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளன. அதனால் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. ஆனால், வெறும் ரீடெய்ல் வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபடும் நிறுவனங்களுக்குச் சற்றுப் பாதிப்புதான். இதைச் சமாளிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் தங்களைச் சரியான முறையில் தயார்படுத்திக்கொள்வது அவசியம்.  

ஆன்லைன் வர்த்தகத்தை ரீடெய்ல் வர்த்தகத்தினர் போட்டியாகப் பார்க்காமல், ரீடெய்ல் வர்த்தகத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாகப் பார்ப்பது அவசியம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொண்டதுபோல, இந்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு ரீடெய்ல் நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்றார் அவர்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு முக்கியக் காரணியாக இருப்பது, சமூக வலைதளங்களும், இணையதளத்தில் தோன்றும் விளம்பரங்களுமே ஆகும். மக்களைக் கவரும் வகையில் அதன் வண்ணம், தோற்றம் ஆகியவை ஹைலைட் செய்யப்பட்டு, அதனை கிளிக் செய்தாலே அந்த பொருளை விற்கும் இணையதளத்துக்குச் சென்றுவிடுமாறு வடிவமைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் மடிக்கணினி, செல்போன், கேமரா போன்ற டிஜிட்டல் பொருட்கள் மொத்தமாக ஆன்லைனில் விற்கபட்ட பொருட்களின் விகிதத்தில் 56 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது, அதற்கு அடித்தபடியான இடத்தைப் பிடித்தது காலணிகள்தான். இவற்றை நேரில் சென்று வாங்க வேண்டியதில்லை என்பதே இன்றைய வாடிக்கையாளர்களின் மனநிலை.

ஆன்லைன் மூலம் எளிதாகப் பொருட்களை வாங்க முடியும் என்றாலும் அதன்மூலம் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள அசௌகரியங்களைப் பற்றிச் சொன்னார் சென்னையில் இன்னொரு பெரிய ரீடெய்ல் ஷோரூமின் மேனேஜர் ஒருவர்.

இ-காமர்ஸ் விஸ்வரூபம்... டிரையல் ரூம்களாக மாறும் ஷோரூம்கள்!

''நீங்கள் தொட்டு உணரக்கூடிய 'டச் அண்டு ஃபீல்’ அனுபவத்தை இந்த ஆன்லைன் நிறுவனங்களால் தர இயலாது. மேலும், ஆன்லைன் நிறுவனங்கள் மார்க்கெட்டில் அறிமுகமாகி புழக்கத்தில் இருக்கும் பொருளை மட்டுமே ஆஃபர் விலையில் விற்குமே தவிர, புதிதாக அறிமுகபடுத்தப்படும் பொருட்களை ரீடெய்ல் நிறுவனங்களால் மட்டுமே வழங்க முடியும்.

ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கிவிட்டு ஏதாவது பழுது ஏற்பட்டாலோ அல்லது குறை இருந்தாலோ அதை ரீடெய்ல் நிறுவனத்திடம் வாரண்டி கேட்டு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு எங்களால் எந்தச் சேவையையும் தர முடிவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள், ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு  வாரண்டி சேவையைக் கொடுப்பதில்லை. மேலும், ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருளுக்கு ஷிப்பிங் கட்டணம் தனியாக வசூலிக்கபடுவதால் அதையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏறக்குறைய ரீடெய்ல் கடைகளில் வாங்கும் விலைக்கு நிகரான விலையே வந்துவிடும். இது பலருக்கும் தெரிவதில்லை'' என நாம் கவனிக்கத் தவறும் பல பாயின்ட்களை அவர் எடுத்துச் சொன்னார்.

ஆக, ஆன்லைன் மற்றும் ரீடெய்ல் வர்த்தகத்துக்கு இடையே சில பொது வான கொள்கைகளை அரசாங்கம் வகுக்கவில்லை எனில் பாதிக்கப்படப் போவது வாடிக்கையாளர்களே. இந்த இரு வர்த்தகத்திலும் ஒரேமாதிரியாக விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே ஒன்றுக்கொன்று போட்டியாக அமையாமல், உதவி செய்கிற விஷயமாக மாறும்!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism