Published:Updated:

பணவளக் கலை !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை !

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

40 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

 பணம் சம்பாதிக்க பிசினஸ் ஒன்றுதான் தலைசிறந்த வழி என கடந்த பல வாரங்களாக சொல்லி வருகிறேன். நான் சொல்வதை ஏற்றுக்கொண்டு பிசினஸ் பாதையில் பயணிக்க நினைப்பவர்களுக்கான சில முக்கிய ஆலோசனையைச் சுருக்கமாக சொல்கிறேன்.

பிசினஸ் பாதையில் செல்லலாம் என்று நினைப்பவர்கள் முதன்முதலாகப் புரிந்துகொள்ளவேண்டியது, அந்தப் பாதையில் செல்வதற்கான விலை ஒன்று இருக்கிறது என்பதைத்தான். இந்தப் பாதை அதிகப் பணத்தைச் சேர்க்க வழி செய்யும் என்பதாலேயே அந்தப் பாதையில் செல்வதற்கான விலையும் பெரியதாகவே இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலாவதாக, இந்தப் பாதையில் செல்வதற்கு நேரம், பணம், மனம் என்ற மூன்றையும் பெரிய அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும். இவ்வளவு விஷயங்களையும் செலவு செய்தபின்னரும், சிலசமயம் தோல்வியைச் சந்திக்க நேரலாம். அப்படித் தோல்வியைச் சந்தித்த நேரத்தில் அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு செயல்படும் மனோபாவம் கொண்டிருக்கவேண்டும். விலை கொடுத்து அனுபவத்தை வாங்குவதா என்று மலைத்தீர்கள் எனில், இந்தப் பாதையிலிருந்து 'யூ-டேர்ன்’ அடிக்கத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த விலையைக் கொடுக்க நீங்கள் தயாராக இல்லை எனில், வேறு யாரோ அந்த விலையைக் கொடுத்து அதற்கான பலாபலன்களை அனுபவிக்கத் தயாராகிவிடுவார்கள்.

பணவளக் கலை !

தொழில் முயற்சி செய்யும்போது எடுத்தவுடனேயே பெரிய தொழில் செய்ய முயலாதீர்கள். குழந்தைகள் எப்படித் தவழ்ந்து, நடந்து, ஓட ஆரம்பிக்கிறதோ, அதுமாதிரி முதலில் நடக்கப் பழகுங்கள். பின்னர் ஓட்டப்பந்தயத்தில் ஓட முயற்சி எடுக்கலாம். எடுத்தவுடனேயே ஓட்டப்பந்தயத்தில் ஓடமுயற்சித்தால் தசைப்பிடிப்பு வந்து உங்களை நகரவிடாமல் செய்துவிடும். மிகவும் பாதுகாப்பாக வேலையில் இருந்துகொண்டே சிறுதொழில் ஒன்றை ஆட்களைவைத்து நடத்திப் பாருங்கள். அதன் வெற்றி, தோல்வியை வைத்து உங்கள் திறமையைச் சீர்தூக்கிப் பாருங்கள். தோல்விதரும் குணங்களைச் சரிசெய்துகொண்டு மீண்டும் முயலுங்கள். வெற்றி கண்முன்னே தெரிந்தபின்னர் வேலையைவிட்டு வெளிவர முயலுங்கள்.

தொழில் என்றவுடனேயே ஒரு ஃபேக்டரி, மெஷினரி, பெரிய காம்பவுன்ட் வால், செக்யூரிட்டி, ஏசி ரூம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு செயல்படாமல், சாதாரணமாக உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பணம் பண்ணப் பாருங்கள். சுற்றிவாழும் மக்களின் தேவையை அறிந்துகொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தொழில்களைச் செய்ய முயலுங்கள்.

பணவளக் கலை !

ஏதாவது ஒரு பொருளையோ, சர்வீஸையோ தற்போது இருப்பதைவிட வேகமாகவும், மேம்படுத்தியும், விலை குறைவாகவும், சுலபமாகவும் தருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். இந்தவகைத் தொழிலிலும் சுலபத்தில் ஜெயிக்க முடியும். எந்தத் தொழிலானாலும் சரி, வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தியே செயல்படுங்கள். வாடிக்கையாளரைப் பற்றியே நினையுங்கள். வாடிக்கையாளர் சிந்திப்பதுபோல் சிந்தித்துப் பழகுங்கள். இந்தப் பொருளுக்கு/சர்வீஸுக்கு வாடிக்கையாளர் என்ன விலை தருவார், எப்படி பார்ப்பார்  என்று சிந்தியுங்கள். வாடிக்கையாளரின் பிரச்னைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தால், பணம் உங்களைத் தேடி வரும்.

அதெல்லாம் சரி! ஆனால், முதலீட்டுக்கு எங்கே போவது என்று கேட்பீர்கள். உங்கள் உழைப்பு, நேரம், வியர்வை போன்றவற்றுடன் உங்கள் முதலீடு சரியான விகிதத்தில் செலவிடப்பட்டால் உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி காணும். வெற்றித் தென்படும் வேளையில் தொழிலுக்குத் தேவையான பணமும் உங்களை நோக்கி வரஆரம்பிக்கும். இதனாலேயேதான் சிறிய முயற்சி என்றாலும் அதை ஒருமுறையாவது செய்துபாருங்கள் என்கிறேன். அது பாசிட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில், அடுத்தடுத்து படிப்படியான முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

சிறிய முயற்சியில் தோல்வி வந்தாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். இதுபோன்று நிதானமாகச் செய்யப்படும் சோதனை முயற்சிகள் பெரிய அளவில் பணரீதியான இழப்புகளைத் தந்துவிடாது. பெரிய முதலீடும் சிறிய முயற்சிகளுக்குத் தேவைப்படாது. இந்த முயற்சிகள் சிறிதாக இருந்தபோதிலும் அவை நிஜமான பிசினஸ் அனுபவத்தை, பிசினஸ் சார்ந்த எல்லாவிதமான ஏரியாக்களிலும் (விற்பனை, மார்க்கெட்டிங், ஹெச்ஆர் போன்ற) தரவல்லது.

மெதுவாகவும் பொறுமையாகவும் சிறியதாகவும் செய்யப்படும் முயற்சிகள் நேரத்தை சாப்பிட்டு அனுபவத்தை அள்ளித்தரும். வேகமாகச் செயல்பட்டால் பணரீதியான நஷ்டம் வந்துவிடக்கூடும். அதனாலேயே மெதுவாகச் செயல்பட வேண்டும் என்கிறேன்.

நினைவிருக்கட்டும் தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்லி பணம் திரட்டுவது மிகவும் கடினம். ஆனால் தொழிலைச் சரியாகச் செய்யாதுபோய்ப் பணத்தை இழப்பது மிகவும் சுலபம். அதேபோல் தொழிலை விரிவாக்குவதும் அது தரும் பணத்தைக் கொண்டே இருக்கவேண்டும்.

பணவளக் கலை !

கொஞ்சநாள் நன்றாகப் போகின்றதே என்று நினைத்து கடன் வாங்கி விரிவாக்கம் செய்வது சில சமயம் விபரீதமாக முடிந்துவிடக்கூடும். ஏனென்றால், நமக்குத் தொழில் அனுபவம் கிடையாதே!.

மெதுவாக, மெதுவாக என்று சொல்வதற்கு மற்றுமொரு காரணம் தொழிலின் ஆரம்பகாலத்தில் உங்களிடத்தில் ஆர்வம் கரைபுரண்டு ஓடும். அதனாலேயே, வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்தில் நீங்களே இறங்கிவிடுவீர்கள். உதாரணத்துக்கு, ஒரு சிறிய பொருள் தயாரித்து விற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சேல்ஸ், மார்க்கெட்டிங், பொட்டலம் கட்டுவது, வீட்டில் கொண்டு போய் டோர் டெலிவரி செய்வது என எல்லாவற்றிலுமே பிரியத்துடன் பங்கெடுப்பீர்கள். இது நம்முடைய தொழில். இதில் நாம் செய்யும் எந்த வேலையும் நம் தகுதிக்குக் கீழான வேலை இல்லை என்ற எண்ணமே உங்கள் மனத்தில் நிறைந்திருக்கும். இந்தவகைப் பங்கெடுப்பு உங்களுக்கு எல்லா ஏரியாவிலும் சிறப்பான அனுபவத்தையும் அந்தந்த ஏரியாவில் உள்ள சரிசெய்யக்கூடிய சிக்கல்களையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கும்.

இந்தச் சமயத்தில், தொழில்ரீதியாகச் சில விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். சிறப்பான பொருட்கள், நியாயமான போட்டியாளர்களைச் சமாளிக்கும் விலை, பொருளில் பிரச்னை எனில், பணம் திரும்பப் பெறலாம் என்பதில் வாடிக்கையாளருக்குத் தரப்படும் நம்பிக்கை, விற்பனைக்காக மிகக் குறைந்த அளவே கையிருப்பில் வைத்திருக்கவேண்டிய சூழ்நிலை, பணமோ/பொருளோ சரியான நேரத்தில் அளிக்கப்படுதல், விற்பனைக்கு முன்னும், பின்னும் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் ஸ்ட்ராங்கான சப்போர்ட், தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒவ்வொரு டீலிங்கிலும் காட்டும் நேர்மை மற்றும் நியாயம் போன்றவையே தொழிலில் உங்களை நோக்கி பணத்தை அனுப்பிவைக்கும் மந்திரம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் தெளிவாகச் செயல்படவேண்டும்.

பணவளக் கலை !

இதெல்லாம் பிசினஸில் சாத்தியமா என்று நினைப்பீர்கள். உண்மையிலேயே இவையெல்லாம்தான் பணம் சம்பாதிக்க உதவுகின்றன. முயற்சி எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். கிடைத்த வெற்றியை நிலைநிறுத்திக்கொள்வது என்பது அடுத்தகட்ட நடவடிக்கை. இன்றைக்கு வெற்றிகரமாகப் பணக்காரராகத் திகழும் ஒரு தொழிலதிபரை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், முன்னொரு காலத்தில் அவர் ஒரு சின்ன முயற்சியுடன்தான் தன் பிசினஸ் வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism