Published:Updated:

சூப்பர் பிராண்டை உருவாக்க சுலபமான 10 வழிகள்!

ச.ஸ்ரீராம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'டிவி விளம்பரத்துல வர்ற அந்த பிங்க் கலர் வாஷிங் மெஷின் சூப்பர், அதுதான் எனக்கு வேணும்’, 'அந்த விளம்பரத்துல வர்ற குளிர்பானம்தான் என் சாய்ஸ்’ - இப்படி சிலர் சொல்ல கேட்டிருப்போம். எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அதை வாங்குகிற மக்கள் மனதில் தைக்கிறமாதிரி நிலைநிறுத்திவிடுவதுதான் பிராண்டிங். இந்த பிராண்டிங் உறுதியாக இருந்தால், அந்தப் பொருட்களுக்கான தேவை மக்களிடம் எப்போதும் இருக்கும். ஒரு பிராண்டை வாடிக்கையாளர் மனதில் எப்படி நிலைநிறுத்துவது என பிராண்ட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். அவர் சொன்ன 10 வழிகள் இதோ...

1. தனித்துவம் அவசியம்!

ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாடிக்கையாளர் களிடம் பிரபலப்படுத்தும்போது அது மற்ற பிராண்டுகளில் இருந்து வேறுபட்டு,  தனித்துவமாக இருப்பது கட்டாயம்.  உதாரணமாக, சில டூத் பேஸ்ட் நிறுவனங்கள் தங்கள் பிராண்டில் என்னென்ன மூலிகைப்பொருட்கள்  சேர்த்து தயார் செய்யப்படுகிறது, கிருமிகளிலிருந்து எப்படி பாதுகாப்பு அளிக்கிறது என்று சொல்லி, தங்கள் தனித்துவத்தை உணர்த்துகின்றன.

2. கவனம் ஈர்க்கும் பெயர்கள்!

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பிராண்டுகளுக்கும் பெயர் முக்கியம். பெயர் நச்சென்று இருந்தால், அந்தப் பொருளை பயன்படுத்துகிறவர்கள்  மறக்க முடியாதபடி போய் தங்கிவிடும். ஃபேன்டா என்கிற பிராண்ட் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது கோககோலா நிறுவனத்தின் பிராண்ட் என்பது பலருக்கு நினைவிருக்காது. ஆகவே, ஒரு பிராண்டின் பெயர் மிகுந்த கவனத்தோடு வைக்கப்பட வேண்டும்.

சூப்பர் பிராண்டை உருவாக்க சுலபமான 10 வழிகள்!

3. அடையாளமாகும் குறியீடு!

ஒரு பொருள் என்னதான் தரமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களைக் கவருவது அதன் லோகோ எனும் குறியீடுதான். வண்ணத்திலும், வடிவத் திலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லோகோவே மனதில் நிலையாகத் தங்கும்.  

4. விளம்பரத்தில் புதுமை!

சூப்பர் பிராண்டை உருவாக்க சுலபமான 10 வழிகள்!

ஒரு பிராண்டை பற்றி பத்திரிகை களிலோ,  இணையதளங்களிலோ செய்தி வந்தால்  அதனை விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்துவது அவசியம். பத்திரிகைகள்,  சினிமாவுக்கு அளிக்கும் மார்க்கை சினிமா தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்துவது இதற்கொரு உதாரணம்.

5. பரவச்செய்யும் சமூக வலைதளங்கள்!

இன்று பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில்தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு பொருள் எப்படி என்று கேட்டால், நூறு பேர் அதற்கு பதில் சொல்கிறார்கள். உங்கள் பொருள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவான கருத்து இருந்தால், அந்தப் பொருளைப் பற்றி பேசி பிரபலப்படுத்திவிடுவார்கள். எனவே, உறுதியான பிராண்ட் செய்ய இது  உதவும்!  

6. மனதில் நிற்கும் மாதிரிகள்!

ஒரு பிராண்டை பிரபலமடையச் செய்வதற்குமுன், மக்களிடம் அதற்கான வரவேற்பைத் தெரிந்துகொள்ள சிறிய அளவிலான மாதிரிகள் தருவது அல்லது டெமோ காட்டுவது போன்ற செயல்களால் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அப்போது அந்த பிராண்ட் பற்றிய அறிமுகம் ஏற்படுவதோடு, தேவையில்லாத பயமும் போய்விடும்.

7. எதிர்பார்ப்பைத் தூண்டும் டீஸர்!

ஒரு பொருளையோ அல்லது சேவையையோ மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும்முன் அது என்ன பிராண்டாக இருக்கும் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டும்விதமாக செய்வதுதான் டீஸர் விளம்பரங்கள். சமீபத்தில் ஒரு விளம்பர டீஸரில் ஒரு வாடிக்கையாளரின் பெயரை சொல்லி, ''அவருக்கு நிச்சயம் பரிசு கிடைக்குமா'' என்று ஒரு டீஸர் வெளியானவுடன் அது என்ன பிராண்ட் என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது.

சூப்பர் பிராண்டை உருவாக்க சுலபமான 10 வழிகள்!

இறுதியில் அது ஒரு பருப்பு பிராண்ட் விளம்பரம் என்று தெரிந்து, அது மக்கள் மனதில் நிலைத்து நின்றது. இதுபோன்ற டீஸர்கள் மக்களிடம் சுவாரஸ்யத்தைத் தூண்டும்பட்சத்தில், அந்த பிராண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

8. பதியவைக்கும் புள்ளிவிவரம்!

சில பிராண்டுகளை புள்ளிவிவரங் களைக்கொண்டே மனதில் வைத்திருக் கின்றனர். உதாரணமாக,  ஆரோக்கியா பாலின் அறிமுக நாட்களில் அதனை 4.5 பால் என்று பிரபலப்படுத்தியதை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக் கின்றனர். இப்படி புள்ளிவிவரங்களை பயன்படுத்தி பிராண்டிங் செய்யும் போது அவை  சந்தேகத்துக்கு இடம் தராத வகையில் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அதுவே பிராண்டின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும்.

9. சமூக அக்கறை!

வர்த்தகத்தில் லாபம் பார்ப்பது  என்பதைத் தாண்டி இந்த பிராண்ட் சமூக அக்கறை கொண்ட பிராண்ட் என மக்கள் மனதில் பதிய செய்வதன் மூலம் அதன் மதிப்பை உயர்த்துவது. நீங்கள் வாங்கும் இந்தப் பொருள் ஒரு மாணவனின் கல்விக்கு உதவுகிறது என்பது போன்ற விளம்பர வாசகங்கள் அந்த பிராண்டிங் சமூக அக்கறையை மக்கள் மனதில் நிறுத்தும்!

10. பிரபலப்படுத்தும் பிரபலங்கள்!

சில பொருட்களை விளம்பரப் படுத்தும்போது பிரபலமானவர்களை மாடல்களாகப் பயன்படுத்துவதால் அது மனதில் தங்கும். குறிப்பாக, குழந்தைகளைக் கவரும் பிராண்டுகள் இப்படிதான் தங்களுக்கான இடத்தைப் பிடிக்கின்றன. சச்சின் குடிக்கும் பூஸ்ட் என பிரபலங்களால் பாப்புலரான  பிராண்ட்கள் பலப்பல.''

இனியென்ன, உங்கள் பிராண்டை பிரபலப்படுத்த இந்த டெக்னிக்குகளை பயன்படுத்தலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு