Published:Updated:

களைகட்டும் க்ளே பொம்மை பிசினஸ்...

பள்ளித் தோழிகளின் பலே பார்ட்னர்ஷிப்!

''ஒரே ஸ்கூல்ல படிச்சோம்; வேற வேற காலேஜுக்குப் பிரிஞ்சோம்; படிப்பு முடிச்ச அடுத்த வருஷமே பிசினஸ் பார்ட்னர்களா இணைஞ்சுட்டோம்!''

- புன்னகையுடன் அறிமுகம் தருகிறார்கள், நிறைமதி, ராகவி மற்றும் நந்தினி. தஞ்சாவூரில் களிமண் நகைகள், கீ-செயின் பொம்மை மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் இந்த இளம் தொழில்முனைவோர் மூவரும் ஆர்வம் பொங்க பேசினார்கள்.

''வேற வேற இன்ஜினீயரிங் கல்லூரிகள்ல சேர்ந்துட்டாலும், ஸ்கூல் நட்பை மறக்காம, மூணு பேருமே தொடர்ந்துட்டிருந்தோம். டூர், அவுட்டிங்னு எங்க போனாலும், க்ளே கம்மல்கள், பொம்மைகளை விரும்பி வாங்கிட்டு வருவோம். அதைப் பத்தியே நாங்க மூணு பேரும் அப்பப்ப பேசிப்போம். ஒரு கட்டத்துல அதையெல்லாம் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கற ஆசை எங்களுக்கு வந்துச்சு. தேடித் தேடி க்ளே பொருட்கள் தயாரிப்பைக் கத்துக்கிட்டோம். அதுக்குப் பிறகு எங்களுக்கு வேண்டிய வடிவம், நிறத்துல நாங்களே தயாரிச்சு பயன்படுத்தினப்போ, எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் 'வாவ்!’ சொன்னாங்க. அதை நாங்கதான் செஞ்சோம்னு சொன்னதும் சர்ப்ரைஸ் ஆகி, அவங்களுக்கும் செய்துதரச் சொல்லி ஒரே கெஞ்சல்ஸ்'' என்று நிறைமதி நிறுத்த, தொடர்ந்தார் ராகவி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
களைகட்டும் க்ளே பொம்மை பிசினஸ்...

''பாக்கெட் மணிக்கு உதவுமேனு ஃப்ரெண்ட்ஸுக்கு செய்து கொடுக்க ஆரம்பிச்சோம். மூணு பேரோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், அவங்களோட ஃப்ரெண்ட்ஸ், அக்கம்பக்கம், உறவினர்கள்னு ஏகப்பட்ட பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. நாங்க படிச்சுட்டு இருந்ததால, முழு வீச்சுல இதுல இறங்க முடியல. 'படிப்பு முடிஞ்சதும் இதை ஒரு தொழிலாவே கையில எடுக்கலாம்'னு முடிவு பண்ணி, ஒதுக்கி வெச்சோம். அதன்படியே, காலேஜ் முடிச்சதும்... பெற்றோர்கள் உதவியோட பிசினஸை ஆரம்பிச்சோம். நிறைமதி வீட்டையே தொழிற்கூடமா ஆக்கிக்கிட்டோம். ஆரம்பத்தில் வாரத்துக்கு 10 பீஸ்கள் செய்றதே பெரிய விஷயமா இருந்துச்சு. இப்போ தினமும் 10 பீஸ்களுக்கு மேல ஆர்டர் வருது. நல்ல லாபமும் வருது. கிட்டத்தட்ட 50 பர்சன்ட் லாபம் வரைக்கும் இதுல பார்க்கலாம்'' என்று கண்கள் படபடத்தார்.

களைகட்டும் க்ளே பொம்மை பிசினஸ்...

அவரைத் தொடர்ந்த நந்தினி, ''முதல் முதலா க்ளேயில் நாங்க செய்து பார்த்தது, ஒரு டெடிபியர் பொம்மை. களிமண்ணில் பொம்மை செய்து அதை 'மைக்ரோவேவ் அவன்’ல வேகவெச்சு எடுக்கும் வரை, மூணு பேருக்கும் அவ்ளோ ஆர்வம், பதற்றம். ஒருவழியா அந்த டெடிபியர் நாங்க நினைச்ச மாதிரியே ஃபினிஷிங்கில் வர, சந்தோஷத்தில் துள்ளிக் குதிச்சோம். பிசினஸ்னு செய்ய ஆரம்பிச்சதும், அதில் கவனத்தையும் கிரியேட்டிவிட்டியையும் அதிகப்படுத்தினோம். பிறந்தநாளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டுகள், ஒருத்தரோட போட்டோவைப் பார்த்து அவரை மாதிரியே க்ளே டால் செய்றதுனு புது முயற்சிகள் செய்தோம். நல்ல வரவேற்பு. கடைகள்லயும் கொடுத்துப் பார்க்கலாமேனு சமீபத்துல களத்துல இறங்கினோம். சில கடைகளுக்கு சப்ளை செய்தோம். அதுலயும் வெற்றி கிடைக்கவே, இன்னும் சுறுசுறுப்பாயிட்டோம்!''

- புத்துணர்ச்சியுடன் சொன்னார்.

சபாஷ் கேர்ள்ஸ்!

கட்டுரை, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

ஈஸியா செய்யுங்க!

க்ளே கீ-செயின் பொம்மை செய்வதற்கு தோழிகள் சொல்லும் செய்முறை...

'பாலிமர் க்ளே’ எனப்படும் களிமண்ணை (எல்லா கிராஃப்ட் கடைகளிலும் கிடைக்கும்) போதிய அளவுக்கு எடுத்து, சப்பாத்தி கல்லில் வைத்து உருட்டி வடிவமைக்கவும்.

செய்யப்போகும் பொம்மையின் பாகங்களைத் தனித்தனியாக செய்து, பிறகு சேர்த்து ஒட்டிவிடவும்.  

பொம்மையின் தலை அல்லது முதுகில் சின்ன துளை போட்டுக்கொள்ளவும்.  

களைகட்டும் க்ளே பொம்மை பிசினஸ்...

அந்தத் துளையில் சின்ன கம்பியை உள்நுழைத்து, வெளியே எடுத்து, வளைத்து வெட்டிவிடவும்.

செய்த பொம்மையை 'மைக்ரோ வேவ் அவன்’-ல் வைத்து, வேகவைக்கவும் (பொருட்களின் அளவைப் பொறுத்து வேகவைக்கும் நேரம் மாறும்).

வெளியே எடுத்த பிறகு, பொம்மையில் ஏற்கெனவே இருக்கும் கம்பி வளையத்தில், கீ-செயினுக்கான சிறு சங்கிலியைக் கோத்தால், க்ளே பொம்மை கீ-செயின் ரெடி!