Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் பாதையில் பயணிப்பதற்கான இறுதிகட்ட யோசனைகளைப் பார்த்துவருகிறோம். பணம் சம்பாதிக்கத் தேவையானவற்றில் முதல் இடத்தைப் பிடிப்பது எது என்று கேட்டால், உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? எக்கச்சக்க விஷயங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்கான சரியான விடை ஒன்றே ஒன்றுதான். அது பணம் சம்பாதிக்க முதலில் ஆசைப்பட வேண்டும் என்பதுதான்.

அட, பணம் சம்பாதிக்க ஆசையில்லாத மனிதர்கள் எவரும் உண்டா என்பீர்கள். ஆசை என்று இங்கே நான் குறிப்பிடுவது பரிபூரணமான ஆசையை. அது என்ன பரிபூரண ஆசை? ஆசையைவிட அது எந்தவிதத்தில் மாறுபட்டது என்று நீங்கள் கேட்கலாம்.

ஆசைப்பட்டதை அடைவதற்காகத் தியாகங்களை மனப்பூர்வமாகச் செய்யத் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் வாழும் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் மனப்பூர்வமாகப் பல தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்கிறீர்களோ, அந்த ஆசையை மட்டுமே நீங்கள் முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஏனைய ஆசைகளையெல்லாம் மனத்தின் ஓர் ஓரத்தில்வைத்து மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும். அதாவது, அசைக்க முடியாத, முழுமனதுடன் கூடிய ஈடுபாடு மட்டுமே தியாகங்களைச் செய்யத் துணையாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் சம்பாதிப்பதே சந்தோஷமாக வாழத்தானே? அதில் எங்கே தியாகத்தின் தேவை வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். நிறையவே தியாகங்களைச் செய்யவேண்டியிருக்கும். நேரம் அவற்றில் முதலாவது. நம்மில் அனைவருக்கும் இடையே பணரீதியான வித்தியாசம் (இருப்பு அளவில்) நிறையவே இருக்கிறது என்றாலும் நம் அனைவருக்கும் ஒருநாளில் 24 மணி நேரமே இருக்கிறது. உலகத்தின் முன்னணி பணக்காரரானாலும் சரி, வெகுசாமானியன் ஆனாலும் சரி, நேரம் என்பது அனைவருக்கும் ஒன்றே. பணம் சம்பாதிக்க முனையும் அனைவருமே அதிக அளவில் நேரத்தினை ஒதுக்கவேண்டியிருக்கும். அதிலும் ஆரம்பக்காலத்தில் நிறையவே நேரரீதியான தியாகத்தினைச் செய்யவேண்டியிருக்கும்.

பணவளக் கலை!

அடுத்து, சேமிப்பு. தொழில் செய்ய ஆசைப்பட்டீர்கள் எனில், முதலீடு தேவைப்படும். முதலீட்டுத் தேவைக்காக நிறையவே நீங்கள் சேமிக்க வேண்டியிருக்கும். பிடித்த விஷயங்களை வாங்காமலும், அத்தியாவசியத் தேவைக்கான செலவுகளைக்கூடக் குறைத்தும் பணத்தினைச் சேர்த்து தொழில்முனைவோர் ஆவதற்குப் பாடுபடவேண்டியிருக்கும். இதுவும் ஒருவகைத் தியாகம்தானே!

அடுத்த முக்கியமான விஷயம், முடிவெடுப்பது. தொழில் துவங்கத் தேவையான பணம் சேர்த்தாயிற்று. நேரம் ஒதுக்கவும் மனரீதியாகத் தயாராகிவிட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? முடிவெடுப்பதுதான். இந்த முடிவெடுக்கும் திறன், தொழில் பாதையில் ஒரே ஒருமுறை மட்டும் தேவைப்படுவது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். தொழில் என்றாலே முடிவுகளை அடிக்கொரு தரம்

பணவளக் கலை!

எடுக்கவேண்டியிருக்கும். ஒரு முடிவை எடுப்பதனால் வரும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து சரியான சமயத்தில் முடிவெடுக்கும் திறனைப் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் அனைவருமே பெற்றுக்கொள்ள வேண்டும். முடிவெடுக்கப் பயந்து தள்ளிப்போடுதல் என்பது தொழிலுக்கு ஆகாது. எனவே, தொடர்ந்து துணிந்து முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

முடிவெடுத்தால் மட்டும் போதுமா? முடிவில் உறுதியாக இருக்க வேண்டாமா? தொழில் ஆரம்பிக்கிறோம் என்று முடிவு செய்துவிடுகிறோம். ஆரம்பித்தபின்னர் நிறையவே எதிர்பாராத இடைஞ்சல்கள் வரலாம். வரலாம் என்ன வரும்? அப்படி வரும்போது நமக்குத் தொழிலெல்லாம் லாயக்குப்படாது என்று நினைத்து, மீண்டும் வேலை என்ற தங்கச்சங்கிலியில் நம்மைப்போய்ப் பூட்டிக்கொள்ளலாமா? நாம்தான் இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் தயாராவதைத்தானே முதல் படிநிலையாக வைத்தோம். அப்படியென்றால் எடுத்த முடிவில் நிலையாக நிலைத்து நின்றேயாக வேண்டும் இல்லையா? இன்னல்கள் வந்தபோதும், எதிர்பார்த்தது நடக்காதபோதும், சௌகரியங்கள் குறையும்போதும் தியாக உணர்வோடு செயல்பட்டு நம்முடைய குறிக்கோளான பணரீதியான வெற்றியை நோக்கி பயணித்துதானே ஆகவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி இறுதியாக வருவது ஒழுங்குமுறை. ஒழுங்குமுறை என்பது நம்முடைய செயல்பாட்டில், சிந்தனையில், நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவர வேண்டிய ஒன்றாகும். நேரம் ஒதுக்குதலில் ஆரம்பித்து, கடினமாக உழைத்தல், தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் தெரிந்துகொள்ளுதல், எத்தனை பிரச்னைகள் வந்தாலுமே அதனை ஒரு சிஸ்டமேட்டிக்கான முறையில் அணுகுதல் என எல்லாவற்றிலுமே ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தேயாக வேண்டும். இந்த ஒழுங்குமுறைதான் மேலே சொன்ன குணங்கள் அனைத்தையும் சேர்த்துக்கட்டும் கயிறு. இந்தக் கயிற்றால் கட்டப்படும்போதுதான் மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையுமே பலனளிக்க ஆரம்பிக்கின்றன.

ஒருநாளோ, ஒருமாதமோ இதனைச் செய்ய அனைவருமே தயாராக இருப்பார்கள். பணரீதியான வெற்றிக்கு இவை அத்தனையுமே தொடர்ந்து செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தொடர்ந்து செய்யாதபட்சத்தில் சிலசமயம் கையில் இருப்பதை இழக்கக்கூட நேரிடும். இதை நடைமுறையில் நீங்களே உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் பார்த்துத் தெரிந்திருப்பீர்கள்.

பணவளக் கலை!

பணத்தைச் சேர்த்தல் என்பது ஒருவிதமான நூதனக் கலைதான். சிறுவயதில் இருந்தே வேண்டிய மற்றும் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிப் பணத்தைச் செலவழித்தே மகிழ்ச்சி கண்ட நாம் பணத்தைச் சேர்த்தல் என்பது என்னவேன்றே அறியாமல் வயதில் பெரிய மனிதனாக வளர்ந்துவிடுகிறோம். வயதில் பெரிய மனிதனாக ஆனதற்குப்பின், பணத்தைச் சேர்த்தல் என்ற ரூட்டில் போகும்போது ஆரம்பக்காலத்தில் நாம் இதுநாள் வரை பணம் செலவழித்துக் கண்ட சுகங்களை ஒதுக்கவேண்டியுள்ளது. இது நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. எனவேதான் பேசாமல் வேலைக்குப்போய் நாலு காசு சம்பாதித்து நிம்மதியாய் வாழலாம் என நினைத்து வேலை எனும் தங்கச் சங்கிலியில் நம்மைப் பிரிக்க முடியாதவாறு நாமே கட்டிக்கொள்கிறோம்.

கஷ்டப்பட்டுப் பணம் சேர்ப்பது என்பதைவிடக் கஷ்டப்படாமல் வேலை பார்த்துவரும் வருமானத்தை ஜாலியாகச் செலவு பண்ண நினைத்து நம்முடைய இளமைக் காலத்தில் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறோம். நாளடைவில் அது பழகிப்போய்க் கழுத்தில் சங்கிலி இருப்பதை மறந்துவிடுகிறோம். நாற்பதுகளுக்குமேல் தேவைகள் அதிகரிக்கும்போது நம்முடைய வேலை அந்தத் தேவைகளுக்குத் தேவையான வருமானத்துக்கான ஈடுபாட்டைத் தருவதில்லை. அப்போதுதான் நமக்குக் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி இடைஞ்சலாகத் தெரிகிறது. எந்தச் சங்கிலி சௌகரியமாகத் தெரிந்ததோ, அதுவே பின்னாளில் இடைஞ்சலாகவும் தெரிகிறது.

பணவளக் கலை!

மேலே சொன்ன விஷயங்களைப் பார்த்தால், உங்களுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்திருக்கும். பணம் சம்பாதிக்க அபரிமிதமான தன்னம்பிக்கை தேவைப்படுகிறது என்பதுதான் அது. தன்னம்பிக்கையை வைத்து சம்பாதித்த பணமே அதிகத் தன்னம்பிக்கையை நமக்குத் தருவதாக இருக்கிறது. பணம் இல்லாதபோது தன்னம்பிக்கைதனை நாமாகவே அதிகப்படுத்திக்கொண்டு அதனைத் தேடியும், பணத்தைச் தேடிச்சேர்த்த பின்னர் அந்தப் பணமே நமக்குப் பலமடங்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தித் தருவதும் பணத்தின் இயல்பான குணம். இதனைப் புரிந்துகொண்டால் பணத்தை நோக்கிய பயணத்தை நம்மால் சுலபமாக ஆரம்பிக்க முடியும்.

(கற்றுத் தேர்வோம்)