Published:Updated:

உனக்கும் மேலே நீ!

உலகம் உங்கள் பேச்சுக்காகக் காத்திருக்கிறது! டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

 இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

உலகத்திலேயே மக்கள் எதற்காக நிறையப் பயப்படுகிறார்கள் தெரியுமா? பலர் முன்பு தைரியமாக மேடையேறி பேசத்தான். ஆனால், வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், தன் பேச்சால் சாதித்தவர்களைத்தான் இன்றும் உலகம் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. அதுவும், பலர் கூடியிருக்கும் இடத்தில் பயப்படாமல் தன்மனதில்பட்ட கருத்துக்களைப் பேசி மக்களைத் தன்வயப்படுத்தியவர் களையே வரலாறு போற்றுகிறது. அரசியல்வாதிகளையும், ஆன்மிகவாதிகளையும், நிறுவனத்தை ஆள்கிற உயர் அதிகாரிகளையும் நாம் மதிக்கக் காரணம், பொது இடங்களில் எல்லோர் முன்பும் தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவதினால்தான்.

உங்களில் பலருக்கு அந்தமாதிரி இருக்க வாய்ப்புண்டு. அந்தத் திறமை உங்களிடம் இருந்தால், உங்களைத் தலைவராக ஏற்றுக்கொள்ளவும் மக்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் பெரிய குறை, தங்களிடம் உள்ள பேச்சுத் திறமையை வெளிப்படுத்த தயங்குவதே. இப்போது இன்டர்வியூகளில் கேட்கப்படும் முக்கிய கேள்வியே, 'ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சில நிமிடங்கள் பேச முடியுமா?’ என்பதுதான். இந்தக் கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே பல இளைஞர்கள் சொதப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இத்தகைய இளைஞர்களைத் தனியாகப் பரீட்சை எழுதச் சொன்னால்,  அசத்திவிடுவார்கள். ஆனால், எல்லோர் முன்னிலையிலும் பேச்சின் மூலம் புரியவைக்கச் சொன்னால், எங்கிருந்தோ ஒரு தயக்கம்  வந்து தயங்கி நிற்பார்கள்.

இன்றைய போட்டி நிறைந்த வாழ்க்கையில், ஒருவரையொருவர் மிஞ்சியே ஆகவேண்டும் எனில், பொது இடத்தில் பேசும் திறமை மிக முக்கியத் தகுதியாகவே கருதப்படுகிறது. சிலர் திறமை இல்லாவிட்டாலும், பொது இடத்தில் பேசும் தன் வாய்ச் சாதுர்யத்தைக்கொண்டே ஜெயித்துவிடுகிறார்கள். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் பொருந்தும்.

உனக்கும் மேலே நீ!

பொது இடத்தில் எல்லோர் முன்பும் பேசுவதற்குப் பெரியதாகப் படிப்பறிவு தேவை யில்லை. சொல்லவந்த கருத்தை, நேர்படத் தைரியமாகச் சொன்னாலே போதும். எல்லோர் முன்னிலையிலும் தைரியமாகப் பேசவேண்டுமெனில், சில விஷயங்களைச் சொல்கிறேன். பொது இடத்தில் நான்குபேர் முன்னிலையில் பேசத் தயங்கும் அனைவருக்கும் இந்த விஷயங்கள் நிச்சயம் பயன்படும்.

முதலில், பேசப்போகும் கருத்து, கையாளப்போகும் மொழி, வெளிப்படுத்தும் விதம் (stஹ்றீமீ) -  இந்த மூன்றையும் தயார் செய்து கொண்டால், உங்களுக்கு வெற்றிதான்.  

பேசத் தொடங்கும்முன் அமைதியாகச் சில விநாடி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

வந்திருக்கும் கூட்டத்தினர் எப்படிப்பட்டவர்கள் என்று பாருங்கள். அவர்கள் படித்தவர்களாகவோ, படிக்காதவர்களாகவோ இருக்கலாம். மக்களின் நாடி அறிந்துபேசினால் எளிதில் உங்கள் கருத்து சென்றடையும்.

 உங்களைப் பேச அழைக்கும் வரை அவசரப்படாதீர்கள். பேச அழைத்தவுடன் மெதுவாக நடந்து நீங்கள் பேசுகிற இடத்துக்குச் செல்லுங்கள். பதற்றப்பட்டு ஓடாதீர்கள்.

வந்திருக்கும் அனைவரையும் முதலில் சில வரிகளில் புகழ்ந்து, வாழ்த்திவிடுவது நல்ல தொடக்கம்.

முக்கிய குறிப்புகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். அதை அடிக்கடி பார்க்கத் தேவையில்லை.

உங்கள் பேச்சை மூன்று விதமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். முதலில், அறிமுகம். உங்கள் அறிமுகமே கூட்டத்தை உங்கள் பக்கம் இழுத்து விடவேண்டும். நல்ல பழமொழியை, ஒரு நல்ல ஜோக்கை, ஏதாவது ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லி பேச்சைத் தொடங்குங்கள். நீங்கள் பேசப்போகும் விஷயத்தில் முழுஅறிவு இருக்க வேண்டும். கூட்டத்தினருக்காகவும், நல்ல பேச்சாளன் என்று பெயர் எடுக்கவும் எதையாவது பேசாதீர்கள். பேசப்போகிற விஷயத்தை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து, அதைக் கொஞ்சம் விளக்கமாக, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லுங்கள். பேசி முடித்த வுடன், உங்கள் பேச்சை சில வார்த்தை களில் முடிவுரையாக சொல்லிவிடுங்கள்.

ஒரு சாராரை ஆதரித்தோ, ஒரு சாராரை தாக்கியோ பேசாதீர்கள். உதாரணங்களைக் காட்டும்போது தனிப்பட்ட மனிதரையோ, சமூகத்தையோ சாடாதீர்கள்.

ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்குத் தாவும்போது முதலில் சொன்ன விஷயத்தைத் தெளிவு படுத்திவிட்டீர்களா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.

உனக்கும் மேலே நீ!

நீங்களே பேசிக்கொண்டிருக்காமல், அவ்வப்போது கூட்டத்தினரையும் பேசவையுங்கள். அவர்களோடு கலந்துரையாடுங்கள். அப்போதுதான் கூட்டம் களைகட்டும்.

எதைப்பற்றி பேசினாலும், மொழியின் தரத்தை மாற்றாதீர்கள். உச்சரிப்பில் மிகவும் கவனமிருக்கட்டும். சொல்கிற கருத்துக்கு ஏற்றாற்போல் உச்சரிப்பில் நீங்கள் நிகழ்த்தும் ஏற்றத் தாழ்வுகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும்.

எளிதில் புரியும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.

உங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உதாரணம் காட்டுங்கள்.

முக்கிய விஷயத்தை வலியுறுத்தும் போது, ஒரு கணம் பார்வையாளரை நோக்குங்கள். நிறுத்தி, நிதானமாக இடைவெளிவிட்டு முக்கியக் கருத்தை வலியுறுத்துங்கள்.

சரளமாகப் பேசுங்கள். தேவையில்லாத வார்த்தை ஜாலங்களையும், அடுக்குமொழி களையும், பிறரைப்போல் மிமிக்ரி செய்வதையும் தவிருங்கள். அநாவசிய சேஷ்டைகளைத் தவிருங்கள்.

கூட்டத்தினரை நோக்கி உங்கள் கண்பார்வை இருக்கட்டும்.

உனக்கும் மேலே நீ!

அவ்வப்போது புன்னகைக்கத் தவறாதீர்கள். அவ்வாறு செய்யும்போது பார்வையாளர்கள் நீங்கள் தடம் மாறாமலும், பேச்சின்மேல் மிகுந்த ஈடுபாட்டோடும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள். சில சமயம் நாம் பேச்சின் நடுவே தடுமாறினால் புன்னகை அதை மறைத்துவிடும்.

அறைக்கு ஏற்றாற்போல் உங்கள் குரலின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கட்டும். உங்கள் குரல் உங்களின் தன்னம்பிக்கையைக் காட்டும்.

தேவையில்லாமல் உணர்ச்சி வயப்படாதீர்கள்.

இவை மட்டுமல்ல, இன்னும் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

1. சிறந்த பேச்சாளராக முக்கியமாகக் கவனத்தில்கொள்ள வேண்டியது, நம்முடைய தோற்றம். பேசுகிற இடத்துக்கு ஏற்றாற்போன்ற உடையைத் தேர்வு செய்வதும், அதற்கேற்ற அலங்காரங்களும் மிகவும் முக்கியம்.

2. பேசுவதற்குமுன் மற்றவர்கள் பேச்சை கவனிப்பது முக்கியம். உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க விரும்புகிற நீங்கள், மற்றவர்கள் பேச்சுக்கும் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான சில கருத்துகள்கூட அவர்கள் பேச்சிலிருந்து தொனிக்கும்.

3. உங்கள் கருத்தை மற்றவர்கள் மறுத்தாலோ அல்லது மாற்றுக் கருத்துகள் சொன்னாலோ அவர்களோடு சண்டைபோடாதீர்கள். தவறுகள் இருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்யாதீர்கள்.

உனக்கும் மேலே நீ!

4. பேசும்போது தவறு நிகழ்வதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமே. அதற்காக வருத்தப்படாதீர்கள். மேலே தொடருங்கள். புராணங்களிலிருந்தும், வரலாறுகளிலிருந்தும் உதாரணம் காட்டும்போது அது சரிதானா என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு பேசுங்கள்.

5. குறித்த நேரத்துக்குள் உங்கள் பேச்சை தொடங்கி, குறித்த நேரத்துக்குள் முடியுங்கள். சிலர் மைக் கிடைத்தால் போதும், நேரம், தேதி பார்க்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

உங்கள் பேச்சை கேட்பவர்கள் உங்களுக்காகவும், உங்களுடைய பேச்சை உற்சாகப்படுத்துவதற்காகவும் வந்திருக்கிறார்கள் என்று நம்புங்கள். யாரையும், நீங்கள் சமாதானப்படுத்தவோ, அவர்களுக்குச் சாதகமாகவோ பேசி நல்ல பெயர் வாங்கலாம் என்று யோசிக்காதீர்கள்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம், கண்ணாடி முன் நின்று பேசி உங்களது முகபாவனைகளையும், உங்களது தவறுகள் என்ன என்பதையும் நீங்களே சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள். உங்களது நெருங்கிய நலவிரும்பிகளிடம் பேசிக்காட்டி அவர்களுடைய விமர்சனங்களையும் ஏற்று உங்களை சரிசெய்துகொள்ளுங்கள்.

பயம்தான் எப்பேர்பட்ட மனிதர்களையும் திக்குமுக்காடச் செய்துவிடுகிறது. இந்தப் பயத்தைத் தாண்டி வந்துவிட்டால், உங்களுக்கு நிச்சயம் வெற்றிதான்.

பேச்சுத்திறன் என்பது உங்களுக்கு நிச்சயம் தேவை. உலகம் உங்களுடைய கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. பயப்படாமல் வாருங்கள். மேடையேறுங்கள். உலகம் உங்கள் பேச்சுக்காகக் காத்திருக்கிறது!

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு