Published:Updated:

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

கடன் இல்லாமல் இருக்கவே நாம் அனைவரும் விரும்பு கிறோம். ஆனால், இன்றைய தலைமுறை யினர் கார், வீடு, உயர்கல்வி, சுற்றுலா போன்ற பலவற்றையும் தங்களது இளம்வயதிலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். கடன் வாங்கித் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நம்மில் பலரும் இருக்கிறோம்.

நடுத்தரவர்க்கத்து மக்கள் ஒழுங்காக, தேவைக்கேற்றாற்போல் உபயோகித்தால் கடன் ஒரு நல்ல உபகரணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடன் என்பது நம்மைக் கவிழ்த்துவிடும். அதை வாங்கவே கூடாது என்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கடன் கலாசாரம் இங்குப் பரவுவது வெளிநாட்டினர் செய்யும் சதி என்று விநோதமாகப் பேசுகிறவர்களும் உண்டு.

உள்ளபடி சொல்லவேண்டும் எனில், கடன் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்திமாதிரி. அதைச் சரியாகக் கையாளாவிட்டால், வாங்கியவரையே நாசமாக்கும். நீங்கள் கடன் வாங்காமல் கன்சர்வேட்டிவ்வாக இருக்க விரும்புகிறீர்கள் எனில், அப்படியே இருந்துவிட்டுப்போங்கள். ஆனால், நீண்ட காலத்தில் சொத்து மதிப்பினை அதிகரிக்கும் வீட்டுக் கடன் போன்ற கடனை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அதற்கு எப்படித் திட்டமிட்டுக்கொள்வது என இனி பார்ப்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

இளம் வயதில் கடன்!

கடன் வாங்குவது என்று முடிவாகிவிட்டால், இளம் வயதிலேயே கடன் வாங்கிக்கொள்வது நல்லது. நண்பர் ஒருவருக்கு 25 வயதாகும்போது (1990-ல்) முதல் வீட்டை வங்கிக் கடன் மூலம் வாங்கினார். அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த வீட்டுக் கடனை முடித்துவிட்டார். அதன்பிறகு 2001-ம் ஆண்டு வங்கியில் இன்னொருமுறை வீட்டுக் கடன் வாங்கித் தனது இரண்டாம் வீட்டை வாங்கினார். அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டார். 2013-ல் இரண்டாம் வீட்டுக் கடனையும் முடித்துவிட்டார். இப்போது மூன்றாவது வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கலாமா என்று யோசனை செய்து வருகிறார். இந்த நண்பர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கையில் காசிருந்தால் இஷ்டத்துக்கு செலவு செய்துவிடுவார். எனவே,

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

வரவையும் செலவையும் எப்போதும் சமமாக வைத்துக்கொள்வார். வரவுக்கு மிஞ்சி செலவு போகாமல் இருக்க, அவர் இப்படி கடன் வாங்கி சொத்து சேர்க்கிறார்!

ஒருவர் இளம் வயதிலேயே வீடு, கல்வி போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்காகக் கடன் வாங்கும்போது இரண்டு வகைகளில் அவருக்கு சாதகமாக அமைகிறது. கடன் கட்டுவதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்கிறார். மேலும், கடனை சரியான முறையில் உபயோகிக்கும்போது, சொத்துகள் உருவாகிறது. சொத்துகள் உருவாவதுடன் மட்டுமல்லாமல், அந்தச் சொத்துகள் தொடர்ச்சியான ஒரு வருமானத்தையும் தருகிறது.

மேலும், ஒருவர் 45 - 50 வயதை நெருங்கும்போது அவருக்குக் குழந்தைகள், கல்வி, திருமணம் போன்ற வேறு பல புதிய கமிட்மென்ட்கள் வந்துவிடுகின்றன. அந்த வயதில் கடன்களை முடித்துவிட்டு நிம்மதியாக இருப்பதுதான் நல்லது. ஆகவே, ஒருவர் தனது இளம் வயதிலேயே கடன் வாங்குவதில் பல சாதகமான அம்சங்கள் இருக்கவே செய்கிறது.

கடன் திட்டமிடல்!

நாம் புதிய நிதி ஆண்டில் நுழைந்துள் ளோம். இப்போதே திட்டமிட்டால், அடுத்த நிதி ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த நிதி ஆண்டிலோ கடனை வாங்கலாம். தற்போது எந்தக் கடன் வாங்கச் சென்றாலும் நாம் டவுண் பேமன்ட் (Down Payment) செலுத்த வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். மேலும், இ.எம்.ஐ (EMI - Equated Monthly Installment) தொகையை நம்மால் செலுத்த முடியுமா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், குறைந்தது ரூ.4 லட்சம் நீங்கள் டவுண் பேமன்டாக, அதாவது உங்கள் பங்காகத் தரவேண்டி இருக்கும்.

மேலும், எப்படியும் பத்திரச் செலவு குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் தேவைப்படும். ஆக, இந்த ரூ.5 லட்சத்தை நீங்கள் சேர்த்துக்கொண்டுதான் வங்கியை கடனுக்காக அணுக வேண்டும். இந்த 5 லட்சத்தைச் சேகரிப்பதற்கு நீங்கள் மாதாமாதம் ஒரு ரெக்கரிங் டெபாசிட்டிலேயோ அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டு களிலோ முதலீடு செய்துவரலாம். உங்களின் டார்கெட் தொகையை நெருங்கும்போது, வங்கியை அணுகி கடனுக்காக விண்ணப்பிக்கலாம். டவுண் பேமன்ட் தொகையைச் சேகரிக்க, உங்கள் சம்பாத்தியத்தைப் பொறுத்து நீங்கள் வாங்கப்போகும் வீட்டின் மதிப்பைப் பொறுத்து, ஒன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

மாத வருமானத்தில் 40 சதவிகிதத்துக்குள் உங்கள் இ.எம்.ஐ இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குமேல் செல்ல வேண்டாம். உதாரணத்துக்கு, உங்கள் மாத வருமானம் ரூபாய் 20,000 என்றால், உங்கள் இ.எம்.ஐ ரூ.8,000-க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த இ.எம்.ஐ தொகைக்கு ஈடான கடனை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டுக் கடன் வாங்கும்போது, உங்களால் முடிந்தால் தவிர, குறுகிய கால கடனுக்குச் செல்லாதீர்கள். முடிந்த அளவு நீண்ட கால கடனாகவே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது உங்கள் கையில் கேஷ் ஃப்ளோ நன்றாக இருக்கும்.

மேலும், வீட்டுக் கடனை பெரும்பாலான வங்கிகளில், கெடுகாலத்துக்கு முன்பே மொத்தமாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. அதற்கு ஏதும் அபராதம் கிடையாது. ஆகவே, உங்கள் கையில் பணம் அதிகமாக இருக்கும்போதெல்லாம், நீங்கள் கடனை அடைத்துக்கொண்டே வரலாம்.

நீங்கள் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்கும் போது உங்களுக்குத் தேவைப்படும் டவுண் பேமன்ட் ரூ.5 லட்சத்தைச் சேகரிக்க, நீங்கள் எவ்வளவு மாதம் சேமிக்க வேண்டும்? உங்கள் சேமிப்புக்கு ஆண்டுக்கு 9% வட்டி கிடைக்கும் என எடுத்துக்கொண்டுள்ளோம்.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

கல்விக் கடன்:

வளர்ந்த பல நாடுகளில் கல்விக் கடன் மிகவும் மலிவான வட்டியில் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கல்விக் கடன் மலிவான வட்டியில் கிடைப்பதில்லை. ஆகவே, படித்து முடித்து வேலை கிடைத்தவுடன், சீக்கிரமாக கல்விக் கடனை அடைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் அது ஒரு பாரமாகவே இருந்து கொண்டிருக்கும். கல்விக் கடன் சுமையைக் குறைப்பதற்கு மாணவர்கள் பகுதிநேர வேலை பார்ப்பது குறித்தும் யோசிக்கலாம்.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

பர்சனல் லோன்!

பர்சனல் லோன் முடிந்தவரை வாங்காமல் இருப்பதுதான் நல்லது. குறைந்த வட்டி, டாக்குமென்ட் இல்லாத லோன் என்றெல்லாம் வங்கிகள் விளம்பரம் செய்கின்றன. மொத்தத்தில் வட்டி அதிகம் என்பதுதான் உண்மை. மேலும், இவை குறுகிய கால கடனாக வருவதால், உங்கள் தினசரி வாழ்க்கையில் கேஷ் ஃப்ளோவில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பல வங்கிகள் கெடுதேதிக்குமுன் பணத்தை மொத்தமாகத் திருப்பிச் செலுத்த அனுமதிப்பதில்லை. அதற்கு அபராதம் விதிக்கின்றன. மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர, பர்சனல் லோன் பக்கம் செல்ல வேண்டாம்.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

கார் லோன்!

கார் என்பது இன்று ஒரு ஸ்டேட்டஸ் அடையாளமாகிவிட்டது. தேவையோ இல்லையோ, எல்லோரும் கார் வாங்க விரும்புகிறார்கள். ஆனால், பல புத்திசாலிகள் கார் வாங்காமல் கால் டாக்ஸி (Call Taxi) சேவையையே உபயோகித்துக்கொள்கின்றனர். வண்டி ஓட்டும் டென்ஷன் இல்லை; தேவைப்படும்போது கார் உங்கள் வீட்டின் முன்பு இருக்கும். செலவுகளும் குறைவு.

வீட்டுக்கு அடுத்தபடியாக இன்று கார் லோன் மிகக் குறைந்த வட்டியில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் வங்கிகள் மூலம் எடுத்துக்கொள்வது சிறந்தது. தற்போது 7 வருடங்கள் வரை வங்கிகள் கார் லோனை திருப்பிச் செலுத்த காலம் தருகின்றன.

சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு காரை லீஸாக எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கின்றன. அவ்வாறு உங்கள் நிறுவனம் அனுமதித்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் வருமான வரியிலும் மிச்சப்படுத்தலாம்.எனினும், கார் லோனை வீட்டுக் கடன், உங்கள் குழந்தைகள் நலன் மற்றும் உங்கள் ஓய்வுக்கால முதலீட்டுக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம்.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலை செய்பவர்கள் எனில், உங்களின் கடன் வாங்கும் திறன் இரட்டிப்பாகிறது. இருந்தபோதும், அதிகமாகக் கடன் வாங்காமல், ஒருவர் சம்பளத்தைக் கடனுக்காகவும் மற்றொருவர் சம்பளத்தைச் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு வேலை போனாலோ அல்லது வாழ்க்கைத் துணை வேலையில் இருந்து சற்றுகாலம் ஓய்வெடுக்க விரும்பினாலோ, குறைந்த அளவு கடன் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, எவ்வளவு தேவையோ அத்துடன் உங்களின் மொத்த நிலுவையில் உள்ள கடனை கணக்கிட்டு அதற்கும் சேர்த்து டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களில் தொழிலில் சற்று சுணக்கம் அடைவதோ அல்லது வேலை திடீரென்று போவதோ ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் இல்லை. ஆகவே, உங்களின் அவசரகாலத் தொகையைக் கணக்கிடும்போது அடுத்த ஆறு மாதத்துக்கு நீங்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ தொகைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு, உங்கள் மாத குடும்பச் செலவு ரூ.10,000 என்று வைத்துக்கொள்வோம். உங்களின் இ.எம்.ஐ ரூ.8,000 என்றால், உங்களின் அவசரகால கார்பஸ் ரூ.1,08,000-ஆக இருக்கட்டும். இந்தத் தொகையை நீங்கள் லிக்விட் ஃபண்டுகளிலோ அல்லது வங்கி டெபாசிட்டிலோ முதலீடு செய்துவைப்பது நல்லது.

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!

எந்தவிதமான கடனை வாங்குவதற்கு முன்பும் திட்டமிடுங்கள். குறைந்தது

6 - 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் டவுண் பேமன்டை எவ்வாறு கொண்டுவரப்போகிறீர்கள் என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வங்கிகளிடம் வட்டி மற்றும் பிற கட்டணங்கள் குறித்து அலசுங்கள். முடிவில் ஒரு திடமான முடிவை எடுங்கள்.

அதிகச் செலவாளிகள் கடன் வாங்கி, பிறகு கட்டுவது உகந்ததாக இருக்கும். நன்றாகச் சேமிக்கத் தெரிந்தவர்கள் ஓரளவு சேமித்துக் கொண்டு, மீதித் தொகைக்கு கடன் வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

நமது தகுதி அறிந்து திட்டமிட்டு கடன் பெறும்போது, கடன் நமக்குச் சாதகமாக அமையும். திட்டம் இல்லாமல் கடன் பெறுபவர்கள்தான் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

படம்:  ர.சதானந்த்