Published:Updated:

கிராஜுவிட்டி பெற என்ன தகுதி?

கிராஜுவிட்டி பெற என்ன தகுதி?

கேள்வி-பதில்

? கடந்த 24 வருடமாக சிறுதொழில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து, 58 வயதில் பணி ஓய்வுபெற்றேன். இ.பி.எஃப் பென்ஷன் மட்டும் கிடைக்கிறது. கிராஜுவிட்டி எதுவும் கிடைக்கவில்லை. இது கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

- பி.எஸ்.நாகராஜன், திருச்சி. கே.எம்.ரமேஷ், வழக்கறிஞர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருடம் வேலை பார்த்தாலே கிராஜுவிட்டி பெறும் தகுதி வந்துவிடும். நீங்கள் 24 வருடம் வேலை பார்த்திருப்பதால் அதைப் பெற முழுத்தகுதியும் உங்களுக்கு உண்டு. 12 மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் 10 நபர்களுக்கு மேல் பணியமர்த்தப்பட்டிருந்தால்  அந்த நிறுவனம் கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ்வரும்.  மேலும், அதன்பிறகு 10 நபர்களுக்குக் கீழே குறைந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

உங்கள் நிறுவனத்தில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரிந்திருந்தால், பணிக்கொடை பணப் பட்டுவாடா(Payment of Gratuity Act) சட்டம் 1972-ன்படி, படிவம் 'ஐ’-யை பூர்த்திசெய்து உங்களின் நிறுவனத்துக்கு  அனுப்பலாம்.

கிராஜுவிட்டி பெற என்ன தகுதி?

இதில் கடைசியாக நீங்கள் வாங்கிய சம்பளம் x வேலை பார்த்த வருடங்கள் X 15 / 26 என்ற கணக்கீட்டின்படி உங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகையை பூர்த்திசெய்து, அதைத் தரும்படி கேட்கலாம். இந்த விண்ணப்பம் தொழிலாளர் நல அலுவலகத்தில் கிடைக்கும். இந்த விண்ணப்பத்தை அனுப்பியபிறகு நிறுவனம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலோ அல்லது விண்ணப்பத்தை நிராகரித்தாலோ மேலே கூறப்பட்ட சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்துக்கு கடிதம் எழுதலாம் அல்லது வழக்கறிஞர் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்.''

? கடந்த வருடம் டிம்கன் இந்தியா (Timken India) நிறுவனத்தின் பங்குகளை ரூ.220-க்கு வாங்கினேன்.  இந்தப் பங்கின் எதிர்காலம் எப்படி?

பிரசாத், மதுரை. ஆர்.சுபாஷ், நிர்வாக இயக்குநர், டி.ராம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

''டிம்கன் பங்கு சுமார் ரூ.185 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது எம்.என்.சி நிறுவனம். தொழிற்சாலை களுக்கான கியர்களை உற்பத்தி செய்கிறது. 2012-13-ல் இந்தப் பங்கின் இ.பி.எஸ் ரூ.6.94. இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாப வளர்ச்சி ஆகியவை குறைந்துள்ளது.

கிராஜுவிட்டி பெற என்ன தகுதி?

மேலும், பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் இந்த நிறுவனம் வளர்ச்சி காணும். பங்கின் விலை 170 ரூபாய்க்கு கீழே செல்லும்பட்சத்தில் விற்றுவிடலாம். அல்லது இதை விற்றுவிட்டு, டிம்கனைவிட சிறப்பாகச் செயல்பட்டுவரும் எஃப்.ஏ.ஜி பேரிங் இந்தியா, டியூப் இன்வெஸ்ட்மென்ட், கார்போரண்டம் யுனிவர்சல் போன்ற  பங்குகளை பரிசீலிக்கலாம்!''

? என் அப்பா டீமேட் கணக்கு மூலம் பங்கு வர்த்தகம் செய்து வந்தார். கடந்த ஆண்டு அவர் இறந்துவிட்டார். என் அம்மாவை நாமினியாக நியமித்திருந்தார். அந்தப் பங்குகளை என்  பெயருக்கு மாற்ற முடியுமா?

ரவிக்குமார், மதுரை. ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சி.டி.எஸ்.எல்.

''டீமேட் கணக்கில் நாமினியாகத் தரப்பட்டிருக்கும் பெயருக்கு மட்டும்தான் பங்குகளை மாற்ற முடியும். முதலில் உங்கள் அம்மாவின் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்.''

? இரண்டு வருடத்துக்குமுன் பில்டரிடம் வீடு வாங்குவதற்காக ஒப்பந்தம்போட்டு, வீட்டின் மதிப்பில் 85 சதவிகித தொகையையும் தந்துவிட்டேன். ஆனால், கட்டட வேலை பாதி முடிந்த நிலையில், கடந்த ஓராண்டாக எந்த வேலையும் செய்யாமல் அப்படியே நிறுத்தி வைத்துள்ளார் பில்டர். இந்த நிலையில், வாங்கிய பணத்தைத் திரும்பத் தருவதாகச் சொல்கிறார். பணத்தைத் திரும்ப வாங்கும்போது அந்த வீட்டின் இன்றைய மதிப்பில் கேட்டு வாங்க முடியுமா? அல்லது கொடுத்த பணம் மட்டுமே கிடைக்குமா? வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வட்டி செலுத்தி வருகிறேன்.

@- குணசேகரன், பெருங்குடி. ஜீவா, வழக்கறிஞர்.

''ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்தில் பில்டர் வீட்டை கட்டிமுடிக்கவில்லை எனில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில் குறிப்பிட்ட காலத்தில் முடிக்காமல் இருப்பதற்காக இழப்பீடு மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டியை கேட்கலாம்.

கிராஜுவிட்டி பெற என்ன தகுதி?

இரண்டாவது, வீட்டுக் கடன் வாங்கியிருப்பதால், உங்களுக்கு வீட்டுக் கடன் வழங்கியிருக்கும் நிதி நிறுவனம் அல்லது வங்கிக்குத் தெரியாமல் பில்டருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. எனவே, நீங்கள் பில்டருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி வேலை தாமதமானதற்கான காரணத்தைக் கேட்க வேண்டும். அதன்பிறகுதான் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''

? பொதுத்துறை வங்கியில் 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை பணியாற்றியபோது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஓர் அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்த ஓய்வூதிய முதலீட்டை எடுக்க முடியுமா?

@- வாசுதேவன், ஹைதராபாத்.

''தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்துவதை நிறுத்தியபிறகு அந்தப் பணத்தை எடுக்கலாம். இதற்குத் தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. ஆனால், 20 சதவிகித தொகைதான் இப்போது கிடைக்கும். மீதமுள்ள தொகை ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து, 60 வயதுக்குப்பிறகு கிடைக்கும்.

இதில் பணம் செலுத்துபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை பணத்தை எடுக்கும்போது ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். இதனுடன் ரத்து செய்யப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கு விவரத்தை கொடுக்க வேண்டும். இதனுடன் உங்கள் முகவரிச் சான்று மற்றும் புகைப்படச் சான்றுக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். நீங்கள் வேலை பார்த்த வங்கியின் மூலமாகப் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களிடம் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.''

? எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியை 2007-ல் எடுத்து, கடந்த ஏழு வருடத்தில் மொத்தம் ரூ.1,75,000 பிரீமியம்  செலுத்தி இருக்கிறேன். இப்போது இந்த பாலிசியை சரண்டர் செய்தால் 1 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும் என்கிறார்கள். முழுத் தொகையும் பெற ஏதாவது வழியுள்ளதா அல்லது இந்த பாலிசியை அப்படியே தொடரலாமா?

கணேஷ் குமார், சென்னை. ஜெ.ஜெயக்குமார்,
 இயக்குநர், ஏஏஏ இன்வெஸ்ட்மென்டர் டாட்காம்

''ஜீவன் ஆனந்த் பாலிசியில் நீங்கள் எவ்வளவு தொகைக்கு கவரேஜ் எடுத்தீர்களோ, ஏறக்குறைய அந்தத் தொகை பாலிசி முதிர்வின்போது கிடைக்கும். அதன்பிறகு 75 வயது வரை லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்.

இந்த பாலிசி நல்ல திட்டம்தான். இதை இடையில் சரண்டர் செய்தால் செலுத்திய தொகையைவிடக் குறைவான தொகையே கிடைக்கும். முதிர்வுவரை காத்திருந்தால்தான் முழுத்தொகையையும் பெற முடியும்.

இந்த பாலிசியை நீங்கள் கட்டாயம் சரண்டர் செய்யவேண்டும் எனில், உங்களின் பாதுகாப்புக்காக ஆண்டு வருமானத்தைப்போல சுமார் 10 மடங்கு தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.'