Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

தொழில் செய்து பணரீதியாக முன்னேறுங்கள் என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், தொழில் செய்ய ஆரம்பிக்கவே கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தைப் பெற நாங்கள் என்ன செய்யவேண்டும்? கையில் இருப்பு என இருப்பது வேலையும் சம்பளமும்தான். வேறு என்ன செய்து தொழில் தொடங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்வது என்று நீங்கள் கேட்பது நியாயம்தான்!

இப்படிக் கேட்கிறவர்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். ஒன்று, இளம் வயதினர். இவர்கள் தற்போதுதான் வேலைக்குப்போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பார்கள். இவர்களில் பலரிடம் அசையாத சொத்துக்கள் ஏதும் இருக்காது. அப்பாவின் பெயரிலோ/குடும்பத்தின் அங்கமாகவோ சொத்துக்கள் இருக்கும். இரண்டாவது, 45 - 50 வயது கொண்டவர்கள். இவர்களுக்குச் சம்பளம் வரும் முன்பே செலவுகள் வரிசை கட்டி நிற்கும். கொஞ்சம் சொத்துக்கள் (வீடு/நிலம் என) கைவசம் இருக்கும். ஆனாலும், கேஷ்ஃப்ளோ என்பது சிக்கலானதாகவே இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அசையாத சொத்துக்கள் இந்த இருவகையினருக்குமே இருந்தபோதிலும், இந்தச் சொத்துக்களைப் பயன்படுத்தி, தொழிலில் இறங்கும் அனுமதியோ/சூழ்நிலையோ/ மனநிலையோ இவர்களுக்கு இருக்காது. இவை அனைத்துக்கும் மிக நியாயமான காரணங்கள் இருக்கவே செய்யும். இவர்கள் தொழிலில் ஈடுபட முடியாது என்பது உறுதியாகும்பட்சத்தில் வேலைக்குச் செல்வதன் மூலம் வரும் வருமானத்தில் செய்யப்படும் சேமிப்பிலேயே பணவசதியினை வளப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

பணவளக் கலை!

ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கும் நபர் எந்தவிதத்தில் பணத்தினைச் சேமிக்கலாம் என்பதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் கேள்வி. செலவுச் சுருக்கம் என்பதற்கு வழியோ, அடித்தளமோ செய்துதராத ஒரு சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இதை வாங்கு, அதை வாங்கு, இதை அனுபவி, அதை அனுபவி என்று போட்டிபோட்டுச் சந்தைப்படுத்துதலில் தீவிரமாக இருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலில் வாழும் நாம் பெரும்பாலான சமயங்களில் அநாவசியச் செலவுகளைக் கண்டுகொள்வதில்லை.

இன்றைய சூழலில் ஐம்பது வயதுக்குமேல், அப்பர் மிடில் கிளாஸ் லெவலில் இருப்பவர்கள் அவர்களுடைய இளம் வயதில் பண வசதி பெரிய அளவில் இல்லாமலேதான் இருந்திருப்பார்கள். அதேபோல் பெரிய அளவில் செலவழிக்கவும் வழியிருந்திருக்காது. இப்படிப்பட்ட சூழலில் இளமையைக் கழித்த இவர்கள் இன்று வரையிலுமே செலவு செய்வதற்கு முன்னர் நிறையவே யோசிப்பார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு கைவந்த கலையாகவே இருக்கும். இந்த ஐம்பது வயது மனிதர்களில் ஒரு சிறிய சதவிகிதத்தினரே பெரும் செலவாளியாக இருப்பார்கள்.

பணரீதியான புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்வி எல்லோர் மனதிலும் அவ்வப்போது தோன்றி மறையவே செய்யும். செலவினங்களில் நாம் எந்த நிலைக்குத் தகுதியானவராக இருக்கிறோமோ, அதனைவிட ஒருபடி குறைவாக வாழப்பழகிக்கொள்வதே வளமாக வாழ சிறந்த வழி

பணவளக் கலை!

என்கின்றனர் பணரீதியாக வெற்றிபெற்ற புத்திசாலிகள். உதாரணத்துக்குச் சொன்னால், பணரீதியாக ஒருவர் கார் வைத்திருக்கும் தகுதியுடையவராக இருந்தால் டூ-வீலர் வைத்துக்கொண்டும், டூ-வீலர் வைத்துக்கொள்ளும் தகுதியுடையவராக இருந்தால் சைக்கிளில் போய்க்கொண்டும் இருப்பதுதான் சரி என்று நினைப்பார்.

தனக்குக் குறைவாக இருந்தாலும் ஒருபடி குறைந்து வாழ்வதில் இரண்டுவிதமான சூட்சுமங்கள் இருக்கிறது. ஒன்று, தகுதியைக் குறைத்து வாழும்போது நாம் வாழும் நிலையில் ரொம்பவுமே சௌகரியமாகச் செழிப்புடன் வாழ முடியும். ஓர் உதாரணத்துக்குப் பார்த்தால், கார் வாங்கும் தகுதியுடன் இருக்கும் நபர் பைக் மட்டுமே வைத்திருக்கும்போது அதனை ஒழுங்காகப் பராமரித்து சூப்பராக வைத்திருக்க முடியும். பைக் வைத்திருக்கும் தகுதியுடைய நபர் கார் வைத்திருக்க முயலும்போது திடீர் திடீரென வரும் செலவுகளால் நிலைகுலைந்துபோக வாய்ப்புள்ளது.

குடியிருக்கும் வீட்டைத் தேர்வு செய்யும்போதுகூட நம் நிலையை உணர்ந்து தேர்வு செய்யவேண்டும் என்பார்கள். நம் அந்தஸ்தைத் தாண்டி மேல்தட்டு மக்கள் இருக்கும் இடத்தில் குடியிருக்க நினைப்பது தவறான காரியமே என்பார்கள். ஏனென்றால், காலப்போக்கில் நாம் நம்முடைய பண ரீதியான அந்தஸ்தை மறந்து அக்கம்பக்கம் இருப்பவர்களைப் பார்த்து அவர்களைப் போன்றே செலவழிக்கும் வாழ்க்கைமுறைக்கு மாறிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

தவணை முறையில் பொருட்களும், பர்சனல் லோன்களும் மலிந்து கூவிக்கூவி விற்கப்படும் இந்தக் காலத்தில் இந்தவகை மேல்தட்டு சுற்றத்தாரைப் பார்த்து நாம் நம்முடைய செலவின இயல்புகளை மாற்றிக்கொண்டால், அந்தப் பழக்கங்கள் நம்மைக் கடனில் கொண்டுபோய்த் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். எனவே, தகுதிக்கு சற்றே குறைவான வாழ்க்கை முறையைப் பழக்கப்படுத்திக்கொள்ளுதலே சிறப்பான சேமிக்கும் முறையாகும்.

எல்லோருமே நம்முடைய வாழ்வில் பணரீதியான ஜாக்பாட் அடிக்கவே ஆசைப்படுகிறோம். சம்பாத்தியம் என்று ஆரம்பிக்கும்போதே நாம் பெரிய பணக்காரனாக ஆகவேண்டும் என்ற உத்வேகத்துடனேயே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பணியை ஆரம்பிக்கிறான். ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியப்படுவதில்லை என்பதுதான் மிகச் சரியான/நிதர்சன உண்மை. நிஜத்தில் நிலைமை இப்படி இருக்கும்போது நாம் நமது தகுதிக்கும் சற்று குறைவான வாழ்க்கை முறையைத்தானே தேர்வு செய்யவேண்டும்?

பணவளக் கலை!

அட, என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். அப்படியென்றால், பணம் சம்பாதிப்பேன்/பணக்காரனாக மாறுவேன் என்ற எண்ணத்தை அனைவருமே மனதில் கொள்ளக்கூடாதா? எண்ணத்தில் இல்லையென்றால் அது எப்படிச் செயலாகும்? என்று நீங்கள் கேட்கலாம்.

எல்லோரும் முன்னேற்றத்துக்கான எண்ணத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. உயர்ந்த எண்ணங்களே நம்மை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், எதிர்காலத்தில் ஜாக்பாட் அடிப்பேன் என்ற நினைப்பை மனதில் வைத்துக்கொண்டு இன்றைக்குச் செலவழிப்பதில் அர்த்தமேயில்லை, இல்லையா?

ஒரு சந்தோஷமான, சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க அனைவருமே முயற்சி செய்வோம். தகுதிக்கு சற்று கீழேயே வாழ்ந்து சேமிப்பையும் சந்தோஷத்தையும் கூட்ட முயற்சிப்போம். இந்த முயற்சியின் நடுவே வாழ்க்கையின் ஏதோ ஒரு பாயின்ட்டில் ஜாக்பாட் அடித்தால் அது மிக அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவரவே செய்யும். நம் கனவுகளில் பல நனவாகும்.

பணவளக் கலை!

இந்த ரூட்டை விட்டுவிட்டு நான்தான் ஜாக்பாட் அடிக்கப்போகிறேனே என்ற எண்ணத்துடன் வரவுக்கு மீறிய செலவை சம்பாதிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே செய்ய ஆரம்பித்துக் கடன் சுமையைச் சுமந்து வாழ்நாளில் ஜாக்பாட் என்பதை எட்டாமலேயே போய்விட்டால் மிகவும் கொடூரமான சூழ்நிலையிலல்லவா நாம் வாழ்வின் பெரும்பான்மை பகுதியை கழிப்போம். அதனாலேயே, தகுதிக்குச் சற்று குறைவாய் வாழ்வதை (வாலன்டரி சிம்ப்ளிசிட்டி) வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய இயல்பு குணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறேன்.

(கற்றுத் தேர்வோம்)