Published:Updated:

மோசடி கம்பெனிகள்... சாட்டையைச் சுழற்றும் செபி!

சி.சரவணன்

நம் நாட்டை பொறுத்தவரை, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, அரசின் அங்கீகாரம் பெறாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நம்மவர்களின் வழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள  படித்த மக்களை விட்டுவிட்டு, கிராமங் களில் உள்ள பாமர மக்களைக் குறிவைத்துச் செயல்படுகின்றன இந்த மோசடி நிறுவனங்கள்.

இந்த மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்கிற குழப்பம் நிலவியதால், மோசடி நிறுவனங்கள் பல பெயர்களில் தங்கள் ஏமாற்றுத் திட்டங்களைக் கணஜோராக நடத்தி வந்தன. இந்த மோசடி நிறுவனங்களால் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதைத் தடுக்க, இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் செபி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.

செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகையில் 'செக்யூரிட்டீஸ் சட்ட (திருத்தம்) மசோதா 2013’ நாடாளுமன்றத்தில் மூன்றுமுறை தாக்கல் செய்யப்பட்டும் சட்டம் நிறைவேறவில்லை. கடைசியாக முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில்கூட இந்த மசோதா தாக்கலானது. ஆனால், சட்டமாகவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் பல நிறுவனங்கள் பொன்ஸி திட்டங்கள் மூலம் பணம் திரட்டி வந்தது நிரூபணமானபிறகும், அவற்றின் மீது செபியால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. இந்தக் குற்றங்களை எல்லாம் தடுக்க வேண்டுமெனில், செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது மிக அவசியம் என்பதை உணர்ந்த மத்திய அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் அதை வழங்கி இருக்கிறது.

மோசடி கம்பெனிகள்... சாட்டையைச் சுழற்றும் செபி!

இந்தச் சட்டத்தில் நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த அதிகாரங்கள் செபி அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. மார்ச் 28-ம் தேதி முதல் புதிய சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இந்தச் செய்தி கேட்டு, ஏமாற்றுத் திட்டங்களை நடத்திவரும் நிறுவனங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன.

இந்த அவசரச் சட்டத்தின் மூலம் செபிக்கு கிடைத்துள்ள கூடுதல் அதிகாரங்கள் என்னென்ன?

ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைத் திரட்டும் நிறுவனங்கள் விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றவில்லை எனில், அதன் சொத்தை முடக்க செபிக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

செபி அமைப்பின் தலைவருக்கு பொன்ஸி ஸ்கீம் நடத்தும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

மோசடி நிறுவனங்களின் சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரமும் செபிக்கு தரப்பட்டுள்ளது.

விசாரணைக்குத் தேவையான தொலைபேசி அழைப்புகள், வழக்குத் தொடர்பானவர்களை விசாரிக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏமாற்று நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

செபி தொடர்பான வழங்குகளில் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கும் அதிகாரமும் தரப்பட்டுள்ளது.

ஆர்ட் ஃபண்டுகள், டைம் ஷேர் ஃபண்டுகள், ஈமு / ஆடு வளர்ப்புத் திட்டங்கள், மிக அதிக வட்டி அளிப்பதாகச் சொல்லப்படும் டெபாசிட்கள் உள்ளிட்ட திட்டங்களில் இனி செபி விரைவாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சகம், டெலிகாம் துறை, நிறுவன விவகாரத்துறை மற்றும் நிதி அமைச்சகம் உள்ளிட்டவைகளுடன் கலந்து ஆலோசித்தபிறகே செபிக்கு இந்தக் கூடுதல் பவர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடி நிறுவனங்கள் மீது இனியாவது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம். மக்களும் தங்கள் பங்குக்கு இந்தமாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது மிக மிக நல்லது.