Published:Updated:

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Published:Updated:

இன்ஃப்ரா துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் யாவும் ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பு கொடிகட்டிப் பறந்தன. பங்குச் சந்தை அதிவேகத்தில் வளர்ந்ததால், இன்ஃப்ரா துறையை அடிப்படையாகக்கொண்டு புது ஃபண்டுகள் ஒவ்வொருநாளும் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், சந்தை சரிந்தபோது இந்த ஃபண்டுகள் என்ன ஆனது என்பது இதில் முதலீடு செய்தவர்களுக்குத் தெரியும்.

மறுபடியும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஃப்ரா ஃபண்டுகள் சற்று துளிர்விடுவதுபோல் உள்ளது. இவை கடந்த ஆறு மாத காலத்தில் அதிகபட்சமாக 37.5% வருமானத்தை யும் (07.04.2014 நிலவரப்படி), குறைந்த பட்சமாக 14.9% வருமானத்தையும், சராசரியாக 24.5% வருமானத்தையும் தந்துள்ளன.

கடந்த ஆறு மாத காலத்தில் பங்குச் சந்தையின் பொதுவான ஏற்றமும் இதற்கு ஒரு காரணம் என்றாலும், டைவர்சிஃபைட் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளின் ஏற்றம் சற்று அதிகம்தான். இதற்குக் காரணம், புதிய அரசாங்கம் வந்தவுடன் இன்ஃப்ரா துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கும்முன், இன்ஃப்ரா துறை சார்ந்த ஃபண்டுகள் எந்தவகையான பங்குகளைத் தங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளன என்பதை அலசிவிடுவோம்.

இன்ஃப்ரா துறை என்று பார்த்தால், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மட்டும்தான் வரும். இவற்றுள் சாலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவை பிரதானமாகும். ஆனால், இவற்றில் மட்டும் முதலீடு செய்வதற்குப் போதுமான நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. ஆகவே, ஃபண்டுகள் ஒவ்வொன்றும் இன்ஃப்ரா துறை என்ன என்பதைத் தாங்களே வரையறுத்துக் கொள்கின்றன.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

இன்ஃப்ரா துறை வளர்ந்தால் வங்கி, கேப்பிட்டல் கூட்ஸ், ஆட்டோ மொபைல், மின்சாரம் போன்ற துறையில் உள்ள நிறுவனங்களும் வளரும் என்ற அடிப்படையில், தங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒவ்வொரு ஃபண்டுகளும் தங்களின் வரையறைக்கு ஏற்றாற்போல் நிறுவனப் பங்குகளை வைத்துள்ளன. இன்னும் சில இன்ஃப்ரா ஃபண்டுகள் ஐ.டி, பார்மா போன்ற துறை சார்ந்த பங்குகளையும் வைத்துள்ளன. சில இன்ஃப்ரா ஃபண்டுகளின் துறை வாரியான முதலீட்டை அடுத்த பக்கத்தில் அளித்துள்ளோம். ஆகவே, இன்ஃப்ரா துறையில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளவர்கள், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகப் பொருளாதாரம் தேக்கநிலையில் இருப்பது இன்ஃப்ரா துறையின் மந்தநிலைக்கு ஒரு காரணம் என்றாலும், அதற்குமேலும் பல இடையூறுகள் உள்ளன. பெரிய புராஜெக்ட்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது.  தவிர, சில  பெரிய புராஜெக்ட்களை கொண்டு வரும்போது பொதுமக்களிடமிருந்து கொந்தளிப்பு உருவாகி அந்த புராஜெக்டே நின்றுபோய்விடுகிறது. பல நிறுவனங்கள் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், தங்களது விரிவாக்கத்தை ஒத்திப்போட ஆரம்பித்தன.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

மேலும், புராஜெக்ட்களுக்காக நிலங்களை வாங்குவதில் நிறைய காலதாமதம் ஏற்படுகிறது. இவை தவிர, இன்ஃப்ரா துறையில் இருந்த நிறுவனங்கள் அளவுக்கதிகமாகக் கடன் வாங்கியிருந்தன. இதனால் இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைந்தது.

நமது மத்திய அரசாங்கமும் கடந்த சில வருடங்களாகப் பொதுவாகத் தொழில் வளர்ச்சிக்கும், குறிப்பாக இந்தத் துறைக்கும் இருந்த பல இடையூறுகளை சரிசெய்ய பல நடவடிக்கைகளை எடுத்தது. ஜனவரி 2013-ல் சிசிஐயும் (Cabinet Committee on Investments), அதே வருடத்தில் ஜூலை மாதத்தில் பி.எம்.ஜி-யையும் (PMG – Project Monitoring Group) உருவாக்கியது. ஆகவே, இனிவரும் அரசாங்கத்துக்கு பல பிரச்னைகள் நீக்கப்பட்டதால் முடிவு எடுப்பது சற்று சுலபமாக இருக்கும்.

மேலும், புதிய அரசாங்கம் தொழிலுக்கு சாதகமான அரசாங்கமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் இருப்பதால், இந்தத் துறை சார்ந்த பங்குகள் நல்ல வளர்ச்சியைத் தந்துள்ளன. சந்தை நினைப்பதுபோல் எல்லாமே நடந்தாலும், புதிய அரசாங்கம் வந்து இன்ஃப்ரா துறை சார்ந்த தனது கொள்கைகளை அறிவித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்டு,  நிறுவனங்களுக்கு அது பிசினஸ் வாய்ப்பாக ஆவதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகிவிடும்.

இந்த நிலையில், இன்ஃப்ரா துறையில் உள்ள வெவ்வேறு அங்கங்கள் குறித்து சிறிது அலசுவோம்.

இன்ஃப்ரா துறை சார்ந்த ஃபண்டுகள் நாம் ஏற்கெனவே கண்டதுபோல கீழ்க்கண்ட துறைகளில் உள்ள பங்குகளை வைத்துள்ளன:

வங்கி, இன்ஜினீயரிங், சிமென்ட், கேப்பிட்டல் கூட்ஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன், சர்வீசஸ், ஆட்டோமொபைல், எனர்ஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இடம் பெற்றுள்ளன.

சிமென்ட்:

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

இந்தத் துறையின் சென்ற வருட டிமாண்ட் வளர்ச்சி 3 - 4% இருந்தது. நடப்பு நிதியாண்டிலிருந்து ஆண்டுக்கு  5 - 6% டிமாண்ட் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணங்கள், தேர்தலுக்குப் பிறகு இன்ஃப்ரா துறையில் நல்ல பிக்-அப் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு; வட்டி குறைப்பு போன்ற பல காரணங் களினால் வீடு கட்டுமானப் பணிகள் வேகமாகும் என்ற எதிர்பார்ப்புமாகும்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்களை சிசிஐ அப்ரூவ் செய்துள்ளது. இவற்றின் கூட்டுமதிப்பு ரூ.6 லட்சம் கோடிக்கும்மேல். மேலும், சிசிஇஏ (CCEA – Cabinet Committee on Economic Affairs) 7,000 கி.மீ-க்கு மேலான மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற அப்ரூவ் செய்துள்ளது. இவை அனைத்தும் மத்தியில் ஒரு நிலையான அரசாங்கம் அமைந்ததும் முடுக்கிவிடப்படும். ஆகவே, இந்தத் துறையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்ஸ்ட்ரக்‌ஷன்:

நாம் மேலே கண்டதுபோல் சிசிஐ அப்ரூவ் செய்துள்ள பல புராஜெட்களும், சிசிஇஏ அப்ரூவ் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளும், வீடு கட்டுமானப் பணிகளும் துரிதமாகும்போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். அவற்றின் லாபமும் பெருகும். மேலும், உலகளவில் ஒரு பரவலான பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது நமது நாட்டில் உள்ள கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்களும் கிடைக்கும். இதுபோன்ற பல காரணங்களினால் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நிதி:

பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது, வங்கிகள் கடன் கொடுப்பது அதிகரிக்கும் என்பதால் முதலில் லாபமடைவது நிதி சார்ந்த நிறுவனங்களாகவே இருக்கும். ஏனென்றால், கடன் டிமாண்ட் அதிகரிக்கும். மேலும், வங்கிகளுக்கு டெபாசிட்கள் சாதகமான வட்டியில் கிடைக்கும். டெபாசிட்டுக்கு வட்டி குறைவாகத் தரப்படும்; அதேசமயம், கடனுக்கு வட்டி குறையாது.

ஆக மொத்தத்தில், மார்ஜின் அதிகரிக்கும். பொருளாதாரம் நலிவாக உள்ள சமயங்களில், வாராக்கடன் அதிகரிக்கும். பொருளாதாரம் செழிப்பாக இருக்கும் போது வாராக்கடன் பிரச்னை இருக்காது. எனவே, வங்கிகள் பாடு கொண்டாட்டம்தான். இந்தக் காரணங்களினால்தான், பல இன்ஃப்ரா ஃபண்டுகள் நிதித் துறை பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

கேப்பிட்டல் கூட்ஸ்:

பொருளாதாரம் மேம்பட ஆரம்பிக்கும்போது இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரிக்கும். சாலை போட உதவும் இயந்திரங்களிலிருந்து, கார் தயாரிக்க உதவும் இயந்திரங்கள், கட்டடங்களுக்கு குளிர்சாதன வசதி செய்துதரும் இயந்திரங்கள் தயாரிப்பவர்கள் வரை என அனைத்து நிறுவனங்களுக்கும் நல்ல விற்பனை இருக்கும். இவர்களுக்கு விலையை அதிகரிக்கும் சக்தியும் கிடைக்கும்.

மேலும், சில மாதங்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு இணையான நமது ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது இந்த நிறுவனங்களுக்கு சாதகம். ஏனென்றால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி குறைவதுடன் நமது இயந்திரங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

மேலும், கோல் இந்தியாவை (Coal India) அரசாங்கம் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் எரிபொருள் சப்ளைக்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட சொல்லியிருப்பது இந்தத் துறைக்கு பாசிட்டிவ் ஆகும். எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆர்டரும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இவையெல்லாம் புதிய அரசாங்கம் வரும்போது முடுக்கி விடப்படும் என எண்ணப்படுகிறது.

ஆட்டோ:

இந்தத் துறை சார்ந்த பங்குகளைப் பெரிய சதவிகிதத்தில் இன்ஃப்ரா ஃபண்டுகள் வைத்திருக்கவில்லை என்றாலும். ஓரளவுக்கு வைத்திருக் கின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகையில் இந்தத் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளது. தவிர, பொருளாதாரம் நன்றாக இருக்கையில் கார்களின் விற்பனையும் உயரும்.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

சர்வீசஸ்:

லாஜிஸ்டிக்ஸ், கூரியர், துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை நடத்திவரும் நிறுவனங்கள் என சர்வீசஸ் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பொருளாதாரம் உயரும் போது, டிராஃபிக் வளர்ச்சியினால் நன்கு வளரும். ஃபண்டுகளைப் பொறுத்து, 14% வரை இந்தத் துறையில் பங்குகளை வைத்துள்ளன.

எனர்ஜி:

பொருளாதார வளர்ச்சியின்போது, எனர்ஜி துறைக்கு விற்பனை நன்றாக இருக்கும். எண்ணெய் தேடும் நிறுவனங் களிலிருந்து, சுத்தகரிப்பு ஆலைகள், விற்பனை செய்யும் நிறுவனங்கள் என இந்தத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தொழில் நன்றாக இருக்கும்.

தவிர, இன்ஃப்ரா துறையில் நிதி வளத்தை ஊக்குவிப்பதற்காக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஐஐஎஃப்சிஎல் (India Infrastructure Finance Company Ltd.) என்ற நிறுவனமும் மத்திய அரசாங்கத்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே டெலிகாம் / நிலக்கரி போன்ற துறைகள் ஊழலினால் பாதிக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் இனி சரியாகும் என எதிர்பார்க்கலாம். இதுபோலவே கடந்த ஐந்தாண்டில் செய்யப்பட்ட பல முயற்சிகளுக்கான பலனை இனிவரும் ஐந்தாண்டுகளில் நாம் காணலாம்.

நமது திட்டக் கமிஷன் அறிக்கையின்படி, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு சுமார் 55,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 47% தனியார் துறையிலிருந்து வரும் முதலீடாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்தத் துறையை ஊக்குவிப்பதற்காக டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளை வெளியிட குறிப்பிட்ட நிறுவனங்களை நமது மத்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் அனுமதித்தது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.50,000 கோடி ரூபாய் வரை இந்த பாண்டுகளின் மூலமாக நிதி திரட்ட அனுமதித்தது. தவிர, தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகத்தில் புதிய தளம் அமைப்பதுபோன்ற பல இன்ஃப்ரா சார்ந்த திட்டங்களைக் கடந்த பட்ஜெட்டில் அரசாங்கம் அனுமதித்தது. இன்ஃப்ரா துறை அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது. இது ஒரு நாட்டின் இருதயத்தைப்போல. ஆகவே, அரசாங்கத்தின் கண்ணும் அதில் மிகவும் உன்னிப்பாக இருக்கும்.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

மேற்கண்ட அனைத்தையும் வைத்து நாம் பார்க்கும்போது இனி வரப்போகும் மத்திய அரசாங்கம் திடமானதாக அமையும்பட்சத்தில், இந்தத் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

நல்ல எதிர்காலம் இருந்தபோதிலும், துறை / தீம் சார்ந்த ஃபண்டுகளுக்கு எப்போதுமே ரிஸ்க் அதிகம். ஆகவே, புதிதாக தற்போது இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக நுழைய வேண்டும். அதிகம் ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மற்றும் துறை பற்றிய நுணுக்கம் தெரிந்தவர்கள் தங்களது முதலீட்டை நேரம் பார்த்து செய்துகொள்ளலாம். ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்கள், தங்களது முதலீட்டை தக்கவைத்துக்கொள்ளலாம். ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாத சாதாரண முதலீட்டாளர்கள் டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் தங்களது முதலீட்டை வைத்துக்கொள்வதே சிறந்தது.

இந்தத் துறையில் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள், கீழே தரப்பட்டுள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பைன்பிரிட்ஜ் இன்ஃப்ரா அண்ட் எக்கனாமிக் ரீஃபார்ம் ஃபண்ட்:

இந்த ஃபண்ட் இன்ஃப்ரா துறையின் முக்கிய அங்கங்களில் தனது கவனத்தை வைத்துள்ளது. 60 சதவிகிதத்துக்கும் மேலாக நேரடி இன்ஃப்ரா துறை சார்ந்த முதலீடுகளில் வைத்துள்ளது. ஆகவே, முழுக்கமுழுக்க இன்ஃப்ரா துறை சார்ந்த முதலீட்டை நாடுபவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் பொருந்தும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.68 கோடி. இதன் ஃபண்ட் மேனேஜர் ஹுஸேஃபா ஹுஸேன்.

பிர்லா சன் லைஃப் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்:

இந்த ஃபண்ட் ரூ.290 கோடி சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. மார்ச் 2006-ல் இந்த ஃபண்ட் துவங்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர் மகேஷ் பாட்டீல். ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எல் அண்ட் டி, கும்மின்ஸ் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் டாப் ஹோல்டிங்குகளாக உள்ளன. கடந்த ஓராண்டில் 22.35% (07-04-2014 நிலவரப்படி) வருமானத்தைத் தந்துள்ளது.

இன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா?

ஹெச்.டி.எஃப்.சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  ஃபண்ட்:

இந்த ஃபண்டின் மேனேஜர் பிரஷாந்த் ஜெயின் மற்றும் ஸ்ரீநிவாஸ் ராவ் ரவூரி. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.521 கோடி. நிதித் துறை சார்ந்த பங்குகளில் கிட்டத்தட்ட 30% முதலீடு செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸ் ஆக உள்ளன. அரோபிந்தோ ஃபார்மா கூட இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளது.

கனரா ராபிகோ இன்ப்ஃராஸ்ட்ரக்சர் ஃபண்ட்:

இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து ரூ. 68 கோடி. இதன் டாப் ஹோல்டிங்ஸ் அல்ட்ராடெக் சிமென்ட், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், பவர் கிரிட், ஆயில் இந்தியா, புளூடார்ட் போன்ற நிறுவனங்களாகும். எனர்ஜி துறையில் 32% முதலீடு செய்துள்ளது. கடந்த ஓராண்டு கால வருமானம் 12.36% ஆகும். இதன் ஃபண்ட் மேனேஜர் யோகேஷ் பாட்டீல் மற்றும் ரவி கோபாலகிருஷ்ணன்.

டி.எஸ்.பி.பி.ஆர் டைகர் ஃபண்ட்:

இன்ஃப்ரா ஃபண்டுகளுக்கு இது ஒரு முன்னோடி. ஜூன் 2004-ம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. ரோஹித் சிங்கானியா இதன் ஃபண்ட் மேனேஜர். இது நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.994 கோடி. நிதித் துறையில் ஏறக்குறைய 36% முதலீடு செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எல் அண்ட் டி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் கடந்த ஓராண்டு வருமானம் 14.74% ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism