Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

இந்தத் தொடரின் இறுதிநிலைக்கு ஏறக்குறைய வந்துவிட்டோம். இந்த நிலையிலும் ஒரு சில சந்தேகம் நமக்கு இருக்கவே செய்கிறது. நான் பத்து வருடமாக நல்லதொரு உத்தியோகத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் கோடீஸ்வரன் ஆகியே தீரவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று, ஒருவர் நம்  சட்டையைப் பிடித்துக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக எதையாவது செய்ய முயலுங்கள் என்பீர்கள். இன்னொருவர், நாலுபேரிடம் கடன் வாங்கியாவது தொழில் செய்யுங்கள் என்பார். லாட்டரி மாதிரி ஏதாவது ஜாக்பாட் அடிக்கும் ஆட்டத்திலோ/போட்டியிலோ பங்கெடுத்து விளையாடுங்கள் என்பார் இன்னொருவர். டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங் செய்யலாமே என்று யோசனை சொல்வார் ஒருவர்.  இத்தனை யோசனைகளையும் கேட்டபிறகு, இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுங்க என்று சொன்னால், அவருக்குப் பணக்காரராகும் எண்ணம் ஸ்திரமாக இல்லை என்று அர்த்தமல்ல. தற்போது அவருடைய குடும்பம் இருக்கும் வசதிவாய்ப்பில் ஒரு சதவிகிதம்கூடக் குறைந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் அவர். அதனாலேயே தற்போது அவர் செய்துவரும் வேலையை ஸ்திரமாகப் பிடித்துகொள்ள விரும்புகிறார். தனது பேரக்குழந்தைகள்கூட எந்த வகையிலும் கஷ்டப்படக்கூடாது என்று அவர் நினைக்கிறார். இந்தவகைக் கட்டுப்பாடுகளைத் தமக்குத்தாமே விதித்துக்கொண்ட மனிதர்கள் எப்படி பணம் சேர்ப்பது என்பதைத்தான் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணவளக் கலை!

செலவுச் சுருக்கம் என்பது மட்டுமே இந்தவகை நபர்களுக்கான தாரக மந்திரம். செலவுச் சுருக்கம் என்பது ஒரு விஷயம், இரண்டு விஷயம் என்றில்லை. வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் செலவுச் சுருக்கம் இவர்களுக்கு அவசியமான ஒன்றாகிறது. பணரீதியான பாதுகாப்புக்கு ஒன்று வரவை அதிகரிக்கச் செய்யவேண்டும். இல்லையென்றால், செலவையாவது கடுமையாகக் குறைத்துப் பணம் சேர்க்கவேண்டும். பணக்காரர்களில் படாடோம் செய்யும் வெகுசிலரைத் தவிரப் பல பணக்காரர்கள் சராசரியான வாழ்க்கைமுறையையே கடைப்பிடிப்பதை உங்கள் கண்ணால் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கைமுறை கஞ்சத்தனமாகாது. அநாவசிய செலவுகளைத் தவிர்த்து வாழ்வார்கள். பணக்காரர்களில் பலரே இப்படி இருக்கும்போது சாமான்யனான நாம் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனத்திலும் வரவேண்டும்.

பணவளக் கலை!

வாழும்முறை, பயணிக்கும் வாகனம், வீடு, சம்பாதிப்பதில் பெருமளவை சேமிப்பது என்பதைத் தாத்பரியமாக வைத்துதான் சாமான்யர்களில் பலர் பணத்தினைச் சேர்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தவகைச் சாமான்யர்-கம்-பணக்காரர்கள் மற்றவகைப் பணக்காரர்களிடமிருந்து சற்றே மாறுபட்டவர்களாவார்கள். பணக்காரர் என்றவுடன் செல்வச்செழிப்பில் புரள்வது என்கிற நிலை இந்தவகை நபர்களுக்குப் பொருந்தாது. கடுமையான செலவுச் சுருக்கத்தின் மூலம் பணம் குறித்த பயம் ஏதுமில்லாமல் இருக்கும் நிலையை மட்டுமே இந்தச் சாமான்யர்களில் பெரும்பாலானோர் அடையமுடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பணமில்லாமல் இருப்பதும், பணமில்லாமல் போய்விடுமோ என்ற பயத்துடன் வாழ்வதும் கிட்டத்தட்ட சிக்கலான சூழ்நிலைதான். தீர யோசித்தால் பணமில்லாமல் போய்விடுமோ என்ற பயத்துடன் வாழ்வது மிகவும் மோசமான நிலைமை எனலாம்.

இப்படி வெகு சிரத்தையாகப் பணம் சேர்த்தால் மட்டும் போதாது; சேர்த்த பணத்தைச் சரியான இடத்தில் முதலீடு செய்யவும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதற்கு சேமிப்பின் மகத்துவம் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஹீரோமோட்டோ (முன்னாள் ஹீரோ ஹோண்டா) கம்பெனி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட வருடத்தில் ஆசைப்பட்டு அந்த நிறுவனத்தின் பைக்கை வாங்கி ஓட்டுவதைத் தவிர்த்துவிட்டு, அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப்போட்டிருந்தால் இப்போது அந்தப் பணத்தின் மதிப்பு ஒரு கார் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்று புள்ளிவிவரம் சொல்வோம்.

பணவளக் கலை!

சரியான சேமிப்பு மற்றும் முதலீட்டின் மகத்துவம் என்பது இதுதான். தொண்ணூறாம் ஆண்டுகளில் கலர் டிவி, ஃப்ரீட்ஜ், பைக் போன்றவற்றை வாங்கிப்போடாமல் அந்தப் பணத்தைக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு நிலம் வாங்கிப்போட்டவர்கள் பெரும் லாபம் பார்த்ததை நீங்களே உங்கள் கண்ணால் பார்த்திருப்பீர்கள். தொண்ணூறுகளில் இவர் எப்படி இருந்தார், இன்று எப்படி இருக்கிறார். ஃப்ரீட்ஜ் எல்லாம் எசென்ஷியல் கமாடிட்டி ஆயிடுச்சே என்று ஆச்சர்யப்பட்டவர்கள், இன்றைக்கு அவருடைய நெட்வொர்த்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஃப்ரீட்ஜ், கலர் டிவி என்று அனுபவிக்காமல் தள்ளிப்போட்டு சரியான முதலீடுகளைச் செய்ததால் வந்தது இந்த வளர்ச்சி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் இல்லையா?

இன்றைக்கு பொழுதுபோக்குக்கான செலவு பலநூறு ரூபாய்களை முழுங்கிவிடுகிறது. கடுமையான சேமிப்பு என்று திட்டவட்டமாக இருப்பவர்களுக்கும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு நல்ல நூலகத்துக்குச் சென்று படிப்பது, விளையாட்டு எதையாவது தேர்ந்தெடுத்து விளையாடுவது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, பீச்சுக்குப் போவது, பார்க்குக்குப் போவது (கண்ணில் கண்டதை வாங்கிச் செலவு செய்யாமல்) எனப் பல்வேறு செலவில்லாத அல்லது குறைந்த செலவுள்ள விஷயங்கள் பலவும் நாட்டில் இருக்கவே செய்கிறது. எந்த அளவிலான வீடு, குழந்தைகள், குழந்தைகளுக்கு எந்தப் பள்ளியில் படிப்பு, எவ்வளவு கடன் வாங்குவது, என்ன வாகனத்தை வாங்குவது என எல்லாவற்றிலும் செலவுச் சுருக்கத்தை ஒருவர் கடைப்பிடிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் எப்படிங்க செலவைக் குறைக்க முடியும்? புதுசு புதுசா சாதனங்கள் வந்துகிட்டே இருக்கே என்பீர்கள். இந்தக் கேள்விக்கு என் நண்பர் ஒருவர் சொல்லும் ஒரே பதில், இன்றிலிருந்து எந்த விளம்பரத்தையும்  கண்ணால் பார்க்கவோ, காதால் கேட்கவோ கூடாது. உங்கள் தேவைகள் தானாகக் குறைந்துவிடும் என்பதே. உங்கள் பைக்கை அடுத்த வருடம் மாற்ற நினைக்கிறீர்கள் எனில், இன்றைக்கு வரும் விளம்பரத்தை  பார்த்தால், இன்றைக்கே உங்கள் பைக்கை மாற்றத் துணிந்துவிடுவீர்கள்.

பணவளக் கலை!

ஒவ்வொருநாளும் நீங்கள் எத்தனை பணம் செலவழித்தல் குறித்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். சராசரியாகக் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு வரையிலான பணரீதியான முடிவுகளை நாம் எடுப்போம். இந்த அத்தனை முடிவுகளிலுமே சிக்கனத்துக்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இந்த ஒவ்வொரு முடிவிலும் சிக்கன நடவடிக்கை புகுத்த வேண்டும் எனில், சிக்கனம் என்பது நம் மனத்தில் நிலைகொண்டிருக்கும் குணமாக ஓர் அன்றாடப் பழக்கமாக இருக்க வேண்டும்.

நம் எல்லோரின் மனத்திலுமே நாம் சிக்கனமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவே செய்யும். ஆனாலும், நம்மை அறியாமலேயே சில செலவுப் பழக்கங்கள் நம்மிடையே ஒட்டிக்கொண்டிருக்கும். சில கடைகளுக்கோ/ஹோட்டலுக்கோ சென்றால் நாம் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்துவிடுவோம். இதையெல்லாம் குறைக்கிறது ரொம்பக் கஷ்டமப்பா என்று நமக்கு நாமே ஆறுதலும் சொல்லிக்கொள்வோம். இந்த நிலையை மாற்றுவதுதான் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டிய ஒன்றாகும். ஏனென்றால், உங்களுடைய பணரீதியான பயம் நீங்க வேண்டும் என்றால் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து நீங்கள் ஒவ்வொரு செலவிலும் பின்பற்றும் செலவுச் சுருக்கமே அதற்கு உதவுவதாக அமையும்.

பணச் செலவுச் சுருக்கம் பற்றிச் செய்யப்பட்ட சில ஆய்வுகள் சொல்வதைப் பார்ப்போம். முதல் ஆய்வு பெரும்பாலானோர் பல சமயங்களில் பணம் ஒரு பிரச்னையே இல்லை என்று நினைப்பதும், பணம் நாளடைவில் ஒரு முக்கியப் பிரச்னையாகிவிடலாம் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதும்தான் பணரீதியான தோல்வியைத் தருகிறது. நாளடைவில் என் பணப் பிரச்னை சரியாகிவிடும் என்ற எண்ணத்துடனேயே இன்றைக்குப் பலரும் வெட்டிச் செலவு செய்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

இரண்டாவது, ஆய்வு திடீரென ஏற்படும் வேகமான உந்துதலினால் ஏற்படும் செலவுகளே பெரும்பாலானோருக்கு நாள்பட்ட பணக் கஷ்டத்தினை உண்டாக்குகிறது என்கிறது. நண்பருக்கு  செல்போன் வாங்க அவரோடு ஒரு கடைக்குப் போகிறோம். பல மாடல்களைப் பார்க்கிறோம். திடீரென நமக்கு ஒரு மாடல் பிடித்துப்போகிறது. இன்றைக்கு மட்டும் அந்த மாடலுக்கு 15 சதவிகிதம் தள்ளுபடி என்கிறார் கடைக்காரர். சற்றுநேரம் யோசிக்கும் நாம் மனஉந்துதலினால் இறுதியில் நன்றாக வேலை செய்யும் நம்முடைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்துவிட்டு, புதிய போனை கேஷ் இல்லாத காரணத்தால் கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்து வாங்குகிறோம். அதாவது, நாளைய வருமானத்தை இன்றே செலவு செய்துவிடுகிறோம். இதுதான் உந்துதலினால் அதிகரிக்கும் செலவினம்.

மூன்றாவது, ஆய்வு சொல்வது ஒரு பயங்கரமான விஷயம். மனிதன் சதாசர்வ காலமும் கூட இருப்பவர்களுடனும், அக்கம்பக்கத்தையும் ஏன் முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களையும்கூடத் தன்னுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை உள்ளவன். அவருடைய சட்டை, இவருடைய பைக், இவரின் போன், வாட்ச் என மனது அடிக்கடி எடைபோட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒப்பிட்டுப்பார்க்கும் இயல்புகொண்ட மனமும் செலவுச் சுருக்கத்துக்கு எதிரான முக்கியக் காரணம் என்கிறது ஆய்வுகள்.

இந்த மூன்று விஷயங்களும் ஒருவருக்குப் பொருந்திவந்தால், பணம் சேர்ப்பதும், பணம் குறித்த பயமில்லாமல் இருப்பதும் அவருக்கு வாழ்வு முழுவதுமே சாத்தியமே இல்லாத ஒன்றாகிவிடும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism