Published:Updated:

உனக்கும் மேலே நீ!

குழுவாகச் செயல்படுவோம்! டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! நான்கு மாடுகள் ஒரு சிங்கத்தைத் துரத்திய கதை! இவற்றையெல்லாம் எத்தனையோமுறை நாம் கேட்டுவிட்டோம். ஆனால், ஒற்றுமை என்பது நமக்குக் கைகூடாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. இதனாலேயே கிரிக்கெட்டில்  மட்டுமல்ல, வெளிநாட்டு பிசினஸ் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும்போதும் தோற்றுப் போகிறோம்.

வானத்தில் பறவைகள் ஒன்றாகப் பறப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு பறவை முன்னால் செல்லும். மற்றவை யெல்லாம் கூட்டாகப் பின்னால் வரும். அவை ஒன்றையொன்று சார்ந்தே பறக்கும். முன்னால் செல்கிற பறவை சோர்ந்துவிட்டால் அடுத்தப் பறவை அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்.

காந்திஜி முதல் இன்றைய மைக்ரோ சாஃப்ட் கம்பெனிகள் வரை தனிமனித சிந்தனை அவர்களுக்குள் இருந்தாலும், தான் சாதிக்க நினைத்ததை மற்றவர் களுடைய வித்தியாசமில்லாத

ஒத்துழைப்பின் மூலமாகவே அவர்கள் சாதித்தார்கள். இந்த உண்மை தெரிந்த பின்பும் நம்மால் குழுவாகச் செயல்பட முடிவதில்லை. ஏன்?

உனக்கும் மேலே நீ!

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தவராக இருப்பார்கள். மொழி, கலாசாரம், பழக்கவழக்கம் அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கலாம்; ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனிச் சிந்தனை இருக்கலாம்; வேலைகளில் முழுமையான ஈடுபாட்டோடு இல்லாமல், அவன் அந்த வேலையைச் செய்யட்டும், நமக்கென்ன என்ற நினைப்பு இருக்கலாம்; நான்தான் பெரியவன்; அவனிடம் நான் ஏன் போய்ப் பேச வேண்டும் என்கிற ஈகோ இருக்கலாம்; ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்; நான் உழைத்தால் அவனுக்குப் பெயர் கிடைக்கப் போகிறது; இதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும் என்று நினைக்கலாம்.

தனியாகச் செயல்படுவதைக் காட்டிலும், குழுவாகப் பயணிக்கும் போது சில முக்கியமான விஷயங்களை நாம் கட்டாயம் உணரவேண்டும்.

ஒவ்வொருவருமே தலைவர்கள்தான்; ஒவ்வொருவருக்கும் வெற்றி, தோல்வியில் பொறுப்பு உண்டு; தனியாக எவரும் வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது; ஒரே இலக்கை நோக்கி கூட்டாகப் பயணம் செய்வது; முடிவுகளைக் கூட்டாக எடுப்பது, அதில் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பது; ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, அவரவருக்குள்ள திறமைக்கு வாய்ப்பளிப்பது; நம் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, வெற்றிக்கு வழிவகுப்பது எனப் பல விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே தனிமனிதர்கள் ஒரு குழுவில் பிரமாதமாகச் செயல்பட முடியும்.

உனக்கும் மேலே நீ!

சிறந்த உறுப்பினர்கள் இல்லாமல் ஒரு குழுவை உருவாக்க முடியாது. சில நேரங்களில் சிறந்த உறுப்பினர்கள் இருந்தும், தனியொரு மனிதரின் தவறால்கூடக் குழுக்கள் தோற்றுப் போகக்கூடும். ஆனால், அவர்கள் இல்லாமல் பின்னாளில் உங்களால் வெல்ல முடியாது. ஒரு குழுவில் சிறந்த உறுப்பினர்களைப் பெற நம்மிடம் ஏற்கெனவே உள்ளவர்களை முதன்மையானவர்களாக உயர்த்தலாம். அல்லது முதன்மையான திறமை படைத்தோரை நம் குழுவில் அமர்த்தலாம்.

ஒரு சிறந்த குழுவில் நாம் பணியாற்றவேண்டுமென்றால், பின்வரும் விஷயங்களை ஒவ்வொரு தனிநபரும் முதலில் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.

உனக்கும் மேலே நீ!

குழுவில் பொருந்தி இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு முதலில், தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வெண்டும். பதவியோ, தன் பொறுப்புகளோ மாற்றப்படும்போது பாதுகாப்பற்றதாக நீங்கள் உணரக் கூடாது.

புதிதானவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்றிருக்கும் பொறுப்பை அவ்வப்போது மதிப்பீடு செய்யுங்கள். குழுவினரை போட்டியாளராகக் கருதாமல், சக உழைப்பாளியாகக் கருதுங்கள். யாரையும் சந்தேகிக்காமல் இருங்கள். சுயநலமில்லாமல் குழு நலத்தில் கவனம் கொள்ளுங்கள். பிறரை பாராட்டுங்கள். உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளாதீர்கள்.எனக்கும் வெற்றி, குழுவுக்கும் வெற்றி என்று சிந்தியுங்கள்.

குழுவில் முழுமையாக அர்ப்பணிப்புக்கொள்ளுங்கள். வெற்றிகளை ருசிக்கும்போது இருக்கிற மனப்பக்குவம், இன்னல்களை எதிர்கொள்ளும்போதும் இருக்க வேண்டும். உங்கள் திறமையை மட்டுமே குழு நம்பி இருக்கிறது என்று கர்வம் கொள்ளாதீர்கள். உங்கள் சகநண்பர்களின் திறமைகளையும் மதிப்பீடு செய்து, அவர்களுக்கு வலிக்காமல் அறிவுரை சொல்லுங்கள்.

உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றோ, எனக்கு எதுவுமே தெரியாது என்றோ நினைக்காதீர்கள். எந்த நேரமும் மற்றவர்கள் உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் நிலையில் இருங்கள். மற்றவர்களின் விமர்சனங்களை பாசிடிவ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள். தவறுகள் இருந்தால் உடனே திருத்திக்கொள்ளுங்கள்.

வெளிப்படையாகப் பேசுங்கள். மற்றவர்களுடைய பேச்சை கவனியுங்கள். உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள். நானும் என் குழுவும் உன்னதம் அடைவோம் என்று உறுதிகொள்ளுங்கள்.

நேர்மையாக இல்லாத விஷயங்களுக்கு சமாதானம் செய்துகொள்ளாதீர்கள். எது உடன் முடிக்க வேண்டியதோ, அதில் உங்கள் பங்களிப்பு முதலில் இருக்கட்டும். ஒரே சீராகச் செயல்படுங்கள். உங்கள் குறிக்கோள்களை அவ்வப்போது மாற்றிக்கொள்ளாதீர்கள். சிறு சிறு விஷயங்களில்கூட உங்கள் பங்களிப்பு இருக்கட்டும். சிந்திப்பதோடு இல்லாமல், அதை நடைமுறைப்படுத்துதலும் அவசியம். அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகுங்கள். எதைச் செய்தாலும், நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று செயல்படுங்கள்.

 உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். உங்களை விமர்சிப்பவரை உடன் வைத்துக்கொள்ளுங்கள். சமூகம் அங்கீகரிக்காத பழக்கத்தைக் கைவிடுங்கள். எளிதில் உணர்ச்சிவயப்படாதீர்கள். பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். பிறருக்கு சேவை செய்வதிலும், பாராட்டுவதிலும் முந்திக்கொள்ளுங்கள்.

உனக்கும் மேலே நீ!

உங்களுடைய நோக்கமும், குழுவின் நோக்கமும் தெளிவாக ஒத்துப்போகிறமாதிரி இருக்கட்டும். உங்கள் லட்சியம், உங்கள் அணியின் லட்சியம் என்று முனைப்போடு செயல்படுங்கள். உங்களது பலம் எது, பலவீனம் எது என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

குழுவின் தலைமையை முழுதாக ஏற்றுக்கொள்ளுங்கள். குறிக்கோளை அடைய எதையும் இழக்க தயாராகுங்கள். உங்கள் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அனுபவங்களைக் குழுவினரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு அணி உருவாகிவிட்டால் அதன் தலைவருக்கும் பொறுப்புகள் அதிகமாகிவிடுகின்றன உங்கள் குழுவில் உங்களைத் தலைவரென்று மதிக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் எதில் திறமையானவர்கள் என அறிந்து, பொறுப்புகளைப் பகிர்ந்தளியுங்கள். அவர்களது பங்களிப்பை தனித்தனியாகவும், குழுவாகவும் மதிப்பீடு செய்யுங்கள்.

குறிப்பிட்ட இலக்கை, குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

குழுவிலிருக்கும் சிறிய சிறிய பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள். அவர்களது, தனிப்பட்ட சந்தோஷங்களையும், பிரச்னைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஓர் அணியாகச் செயல்படுவதென்பது, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து பணியினை நிறைவேற்றுவதே. நாமும் வெற்றி பெறுவோம். பிறரும் வெற்றியடைகிறார்கள். அணியும் வெற்றியடைகிறது. நீங்கள் அணியில் சேர்ந்து உழைக்கும்போது, ஒரு தலைவரை உலகம் அடையாளம் கண்டுகொள்கிறது. உங்களுடைய திறமைகளும் உங்களுக்குப் புரிகிறது.

வெற்றி என்பது நம் தகுதியை பிறர் தகுதியோடு ஒப்பிட்டுக்கொள்வது. ஆனால், உன்னதம் என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்துகொண்டு வல்லமை பெறுவது. வெற்றி கனவாகவும், சில நேரத்தில் மட்டுமே கைகூடும். உன்னதம் நம் அனைவராலும் அடையக்கூடிய ஒன்று. அது, குழுவாகச் செயல்படும்போதுதான் கிடைக்கும்.

ஒரு அணிக்காக நான் விளையாடினேன் என்பதைக் காட்டிலும், என் சக வீரர்கள் சிறப்பாக ஆட நான் உதவினேன் என்பதில்தான் திருப்தி. உலகிலுள்ள அனைத்தையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால், ஏதேனும் ஒன்றை நம்மால் செய்ய முடியும்.

வாழ்க்கை என்பது தனிநபர் ஓட்டப் பந்தயமல்ல. அது தொடர் ஓட்டப்பந்தயம். ஊர் கூடி இழுத்தால், தேர் மட்டுமல்ல, ஒரு பெரிய மலையையே இடம் மாற்றிவைத்துவிடலாம்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு