Published:Updated:

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பணவளக் கலை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்

 பணம் குறித்து பயமில்லாத நிலையை அடைவது எப்படி என்பதை விரிவாகப் பார்த்துவருகிறோம். பணம் குறித்த பயமின்மை என்பது சேமிப்பிலிருந்தே வருகிறது. சேமிப்பு என்பது செலவுச் சுருக்கத்திலிருந்து வருகிறது. அத்தியாவசியத்துக்குக்கூடச் செலவிடாதவரை நாம் கஞ்சத்தனம் செய்கிறார் என்கிறோம். அத்தியாவசியத்தையும் அநாவசியத்தையும் பிரித்தறியும் குணத்தினை நாம் பெற்றாலே பணம் குறித்த பயமின்மை என்ற எல்லையை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

அநாவசியம் என்பது பலவகைப்படும். தற்சமயம் தேவையில்லாதது, எப்போதுமே தேவையில்லாதது, நமக்குக் கட்டுப்படியாகாதது, கொஞ்சம் காத்திருந்தாலோ / நாலுபக்கம் விசாரித்தாலோ மிக மலிவாகக் கிடைக்கக்கூடியது என்ற குணாதிசயங்களைக்கொண்ட பொருட்களை அந்த நிமிடமே வாங்குவதுபோன்ற அனைத்துமே அநாவசியம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலவுச் சுருக்கத்துக்கு முயற்சிக்கும் அனைவருக்குமே அநாவசியப் பொருட்கள்தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், பொருட்களை வாங்கிக் குவிக்கும் குணம்கொண்ட அந்நியன் கடைகளுக்குள் சென்றவுடனேயே வெளியே வந்துவிடுகிறான். வீட்டில் இருக்கும் கேத்தோட் ரே டியூப் (CRT) கலர் டிவி ரொம்பவுமே பழையதாகி படமே தெரியவில்லை என்ற நிலை வந்தபோது, புதிதாக அதேபோல் ஒரு டிவி வாங்கலாம் என்று நீங்கள் கடைக்குச் சென்றீர்கள் எனில், 'எதுக்கு சார், சிஆர்டி டிவியை இப்ப வாங்குறீங்க. பேசாம எல்சிடி வாங்குங்க’ என்றுதான் பரிந்துரைப்பார் கடை ஊழியர். 'என் பட்ஜெட் இவ்வளவுதாங்க’ என்றால், 'அந்த பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் ஒரு சிறிய அளவிலான எல்சிடியை வாங்கிக்குங்க’ என்பார்.

பணவளக் கலை!

நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற சைஸ் டிவியை டெமோ பார்க்கும்போது பக்கத்தில் 40, 50 எனப் பல இன்ச் டிவிக்கள் ஓடும். 'எல்சிடி/எல்இடி டிவியிலெல்லாம் பெரிய சைஸில பார்த்தாத்தான் சூப்பராக இருக்கும் சார்’ என்று பக்கத்தில் வந்து ஒரு பிட்டைப் போடுவார். பட்ஜெட் இவ்வளவுதானேப்பா என்றால், 'சார், ஈஸி இன்ஸ்டால்மென்ட் திட்டம் இருக்கு. இன்ட்ரெஸ்ட் ஃப்ரீ’ என்பார். எப்படா ஓகே என்று சொல்வான்னு காத்திருப்பார் விற்பனைப் பிரதிநிதி.

அப்புறம் என்ன? பெரிய எல்இடி டிவிதான். பில் போட்ட பின்னர், ''சார் நீங்க கேபிள் வச்சிருக்கீங்களா? இல்லை, சாட்டிலைட் டிஷ்ஷா? ஏன் கேக்குறேன்னா, கேபிள் கனெக்ஷன் எல்லாம் இதுக்கு சரிப்படாது சார். ஹெச்டி கனெக்ஷன் சாட்டிலைட் டிஷ் வாங்கிப்போட்டாதான் இந்த டிவியில சூப்பராய்த் தெரியும். கவலைப்படாதீங்க. இந்த சாட்டிலைட் டிஷ்ஷ§க்கும்  டிவியோடயே ஆஃபர் இருக்கு. முன்பணம் எதுவும் தேவையில்லை. மூன்று மாத சந்தாவும் இலவசம்'' என்பார்.

ஏற்கெனவே பட்ஜெட்டைத் தாண்டி டிவி வாங்க முடிவு செய்துள்ளோம். அதற்கு ஒவ்வொரு மாதமும் தவணை கட்ட வேண்டும் என்பதை மறந்து ஹெச்டி சாட்டிலைட் டிஷ்ஷ§க்கும் தலையாட்டி வீட்டுக்கு வந்தால், நான்காவது மாதத்தில் இருந்து மாத பட்ஜெட்டில் நன்றாகவே துண்டு விழும். மாத பட்ஜெட் சிக்கலில் அவ்வப்போது கேபிள்காரரிடமாவது அந்தக் குறைந்த கட்டணத்தையும்கூட அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும் போது வாங்கிக்குங்களேன் என்று சொல்லமுடியும். சாட்டிலைட் டிஷ்ஷில் கட்டணமும் அதிகம். அதை முன்கூட்டி கட்டாவிட்டால் கனெக்ஷன் கட்டாகிவிடும். பிறகு என்ன? வீட்டில் கிரிக்கெட் பார்க்க முடியாமல் உங்கள் மகன் உங்கள் தலையை பிளப்பான். சீரியல் பார்க்க முடியாமல் திருமதிகள் கரித்துக்கொட்டுவார்கள். ஆக, அதிகம் செலவழித்து நிம்மதி இழந்து தவிப்பீர்கள் நீங்கள்.

அநாவசியங்கள் நம்மை இழுப்பதும், நாம் அநாவசியங்களிடம் தொடர்ந்து வசியப்படுவதும் இப்படித்தான் நடக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள், போன்கள், வாஷிங்மெஷின்கள் முதல் ஷேவிங் ரேஸர் வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் லேட்டஸ்ட் என்பதற்காகவோ, ஆஃபர்கள் இருக்கிறது என்பதற்காகவோ சற்று அகலக்காலை வைக்கவே நாம் தூண்டப் படுகிறோம். வர்த்தக ரீதியிலான உலகம் அப்படித்தான் இருக்கும். இதுபோன்று சிறிது சிறிதாக வைக்கப்படும் அகலக்கால்கள் கடைசியில் மிகப் பெரியதாகி பணரீதியான பயத்தை வெற்றிகரமாக நம்மிடம் கொண்டுவந்து விடுகிறது. இதனாலேயே, நாம் மிகவும் கவனமாக நம்முடைய தேவைகள் குறித்த கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.

பணவளக் கலை!

இதுபோன்ற அநாவசிய செலவுகள் செய்யும் வாய்ப்புகள் நம் முன்னே வரும்போது நாம் மிகவும் கவனமாக நம்முடைய எதிர்காலத் தேவைகளைப் பற்றியும் நம்முடைய வாழ்வில் நாம் எந்தப் பகுதியில் இருக்கிறோம், என்னென்ன செலவுகளை நாம் அடுத்துவரும் காலகட்டங்களில் எதிர்கொள்ள இருக்கிறோம் என்று சிந்தித்து, பின்னர் செயல்பட வேண்டும். ஏனென்றால், அடுத்துவரும் மாதங்களில் ஒவ்வொரு விஷயத்துக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். அல்லது, ஒரு செலவை எதிர்பார்த்து நாம் பணத்தைச் சேர்த்து தற்போது கையில் வைத்திருப்போம். அந்தத் திட்டத்தை முறியடிக்கும் வகையில் திடீரென ஒரு தேவையில்லாத செலவை நம்முடைய ஆர்வக்கோளாறினால் செய்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவோம்.

பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மகனுக்கு மேல்படிப்புச் செலவுக்காகப் பத்து வருடமாகச் சேர்த்த பணத்தை வைத்து திடீரென ஒரு மூடில் கார் வாங்கி வெறும் 400 கிலோ மீட்டரே ஓட்டிவிட்டு ('பெட்ரோல் போட்டு மாளலேங்க!’), கடைசியில் அட்மிஷன் சீஸனில் அந்த காரை நஷ்டத்துக்கு விற்றுப் பணம் கட்டியவர்களை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். பணம் சேர்ப்பதில் எப்படித் திட்டமிடுதல் இருக்கவேண்டுமோ அதேபோல் அந்தப் பணம் சேர்க்கப்பட்ட பின்னர் எந்தக் காரணகாரியத்துக்காக அது சேமிக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டிலும் உறுதியாக இருக்கவேண்டும். ஏனென்றால், கையில் பணமிருக்கும்போதுதான் மனித மனம் அலைபாயும். சேமிப்பு எப்படி ஒரு கலையோ, அதேபோல்தான் சேமித்த பணத்தை அந்தச் செலவு வரும்வரை காப்பதும் மிகப் பெரிய கலை.

பணவளக் கலை!

பெரியவர்களிடையே இவ்வாறான எண்ண மாற்றங்கள் வருகிறதென்றால், குழந்தைகளின் செலவின ஈடுபாடுகளைச் சொல்லவே வேண்டாம். வீட்டில் பார்க்கும் டிவியில் இருந்து பள்ளியில் கூடப்படிக்கும் குழந்தைகள் வரை நம் செலவுகளை அதிகரிப்பதற்கான ஐடியாக்களை ஆயிரம் ஆயிரமாக கொண்டுவந்து கொட்டுவார்கள். குழந்தைகள் இன்றைய தினத்தை மட்டுமே மனத்தில் வைத்து மகிழ்வாய் இருக்கத் தெரிந்தவர்கள். நாளை / எதிர்காலம் / சேமிப்பின் அவசியம் / பணம் குறித்த பயம் என்பதெல்லாம் அவர்களுக்கு இயல்பாக இருக்காது. இதைச் சரிக்கட்டி நீக்குப்போக்காக நிர்வாகம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். அவர்களைக் கடிந்துகொண்டால், அவர்களால் பணத்தின் நுணுக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்லித்தந்து, அதைப் அவர்களுக்குப் பழக்க வேண்டும். நம்மால் இயலும் அளவுக்கு வாழ்வதில் தவறோ/மரியாதைக்குறைவோ இல்லை என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்து அவர்களில் ஒருவர் சேமிப்பின் அவசியத்தை இயல்பாகவே புரிந்தவராகவும், மற்றொருவர் செலவாளியாகவும்கூட இருக்கலாம். செலவாளியைக் குறை சொல்லியும், சேமிப்பவரை உயர்த்திச் சொல்லியும் பயனேதுமில்லை. செலவாளியை சேமிப்பவராக்கும் பொறுப்பு உங்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

சம்பளக்காரர்களுக்கு செலவுச் சுருக்கம்தான் பணம் குறித்த பயத்தைக் குறைக்கும் மந்திரம். பணம் குறித்த பயத்தை முடிந்த அளவு குறைத்திருப்பது தான் சம்பளக்காரர்களின் பணக்கார குணம் என்று ஏற்கெனவே நாம் பார்த்தோம். எனவே, செலவுச் சுருக்கத்தையும் சேமிப்பையும் கவனமாய்க் கடைப்பிடியுங்கள். அதையும் இளவயதிலிருந்தே செய்யுங்கள்.

என்னால் இளமையில் இருந்து சேமிக்க முடியவில்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டேன் என்கிறீர்களா? பரவாயில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இளமையில் இருந்து சேமிப்பதன் அவசியத்தைச் சொல்லித் தருவதன் மூலம் அவர்கள் பணரீதியான பயத்தை எதிர்கொள்வதைத் தவிர்க்க உதவுங்கள்.

பணவளக் கலை!

சம்பாத்தியத்தில் 50 சதவிகிதம் சேமிப்பு என்பதை இலக்காய் வையுங்கள். என்னது ஐம்பதா! என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? அப்போதுதான் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தை உடனடியாகவும், நாளடைவில் 30 - 40 சதவிகிதம் வரையிலான தொகையைச் செலவுச் சுருக்கத்தின் மூலம் சேமிக்கவும் முடியும்.

செலவுச் சுருக்கம், நம்மால் என்ன முடியுமோ அதற்குக் கீழே வாழ்வதில் மட்டுமே கிடைக்கும் என்பதை அன்பான பயிற்சிகளின் மூலம் குழந்தைகளுக்குப் புரியவைப்பதில்தான் அவர்களின் எதிர்காலப் பணரீதியான வெற்றியே இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism