Published:Updated:

உனக்கும் மேலே நீ!

வேலைக்குச் செல்லும் இளைஞனுக்கு..! டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

 இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

பரீட்சை முடிந்துவிட்டது. விடுமுறையும் வந்தாகிவிட்டது. கடைசி வருட படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் பிரியாவிடைபெறும் காலம். படித்து முடித்தவுடன், புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் பலர். தாங்கள் கொண்ட இலக்கு மற்றும் குறிக்கோளின் காரணமாகவோ அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ எத்தனையோ இளைஞர்கள் வேலைக்குப் போகத் தீர்மானித்திருப்பார்கள்.

கல்லூரி படிப்பை முடித்த சிலருக்கு 'கேம்பஸ் பிளேஸ்மென்ட்’-ல் வேலையும் கிடைத்திருக்கும். கையில் வேலைக்கான உத்தரவாதம் கிடைத்தவுடன், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என ஒவ்வொருவரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு நடந்திருப்பீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையும் ஒவ்வொரு திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் நேரம் இது. கல்லூரியிலிருந்து கம்பெனிக்குள் நுழைகிற இந்த மாற்றத்தில் உங்களை நீங்கள் நிறையவே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். எந்தெந்த வகையில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறேன்!

உனக்கும் மேலே நீ!

கலாசார மாற்றங்கள்!

புது இடம், புது மனிதர்கள் என்ற பதற்றத்தைத் தவிருங்கள். வேலை செய்கிற இடத்தில் பல மாநிலத் திலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் வந்து வேலை செய்பவர்கள் இருக்கலாம். மொழியும், பழக்கவழக்கமும், கலாசாரமும் வேறாக இருக்கலாம். அவர்களுடைய கலாசாரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். இதன்மூலம் அவர்களின் அன்பை எளிதில் பெற முடியும்.

இந்த மதத்தினரோ, இந்த மாநிலத்தவரோ, இந்த ஊர்க்காரர்களோ இப்படித்தான் இருப்பார்கள் என நீங்களே தீர்மானிக்காதீர்கள். ஏதேனும் ஓர் இடத்திலோ அல்லது ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியை வைத்துக்கொண்டோ ஒட்டுமொத்த சமுதாயமே அப்படித்தான் என்று நினைக்காதீர்கள். அவர்களது பண்டிகைகள், விசேஷங்கள், அவர்களது சமய கொண்டாட்டங்களை வாழ்த்து வதோடு, அதில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டு விசேஷங்கள், உங்கள் ஊர் விழாக்கள், பண்டிகைகள் என நிகழ்ச்சிகளில் அவர்களையும்  கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

காலநேரங்களில் கவனம்!

உனக்கும் மேலே நீ!

கல்லூரிக் காலத்தில் நேரத்தை உங்கள் இஷ்டம்போல் செலவழித் திருப்பீர்கள். திடீரென்று அலுவலக நேரத்துக்கு ஏற்றாற்போல் உடனடியாக மாறவேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகாலை நேரப் பணியாகவோ அல்லது இரவு நேரப் பணியாகவோ இயற்கைக்கு மாறான நேரங்களில் அமைகிற உங்கள் பணி உங்களுக்கு முதலில் கடினமாக இருக்கும். சிலவாரம் பொறுமையாக இருந்தால், அந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் எளிதாக மாறிவிடுவீர்கள்.

படிக்கும் காலத்தில் நீண்டநாள் விடுமுறை விட்டிருப்பார்கள். மாத கணக்கில் வீட்டிலோ அல்லது சொந்த ஊரிலோ சுற்றித்திரிந்திருப்பீர்கள். ஆனால், அலுவலகத்தில் எல்லா நாட்களிலும் வேலை செய்யும் நிலை வரலாம். ஊர் ஞாபகம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வந்து தொல்லை செய்யலாம். வேலை என்று வந்தபிறகு இந்தக் குழப்பம் கூடவே கூடாது.

படிக்கிற காலத்தில் நினைத்த நேரத்தில் தூங்கி, நினைத்த நேரத்தில் எழுந்திருப்பீர்கள். உங்களைக் கேட்பதற்கு யாருமே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், வேலைக்கென்று போக ஆரம்பித்தபிறகு, நேரத்தைப் பின்பற்றுவது மிக முக்கியம். ஒரு வேலையை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது.

புரொஃபஷனலிஸம் முக்கியம்!

கல்லூரியில் மாணவர் என்ற நிலையில்தான் உங்கள் வாழ்க்கை இருந்திருக்கும். கலாட்டா செய்வது, விளையாட்டாய் பேசுவது, மரியாதை யில்லாமல் நடந்துகொள்வது என உங்களுக்குப் பிடித்தமாதிரி இருந்திருப்பீர்கள். ஆனால், அலுவலக வாழ்க்கை தொடங்கிய முதல்நாளே நாம் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்றாற் போல் உங்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு போன்ற எல்லா விஷயங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, சீனியர்களிடம் எப்படி நடந்துகொள்வது என மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 'வேலைக்குப் போய் ரொம்பதான் மாறிட்ட’ என்று சிலர் உங்களைக் கலாய்ப்பார்கள்; கவலைப்படாதீர்கள். இந்த மாற்றம் உங்களை வேறு நிலைக்கு எடுத்துச் செல்லும்.

வேலையை ரசித்துச் செய்யுங்கள்!

சிலருக்கு படிப்புக்கு ஏற்றாற்போல் வேலை கிடைக்காமல் இருக்கலாம் அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகக்கூட நீங்கள் வேலையை ஏற்றிருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை இதுதான்; இங்கேதான் நம் பயணம் தொடங்குகிறது என்று தீர்மானித்தவுடன் அந்த வேலையைப் பிடித்தமாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். இந்த வேலையை இப்போதைக்குச் செய்வோம்; வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் என்ற நினைப்போடு நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள். கொஞ்சநாட்களில் அதுவே பழகி, பிடித்ததாகிவிடும்.

உனக்கும் மேலே நீ!

புதிய சிந்தனைகள்!

நீங்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவராயினும், உங்களுடைய தரம் சிறியதாக இருந்தாலும், உங்களுக்குப் புதிதாகவும் வித்தியாசமாகவும் தோன்றுகிற சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரே வேலையை ஒரேமாதிரி செய்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் சொல்லும் யோசனைகளை யாராவது ஏளனம் செய்வார்கள் என நினைக்காதீர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்கள் எண்ணங்களைத் தைரியமாக வெளிப்படுத்துங்கள்.

சவால்களை எதிர்கொள்ளுங்கள்!

செய்த வேலையைச் செய்யாமல், புதிதான சவால்களைச் சந்திக்கக்கூடிய வேலைகளைத் தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அந்த வேலையை முடிக்கக்கூடிய தகுதியோ, திறமையோ உங்களுக்கு இல்லை யென்றால் தைரியமாகச் சொல்லுங்கள்.

ஆள்பாதி ஆடை பாதி!

உங்களுடைய பேச்சும், நீங்கள் அணிகிற ஆடைகளும் உங்களின் வேலைக்கு ஏற்றாற்போல் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். பெரிய செலவு மிகுந்த ஆடைகளை அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை. சில கம்பெனிகளில் டிரெஸ் கோட் வைத்திருப்பார்கள். நீங்கள் அணிந்திருக்கும் உடை விதத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே உங்கள்மேல் மரியாதைத் தோன்றிவிடும்.

சுதந்திரமாக இருங்கள்!

உனக்கும் மேலே நீ!

யாரையும் அண்டி இருக்காதீர்கள். ஒரு விஷயம் தெரியவில்லையென்றால், நீங்களே முயற்சித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் நிச்சயமாக முடித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை உங்கள் மேலதிகாரிக்குக் கொடுங்கள். உங்கள் வேலைகளில் சந்தேகங்களைக் கேட்கலாம். உங்கள் அதிகாரியிடம் உங்கள் வேலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவ்வப்போது தெரிவியுங்கள்.

உதாரணமாக இருங்கள்!

எந்த ஒரு நல்ல காரியத்தை நிறுவனம் செய்வதாக இருந்தாலும், அதை ஆதரித்து செயல்படுத்துவது நீங்களாக இருக்கட்டும். இது மேலே மேலே உயர உதவும்.

நிறுவனத்தோடு வளருங்கள்!

பெரும்பாலான இளைஞர்கள் ஒரு வேலையில் சேர்ந்தவுடன், தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள். தன்னுடைய திறமைக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை; உரிய அந்தஸ்தும் கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் பலர் அங்கலாய்க்கிறார்கள்.

என்றாவது ஒருநாள் தன்னுடன் படித்த மாணவர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் தன்னைவிடப் பெரிய பதவியிலோ, சம்பளமோ வாங்கிக்கொண்டிருந்தால் உடனே வேறு வேலை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு கம்பெனி விட்டு மறு கம்பெனி தாவுகிறார்கள். அங்கேயும் திருப்தி இல்லையென்றால் மாறுகிறார்கள். கடைசியில் எதிலும் திருப்தியடையாமல் தவிக்கிறார்கள்.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதில் சம்பளம் குறைவாக இருந்தாலும், வேலையில் திருப்தி இருந்தால்,  சிறிய நிறுவனமாக இருந்தாலும் அதன் கூடவே வளருங்கள்.

(அடுத்த இதழில் நிறைவுபெறும்)